புதன், மே 27, 2015

சோதிக்கப்பட்ட - உண்மையும், நேர்மையும்!



       ஒருவரின் "உண்மையையும்/நேர்மையையும்" எவர் சோதித்தாலும் - ஓர் ஆற்றாமையும்/கோபமும் வரும். அதிலும், ஒருவர் அதிகம் நேசிக்கும் நபராலேயே அப்படிப்பட்ட சோதனை வந்தால்?!... எத்தனை வலியும்/வேதனையும் வரும்? சமீபத்தில் மே-மாதம் 21ஆம் தேதி எனக்கு "மீண்டும் ஓர் முறை" அப்படிப்பட்ட சோதனை வந்தது! என் வாழ்நாளில் நான் மறக்க நினைக்கும் நாட்களின் பட்டியலில் சமீபத்தில் இடம்பெற்ற நாள் - அது! அதிலும்... ஒரே விசயத்திற்காய் "மீண்டும் மீண்டும்" ஒருவரின் உண்மையும்/நேர்மையும் சோதிக்கப்படும் போது, அந்நிகழ்வு அவரை இன்னும் பலவீனமாக்கும்! செயலிழக்க செய்யும்! செய்வதறியாது நிற்க வைக்கும். இப்படிப்பட்ட சூழலை கையாள்வது மிகக்கடினம்; எல்லோருக்கும் அந்த திறன் எளிதில் வந்துவிடாது. இயற்கையாய்... எனக்கு அந்த திறன் இருப்பது மட்டுமல்லாமல்; ஏற்கனவே, அப்படிப்பட்ட சூழல்களை கடந்து வந்திருப்பதால்/ அப்படிப்பட்ட சூழலை ஏற்கும் பக்குவம் இருப்பதாலும்...

            இன்னமும் கூட... அந்த நபரின் பால் பிடிப்பும்/நம்பிக்கையும் இருப்பதால்; என்னால் இந்த சமீபத்திய நிகழ்வை கூட கடந்து வர முடிந்திருக்கிறது! இதை சம்பந்தப்பட்டவரிடம் சொல்லி... புரிய வைத்தல் மிகவும் சிரமமானது! அவர்கள் புரிந்து கொள்பவர்களாய் இருப்பின், அப்படி சோதித்து இருக்கமாட்டார்கள்! அதிலும் "மீண்டும்/மீண்டும்" அப்படி சோதிக்கமாட்டார்கள். இது அவர்களின் இயலாமையாய் கூட இருக்கலாம்; ஆனால், தம் "உண்மையும்/நேர்மையும்" சோதிக்கப்பட்ட ஒருவரின் நிலை - சொல்லில் வரையறுக்க முடியாதாது. அதை அனுபவிப்போருக்கு மட்டுமே புரியும். சோதித்தவர், இன்னமும் நமக்கு வேண்டும் என்ற நிலை இருக்கும்வரை தான் - அந்த அவமதிப்பையும் தாண்டி; அவர்களின் பால் ஒருவருக்கு ஈர்ப்பு இருக்கும்; அந்த அவமதிப்பும் நினைவு கூறப்படும். அவர்கள்... இனிமேலும், நம் வாழ்க்கைக்கு தேவையில்லை என்ற நிலை வரும்போது; அப்படிப்பட்ட நிகழ்வுகள் பாதிப்பை தருவதில்லை...

இப்படி ஒரு மனதங்கமாயும் வெளிப்படுவதில்லை!!!

பின்குறிப்பு: இந்த உண்மையை கவனியுங்கள்! நம்முடைய "உண்மையையும்/நேர்மையையும்" சோதிக்கும் பலரை நாம் சந்திக்கக்கூடும். ஆனால், அவர்களைப் பற்றி கவலைப்பட நாம் நினைப்பது கூட இல்லை - அதாவது, அவர்களை நாம் பொருட்படுத்துவதே இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக