செவ்வாய், நவம்பர் 10, 2015

குறள் எண்: 0100 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 010 - இனியவை கூறல்குறள் எண்: 0100}

இனிய உளவாக இன்னாத கூறல் 
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

விழியப்பன் விளக்கம்: நன்மை விளைவிக்கும் சொற்கள் பலவிருக்க, தீயவற்றைப் பேசுவது; கனிந்தது இருக்க, காயைக் கொய்வது போன்றதாகும்.
(அது போல்...)
வாழ்வை உயர்வுக்கும் அறவழிகள் பலவிருக்க, தீயவழியில் பயணிப்பது; மனைவி உடனிருக்க, பிற-பெண்களைப் பார்ப்பது போன்றதாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், நவம்பர் 09, 2015

குறள் எண்: 0099 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 010 - இனியவை கூறல்குறள் எண்: 0099}

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ 
வன்சொல் வழங்கு வது

விழியப்பன் விளக்கம்: நேயம்மிக்க சொற்கள் விளைவிக்கும் நற்பயன்களை அனுபவித்தவர்; என்ன பயனுக்காக, கொடிய வார்த்தைகளை உதிர்க்கமுடியும்?
(அது போல்...)
நேர்மையான ஆட்சி விளைவிக்கும் அழியாப்புகழை உணர்ந்தவர்; என்ன புகழுக்காக, அறமற்ற ஆட்சியை வழங்கமுடியும்?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, நவம்பர் 08, 2015

குறள் எண்: 0098 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 010 - இனியவை கூறல்குறள் எண்: 0098}

சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் 
இம்மையும் இன்பம் தரும்

விழியப்பன் விளக்கம்: சிறுமை தன்மையை அகற்றிய, நேயம் நிறைந்த பேச்சு; இப்பிறப்பு மட்டுமல்லாமல், மறுபிறப்புக்கும் நன்மையை வழங்கும்.
(அது போல்...)
பகைமை உணர்வை நீக்கிய, நேர்மை மிகுந்த ஆட்சி; நிகழ்காலத்தில் மட்டுமல்லாமல், எதிர்காலத்திலும் மக்களாட்சியைக் காக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, நவம்பர் 07, 2015

குறள் எண்: 0097 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 010 - இனியவை கூறல்குறள் எண்: 0097}

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று 
பண்பின் தலைப்பிரியாச் சொல்

விழியப்பன் விளக்கம்: பிறர்க்கு பலனை விளைவிக்கும் எண்ணத்திலிருந்து, மாறுபடாத பேச்சு; நல்வினைகளை விளைவித்து, அறத்தை நிலைநாட்டும்.
(அது போல்...)
பிறரின் வாழ்வை உயர்விக்கும் வைராக்கியத்திலிருந்து, விலகிடாத முனைப்பு; மனிதத்தைப் பெருக்கி, சமூகத்தைத் திடப்படுத்தும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

விருந்தோம்பல் ஓம்பா மடமை (குறள் எண்: 0089)



          குறள் எண் 0089-இற்கான என் விளக்கவுரையைப் படித்திருப்பீர்கள். அதில் "விருந்தோம்பல் ஓம்பா மடமை" எனும் ஒரு அற்புதமான உவமையை கையாண்டிருக்கிறார் நம் பெருந்தகை. விருந்தோம்பல் என்றால் "விருந்தினரை உபசரிப்பது" என்ற பொதுவான புரிதலே நம்மிடம் உண்டு. ஆனால், விருந்தோம்பல் எனும் செயலை "ஒழுக்கம்/அறம்/மனிதம்" இப்படி பல்வேறு விசயங்களுடன் தொடர்புப் படுத்துகிறார் நம் பெருந்தகை. அவற்றை அனுபவித்து, பேரானந்தம் கொண்டு விருதோம்பலை நம் பெருந்தகை விவரிப்பதையே ஒரு பதிவாய் எழுத வேண்டும் என எண்ணிக் கொண்டிருக்கும் போதே இப்படிப்பட்ட உவமானங்களால் என்னை இன்பக்கடலில் மூழ்கடித்து திணற வைக்கிறார், நம் பெருந்தகை. அதென்ன "விருந்தோம்பல் ஓம்பா மடமை"? விருந்தோம்பலில், மடமை ஏன் வந்தது? எப்படி வந்தது? என்பன போன்ற கேள்விகள் எழும். அதை அழகாகவும் விவரித்திருக்கிறார் நம் பெருந்தகை. இதுதான் அந்த குறள்:

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா 
                                            மடமை மடவார்கண் உண்டு 

இந்தக் குறளுக்கு பின்வரும் விளக்கவுரைகளைக் காண முடிந்தது:
  • விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
  • செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.
  • செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.
  • உடைமையின் கண்ணே யில்லாமைபோல, விருந்தினர்க்கு அளித்தலைப் போற்றாத பேதைமை, பேதைமையார் மாட்டேயுளதாம்.
           மேற்கண்ட விளக்கவுரைகள் எல்லாம், பெரும் தமிழ் அறிஞர்களால் எழுதப்பட்டவை. எனவே, அவர்களின் விளக்கவுரை தவறு என்பதல்ல என் பார்வை/வாதம்; ஆனால், இப்படிப்பட்ட ஓர் உவமையை மேலும் அழகாய்/அற்புதமாய் ஒப்பிட்டு சொல்லி இருக்கலாம் என்று தோன்றியது. இங்கே அறியாமை என்பதை "வறுமை" என்பதோடு நம் பெருந்தகை உவமைப்படுத்தி; தொடர்புப் படுத்துவதை, நாம் எல்லோரும் அறிவோம். அப்படி இருக்க, அந்த உவமானத்தை மேற்கொண்டு குறிப்பாய் உணர்த்தி இருக்கலாம்! என்று தோன்றியது. மேற்குறிப்பிட்ட விளக்கவுரைகள் அனைத்தும் அதை மைய்யப்படுத்தியவை என்பதை மறுக்கவில்லை எனினும், அதை இன்னும் நேரடியாக - நம் பெருந்தகை சொல்வது போல் "அறியாமை எனும் வறுமை" என்று நேர்பட விளக்கி இருக்கலாம் என்று தோன்றியது. எனவே, என்னுடைய விளக்கவுரைய...

செல்வமிருந்தும், விருந்தினர்களை உபசரிக்கத் தெரியாத அறிவிலிகளிடம்; 
அறியாமை எனும் "வறுமை" உண்டு

       மேலும், எப்போதும் போல் என்னுடைய நிகர்-விளக்கம் எழுத முனைந்தபோது, அப்படி ஓர் அறியாமையை பக்தியைப் பற்றி பேசும் "ஆத்திகர்களிடம்" இருப்பது நினைவுக்கு வந்தது. ஆத்திகர்களிடம் இருக்கும் "அறியாமை எனும் மூட-நம்பிக்கை" பற்றி நான் நிறைய எழுதி இருப்பதால், என்னுடைய நிகர்-விளக்கத்தை...

பக்தியிருந்தும், நம்பிக்கைகளைப் பகுத்தறியத் தெரியாத ஆத்திகர்களிடம்; 
அறியாமை எனும் "மூட-நம்பிக்கை" உண்டு.

என்று எழுதிட எனக்கு பெருத்த-சிரமமோ; நிறைய-நேரவிரயமோ ஏற்படவில்லை. என்னுடைய விளக்கவுரையை எழுதிய உண்டனேயே, நிகர்-விளக்கம் இயல்பாய் வந்தது. அதில், என்னுடைய பதிவின் இணைப்பு ஒன்றையும் கொடுத்திருந்தேன்.

"இருந்தும் இல்லாமல் இருக்கும்" அறியாமையை அகற்றுவோம்!!!

வெள்ளி, நவம்பர் 06, 2015

குறள் எண்: 0096 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 010 - இனியவை கூறல்குறள் எண்: 0096}

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

விழியப்பன் விளக்கம்: நன்மை பயப்பவற்றைப் பழகி, நேயத்துடன் பேசினால்; நல்வினை அல்லாதவை குறைந்து, நல்வினைகள் பெருகும்.
(அது போல்...)
வலிமை சேர்ப்பவைகளை உணர்ந்து, உறுதியுடன் கடைப்பிடித்தால்; வலிமை அல்லாதவை விலகி, வலிமை மிகுந்திடும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வியாழன், நவம்பர் 05, 2015

குறள் எண்: 0095 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 010 - இனியவை கூறல்குறள் எண்: 0095}

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு 
அணியல்ல மற்றுப் பிற

விழியப்பன் விளக்கம்: பணிவுடன் இருப்பதும், நேயத்துடன் பேசுவதுமே - மனிதரை அலங்கரிக்கும் அணிகலன்கள்; மற்றவை அல்ல.
(அது போல்...)
பொருளை ஈட்டுவதும், குடும்பத்தைப் பேணுதலுமே -  பெற்றோரைத் தரப்படுத்தும் காரணிகள்; மற்றவை அல்ல.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதன், நவம்பர் 04, 2015

குறள் எண்: 0094 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 010 - இனியவை கூறல்குறள் எண்: 0094}

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் 
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

விழியப்பன் விளக்கம்: எவரிடமும் இன்பத்தை மிகுவிக்கும் வண்ணம், நேயத்துடன் பேசுபவர்க்கு; துன்பத்தை மிகுவிக்கும், வெறுப்பு இல்லாமல் போகும்.
(அது போல்...)
பிறரின் வாழ்க்கையை உயர்த்தும் நோக்கில், அறமுடன் நடப்போர்க்கு; நிம்மதியைக் குலைக்கும், பொறாமை இல்லாமல் போகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

செவ்வாய், நவம்பர் 03, 2015

குறள் எண்: 0093 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 010 - இனியவை கூறல்குறள் எண்: 0093}

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்

விழியப்பன் விளக்கம்: முகம் மலர்ந்து, மகிழ்ச்சியுடன் பிறரைப் பார்த்து; உள்ளத்தில் இருந்து நேயத்துடன் பேசுவதே, அறம் எனப்படும்.
(அது போல்...)
கடமை உணர்ந்து, பொறுப்புடன் மக்களைக் காத்து; வாய்மையில் பயணித்து அறத்துடன் நடப்பதே, அரசாட்சி எனப்படும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், நவம்பர் 02, 2015

குறள் எண்: 0092 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 010 - இனியவை கூறல்குறள் எண்: 0092}

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து 
இன்சொலன் ஆகப் பெறின்

விழியப்பன் விளக்கம்: உள்ளம் மலர்ந்து, தானம் செய்வதை விட; முகம் மலர்ந்து, நேயத்துடன் பேசுபவராய் இருப்பது - அதீத நன்றானது.
(அது போல்...)
ஊழல் செய்து, செல்வந்தர் ஆவதை விட; அறம் உணர்ந்து, நேர்மையுடன் நடப்பவராய் இருப்பது - பெரும் சிறப்பானது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, நவம்பர் 01, 2015

குறள் எண்: 0091 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 010 - இனியவை கூறல்குறள் எண்: 0091}

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் 
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

விழியப்பன் விளக்கம்: அறம் அறிந்தவரின் வாயிலிருந்து, வெளிப்படும் சொற்கள்; அன்பு கலந்த, வஞ்சனையில்லாத - இனிய மொழியாய் இருக்கும்.
(அது போல்...)
மனிதம் கடைப்பிடிப்போர் மூலமாய், உருவாகும் செயல்கள்; அறம் சேர்ந்து, சுயமற்று - சமூகப் பொறுப்புடன் இருக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை