கடந்த வாரம் முதல் "குட்டிச் சுட்டீஸ்" என்ற நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகிறேன். உம்மில் பலரும் பார்த்திருப்பீர் என்பதில் எந்த ஐய்யமும் இல்லை. அந்த நிகழ்ச்சி எனக்கு கொடுத்த புரிதலை இங்கே விளக்க ஆசைப்படுகிறேன். ஆரம்பத்தில், குழந்தைகள் தம் பெற்றோர் செய்யும் தவறுகளை/அவர்களின் சண்டைகளை விளக்கும்போது - எல்லோர் போலவும் சிரித்து மகிழ்ந்தேன். நாளடைவில், சிரிப்பதையும் தாண்டி - அந்த சிறு குழந்தைகளின் பேச்சாற்றலை/நினைவாற்றலை மெச்ச செய்தேன். பின்பு, என்னில் இடிபோல் இறங்கியது அந்த கேள்வி. இந்த குழந்தைகள்; பெற்றோரின் செயல்களை விளையாட்டாய் தான் பார்க்கிறார்களா? என்று! இல்லையென்று தோன்றியது; என்னதான் அந்த மழலைகள் சிரித்துக் கொண்டு சொன்னாலும் - அவர்களின் மனதிற்குள் இருக்கும் அழுத்தத்தை/ அழுகையை என்னால் உணர முடிந்தது. அவர்களால் அது தவறு என்று தம் பெற்றொர்க்கு சொல்ல; அதனால் தாம் பாதிக்கப்படுகிறோம் என்பதை சொல்ல தெரியவில்லை என்று தோன்றியது.
அந்த நிகழ்ச்சி நடத்துபவர் அவ்வப்போது "பெற்றோர்கள் தங்கள் தவறுகளை உணர்வதாயும்; சிலர், முற்றிலும் சண்டையை நிறுத்திவிட்டதாய் கூறியதாயும்" கூறுவார். முற்றிலும், நிறுத்தி விட்டனர் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை! அது தேவையும் இல்லை!! முறன்பாடுகளின் இரு-எல்லைகள் தான் கனவனும்/மனைவியும் (விதிவிலக்குகள் இருக்கலாம்!); அப்படி இருக்க சண்டையை நிறுத்துதல் சாத்தியமோ/அவசியமோ இல்லை. உடனே, சிலர் நாங்கள் குழந்தைகள் எதிரே சண்டையிடுவதே இல்லை எனலாம்! அது, மிகவும் ஆபத்தானது. பிரச்சனை என்று வரும்போது எவர் ஒருவரும் - தான் சரி! என்ற நிலையிலேயே வாதாடுவர்; அதற்கு பல பொய்கள் தேவைப்படும். குழந்தைகள் எதிரில் சண்டையிடாது - பின், குழந்தைகளுக்கு தெரியவரும் போது - அங்கே பல பொய்கள் விதைக்கப்படும். இந்த பொய்கள் எல்லாம் தெரியவரும்போது - குழந்தைகள் மேலும் அதிகமாய் பாதிக்கப்படுவர். எனவே, நாம் குழந்தைகள் எதிரில் சண்டை போடுகிறோமா? இல்லையா?? என்பதிருக்கட்டும்...
சண்டகள் இருந்தாலும் - அவற்றில் உண்மையோடு இருப்போம்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக