சனி, நவம்பர் 07, 2015

விருந்தோம்பல் ஓம்பா மடமை (குறள் எண்: 0089)



          குறள் எண் 0089-இற்கான என் விளக்கவுரையைப் படித்திருப்பீர்கள். அதில் "விருந்தோம்பல் ஓம்பா மடமை" எனும் ஒரு அற்புதமான உவமையை கையாண்டிருக்கிறார் நம் பெருந்தகை. விருந்தோம்பல் என்றால் "விருந்தினரை உபசரிப்பது" என்ற பொதுவான புரிதலே நம்மிடம் உண்டு. ஆனால், விருந்தோம்பல் எனும் செயலை "ஒழுக்கம்/அறம்/மனிதம்" இப்படி பல்வேறு விசயங்களுடன் தொடர்புப் படுத்துகிறார் நம் பெருந்தகை. அவற்றை அனுபவித்து, பேரானந்தம் கொண்டு விருதோம்பலை நம் பெருந்தகை விவரிப்பதையே ஒரு பதிவாய் எழுத வேண்டும் என எண்ணிக் கொண்டிருக்கும் போதே இப்படிப்பட்ட உவமானங்களால் என்னை இன்பக்கடலில் மூழ்கடித்து திணற வைக்கிறார், நம் பெருந்தகை. அதென்ன "விருந்தோம்பல் ஓம்பா மடமை"? விருந்தோம்பலில், மடமை ஏன் வந்தது? எப்படி வந்தது? என்பன போன்ற கேள்விகள் எழும். அதை அழகாகவும் விவரித்திருக்கிறார் நம் பெருந்தகை. இதுதான் அந்த குறள்:

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா 
                                            மடமை மடவார்கண் உண்டு 

இந்தக் குறளுக்கு பின்வரும் விளக்கவுரைகளைக் காண முடிந்தது:
  • விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
  • செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.
  • செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.
  • உடைமையின் கண்ணே யில்லாமைபோல, விருந்தினர்க்கு அளித்தலைப் போற்றாத பேதைமை, பேதைமையார் மாட்டேயுளதாம்.
           மேற்கண்ட விளக்கவுரைகள் எல்லாம், பெரும் தமிழ் அறிஞர்களால் எழுதப்பட்டவை. எனவே, அவர்களின் விளக்கவுரை தவறு என்பதல்ல என் பார்வை/வாதம்; ஆனால், இப்படிப்பட்ட ஓர் உவமையை மேலும் அழகாய்/அற்புதமாய் ஒப்பிட்டு சொல்லி இருக்கலாம் என்று தோன்றியது. இங்கே அறியாமை என்பதை "வறுமை" என்பதோடு நம் பெருந்தகை உவமைப்படுத்தி; தொடர்புப் படுத்துவதை, நாம் எல்லோரும் அறிவோம். அப்படி இருக்க, அந்த உவமானத்தை மேற்கொண்டு குறிப்பாய் உணர்த்தி இருக்கலாம்! என்று தோன்றியது. மேற்குறிப்பிட்ட விளக்கவுரைகள் அனைத்தும் அதை மைய்யப்படுத்தியவை என்பதை மறுக்கவில்லை எனினும், அதை இன்னும் நேரடியாக - நம் பெருந்தகை சொல்வது போல் "அறியாமை எனும் வறுமை" என்று நேர்பட விளக்கி இருக்கலாம் என்று தோன்றியது. எனவே, என்னுடைய விளக்கவுரைய...

செல்வமிருந்தும், விருந்தினர்களை உபசரிக்கத் தெரியாத அறிவிலிகளிடம்; 
அறியாமை எனும் "வறுமை" உண்டு

       மேலும், எப்போதும் போல் என்னுடைய நிகர்-விளக்கம் எழுத முனைந்தபோது, அப்படி ஓர் அறியாமையை பக்தியைப் பற்றி பேசும் "ஆத்திகர்களிடம்" இருப்பது நினைவுக்கு வந்தது. ஆத்திகர்களிடம் இருக்கும் "அறியாமை எனும் மூட-நம்பிக்கை" பற்றி நான் நிறைய எழுதி இருப்பதால், என்னுடைய நிகர்-விளக்கத்தை...

பக்தியிருந்தும், நம்பிக்கைகளைப் பகுத்தறியத் தெரியாத ஆத்திகர்களிடம்; 
அறியாமை எனும் "மூட-நம்பிக்கை" உண்டு.

என்று எழுதிட எனக்கு பெருத்த-சிரமமோ; நிறைய-நேரவிரயமோ ஏற்படவில்லை. என்னுடைய விளக்கவுரையை எழுதிய உண்டனேயே, நிகர்-விளக்கம் இயல்பாய் வந்தது. அதில், என்னுடைய பதிவின் இணைப்பு ஒன்றையும் கொடுத்திருந்தேன்.

"இருந்தும் இல்லாமல் இருக்கும்" அறியாமையை அகற்றுவோம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக