சென்ற வாரம் - ஓர் மாத கால விடுப்பில், இந்தியாவிலிருந்து - இங்கே அபு-தாபி வந்த பின், வழக்கமான "வீடு சுத்தம்" செய்யும் வேலையை செய்தேன். இந்த முறை, பெரிதும் மெனக்கிட்டு 3 மணி நேரம் சுத்தம் செய்தேன்; முதலில் வீட்டை கூட்டி-பெருக்கிய பின் கிடைத்த "தூசுக்கும்பலை" பார்த்ததும், எனக்கு பெருத்த ஆச்சர்யம்! உடனே, அதை புகைப்படமாய் எடுத்தேன். அதைத்தான் இந்த படைப்பின்-படமாய் தந்துள்ளேன். இப்படியுமா, மென்மையான தூசுகள் இருக்கும் என்று ஓர் ஆச்சர்யம்!! முதலில் வீட்டை கூட்ட ஆரம்பித்த போது இத்தனை சேரும் என்று நினைக்கவே இல்லை. இங்கே, தூசு மிகவும் மென்மையாய், சிறிதாய் இருக்கும் என்று உணர்ந்திருக்கிறேன். 6 மாத குழந்தை வைத்திருக்கும் என் தமக்கை-மகனிடம் கூட, குழந்தையை பத்திரமாய் பார்த்துக்கொள் - இங்கிருக்கும் தூசு அத்தனை மென்மை என்று பலமுறை எச்சரித்து இருக்கிறேன். எனினும், அந்த துகள்களை ஒன்றாய் சேர்த்து, அத்தனை அருகில் பார்த்தவுடன் ஓர் பரவசம் அடைந்தேன்.
குளிர்பிரதேசங்களில் காணும் "பனிப்படலம்" போல், சிலமுறை "தூசுப்படலத்தை" பனிப்படலம் போலவே வாகனம் ஓட்டும்போது உணர்ந்திருக்கிறேன். எனினும், மேற்கூறிய நிகழ்வு என்னை அது பற்றி நிறைய யோசிக்க வைத்தது. இந்த சூழல் தான், இங்கிருக்கும் அமீரக-மக்களை அப்படியொரு உடையை அணிய வைத்திருக்கிறது என்று எண்ணத் தோன்றியது. குறிப்பாய், பெண்கள்! கண்ணை மட்டும் விடுத்து உடல் அத்தனையையும் துணியால் போர்த்த - இது முதன்மையான காரணமாய் இருக்கவேண்டும். உடையும், உணவும் - சூழல் சார்ந்து அமைவது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தானே?! இது போல், பலவிசயங்கள் என்னுள் எழுந்தன; ஆயினும், இது "மனதங்கம்" என்பதால் விளக்கமாய் எழுதப்போவதில்லை. உங்களுள் எழும் மற்ற விசயங்களை, "விருப்பிருந்து" வாய்ப்பு-கிடைப்பின் பின்னூட்டமாய் பகிருங்கள். கற்பனையும், அதை சார்ந்த விளக்கங்களும் இங்கிருந்து/இதிலிருந்து தான் எழவேண்டும் என்ற நியதியில்லை! எனவே...
விரையட்டும், உங்கள் கற்பனைக்-குதிரை!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக