சமீபத்தில், முக-நூலில் நண்பர் ஒருவர் "படித்ததில் பிடித்தது" என்று சொல்லி நான் சொன்ன ஓர் வாக்கியத்தை குறிப்பிட்டு அப்படியே என்னுடைய தலையங்கத்தின் இணைப்பையும் கொடுத்திருந்தார். எனக்கு அது பெருத்த சந்தோசத்தை கொடுத்தது; ஆயினும், அவ்வப்போது என்னில் எட்டி பார்க்கும் அந்த பயம் கலந்த கேள்வி மீண்டும் தலையெடுத்தது! "எழுத்துச்-சித்தர் பாலகுமாரன்" சொன்னதை அப்படியே சொல்கிறேனா? என்பதே அந்த கேள்வி. அதற்கான காரணத்தை விளக்க வேண்டியதும் என் கடமை. 1990-களில் பாலகுமாரனை வெறித்தனமாய் படித்தவன் நான்! ஒவ்வொரு மாதமும் என்னப்பன் அனுப்பும் பணத்தில் - பாலகுமாரன் புத்தகங்களுக்காகவே ஓர் பகுதியை செலவிடுவேன்! திருச்சி-மேலப்புலிவார் சாலையில் இருந்த ஓர் புத்தகக் கடையில் தான் பெரும்பாலும் அந்த புத்தகங்களை வாங்குவேன். வாங்கிய உடனே அதற்கு அட்டையிட்டு, பி றகுதான் படிக்கவே ஆரம்பிப்பேன். எனக்கு பிடித்த வாக்கியங்களை அடிக்கோடு இட்டிட எப்போதும் மறந்ததில்லை!
அப்படியோர் ஈடுபாடு - அவரின் படைப்புகளின் மேல்; அவர் என்னுள் எழுப்பிய தாக்கங்கள் மிகப் பலமானது. ஆனால், 1990-களின் இறுதி நெருங்குவதற்குள் அவரை படிப்பது படிப்படியாய் குறைந்து - பின் முழுதும் நின்றுவிட்டது. ஆனால், என்னுடைய செயல், சிந்தனை எவற்றிலும் பாலகுமாரன் இருப்பதை நானறிவேன். இந்த வலைப்பதிவின் முதல் தலையங்கத்தை என்னப்பனிடம் காட்டி அவரின் கருத்து கேட்டபோது - அவர், பாலகுமாரனின் தாக்கம் அதிகம் இருக்கிறது என்றார். ஆனால், அது எப்படி என்று எனக்கு புரியவில்லை; அவரே தொடர்ந்து சொனனார். நீ எழுதும் முறைக்கு இலக்கணத்தில் "நேர்க்கூற்று" என்றார்; பாலகுமாரனும் அவ்வாறே என்றார். ஆம், பாலகுமாரன் தான் சொல்ல வருவதை, நேரடியாய் தான் சொல்வார். வேறொரு கதை/அல்லது வடிவில் சொல்வதில்லை. மேற்கூறிய நண்பர், நான் எழுதிய வரிகளை பகிர்ந்து அதைப் படித்தபோது, எனக்கே மிகவும் பிடித்துப்போனது. உடனே, அந்த கேள்வியும் வந்தது...
பாலகுமாரன் சொன்னதை, அப்படியே சொல்கிறோமா?
பின்குறிப்பு: பாலகுமாரனின் தாக்கம் என்னுள் இருப்பதில் எனக்கு பெரும்-மகிழ்ச்சியே! ஆனால், அவர் சொன்னதை அவரை குறிப்பிடாமல் நான் சொன்னால் - அது எந்த விதத்திலும் சரியாகாது. எனவே, அப்படி எவரேனும் என் பதிவுகளில் காண நேர்ந்தால் - மறக்காமல் உடனே எனக்கு சுட்டிக்காட்டுங்கள். நான், உடனே அதற்கு மன்னிப்பு கோரி - தெளிவுபடுத்துதல் அவசியம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக