சனி, ஜனவரி 13, 2018

தமிழர் திருநாள் (2018)


"பழையனக் கழிதலும்
புதியனப் புகுதலும்"
பயணத்தின் மூலமெனப்
பதியவைக்க; “போகி”யில்
பொங்கலைத் துவக்கிடும்
பெருந்தமிழர் யாவர்க்கும்;
பெருந்தகையின் குறளுணர்ந்த
பொன்மனதனின் வாழ்த்துகள்!

அம்மாவழி நடக்கிறதென்றே
சும்மாவாக ஆள்வோரையும்;
தையொன்றே புத்தாண்டென்றே
தமிழரசியல் நடத்துவோரையும்;
போகிநெருப்பில் புகையாக்கியே,
புதுஇரத்தம் பாய்ச்சிடவே;
புகவிருக்கும் கலைஞானியை
பொங்கலன்றே வரவேற்போம்!

தமிழையும் தமிழரையும்;
தன்னலனுக்காய், அரசியலெனும்
தனலதனில் உலையிலிட்ட
திராவிடரையும்; உலையிலிடும்
துடிப்புடனே களம்புகுந்துள்ள
"தமிழ்போர்வை" போர்த்தியோரையும்
தடுத்திடுவோம்! "போகி"யிடுவோம்
தமிழ்முதலீடு செய்திட்டயாரையும்!

போகிதினத்தில் பொருட்களோடு
பழுத்தும்பயனற்ற அரசியலாரையும்
பொசுக்கிடுவோம்! தமிழர்வாழ்வும்
பசுமையோடு துளிர்த்திடட்டும்
போகியன்றே! "அரசியலென்பது
பழஞ்சாக்கடை" என்றொதுங்கிய
பழமையை விரட்டியடிப்போம்!
புகுத்திடுவோம் மாற்றரசியலை!

- விழியப்பன் எனும் இளங்கோவன் இளமுருகு 
www.vizhiyappan.blogspot.com
13012018

வெள்ளி, ஜனவரி 12, 2018

குறள் எண்: 0894 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 090 - பெரியாரைப் பிழையாமை; குறள் எண்: 0894}

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்

விழியப்பன் விளக்கம்: செயலாற்றும் திறமுடைய பெரியோர்க்கு, செயலாற்ற இயலாதோர் தீமை செய்வது; எமனைக் கைதட்டி அழைப்பதற்கு நிகரானதாகும்!
(அது போல்...)
வாழ்வளிக்கும் கடவுளான தொழிலுக்கு, வாழ இயலாதோர் உண்மையின்றி இருப்பது; வறுமையை கைகூப்பி வரவேற்பதற்குச் சமமாகும்!

வியாழன், ஜனவரி 11, 2018

குறள் எண்: 0893 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 090 - பெரியாரைப் பிழையாமை; குறள் எண்: 0893}

கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு

விழியப்பன் விளக்கம்: கெடுதல் வேண்டுமாயின், பெரியோரின் அறிவுரையைக் கேளாமல் செய்க! அழிவு வேண்டுமாயின், வலிமையாய் செயல்படுவோரிடம் தவறு செய்க!
(அது போல்...)
துன்பம் வேண்டுமெனில், நற்தலைவரின் ஆட்சியை ஏற்காமல் விடுக! கொடுமை வேண்டுமெனில், கொடுங்கோலாய் ஆள்வோரிடம் அதிகாரம் தருக!

புதன், ஜனவரி 10, 2018

குறள் எண்: 0892 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 090 - பெரியாரைப் பிழையாமை; குறள் எண்: 0892}

பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்

விழியப்பன் விளக்கம்: நம்மிற் பெரியோரைப் பேணாமல் இருப்பின்; அப்பெரியோரின் ஆதரவு இல்லாத நிலைமை, என்றுமழியாத துன்பத்தை அளிக்கும்.
(அது போல்...)
நம் பெற்றோர்களுடன் இணையாமல் வாழ்ந்தால்; அவர்களின் வாழிகாட்டுதல் இல்லாத நிலைமை, அறமில்லாத சந்ததியை உருவாக்கும்.

செவ்வாய், ஜனவரி 09, 2018

குறள் எண்: 0891 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 090 - பெரியாரைப் பிழையாமை; குறள் எண்: 0891}

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை

விழியப்பன் விளக்கம்: அனுபவம் வாய்ந்த பெரியோரின், செயலைச் செய்யும் வலிமையை இகழாமல் இருப்பது; ஒருவர், தமக்கு அமைக்கும் காவல்கள் அனைத்திலும் முதன்மையானது ஆகும்.
(அது போல்...)
நேர்மை மிகுந்த தலைவரின், பொதுநலன் காக்கும் கொள்கையை மறக்காமல் இருப்பது; மக்கள், சந்ததிக்கு கற்பிக்கும் அனுபவங்கள் அனைத்திலும் சிறந்தது ஆகும்.

திங்கள், ஜனவரி 08, 2018

குறள் எண்: 0890 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 089 - உட்பகை; குறள் எண்: 0890}

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று

விழியப்பன் விளக்கம்: உள்ளத்தால் உடன்பாடின்றி, உட்பகையோடு வாழ்வோரின் வாழ்க்கை; சிறிய குடிசையில், பாம்புடன் வாழ்வதற்கு இணையான ஆபத்து நிறைந்ததாகும்!
(அது போல்...)
கொள்கையில் இணையாமல், பதவிக்காக அமையும் கூட்டணி; சிறிய கூண்டில், சிங்கத்துடன் உறங்குவதற்கு நிகரான ஆபத்து கொண்டதாகும்!

ஞாயிறு, ஜனவரி 07, 2018

குறள் எண்: 0889 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 089 - உட்பகை; குறள் எண்: 0889}

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு

விழியப்பன் விளக்கம்: உட்பகை என்பது, எள்ளைப் பிளப்பது போன்ற சிறிய செயலே எனினும்; அது, அணுவைப் பிளப்பது போன்ற பெரிய கேட்டை விளைவிக்கும்!
(அது போல்...)
சேவைவரி என்பது, தண்ணீர் விலையைப் போன்ற சிறிய தொகையே எனினும்; அது, பொன்னின் விலையைப் போன்ற அதிக சுமையை அளிக்கும்!

சனி, ஜனவரி 06, 2018

குறள் எண்: 0888 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 089 - உட்பகை; குறள் எண்: 0888}

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி

விழியப்பன் விளக்கம்: அரத்தால் அறுக்கப்படும் பொன், தன் அளவை "சேதாரமாய்" இழப்பது போல்; உட்பகையால் பிளவுபடும் குடும்பம், அதன் வலிமையை "பரிகாரமாய்" இழக்கும்!
(அது போல்...)
செக்கில் அகப்படும் பொருள், தன் உருவை “சக்கையாய்” இழப்பது போல்; கொடுங்கோலால் ஆளப்படும் மக்கள், தம் வருமானத்தை “வரியாய்” இழப்பர்!

வெள்ளி, ஜனவரி 05, 2018

குறள் எண்: 0887 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 089 - உட்பகை; குறள் எண்: 0887}

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி

விழியப்பன் விளக்கம்: வெளியுலகுக்கு, புறத்தோற்றத்தால் ஒன்றிணைந்த சிமிழும்/மூடியும் போல் கூடி இருப்பினும்; உட்பகையைக் கொண்ட குடும்பம், உள்ளத்தால் கூடி இருக்காது!
(அது போல்...)
மற்றவருக்கு, திரவவடிவால் சேர்ந்திட்ட பாலும்/தண்ணீரும் போல் ஒற்றுமையாய் தோன்றிடினும்; சாதிவெறி உடைய இனம், மொழியால் ஒன்றுபட்டு இருக்காது!

வியாழன், ஜனவரி 04, 2018

குறள் எண்: 0886 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 089 - உட்பகை; குறள் எண்: 0886}

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது

விழியப்பன் விளக்கம்: ஒன்றிணைந்த குழுவினரிடையே, ஒற்றுமை இல்லாது உட்பகை வளர்ந்தால்; அதனால் விளையும் அழிவை, தடுப்பது அரிதானது ஆகும்!
(அது போல்...)
கூட்டுக்குடும்ப வாழ்க்கையை, சிற்றின்பம் காரணமாய் சிதைத்துப் பிரிந்தால்; அதனால் அழியும் கலாச்சாரத்தை, காப்பது அரிதானது ஆகும்!

புதன், ஜனவரி 03, 2018

குறள் எண்: 0885 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 089 - உட்பகை; குறள் எண்: 0885}

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்

விழியப்பன் விளக்கம்: நட்பை மையப்படுத்திய உறவுகளுக்குள், உட்பகை உருவானால்; அது, இறப்பை மையப்படுத்திய துன்பங்கள் பலவற்றையும் அளிக்கும்!
(அது போல்...)
சிந்தனையை வளர்க்கும படைப்புகளில், புரிதல் தவறானால்; அது, தீவினையை வளர்க்கும் காரணிகள் பலவற்றையும் விளைவிக்கும்!