திங்கள், ஜூலை 13, 2015

பொய்யன்பு...


பிறர் மீதான நம்அன்பே,
நம் மீதான "ஓர்"அன்பை;
தீர்மானிக்கும் எனில், அவ்வன்பு
பொய்யன்பு! (நம்)தசையாடா அன்பு!!

ஞாயிறு, ஜூலை 12, 2015

இறுதி-துளி நம்பிக்கை...



     ஒரு உறவின் மீதோ (அல்லது) ஒரு பொருளின் மீதோ - நாம் வைத்த "இறுதி-துளி நம்பிக்கை"யும் பொய்த்து போன பின்; ஒரு வீரமும்/புரிதலும் வரும் பாருங்கள்... அதுதான் வாழ்வை அடுத்த தளத்திற்கு இட்டுச் செல்வதற்கான அடித்தளம்!!! 

இளங்கோவும் இஃப்தாரும்...



   தலைப்பை பார்த்தவுடனே ஓரளவுக்கு தலையங்கத்தின் மைய்யக்கரு புரிந்திருக்கும். "அம்மாவாசைக்கும்; அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்?" என்ற சொற்றொடரை பலரும் கேட்டிருக்கக்கூடும். அதையே தவறென்பவன் நான்; ஆம்! அம்மாவாசை என்பது ஒருவரின் "அம்மா/அப்பா"-வின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம்; அவர்களுக்கு பிடித்ததை சமைத்து வழிபடும் ஒரு நாள் என்று பொருள்படும். அப்படி எனில் ஏன் அம்மாவாசைக்கும், அப்துல் காதருக்கும் சம்பந்தம் இருக்கக்கூடாது?! அப்துல் காதருக்கும் அம்மாவும்/அப்பாவும் உண்டுதானே?! என்று பார்ப்பவன் நான். அப்படிப்பட்ட சிந்தனை தான்; இந்த ஆண்டு இரமலான்-நோன்பு இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் விதைத்தது. ஆம்! இந்த கணம் வரை 3 வாரங்களையும் கடந்து இரமலான்-நோன்பு இருந்து வருகிறேன். ஒரு வாரத்திற்கு முன்பு, என்மகளின் பிறந்த நாளுக்காய் இந்தியா சென்றபோது கூட நோன்பை நிறுத்தவில்லை.

         என்மகளின் பிறந்த நாளன்று கூட அது தொடர்ந்தது. இக்கணம்வரை எந்த சிரமமும் இன்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது; அதனால் தான் "இளங்கோவும் இஃப்தாரும்" என்று தலைப்பிட்டேன். நோன்பு இருக்க முடிவு செய்ததும் ஷார்ஜாவில் இருக்கும் என் நண்பன் காதரை தொடர்பு கொண்டு அது பற்றி விவாதித்தேன். நோன்பிற்கான விதிமுறைகளை எளிதாய் விளக்கி, என் "நோன்பு-குருவாய்" ஆனவன். அத்தோடு நிற்காமல், 2-ஆம் நாள் நோன்புக்கான "இஃப்தார்" முடிக்க அவன் வீட்டிற்கு அழைத்தான்; அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களே மேலே உள்ளவை! இஃப்தார் எப்படி இருக்கவேண்டும்; அன்றைய நோன்பை எப்படி முடிக்கவேண்டும் என்பதை அவனும்; அவன் அன்பு-குடும்பமும் அன்போடு விளக்கியது. அவர்களுக்கு "அல்லா" வேண்டிய அருளை வழங்கட்டும்; முன்பே அவன் இல்லத்தில் உணவருந்தி இருக்கிறேன் (என்மகளுடன் கூட) எனினும், கண்டிப்பாக இஃப்தார் விருந்து வித்தியாசமான அனுபவம்.

          முதல் நாள் நோன்பன்று; முதலில் என் அம்மாவிடம் சொன்னேன் - நோன்பிருக்கிறேன் என்று. மிகுந்த கடவுள் பக்தி கொண்ட அவர் எந்த மறுப்பும் சொல்லாது; புன்னகையுடன் அதை ஆமோதித்தார். என் தமக்கைக்கு அத்தனை ஏற்புடையதாய் இல்லை; எதிர்த்து கேட்டால், நான் ஏதாவது சொல்லிவிடுவேன் என்ற தயக்கம் - அதனால், எதுவும் சொல்லவில்லை. என் தமையன் சிறிது தயக்கமாய் "நீ ஏன் நோன்பு இருக்கிறாய்?" என்றார்; ஏன், இருந்தால் என்ன? என்று கேட்டேன்; அதன் பின் அவர் ஏதும் பேசவில்லை. கடவுள் நம்பிக்கையே இல்லாத என்னவள், அது பற்றி பெரிதாய் ஏதும் சொல்லாது "சரி" என்றாள். ஆனால், தமிழ் படித்த/மனிதம் படித்த என்னப்பன்; எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்ட அவர் அதை வரவேற்று "அல்லா, உனக்கு நல்வழி காட்டி துணை இருக்கட்டும்!" என்று வாழ்த்தினார். என்னப்பனின் இந்த உயரிய குணத்தை என்போல் எவரும் இதுவரை உணரவில்லை என்ற குறை எனக்கு எப்போதும் உண்டு.

        இப்படியாய், நோன்பை இன்று வரை நன்முறையில் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். ஐயப்பன் கோவிலுக்கு செல்லும்போது நான் நோன்பிருக்கும் போது; விரதம் இருக்கும் முறை பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். அதனால், ஒருவேளை உணவருந்துவது எனக்கு பெரிய விசயமில்லை. காலையில் உணவருந்தி நோன்பை ஆரம்பிக்கும் வழக்கம் இன்று வரை எனக்கு கைகூடவில்லை; எச்சில் விழுங்காத ஒழுக்கமும் இன்னும் சரிவர கைகூடவில்லை!. ஓரிரு நாட்கள் பழரசம்/பன் போன்று சிறுபண்டங்கள் உண்டேன்; மற்றபடி, காலையில் உணவருந்தும் வழக்கத்தை என்னால் மேற்கொள்ள முடியவில்லை. ஆனால், அதிகாலை 3 மணிக்கு எழுந்து 1.5 லிட்டர் தண்ணீர் அருந்திவிட்டு (25 ஆண்டுகளாய் காலையில் தண்ணீர் குடிப்பதால்) பின்னர் 30/40 நிமிடங்கள் உறங்கிவிட்டு; பின்னர் "சேஹர்" ஆரம்பிக்கும் முன் எழுந்து, (சாப்பிடும் எண்ணமிருப்பின் ஏதாவது சாப்பிட்டுவிட்டு)  மீண்டும் 1.5 லிட்டர் தண்ணீர் அருந்திவிட்டு என் நோன்பை ஆரம்பித்து விடுவேன்.

     இந்த 3 வாரங்களிலேயே நல்ல பலன்; உடல் பழைய ஆரோக்கியத்தை நோக்கி திரும்ப ஆரம்பித்திருக்கிறது; மனதும் பழையவாறு ஒருமுகப்பட பழகி வருகிறது. மசூதிக்கு சென்று தொழவேண்டும் என்று தோன்றவில்லை! கண்டிப்பாய், இது வேறு கடவுள் என்பதால் அல்ல. நான் வணங்கும் கடவுளையே, வீட்டில் உருவகமாய் வைத்து வணங்குவதில்லை; உருவிலா வழிபாடு என்னுள்-தானே எழுந்திருக்கிறது என்று முன்பே எழுதியுள்ளேன். அதனால், வழிபாடு என்பது நான் தினமும் வழக்கமாய் செய்யும் வண்ணம் தொடர்கிறது. இரமலான்-நோன்பை வேற்று மதத்தவர் கடைபிடிக்கக்கூடாது என்று "இசுலாமிய மார்க்கம்" சொல்லி இருப்பதாய் எனக்கு தெரியவில்லை. வேறெந்த மதமும் கூட, நோன்பு/விரதம் மேற்கொள்ளும் விதத்தில் மதத்தை போதிப்பதாய் எனக்கு தெரியவில்லை. எல்லா மதமும் "மனிதம்" ஒன்றை மட்டும் தான் போதிக்கிறது. எனவே, என்னுடைய பார்வையில்; அம்மாவாசைக்கும், அப்துல் காதருக்கு மட்டுமல்ல...

"இளங்கோவுக்கும் இஃப்தாருக்கும்" கூட சம்பந்தம் உண்டு என்றே தோன்றுகிறது!!!  

மதமும்... "மாதா"வே!!!



     இந்த ஆண்டு நான் "இரமலான்-நோன்பு" இருப்பதை; இந்த வார தலையங்கத்தில் எழுதி இருக்கிறேன். என்னளவில், இப்படி நோன்பு/விரதம் இருப்பது நல்ல விசயம்; எனக்கு பிடிக்கும். என்னவோ... திடீரென்று நோன்பு இருக்கவேண்டும் என்று தோன்றியது; உடனே ஆரம்பித்து நன்முறையில் கடைபிடித்தும் வருகிறேன். அத்தலையங்கத்திலேயே... மசூதிக்கு சென்று வழிபாடு செய்யவில்லை என்றும்; அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளேன். நான் இந்த நோன்பு/விரதம் என்பதை உடல் உறுப்புகளுக்கு ஒய்வு கொடுக்கும் விசயமாய் மட்டுமே பார்க்கிறேன். பல நாட்களாய்/ஆண்டுகளாய் தொடர்ந்து, கண்டதையும் உண்டு சேர்த்திட்ட கொழுப்பை கரைக்கும் விதமாகவும் பார்க்கலாம். ஆனால், இவற்றை எல்லாம் தாண்டி... மனதை ஒருமுகப்படுத்த இப்படிப்பட்ட நோன்பு/விரதம் உதவும். "செவிக்குண வில்லாத போழ்து" என்ற வள்ளுவன் வாக்குடன்; வயிறுமுட்ட உண்ட என் நிலையை ஒப்பிட்டு முன்பொரு கவிதை எழுதி இருக்கிறேன்!

         நட்பொருவர் "விட்டால் இசுலாமியன் ஆகிடுவாய் போல?!" என்றார்.  நான் மேற்கூறியவற்றை விளக்கி; நோன்புக்கும், கடவுள்/மதம் இவற்றிற்கும் சம்பந்தம் இல்லை என்பதை விளக்கினேன். தொடர்ந்து... என்னளவில் மதம் என்பது "மாதாவுக்கு சமமென்றேன். அதனால், மதம் மாறுவதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை! அங்கே, உண்மையில்லை!! ஆம்! இன்னொருவரின் தாயைப் பார்த்து "அட! இந்த தாய் எவ்வளவு வியக்க வைக்கிறார் என்றோ அல்லது வேறுவகையிலோ சிலாகிக்கலாம்; தவறில்லை! ஆனால், தன் தாயை உதறிவிட்டு; அந்த தாயை, தன் தாயாய் சொந்தம் கொண்டாட எண்ணுவது மடத்தனம். தாய் என்பது எப்படி ஒருவருக்கு "மாற்ற முடியா" அடையாளமோ; அப்படித்தான் மதமும் இருக்கவேண்டும். மதத்தில் நாட்டமில்லை! மதத்தில் நம்பிக்கையில்லை!! என்ற கொள்கை-கூட எனக்கு(மு)ண்டு; ஆனால், தன் மதத்தை மாற்றிக்கொள்வது என்பது மடத்தனம்/பாவச்செயல்!!! எனவே, என்னளவில்...

மதமும், மாதாவும் ஒன்றே!!! 

வெள்ளி, ஜூலை 10, 2015

ஏன் இப்படி ஒரு சர்வே எடுங்களேன்...



சற்று முன்னர் "ஆயுத எழுத நீட்சியில்" ஹரிஹரன் நடத்திய "தலைக்கவசம் அணிதல் கட்டாயம்" என்ற விதி பற்றிய விவாதத்தில் ஒரு வழக்கறிஞர் ஒருவர் இப்படி சொன்னார்:

வழக்கறிஞர்: ஒரு சர்வே எடுங்கள்! அதில் வரும் முடிவு படி தலைக்கவசம் வேண்டுமா? இல்லையா?? என்பதை முடிவு செய்யலாம் என்று வாதிட்டார்!
{சம்பந்தமே இல்லாம... எனக்கு "பாபநாசம்" படத்தில் அந்த ஐ.ஜி. மேடம் கேட்கும் "நீயெல்லாம் எப்படிய்யா போலிஸா ஆன?!" என்ற வசனம் ஞாபகத்து வந்து போனது}

ஹரிஹரன்: ஹரிஹரன் "டாஸ்மாக் கடைக்கு முன்னாடி நின்னு டாஸ்மாக் வேண்டுமா? வேண்டாமா?? என்று சர்வே நடத்தினால் சரியாய் வருமா?" என்று எதிர்கேள்வி கேட்டார்.

நான்: உடனடியாய் எனக்கு இப்படி ஒரு யோசனை எழுந்தது. துரதிஷ்டவசமாய் இன்று "வரதட்சனை ஒழிப்பு"சட்டத்தின் மூலம் பல அப்பாவி ஆண்கள் பாதிக்கப்படுவதை தொடர்ந்து பார்த்துக்கொண்டே வருகிறோம். "வரதட்சனை ஒழிப்பு சட்டம் வேண்டுமா? வேண்டாமா?? என்று ஆண்களிடம் ஒரு சர்வே எடுங்களேன்!!!" என்பதே அது.

வியாழன், ஜூலை 09, 2015

நம் வரையறை உணர்வோம் - 2


{திருமணமாகி, வேலைக்கும் செல்லும் பெண்கள் பலர் செய்யும் செயல் பற்றி!}

       துப்பு இருக்குதா? - ஒரு வீடு வாங்க துப்பு இருக்குதா?! ஒரு கார் வாங்க துப்பு இருக்குதா??!!அப்பப்போ நகைகள் வாங்கிக் கொடுக்க துப்பு இருக்குதா???!!!  போன்ற கேள்விகளை மனைவி மூலமாய் எதிர்கொள்ளாத கணவர்கள் மிகச்சிலரே என்றால், அது மிகையன்று. இப்படிப்பட்ட பேர்-வசதிகள் இல்லாத பொருளாதார நிலை கொண்ட பெற்றோர்களுக்கு பிறந்து வளர்ந்தவர்கள் தான் நம்மில் பலரும். எனவே, திருமணமான உடனே வீடு வாங்குதல் என்பது பலருக்கு இயலாத காரியம். அதிலும், வீடு வாங்குவதால் உருவாகும் கடன் தொல்லை/பிரச்சனையால் இன்றைய வாழ்வை வாழ்தல் சாத்தியமன்று என்பதாலேயே - சிலர் வீடு வாங்குதலை தள்ளிப் போடவும் செய்கின்றனர். வாங்க முடிந்தும் தள்ளி போடுகின்றனரா? அல்லது வாங்க "துப்பு" இல்லையா?? என்ற விவாதம் (இப்போதைக்கு)ஒருபுறம் இருக்கட்டும். இப்போதைக்கு, என்னுடைய பார்வை...
  • எல்லாவற்றிலும் சம-உரிமை கேட்டு; பலவற்றில் பெற்றுவிட்ட பின்னரும் - அதென்ன?! வீடு போன்ற பெருஞ்செலவு ஆகும் விசயங்களில் மட்டும் "ஆண் தனித்து நின்றே" துப்பு காட்ட வேண்டி இருக்கிறது? இத்தனை சம-உரிமை இல்லாத காலக்கட்டத்தில், வேலைக்கு சென்ற பெண்கள் கூட; கணவனிடம் தாம் ஈட்டியதையும் கொடுத்து தானே பெற்றனர்?
  • பெரும்பாலான பெண்கள் நினைப்பது, அவரவர் பெற்றோர் அவர்களுக்கு அளித்திட்ட சொத்தில் வீடும் இருக்கிறது என்ற பெருமிதம் தான். இருக்கட்டும்! அதேபோல் தானே, ஆணுக்கும் அவரவர் பெற்றோர் கொடுத்த நிலமோ? மற்ற சொத்தோ?! ஏன், அங்கு மட்டும் "அது அவர்கள் கொடுத்தது; நீங்கள் என்ன செஞ்சு கிழிச்சீங்க?! என்ற ஏளனப்பேச்சும்; துப்புக்கெட்டவன் என்ற தூற்றுதலும்??"
  • "உத்தியோகம் புருஷ இலட்சணம்" என்பதை மாற்றக்கோரி எத்தனை பாடுபட்டீர்கள் பெண்களே? உத்தியோகம் புருஷ இலட்சணம் என்றிருப்போர் "வீடு வாங்க துப்பு இல்லையா?!" என்று கேட்பதில் கூட ஒரு நியாயம் இருக்கிறது! "உத்தியோகம் தங்கள் இலட்சணமும்" என்போர்க்கு துப்பில்-தப்பாது பங்குண்டு தானே?
  • சில கணவர்களுக்கு பெற்றோர் மூலம் வீட்டு-மனை கிடைக்கும். அதில் சிறிது சிறிதாய், வீட்டை அவர்களால் கட்டிவிடமுடியும். ஆனால், எல்லாவற்றிற்கும் தன் சம்பாத்தியமே மூலாதாரம் என்றிருக்கும் (இன்றைய பெரும்பான்மை)கணவர்களால் என்ன செய்ய முடியும்?! "துப்பு இல்லையா?!" என்று திரும்ப, திரும்ப கேட்டால் - ஆமாம்! துப்பில்லை என்று சொல்வதை விட வேறென்ன செய்ய முடியும்?!
  • கண்டிப்பாக எல்லா கணவர்களும் இன்று தெளிந்த முடிவோடு தான் இருக்கிறார்கள். தம் பிள்ளைகளுக்கு என்று தனி-வங்கி கணக்கு, வைப்பு நிதி, அவ்வப்போது பொன்-நகைகள் வாங்கி சேர்ப்பது - போன்ற பல வழிகளில் "கடன் ஏதுமின்றி" சேமித்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் தன் சம்பாத்தியத்தை மட்டும் கொண்டுதான் செய்கின்றனர்; மனைவியின் சம்பாத்தியத்தை பெறுவதில்லை. இன்னும், வேறென்ன செய்ய முடியும்/வேண்டும்? எப்படி சம்பாதித்தாலும் பரவாயில்லை என்றால்; முயற்சித்து பார்க்கலாம்!!
  • இப்படி எல்லாவற்றையும் தன் குடும்பத்திற்காகவும்; தான் சார்ந்த குடும்பத்திற்காகவும் செய்யும் ஒரு ஆண்-மகனுக்கு எப்படி உடனடியாய் "வீடும் வாங்க"துப்பு இருக்கும்? வங்கிகள் தானே-முன்வந்து கடன் கொடுக்கின்றன என்பதற்காய் ஒரு வீட்டை வாங்கி; எவருக்கோ வாடகை விடுவதா புத்திசாலித்தனம்? நாம் வசிப்பதற்காய் இருப்பினும் பரவாயில்லை!
  • மிகுந்த சம-உரிமை கொண்ட இக்காலக்கட்டத்திலும், அதென்ன ஆணுக்கு மட்டும் வேண்டி இருக்கிறது அந்த "துப்புக்கெட்ட"துப்பு? ஏன் இக்காலப் பெண்கள் நாம் எதற்கு "துப்பு"ஆகிவிட்டோம் என்று, தங்களைக் கேட்டுக் கொள்வதில்லை? எவர் வகுத்த நியதி இது? நீங்கள் வேண்டுமானால் உங்கள் "துப்பை காட்டி" உங்கள் சம்பாத்தியத்தில் வீடு வாங்குங்கள்; உங்கள் கணவர்கள் எந்த சலனமும் இன்றி வந்து குடும்பம் நடத்துவர்!!!
பொதுக்குறிப்பு: வீடு வாங்கக்கூடாது என்பது என் வாதமல்ல! ஆனால், அதற்காய் ஒரு வங்கியிடம் "பெரிதாய்" கடன்பட்டு; எவருக்கோ வாடகைக்கு விடவேண்டாம் என்பதே என் வாதம். தாம் வசிப்பதற்கு எனினும், தகுந்த சூழ்நிலையில்/குறைந்த கடனுடன் வாங்குவதே சிறந்தது என்பதே என் வாதம். 

புதன், ஜூலை 08, 2015

சந்தோஷம்னா...?!



"சந்தோஷம்னா... என்னன்னு அதை அனுபவிக்கறப்போ தெரியறதில்லை"!

- விருமாண்டி திரைப்படத்தில் வரும் வசனம் இது! வாழ்க்கையின் மிகப்பெரிய தத்துவத்தை சொற்ப வார்த்தைகளைக் கொண்டு "ஒரே வரியில்" விளக்கும் வசனம். இதுபோன்ற "அனுபவம் பொதிந்த" வசனங்களும் ஒரு காரணம்; கமல் என்னும் அந்த அனுபவஸ்த்தனின் "அபிமானி" என்று என்னை சொல்லிக்கொள்ள!!

நம் வரையறை உணர்வோம் - 1


{தன் கணவன் "தனக்கு மட்டும்தான் சொந்தம்" என்றென்னும் பெண்களுக்காய்!!}


   குறைந்தது 25-ஆண்டுகளாவது ஒரு ஆண்மகனை வளர்த்து ஆளாக்க, அவனுடைய பெற்றோர்களும்; அவனின் உடன்-பிறந்தோரும் பலவிதத்தில் உதவி செய்திருப்பர்! பல தியாகங்களை செய்திருப்பர். தம் வளர்ச்சியை கூட மட்டுப்படுத்திக் கொண்டு, அவன் வளர்ச்சியை ஒரு பொருட்டாய் மதித்திருப்பர். அப்படிப்பட்ட ஒருவன், தான் வளர்ந்து ஆளான தருணத்தில் - உங்களுக்கு கணவனாய் ஆகிவிட்ட "ஒரேயொரு காரனத்தினாலாயே!" - அவனை வளர்த்து ஆளாக்கிய எல்லோரையும் மறந்துவிட்டு/ஒதுக்கிவிட்டு "உங்களோடு மட்டும்" இருத்திக் கொள்ள நினைத்தல் எந்த விதத்தில் நியாயமாகும்?! 
  • ஒரு மரம் கூட தன்னை வளர்த்தவர்களுக்கு - காயாகவோ/கனியாகவோ/இலை-தழைகளின் மூல உரமாகவோ/குறைந்தது-அடுப்பெரிக்க உதவும் விறகாகவோ பயன்படுகிறது. ஆனால், ஆறறிவு கொண்ட மனிதனை இப்படி ஏதுமொரு (பிரதி)உதவியும் செய்யாமல் அவனை "வேறுபடுத்தல்" எங்கனம் நியாயமாகும்?
  • உங்களுக்கு வேண்டியதை உங்கள் கணவனிடம் கேட்டுப் பெற உங்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது. அப்படி செய்ய இயலாத/முயலாத கணவனை நீங்கள் குறைகூறுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், உங்களுக்கு தேவையான அனைத்தையும் "தேவைக்கு மேலேயே" செய்யும் ஒரு கணவனை "அவனை வளர்த்து ஆளாக்கியவர்களுக்கு" - தன் கடனை திரும்ப செய்யாவண்ணம் தடுத்தல் எந்த விதத்தில் நியாயமாகும்? அதற்கு, உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது??
  • மனிதாபிமானம்-அற்ற/மானம்-கெட்ட/சுயநலத்தை-தற்குறியாய் கொண்ட - ஆண் மக்களுக்கு வேண்டுமானால் அது சாத்தியம் ஆகக்கூடும்! ஆனால், உண்மையான ஒரு ஆண்மகனால்/மனிதனால் அப்படி செய்தல் இயலாது. உங்கள் கணவன் ஒரு உண்மையான ஆண்-மகனாய் இருத்தல் பெருமைப்பட வேண்டிய விஷயம் அல்லவா???
  • கணவன்-மட்டுமே வேண்டும் என்றால்; "உறவுகள் ஏதுமற்ற" ஒரு அனாதையையோ; அல்லது தன் தந்தை-வழி சொத்தில்/சுகத்தில் சுயமற்று-இருக்கும் ஒரு ஆணையோ; அல்லது எப்படியும் வாழலாம் என்றெண்ணி "ஊரை அடித்து உலையில் போடும்" ஒருவனையோ தேடிக்கண்டு பிடித்து கணவனாய் அடையலாமே?
  • "வீட்டோடு மாப்பிள்ளையாய்" இருக்க சம்மதிக்கும் ஒரு ஆணை தேடிக்கண்டுபிடித்து கணவனாய் மனமுடிக்கலாமே?! பிறகேன் "படித்த/பண்புள்ள" மாப்பிள்ளை வேண்டும் என்று தேடுகிறீர்கள்? தன் குடும்பம் மொத்தத்தையும் உதறிவிட்டு வருவதா பண்பு??

பொதுக்குறிப்பு: இப்படிப்பட்ட காரணிகளால் வளர்ந்ததுதான் "ஆணாதிக்கம்" என்பதை நினைவில் கொள்க! ஆனால், ஆணாதிக்கம் இன்று பெரும்பான்மையில் குறைந்து/அழிந்து "சமத்துவம்" நோக்கி பயணிக்கும் வேளையில் "பெண்ணாதிக்கம்" என்ற ஒன்று தலைதூக்க ஆரம்பித்து இருப்பதை என் பதிவுகளில் அவ்வப்போது எழுதி வருகிறேன். வள்ளுவனின் "இளைதாக முள்மரம் கொல்க!..." என்ற கூற்றுப்படி, இதை இப்போதே கொல்தல் மிக முக்கியம்!!!


வியாழன், ஜூன் 25, 2015

செவ்வாய், ஜூன் 16, 2015

புதன், ஜூன் 03, 2015

"செய்யுள் போல் ஒரு" என்றால் என்ன? எப்படி??



"சாகாவரம் போல் ஒரு" என்று துவங்கும் "உத்தமவில்லன்" படப்பாடலில்...

விளங்கி, துலங்கிடும் வம்சம் வாழ...
வாழும் நாளில் கடமை செய்ய...
"செய்யுள் போல்" ஒரு காதல் வேண்டும்!

என்றோர் வரி வரும். சரி...
"செய்யுள் போல் ஒரு" என்றால் என்ன? எப்படி??

குறிப்பு: "நல்ல புரிதலை" கொடுக்கும் கருத்துகளை(மட்டும்) எதிர்பார்க்கிறேன்! :)