முதன்முதலாய், கமலின் திரைப்படம் பற்றி என் பார்வையை எழுதும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. விஸ்வரூபம் வெளிவந்தபோது வலைப்பதிவு எழுதிக்கொண்டிருப்பினும்; திரைப்படங்கள் பற்றி எழுதக்கூடாது என்ற வரைமுரையால், அதைப்பற்றி எழுதமுடியவில்லை. இருப்பினும், "ராஜா ராணி" திரைப்படம், அந்த படத்தைப் பற்றிய என் புரிதலை மற்றவர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தால் - என் வரைமுறை தளர்க்கப்பட்டது. எனவே, முதன் முதலில் எனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பிது! கமல் மேல் எனக்கிருக்கும் அபிமானம் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்; எனவே, முயன்ற அளவில் "நடுநிலையோடு"தான் இந்த பார்வையை பதிந்திருக்கிறேன். என்னையும் அறியாமல், என் அபிமானம் எங்கேனும் நடுநிலை தவற வைத்திருப்பின் எனக்கு சுட்டிக்காட்டுங்கள். சரி! இப்போது "உத்தம வில்லன்" திரைப்படம் பற்றி...
- கமலை உற்று கவனிப்போருக்கு, கமலின் திரைப்படம் ஒவ்வொன்றிலும் "உணர்வும்/உணர்ச்சியும் {எந்த உணர்ச்சியும்! ;) }" தவறாமல் இடம்பெறுவது தெரிந்திருக்கும். என்னளவில், மகாநதி திரைப்படத்திற்கு பின் முழுக்க-முழுக்க "உணர்வையும்/உணர்ச்சியையும்" படம் நெடுகிலும் கலந்திருக்கும் படம்.
- மகாநதி திரைப்படத்தை எப்போது பார்த்தாலும், 3 காட்சிகளின் போது என்னால் கண்கலங்காமல் இருக்கமுடியாது. கிட்டத்திட்ட 30 முறைகளுக்கு மேல் பார்த்தும், என்னால் அந்த காட்சிகளின் போது கண்கலங்காமல் இருக்கமுடிவதில்லை! சமீப காலமாய், என்மகள் குறிப்பிட்ட வயது வந்தபின் அவளுடன் பார்க்கவேண்டும் என்பதால், அந்த படத்தை பார்த்து நாட்கள் பலவாயிற்று! :(
- உத்தமவில்லன் திரைப்படத்தை பார்த்தபோது, எத்தனை முறை கண்கலங்கினேன் என்று எனக்கு நினைவில்லை! "என்-எண்ண அலைகளின்" ஊடே, அதை எண்ணிடவும் முடியவில்லை. அத்தனை காட்சிகள்; பல காட்சிகள் "அண்மையில் (Close-up)" இருக்கும். இயல்பாகவே, இப்படி அண்மை-காட்சிகள் எந்த திரைப்படத்திலும் குறைவாகவே இருக்கும். அதிலும், இப்படிப்பட்ட "உணர்வும்/உணர்ச்சியும்" பின்னிப்பிணைந்த கதைக்களம் கொண்ட படம் எனில், அண்மை-காட்சிகள் அபூர்வமாய் தான் இருக்கும்.
- ஆயின், உத்தமவில்லனில் எண்ணற்ற அண்மை-காட்சிகள் இருப்பது தனி சிறப்பு. கமலின் நடிப்பை பற்றி நானும் ஒருமுறை கூறத்தான் வேண்டுமோ?! ஆனால், மற்ற நடிகர்களின் நடிப்பு-திறன் "வெகுவாய்" பாராட்டப்பட வேண்டும். அவர்களும் சிறப்பாய் நடித்ததால் தான், எண்ணற்ற அப்படிப்பட்ட காட்சிகள் சாத்தியாமாகி இருக்கிறது. அங்கு தான், கமலின் நடிகர்/நடிகையர் தேர்வின் திறன் மேலோங்குகிறது.
- ஒரு மனிதனின் மூன்று-வெவ்வேறு காலகட்டத்தில் சங்கமிக்கும் மூன்று-வெவ்வேறு காதல்களே படத்தின் மையக்கரு. வெகு நிச்சயமாய், ஒவ்வொரு மனிதனும் (ஆண்/பெண் இருபாலரும்); இந்த 3-இல் இரண்டு காதல்களை கடந்து வந்திருக்க வேண்டும். இல்லையென்போர், சந்தேகத்து உரியவர்கள்! கண்டிப்பாக - வழக்கம்போல் - விதிவிலக்குகள் இங்குண்டு என்பதில் எனக்கு எந்த "விதிவிலக்கும்" இல்லை.
- அதனாலேயே, படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் - அடடே! நம் வாழ்க்கை போலே உள்ளதே?! என்ற ஆச்சர்யம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அதுதான், இந்த படத்தின் மையக்கருவின் மிகப்பெரிய பலம்.
- படம் சொல்லப்பட்டிருக்கும் விதம், பலருக்கும் சற்று-சலிப்பை தரக்கூடும். "மன்மதன் அன்பு"வை சிலருக்கு நினைவு படுத்தி இருக்கும்! ஆனால், இவ்விரண்டு படங்களும் - நாம் இழந்த சுயங்களுள் ஒன்றை நம்மிடம் மீட்டுத்தர நடக்கும் முயற்சியே! என்பதாய் எனக்கு படுகிறது. ஆம்! அது, கதை சொல்லும் (அல்லது) கதை கேட்கும் - நாம் அறவே மறந்துபோன அந்த வழக்கம். திரைப்படம் என்றால், எல்லாவற்றையும் காட்சிகளாய் காண்பித்தால் மட்டுமே நிறைவு என்ற நம் "மாயை"!
- அல்ல! காட்சிகளற்று கதையாய் சொல்வது ஒரு வித்தை; பலருக்கும், இது சாத்தியப்படுவதில்லை - சொல்லவும்/கேட்கவும்! அது தான் இந்த படமும், மேற்குறிப்பிட்ட படமும் செய்திருக்கிறது என்று நான் முழுதும் நம்புக்கிறேன்.
- அதேபோல், பாடல்களாய் கதையை சொல்வதும் நம் பழைய இயல்பு. அதையும், இந்த திரைப்படத்தில் காணலாம். பெரும்பான்மையான கதை பாடல்களாலேயே சொல்லப்பட்டு இருக்கிறது.
- 3-இல் ஒரு-காதலை; 2 கடிதங்களைக் கொண்டு - அதிலும், அதை அப்படியே படிக்க வைத்து விளக்கி இருப்பது மிகச்சிறப்பு! இது காண்போருக்கு பலவிதமான கற்பனைகளை/பலவிதமான சிந்தனைகளை/ பல்வேறு விதமான (தம் சொந்த)நினைவு கூறல்களை உண்டாக்கும். அது தான், இந்த விதமாய் கதை சொல்வதில் உள்ள சிறப்பு. அவ்விரண்டு கடிதங்களை - கதையோடு நெருங்கிய-சம்பந்தப்பட்ட வேறிரு கதாபாத்திரங்களை படிக்க செய்திருப்பது அழகு!
- இப்படிப்பட்ட அழுத்தமான "உணர்வுகளும்/உணர்ச்சிகளும்" கொண்ட திரைப்படத்தை அப்படியே சொல்வது - குறைந்தது இந்த காலக்கட்டத்திலாவது, பரவலாய் ஏற்றுக் கொள்ளப்படாது எனபதை நன்குணர்ந்த கமல் - அதற்காய், கதையின் நாயகனை ஒரு "திரைப்பட நாயகன்" ஆகவே செதுக்கி இருப்பது மிகப்பெரிய பலம்! அதனால், திரைக்கதையில் கதியின் இறுக்கத்தை தவிர்க்க; நாம் படத்தோடு ஒன்றிட "நகைச்சுவை" காட்சிகளால் நிரப்பி இருப்பது - தேர்ந்த திரைக்கதை யுக்தி!
- "கமலின் மகன் - கமலின் மகளை, அக்கா" என்றழைக்கும் அத்தருணம் {குழப்பம் இருப்போர், படத்தை பார்த்து தெளியவும்! ;) } மிக-அருமையாய் காட்சியமைக்கப் பட்டிருக்கிறது. அதிலும், அந்த தருணத்தில் கமல் "பெருத்த மகிழ்ச்சியுடன்; சிறு துள்ளலுடன்" செல்லும் காட்சி "மணிமகுடம்"!
- படத்தின் ஆரம்பத்தில் - ஆண்ட்ரியா "கள்ளக்காதலா! செல்லுங்கள்!!" என்பது போன்ற ஒரு வசனம் பேசுவார். இம்மாதிரியான உறவை "உன்னதமாய்/உண்மையாய்" சொல்லிய காட்சி என்று எனக்கு தோன்றியது. இம்மாதிரியான உறவுகள் "யதார்த்த" வார்த்தைகள் கொண்டே அழைக்கப்படவேண்டும். ஆங்கே, விதிகளுக்குட்பட்ட உறவுமுறைகள் சொல்லி "பொய்யாய்" அழைத்துக்கொள்ளுதல் அபத்தம் என்பது என் கருத்து!
- விஸ்வரூபம்-1 பார்த்த பின்; இதிலுமா பூஜா-குமார்? என்று உங்களில் பலர் போல் நானும் நினைத்ததுண்டு. ஆனால், என்னை பொய்த்து ஏமாற்றியது அவரின் "நடிப்பும், அழகும்". அதே போலே, ஆண்டிரியாவும்.
- மீண்டும் பல ஆண்டுகளுக்கு முன் பார்த்த உருவமாய் ஊர்வசி! படத்தின் இறுதிக்கு முன் வரும் ஒரு காட்சியில் "பிங்க்"-வர்ண சேலையில் கொள்ளை-அழகு!
சில குறைகள்/வருத்தங்கள்:
- படம் வெளியாவதற்கு முன் சர்ச்சையை சொல்லப்பட்ட "இரணியன்" கதை பற்றிய பாடலில் வரும் எந்த வரியும் - "பன்றியும் தான் தானென சொல்பவனா, கடவுள்" என்ற வரி உட்பட - எனக்கு தவறாய் படவில்லை! ஆனால், அந்த பாடலை படமாக்கிய விதத்தில் சில "கேலிக்கூத்துகள்" பாடலின் இறுதியில் வருவது போல் இல்லாமல் பார்த்துகொண்டிருக்கலாம் என்று தோன்றியது! எவரேனும், இதை கமலின் பார்வைக்கு இட்டுச்செல்வாரோ?!
- படம் வெளிவரும் வரையாவது திரு. பாலச்சந்தர் உயிருடன் இருந்திருக்கலாம் என்றோர் ஆவல் எழுந்தது. குரு-சிஷ்யன் உறவை மிக அற்புதமாய் சொல்லியிருக்கும் அற்புதமான (ப/பா)டம்!
- இடைவேளையின் போது, சிலர் படத்தின் கதை புரியவில்லை என்று புலம்புவதை கேட்க முடிந்தது! படம் முடிந்த பின்னரும் அவ்வாறே!! "அன்பே சிவம்" போன்று காலம் கடந்து தான் கமலின் (அ/இ)ம்மாதிரியான படங்கள் போற்றப்படவேண்டும் என்று "விதி" இருப்பின்; நம் "மதி"யால் அதை நினைத்து வருந்துவதில் எந்த உபயோகமும் இருக்கப்போவதில்லை!
என் பரிந்துரை: படத்தை பார்த்து - மீண்டும் ஒருமுறை உங்கள் பழைய-வாழ்க்கையை "நினைவில்" வாழ்ந்து பாருங்கள் நண்பர்/நண்பி-களே!!!
*****
பதிந்தவர்: விழியப்பன் எனும் இளங்கோவன் இளமுருகு
நாள்: 06.05.2015
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக