செவ்வாய், ஜனவரி 24, 2017

காளைப் பிரச்சனையும்; காளையர் எழுச்சியும்...


காடுறையும் விலங்குகளை மக்கள் முன்பு
     காட்டிஅதன் காட்சியினில் வருவாய் ஈட்டும்
பீடுநிறை செயல்தன்னால் உரிமை மாளும்
     பொய்மைமிகு எண்ணத்தால் "ஆர்வ லர்கள்"
தேடிட்டார் தடைச்சட்டம்; அதனால் மூன்று
     தேய்ந்திட்ட ஆண்டுகளில் தமிழர் வீரம்
மாடுபுகழ் "ஜல்லிக்கட்டு" காட்சி மாய்த்தார்!
     முடிந்ததெனில் நடத்துவீர்என கூவல் விட்டார்!

ஐங்கரத்தன் ஆனைமுகன் தெய்வம் தானே!
     ஆனாலும் மனத்தில்ஒரு கலக்கம் இன்றி
இங்கிருக்கும் பாகனவன் யானை தன்னை;
     இருமாப்பாய் நடத்திஅதை தெருக்கள் தோறும்
பங்கமதை இழைக்கின்றான்; பிச்சை தானும்
     பசியுடனே எடுக்கின்ற காட்சி தன்னால்
அங்கத்தை வருத்திஅதன் உரிமை போக்கும்
     அசிங்கத்தை யார்உணர்ந்து தடுப்பார்? கேளீர்!

உரத்தகுரல் எழுப்பிடுவேன்; பலரும் நாட்டில்
     உரிமையுடன் தன்னலத்திற் கென்றே நாளும்
பரந்திட்ட எண்ணமுடன் பண்பில் லாமல்
     பழக்கமென தன்வாழ்வில்; மனதில் ஈவு
இரக்கமின்றி ஆடுமாடு பறவை கோழி
     இரையாக்கும் வன்மனத்தீர்! வதைத்தல் ஏனோ?
சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்! உண்மை சொல்வீர்!
     செவ்வியநல் திறமாமோ? பதில்தான் என்ன?

தொடர்ந்துவரும் நாட்களிலே தொல்லை இன்றி
     தூர்வாறும் அரசியலார்; "பீட்டா" போன்ற
இடர்கூட்டும் தொல்லைகள் தொடரா வண்ணம்
     இனக்கவலை தீரட்டும்;  இதுபோல் நாட்டில்
படர்கின்ற பெருந்துன்பம் ஏது மின்றி
     பரவலென ஆட்சிநலம் பெறுதல் வேண்டும்!
சுடர்நாளும் மக்கள்மனம் ஆளும் போக்கால்
     சொந்தமென அனைவருமே சண்டை மாய்ப்போம்!

கற்புநிறை மனத்துடனே உணவுச் சாலை
     கண்டதிரு வள்ளலார் வழியில் செல்வோம்!
எண்ணத்தின் தூய்மைதனில்; உண்மை! நேர்மை!
     எழுவதனால் மாந்தருக்குள் மாண்பு கூடும்!
உண்மையுடன் நான்சொல்வேன்; உறுதி அந்த
     உயர்வாக்கும் புகழுலகம் ஒளிரும்! வாழும்!
கண்ணியத்தில் கடமையுடன் கவிதை சேர்ப்போம்!
     கட்டுப்பா டாய்இணைந்து உரிமை காப்போம்!

எந்தஒரு தூண்டுதலும் இன்றி, இந்நாள்
     எப்படித்தான் நடக்கிறதோ! கட்டுக் கோப்பாய்;
சொந்தமென மனத்திருத்தி மாண வர்கள்
     சுடர்விட்டார் உரிமையுடன்! கட்டுக் கோப்பாய்
இந்நிலத்தில் இருமூன்று நாட்க ளாக
     இளைஞருடன் சிறுவர்களும் தாயும் ஒன்றாய்!
வந்திங்கே ஆயிரமாய் கூடி நின்றார்!
     வார்த்தையிலை; பாராட்டு கூற என்னால்!

ஆயிரத்து தொள்ளாயிரத் தறுபத் தைந்தில்
     ஆர்வமுடன் இந்தியினை எதிர்த்த போரில்
உயிரழந்தோர் ஏராளம்! பள்ளிக் கூடம்
     உருப்படியாய் நாற்பத்தைந் துநாட்கள் மூடி
தயிராக உரைந்துவிட்ட நாளில் அன்று
     தளமாக தூண்டுதலால் வெற்றி கண்டார்!
பயிராகும் இளைஞரின்று தானாய் கூடி
     பண்பழிய கண்ணியத்தால் வாழ்ந்து நின்றார்!

இந்நாளில் அரசியலார் "ஜல்லிக் கட்டு"
     இனிதாக நடப்பதற்கு சட்டம் போட்டார்!
எந்நாளும் இதைஏலோம்! "பீட்டா" என்னும்
     எதிரிக்கு தடைபோட வேண்டும்! எங்கள்
சொந்தத்தை காத்திடவும் சூளு ரைப்போம்!
     சுரண்டவந்த அந்நியரின் வழிஅ டைப்போம்!
எந்தஒரு கருத்துக்கும் இடம்இங் கில்லை
     எல்லார்க்கும் மதிப்பளிப்போம்! இதயம் கொள்வீர்!

இன்றிருக்கும் சூழ்நிலையே வளர வேண்டும்!
     இனிமையுடன் இளைஞர்களின் எண்ணம் சூழல்
குன்றொளிரக் காட்டிடவே; அறிஞர், நல்லோர்!
     குறையாமல் அறம்கூறி வளர்த்தல் வேண்டும்
அன்றந்த காந்திகண்ட "அகிம்சை" முற்றும்
     அழியாமல் மடைமாற்றம் செய்தலே நாட்டில்
குன்றாமல் வெளிநாட்டின் ஆதிக் கத்தை
     குறைத்திடலாம்! தாயகத்தை காப்போம்! வாரீர்!

இன்றிந்த இளைஞருடன் மாண வர்கள்
     இணைந்து வெற்றிபெற்ற செய்கை; அந்நாள்
குன்றமர்ந்த தகப்பனுக்குச் சாமி யான
     குமிழ்சிரிப்பின் முருகன்அவன் அருளோ? அன்றி
"அன்னையிடம் பாலுண்டு" பண்பாய் வாழும்
     "அறிவாலே" விளைந்ததுவோ? எதுவா னாலும்
நின்றொளிரக் காத்திடுவோம்! புகழும் நீண்டு
     நிலைத்திடவே வாழ்த்திடுவோம்! மானம் காப்போம்!

அழிந்தொழிந்த தமிழர்தம் பண்பு; மாண்பு
     அகழ்ந்தெடுக்கும் வாய்ப்புத்தான் இந்த நேரம்
விழித்திட்ட இளைஞர்களின் எழுச்சி தன்னால்
     விலைபோகா ஒருவழியைக் காண்போம்! நம்மில்
இழந்திட்ட புகழ்பாதை காத்தல் நன்றாம்!
     இதுவன்றோ "நல்லநேரம்" நாமும் திட்டம்
செழிப்புடனே தீட்டிடுவோம்! "காம ராசர்!"
     செதுக்கிட்ட பாதையிலே நடத்தல் செய்வோம்!

என்னுடைய இதயத்தில் உறுதி ஆக
     எழிலிடத்தைப் பெற்றிருக்கும் வெற்றி வாகை;
புன்முறுவல் முகத்துடன் கூடி நிற்கும்;
     புதுமைமிகு இளைஞர்களே! முதிர்ந்த நெல்லும்
இன்முகத்தில் வளைந்திடுதல் போல; நீங்கள்
     இதயத்தில் ஏற்றிடுவீர்! முதல்வர் மற்றும்
குன்றொளிரும் பிரதமரும் கொடுக்கும் அந்த
     குணம்நிறைந்த வாக்குறுதி ஏற்றல் நன்றாம்!

"மெரினா"வில் மட்டுமன்று; திருச்சி சேலம்
     மதுரையுடன் மாடுபுகழ் "அலங்கா நல்லூர்"
உரிமையுடன் "ஜல்லிக்கட்டு" நடக்க வில்லை
     உறுதியான உள்ளத்தில் மறுத்து விட்டார்!
செரிந்திட்ட நல்மனத்தில் அரசு இந்நாள்
     சிதறாமல் சட்டத்தை கொடுத்த போதும்
புரியாத புதிரல்ல; நிலையாய் "சட்டம்"
     போடும்வரை ஒய்வில்லை; தொடர்ந்தார் போரை;

இதையேநாம் முதலாய்க் கொள்வோம்! நம்மின்
     இதயத்தின் மகிழ்ச்சிஒலி நிலைத்து நாளும்
சிதையாமல் தமிழகத்தின் வாழ்வு காப்போம்!
     சிறிதளவும் சிதறாமல் சிறப்பு சேர்ப்போம்!
கதையாக இதையாக்கல் வேண்டாம்; போற்றும்
     கவிதையினில் வரலாறாய் போற்றிக் காத்து;
விதையாக "புறத்தோடு" "அகமும்" கூறும்
     விதியாக்கி நூல்படைப்போம்; புனிதம் வாழும்!

எனக்கெந்தன் தந்தைவைத்த பெயரை மாற்றி
     இளமுருகுவாய் வலம்வந்தேன்; தமிழுக் காக
அன்றெனக்கு மொழிப்போர்தான் தூண்டு கோலம்!
     அதுபோன்ற நிலைஎதுவும் இன்றில் லாமல்
தன்மனத்தில் அனைவருக்கும் இனிதாய் தோன்றி
     தழைத்திட்ட ஆலமர விழுதாய் வாழும்
என்றிந்நாள் உணர்வதனால்; இனிதாய் சொல்வேன்
     இனிநம்மின் நாட்டினிலே நேயம் வாழும்!

{புலவர். இளமுருகு அண்ணாமலை}

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக