புதன், பிப்ரவரி 07, 2018

அதிகாரம் 092: வரைவின் மகளிர் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 092 - வரைவின் மகளிர்

0911.  அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
           இன்சொல் இழுக்குத் தரும்

           விழியப்பன் விளக்கம்: அன்பு சார்ந்த உணர்வுகளை நாடாமல், பணம் சார்ந்த 
           உடைமைகளை நாடும் விலை-மகளிரின்; இனிமையான சொற்கள், கெடுதலையே 
           விளைவிக்கும்!
(அது போல்...)
           அறம் சார்ந்த கொள்கைகளைத் தொடராமல், ஊழல் சார்ந்த கட்சிகளைத் தொடரும் 
           அரசியல்-வியாபாரிகளின்; எழுச்சியான உரைகள், ஏமாற்றத்தையே அளிக்கும்!
      
0912.  பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
           நயன்தூக்கி நள்ளா விடல்

           விழியப்பன் விளக்கம்: பயனை அளவிட்டு, பொய்யாய் பண்புடன் பேசும்; பண்பற்ற 
           விலைமகளரின் தரத்தை அளவிட்டு, அவர்களைச் சேராது விலகவேண்டும்!
(அது போல்...)
           பதவியை மதிப்பிட்டு, பொய்யாய் பொதுநலம் பேசும்; பொதுநலமற்ற அரசியலாரின் 
           சுயத்தை மதிப்பிட்டு, அவர்களைத் தொடராது ஒதுக்கவேண்டும்!
           
0913.  பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
           ஏதில் பிணந்தழீஇ அற்று

           விழியப்பன் விளக்கம்: பொருளைப் பொருட்படுத்தும் விலைமகளிரோடு, கொள்ளும் 
           பொய்யானத் தழுவல்; இருட்டறையில், உணர்வேதும் இல்லாதப் பிணத்தைத் தழுவுவதற்கு 
           இணையாகும்!
(அது போல்...)
           ஊழலை வளர்த்திடும் அரசியலரோடு, கைகோர்க்கும் ஆபத்தான வளர்ச்சி; வயற்பரப்பில், 
           பயனேதும் இல்லாத முற்செடியை வளர்ப்பதற்கு ஒப்பாகும்!  

0914.  பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
           ஆயும் அறிவி னவர்

           விழியப்பன் விளக்கம்: பொருளை மட்டும் பொருட்படுத்தும் விலைமகளிரின், அற்ப 
           சுகத்தை; அருளை மட்டும் பொருளாக உணரும் பகுத்தறிவுவாதிகள், தீண்டமாட்டார்கள்!
(அது போல்...)
           சுயநலத்தை மட்டும் மேம்படுத்தும் அரசியலாரின், குடும்ப அரசியலை; பொதுநலத்தை 
           மட்டும் சுயநலமாக உணரும் தொடர்கள், ஆதரிக்கமாட்டார்கள்!

0915.  பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
           மாண்ட அறிவி னவர்

           விழியப்பன் விளக்கம்: மதியின் தன்மையால், புகழ்பெற்ற அறிவினைப் பெற்றவர்; 
           பொருளளிக்கும் யார்க்கும் பொதுவாகும் தன்மையுடைய விலைமகளிரின், அற்ப சுகத்தைத்  
           தீண்டார்!
(அது போல்...)
           அன்பின் அடிப்படையால், உயர்ந்த வாழ்வியலைக் கற்றவர்; பதவியளிக்கும் எவர்க்கும் 
           அடிபணியும் அடிப்படையுடைய அரசியலாரின், தீய ஒழுக்கத்தை விரும்பார்!

0916.  தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
           புன்னலம் பாரிப்பார் தோள்

           விழியப்பன் விளக்கம்: அழகு போன்ற விடயங்களால் செருக்கடைந்து, அற்ப சுகத்தைப் 
           பரப்பும் விலைமகளிரின் தோளை; தன்நலனை பொதுநலனாய் பரப்புவோர், 
           தீண்டமாட்டார்கள்!
(அது போல்...)
           சொத்து போன்ற விடயங்களால் ஆணவமுற்று, அற்ப செயலைச் செய்யும் சிறுமக்களின் 
           உறவை; தன்சொத்தைப் பொதுசொத்தாய் எண்ணுவோர், ஏற்கமாட்டார்கள்!

0917.  நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
           பேணிப் புணர்பவர் தோள்

           விழியப்பன் விளக்கம்: அறவழிக்குப் புறம்பானவற்றை மனதில் விரும்பி, பலருடன் உடலால் 
           உறவாடும் விலைமகளிரின் தோளை; வைராக்கியமான மனதில்லாதவரே தீண்டுவர்!
(அது போல்...)
           மக்களாட்சிக்கு எதிராய் இயங்கும் கட்சிகளோடு, மாறிமாறிக் கூட்டணி அமைக்கும் 
           சாதிக்கட்சிகளின் வேட்பாளரை; ஊழலழிக்கும் கடமையறியாரே ஏற்பர்!

0918.  ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
           மாய மகளிர் முயக்கு

           விழியப்பன் விளக்கம்: அறத்தன்மையை ஆய்ந்தறியும் அறிவுடையவர் அல்லாதவர்க்கு; 
           மாயை நிறைந்த விலைமகளிரின் தழுவலைத் தேடுமளவு, மோகினியின் தாக்கமுண்டு 
           என்பர்!
(அது போல்...)
           மக்களாட்சியை வெளிப்படுத்தும் வைராக்கியம் இல்லாதவர்க்கு; தீமை மிகுந்த 
           குண்டர்களின் ஆதரவை நாடுமளவு, பேராசையின் ஆதிக்கமுண்டு என்பர்!

0919.  வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
           பூரியர்கள் ஆழும் அளறு

           விழியப்பன் விளக்கம்: வரையறையின்றி, பொருளளிக்கும் யாருடனும் உறவாடும் 
           விலைமகளிரின் மெல்லிய தோள்; சிறப்படையும் தகுதியற்ற மக்கள் புதையும், நரகம் ஆகும்!
(அது போல்...)
           கொள்கையின்றி, பதவியளிக்கும் எவருடனும் கூடும் சாதிவெறியரின் சிறிய கட்சி; 
           அறமுணரும் தகுதியற்றத் தொண்டர்கள் தஞ்சமடையும், கல்லறை ஆகும்!

0920.  இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
           திருநீக்கப் பட்டார் தொடர்பு

           விழியப்பன் விளக்கம்: எவருடனும் உறவாடும் இருமனம் கொண்ட விலைமகளிர், கள் 
           மற்றும் சூது - இவை மூன்றும், திருமகளால் கைவிடப் பட்டவருக்குத் தொடர்புடையவை 
           ஆகும்!
(அது போல்...)
           எவரையும் எதிர்க்கும் மூர்க்கம் நிறைந்த அடியாட்கள், பொய் மற்றும் ஊழல் - இவை 
           மூன்றும், மக்களால் நிராகரிக்கப் பட்டவருக்குத் தேவையானவை ஆகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக