ஞாயிறு, மார்ச் 30, 2014

விஜயகாந்த் எனும் அரசியல்வாதி...



        சமீபத்தில் முகநூல்-நட்பு ஒருவர் விஜயகாந்த்தைப் பற்றி என் "மானசீக குரு"திரு. பாலகுமாரன் அவர்கள் சொன்னதாய் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்! அது எத்தனை உண்மையான தகவல் என்பது எனக்கு தெரியாது! எனினும், அந்த புகைப்படத்தை வெளியிட்டு நானும் ஒரு பதிவிட்டிருந்தேன்; அதை இங்கே துணுக்குகள் பகுதியிலும் வெளியிட்டு இருக்கிறேன். வழக்கமான, திரு. பாலகுமாரனின், எழுத்தாதிக்கம் அதிலும் இருந்து. நான் முன்பே "என்ன விதமான அரசியல் இது???" என்ற தலையங்கத்தில் விஜயகாந்த் பற்றி பலரும் "தவறாய்"விமர்சிப்பவற்றை சுட்டி காட்டியிருக்கிறேன். அங்கே, விஜயகாந்தின் செயலை கண்டித்ததோடு - அந்த நிகழ்வு சார்ந்த என் பார்வையை பதிந்திருந்தேன். நான் வெளிப்படையாய் சொன்னதில்லை எனினும், விஜயகாந்த் மீது எப்போதும் ஒரு சிறு-அபிமானம் உண்டு. என்னுடைய பதிவை பார்த்துவிட்டு என்னுடைய நட்புகள் இருவர் - விஜயகாந்தின் செய்கைகள் பற்றி என்னுடன் முகநூலில் விவாதித்தனர்.

          என்னுடைய பதிவையும், எங்கள் விவாதங்களையும் இந்த இணைப்பில் காணலாம்!  ஒரு நண்பர் அவர் குடித்துவிட்டு வருகிறார் என்று கூறினார்! நான் "அவரு, குடிச்சுட்டு வர்றாருங்கறதே ஒரு "அரசியல் குற்றச்சாட்டு"! உனக்கும் எனக்கும் உண்மை தெரிய வாய்ப்பில்லைன்னு"  சொன்னேன். அப்படியே, ஒருமுறை நடந்திருந்தாலும் - எப்போதும் அப்படி வரும் அளவுக்கு மோசமான ஆளா எனக்கு தெரியல! கண்ணு-செவப்பா இருக்குங்கறதுக்காக ஒருத்தர குடிகாரன்னு சொல்ட்றது நியாயமில்லை! என்றேன். அதுபோன்றே, அவர் தன்  மனைவி/மச்சான் இருவருக்கும் முக்கியத்துவம் கொடுப்பதான குற்றச்சாட்டு! நான் "பலரும்; தன் பிள்ளைகள்? மருமகன்கள்? மருமகன்களின் பிள்ளைகள்?..." என்று முக்கியத்துவம் கொடுப்பதை சுட்டிக்காட்டினேன்.  மேலும், "என்னால, உனக்கு ஏதாவது ஒரு வேலை/பதவி வாங்கித்தர முடியும்னா நான் கண்டிப்பா செய்வேன்! அப்படித்தான் நீயும்..." நமக்கு நட்பு அடிப்படைன்னா?! அவர்களுக்கு உறவுகள் அடிப்படை... என்றேன்!

          இன்னுமொரு நட்பு, தலைவர் என்பவர் விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றார்! உண்மை தான்; அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை! ஆனால், விமர்சனம் என்பது "தனி நபர்" சார்ந்தோ; பொய்யாகவோ இருக்கக்கூடாது!! அப்படிப்பட்ட விமர்சனங்களைப் பொருத்துக்கொள்ளும் தலைவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் - எல்லா வரலாற்றையும் சேர்த்தே! எனவே, திரு. விஜயகாந்த் என்னவோ "ஒற்றை ஆள்" என்பதாய் பிரதிபலிக்கவேண்டாம் என்பதே என் கருத்து! அதே போல், தருமபுரி சம்பவம் எனக்கும் சிறிது அதிர்ச்சி தான்! ஆனால், அங்கே 2 விசயங்கள் உள்ளன: 1. (எனக்கு தெரிந்து)அந்த வேட்பாளர் அந்த நிகழ்ச்சியை பெரிது-படுத்தி பேசவில்லை: 2. பின் ஏன் இந்த ஊடகங்கள் அதை அத்தனை பெரிதுபடுத்தின?! - இது ஒரு அரசியல்! விஜயகாந்த் போன்ற ஒருவர் எந்த முன்னனுபவும், எந்த அடிப்படையும் இல்லாது ஒரு புதுக்கட்சியை ஆரம்பித்து நடத்தும்போது "தருமபுரி சம்பவம்" போன்று நடப்பவை தவிர்க்க முடியாதவை!

      ஆனால், அது ஆரம்ப காலம்; அவரிடம் படிப்படையான மாற்றங்கள் வந்துகொண்டிருக்கின்றன!  இங்கே இருக்கும் 2 "பாரம்பரியமான"கட்சிகள்  - இதை விட கேவலமான விசயங்கள் எல்லாம் செய்தவர்கள்/ செய்து வருபவர்கள்! ஒரு முன்னாள்-முதலமைச்சரை "பெண்மணி என்றும் "பாராமல் இத்தனை ஜோடி செருப்புகள்"வைத்திருந்தார் என்பதை "மீண்டும், மீண்டும்"வீடியோவாய் காண்பித்தது எத்தனை "தரம்-தாழ்ந்த விமர்சனம்"?! நான் பலரிடமும், இப்படித்தான் விளக்கம் கொடுப்பேன்: என்மகளுக்கு 8-மாத வயதிருந்தபோது (நடக்க கூட தெரியாத அவளுக்கு) 18-ஜோடிக்கும் மேல் செருப்புகள் இருந்தன! என்னைப்போன்ற சாதாரணமான ஒருவனே அத்தனை ஜோடி-செருப்புகள் வாங்கும்போது; முதலமைச்சராய் இருந்த பெண்மணியிடம் இருந்ததில் என்ன ஆச்சர்யம்?! அதே போல் அந்த பெண்மணி மீண்டும் முதலமைச்சராய் வந்தபோது, பதிலுக்கு அந்த முன்னாள்-முதல்வரை நள்ளிரவில் கைது-செய்த அநாகரிகம்!

         அந்த அநாகரிக செயலையும்; "கொல்றாங்க! கொல்றாங்க!!" என்று டப்பிங் கொடுத்து நடந்த நாடகம் அதை-விட-அநாகரிகம்! இவையெல்லாம், பொதுவாழ்வில் இருக்கும் அந்த பாரம்பரிய-தலைவர்களின் பொறுமையின்மையை காட்டவில்லையா?! விஜயகாந்த் மிகவும் நல்லவர் என்பது என் வாதம் அல்ல; நான் இங்கே அவருக்காய் பிரச்சாரமும் செய்யவில்லை! நேற்று முகநூலில் "விஜயகாந்தின் காமெடி கலாட்டா! பாகம்-2" என்ற காணொளியை பார்க்க நேர்ந்தது; இந்த தலையங்கத்திற்காய் எனக்கேதும் உருப்படியான தகவல் கிடைக்கும் என்று பார்த்தேன். ஆனால், அந்த அசிங்கத்தை என்னால் பாதி கூட பார்க்கமுடியவில்லை! அதில், விஜயகாந்தின் செய்கைகளை மட்டும் காண்பித்து; அதற்கு அவரை சென்ற தேர்தலில் எதிர்த்த அந்த நகைச்சுவை-நடிகரின் "திரைப்பட டையலாக்கை" வைத்துள்ளனர்! இதில் என்ன காமெடி இருக்கிறது? உண்மையாய் அவர் என்ன பேசினார் என்பதை காண்பிப்பது தானே நியாயம்?!

        இன்னொரு காட்சியில், திரு. வைகோ அவர்களின் பக்கத்தில் அமர்ந்து விஜயகாந்த் ஏதோ அவரின் கட்சிக்காரரிடம் பேசும் செய்கையை மட்டும் காண்பித்து மீண்டும் அந்த நகைச்சுவை நடிகரின் டையலாக்கை தவறான விதத்தில் சித்தரித்துள்ளனர். திரு. வைகோ அவர்களின் முகபாவனையில்; அவர் விஜயகாந்த் பேசியதை வெகுவாய் இரசிப்பது அப்பட்டமாய் தெரிகிறது! பின், ஏன் அம்மாதிரி தவறாய் சித்தரிக்க வேண்டும்?! என்ன பேசினார் என்பதை அப்படியே காண்பிப்பது தானே நியாயம்?! பெரும்பான்மையில், இதுபோன்ற தவறான விமர்சனங்கள் தான் விஜயகாந்த் பற்றி இருக்கிறது என்பதே என் எண்ணம்! அதைத்தான், மேற்கூறிய திரு. பாலகுமாரன் அவர்களின் விளக்கமும் உணர்த்துகிறது! இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், நன்கு படித்தவர்கள் தான் இப்படிப்பட்ட தவறான-விமர்சனங்களை உருவாக்குகின்றனர்! அதை, பகிர்பவர்களும் நன்கு படித்தவர்களே!! இதைத்தான் என்னால் ஒப்புக்கொள்ளமுடியவில்லை!!

           திரு. பாலகுமாரன் அவர்கள் சொல்லி இருப்பது போல், விஜயகாந்தின் கோபத்தில் ஒரு உண்மை இருக்கிறது. தவறென்றால், என் கட்சிக்காரர் செய்தாலும், உடனே கண்டிப்பேன் என்ற நியதி இருக்கிறது! ஓட்டுக்காய் எதையும் பொறுத்துக்கொள்ளும் "மற்ற தலைவர்களின்" நாடகத்தன்மையும்/ நடிப்பும் அவரிடம் இல்லை! அதனால் தான், அவரின் செயல்களில் உண்மையான/ நியாயமான கோபம் நிதர்சனமாய் தெரிகிறது!! இவர்களைப் போன்றோர்களை "நாம் தலை மீது வைத்து கொண்டாடவில்லை எனினும்; தவறுதலாய்-தலையில் கொட்டாமலாவது" இருக்கலாமே?!" கூட்டணியில் இருந்துகொண்டே, நியாயமான எதிர்க்கட்சி தலைவராய்; அதிலும், அந்த வீரப்பென்மணியை எதிர்த்து செயல்படும் அவரின் பயமின்மையை நாம் கண்டுகொள்ள தவறக்கூடாது. மீண்டும் சொல்கிறேன்... இது விஜயகாந்துக்கு ஆதரவானதும் அல்ல; நான் இங்கே ஓட்டும் சேகரிக்கவில்லை! ஆனால், நான் ஓட்டளித்தால்...

அது "விஜயகாந்திற்கே" என்பதில் என்ற மாற்றமும் இல்லை!!!

பின்குறிப்பு: எடுத்துக்கொண்ட தலைப்பின் காரணமாய்/அதை தெளிவாய் விளக்கவேண்டிய கட்டாயத்தால்; வெகுநாட்களுக்கு பிறகு நீளமான-தலையங்கம் எழுத நேர்ந்துவிட்டது! முடிந்த அளவில்; அதை மென்மேலும் படித்துபார்த்து சுருக்கி இருக்கிறேன். எனினும், நீளமாய் எழுத நேர்ந்ததற்கு பொறுத்தருளவும்!!

"சபர்ணா" எனும் அழகி...



       முந்தைய மனதங்கத்தில் அமுதவாணன் பற்றி எழுதியிருந்ததை பலரும் படித்திருக்கக்கூடும்! அப்படி "ஜலபுல ஜங்"நிகழ்ச்சிகளை பார்க்கும்போது தான் "சபர்ணா எனும் நடிகையை" பார்க்க நேர்ந்தது. ஆரம்பத்தில் பெரிதாய் அவர் மேல் கவனம் ஏதும் இல்லை எனினும், நாட்கள் செல்ல செல்ல அவர் மிகவும் வசீகரமாய் தெரிய ஆரம்பித்தார். ஆம், எந்த வகையான உடை எனினும்; அவருக்கு கன-கச்சிதமாய் பொருந்துகிறது. தாவணியில் ஆரம்பித்து - லெக்கின்ஸ் வரை எந்த உடையானாலும், அவருக்கு மிகப்பொருத்தமாய் தோன்றுகிறது. உண்மையில் அவர் ஒரு அழகி...அதனால் தான் "சபர்ணா எனும் அழகி" என்று தலைப்பிட்டேன். அதேபோன்று, எந்த பாத்திரத்தில் நடித்தாலும்; அதிக ஆர்ப்பாட்டமில்லாத அளவனான நடிப்பு! எந்தவிதமான அலட்டலும் இல்லை; அவரின் சிரிப்பும் அழகு! இவர் போன்றோரின் திறமைகள் பல்கிபெருகி பலரையும் சென்று சேரவேண்டும் என்று தோன்றுகிறது. ஏன் இவரைப் போன்றோர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை?! என்று யோசித்தேன். 

    அமுதவாணன் போன்றே; சபர்ணாவும் எந்த திரைப்படத்திலும் நடித்திருப்பதாய் எனக்கு தெரியவில்லை! அழகும், நடிப்புத்திறமையும் இல்லாமல் "வெறும் கவர்ச்சி"என்ற ஒன்றிற்காய் பல நடிகைகளுக்கும் கிடைக்கும் வாய்ப்புகள்; சபர்ணா போன்ற நடிகைகளுக்கு ஏன் கிடைப்பதில்லை?! என்ற ஆதங்கம் எழுந்தது. எவரேனும் சபர்ணா, அமுதவாணன் போன்றவர்களுக்கு வெள்ளித்திரையிலும் வாய்ப்புகள் கொடுக்கவேண்டும் என்று தோன்றியது. எனக்கு, திரைப்படத்துறையில் சில ஆண்டுகள் கழித்து எப்படியேனும் நுழைந்து ஏதேனும் செய்யவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அது எந்த அளவுக்கு சாத்தியமாகப்போகிறது என்று தெரியவில்லை! எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பின்; இவர்கள் போன்றவர்களை கண்டிப்பாய் தேர்ந்தெடுத்து வாய்ப்புகள் கொடுப்பேன். ஆனால், அதற்கு முன் இவர்கள் வெள்ளித்திரையில் நுழைந்து சாதிக்கவேண்டும். தமிழ் பேசும் நடிகைகள் கிடைப்பதில்லை என்று சில இயக்குனர்கள் சொல்வது வியப்பாய்?! இருக்கிறது. கண்டிப்பாய்....

"சபர்ணா" போன்ற அழகிகள் வெள்ளித்திரையில் பிராகாசிக்கவேண்டும்!!!

"அமுதவாணன்" எனும் கலைஞன்...



         "அது-இது-எது" நிகழ்ச்சியின் "சிரிச்சா, போச்சு!" பிரிவை பார்ப்பவர்களுக்கு அமுதவாணன் எனும் கலைஞனை தெரிந்திருக்கும். எனக்கு மிகவும் பிடித்த சின்னத்திரை கலைஞர்களில் ஒருவர்; தொடர்ந்து "சிரிச்சா, போச்சு!" பிரிவில் வரும் நகைச்சுவைகளை பார்த்ததால் மட்டும் அவரை வெகுவாய் இரசிக்க ஆரம்பித்துவிட்டேன். அவரின் ஒவ்வொரு ஒப்பனையும், அவரின் மாறுபட்ட நடிப்புத்திறனும், அவரின் "டைமிங்"சென்சும் என்னை வெகுவாய் கவர ஆரம்பித்துவிட்டது. ஒரு நாள் அவர் வேறேதேனும் நிகழ்ச்சிகள் செய்கிறாரா?! என்று தேட ஆரம்பித்தபோது "காமெடியில் கலக்குவது எப்படி?" என்ற நிகழ்ச்சி கண்ணில் பட்டது. பின்னர், அந்த நிகழ்ச்சிகள் பலதையும் அவருக்காகவே பார்க்க ஆரம்பித்தேன். அதன் பின்னர், அவரின் "ஜலபுல ஜங்"டீம் செய்யும் நிகழ்ச்சிகளை மட்டும் பார்க்க ஆரம்பித்தேன். இப்படியாய், அவரின் நிகழ்ச்சிகள் பலதையும் பார்த்துக்கொண்டிருந்த போது அவரின் தொகுப்புகள் என்று தனியே "யூ-டியூபில்" இருப்பதை பார்த்தேன். 

       அவரின் அந்த தொகுப்புகளை பார்க்க ஆரம்பித்தபோது தான், அவர் நகைச்சுவை மட்டுமல்ல; நடனம் மற்றும் பல மாறுபட்ட நடிப்பு பரிமாணங்களிலும் அருமையாய் செய்திருப்பது தெரியவந்தது! அதன் பின்னர் தான், அவர் பல ஆண்டுகள் சின்னத்திரையில் இருந்துகொண்டிருப்பது தெரிய வந்தது! எனக்கு தெரிந்து அவர் எந்த திரைப்படத்திலும் நடித்திருப்பதாய் தெரியவில்லை; அதை உணர்ந்ததும், ஏன் அவருக்கு இன்னும் அப்படி வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை என்ற கேள்வி எழுந்தது! ஒருவேளை, சிவகார்த்திகேயன் போல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்காததால் பெரிதாய் கவனிக்கப் படவில்லையா?! என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால், இணையதளங்களில் அவரின் தொகுப்புகளை பார்க்கும் போது பெரிதாய் பிரபலம் அடைந்திருப்பதாய்-தான் தோன்றுகிறது! என்னவோ, அந்த கலைஞனுக்கு வெள்ளித்திரையிலும் பல-வாய்ப்புகள் கிடைத்து; அவரின் திறமைகள் இன்னும் மென்மேலும் வளர்ந்து பலரையும் சென்று சேரவேண்டும் என்ற ஆசை வருகிறது. 

என்னுடைய மனமுவந்த வாழ்த்துக்கள்... அமுதவாணன்!!!    

"பிலிப்ஸ்" ஷேவிங் செட்...



       சென்ற வாரம் என்னுடைய நீண்ட-நாள் கனவான; மின்னியங்கி "சவரம் செய்யும் கருவி"யை வாங்கினேன். மிக புதுமையானது இல்லையெனினும், நல்ல தரமான ஒன்று! இத்தனை காலம் அவ்வளவு தொகையை, எனக்காய் செலவு செய்வதில் ஒருதயக்கம் இருந்தது. என் குடும்பத்திற்கு தேவையான பணத்தை சேர்த்திருப்பதால், இப்போது எனக்காகவும் செலவு செய்யத் துவங்கி இருக்கிறேன். 

          இது என்னுடைய முதல் கருவி என்பதால், இணையத்தில் பல காணொளிகளைப் பார்த்து பின்னர் தான், முதலில் உபயோகித்தேன். அப்படியிருந்தும், என் விருப்பப்படி அல்லாமல் தாடியை மிகவும் குறுகியதாய் நறுக்கி விட்டேன். அடுத்தமுறை, சரியான முறையில் உபயோகிப்பேன் என்ற நம்பிக்கை நிறைந்திருக்கிறது! 

          நான் எதிர்பார்த்ததை விட அக்கருவியை உபயோகிப்பது மிகவும்-பாதுக்காப்பாய் உணர்தேன்!!!

விஜயகாந்த் பற்றி திரு. பாலகுமாரன்...




என் மரியாதைக்குரிய; என் தியான பயிற்சியின்-குரு, திரு. பாலகுமாரன் அவர்கள் கூறியதாய் இதை பார்க்க நேர்ந்தது!

அருமையான விளக்கம் - தனக்கே உரித்தான பாணியில்!! 

மேகம் கொட்டட்டும்! மின்னல் வெட்டட்டும்!!



விழியப்பன் நினைப்பது (27032014):

"மேகம் கொட்டட்டும்; ஆட்டம் உண்டு!...மின்னல் வெட்டட்டும்; பாட்டும் உண்டு!!" என்ற பாடல் எப்போதும்-கவர்ந்தவை "என்ற பெயரிட்ட என் கணினி ஃபோல்டரில்" இருக்கும் "முன்னூற்று சொச்சம்"பாடல்களில் ஒன்று!  எந்த மன-நிலையில் இருப்பினும், அந்த பாட்டை கேட்கும்போது என்னையறியாமல் நான் குதூகலம் ஆகிவிடுவேன்.

சென்றவாரம் ஓர்மாலை - இங்கே அபுதாபியில் என் வீட்டில் அந்த பாடல் ஒலித்தது! உடனே, குதூகலமாகி மிகுந்த சத்தத்துடன் பாடிக்கொண்டே/ஆடவும் செய்தேன்!! எப்போதும் போல் மீண்டும், மீண்டும் அந்த பாடலை கேட்டேன். "ஹோம்-தியேட்டரின்"சத்தம் வெளியில் எவருக்கும் கேட்டிருக்குமா?! பற்றி என்ற எந்த கவலையும் இல்லை!!

நேற்று மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், அந்த பாடல் ஒலிக்கும்போது; இங்கே  அபுதாபியில் "மேகம்"கொட்டியதுடன் அல்லாது "மின்னல்"வெட்டவும் செய்தது!!! 

ஞாயிறு, மார்ச் 23, 2014

பென்சில்/இரப்பர் தொலைப்பது(/திருடுவது)...




       பெரும்பாலான குழந்தைகள் "பென்சிலையும்/இரப்பைரையும்" தொலைத்துவிட்டு அடிக்கடி வீட்டில் திட்டுவாங்குவது அல்லது அடிவாங்குவதை பலரும் பார்த்திருக்கக்கூடும். என்மகள் அப்படி அடிக்கடி தொலைத்துவிட்டு; என்னவளிடம் திட்டு வாங்குவாள்! "ஒருநாளைக்காவது; கொண்டு போறப் பொருளை"சரியா எடுத்துக்கிட்டு வர்றியா?! என்று என்னவள் அடிக்கடி என்மகளை கண்டிப்பாள்! "உங்க அப்பாவுக்கு வசதி இருக்குதுன்னு உனக்கு தேவைக்கு அதிகமா வாங்கிக் கொடுக்கறார், இல்ல?! நீ அப்படித்தான் பண்ணுவ!" என்று எனக்கும் கொஞ்சம் கிடைக்கும். "அவ கேக்கறதெல்லாம் வாங்கிக் கொடுக்காதீங்க; அவளுக்கு பொறுப்பே வராது!" என்று என்னவள் சொல்வாள். நான் அதைப்பற்றி எல்லாம் பெரிதாய் கவலைப்பட்டதில்லை! அதற்கு என்மகள் மேலிருக்கும் "பாசம்; மட்டுமே!" காரணம் அல்ல!! இதற்கு பின்னால் இருக்கும் நானறிந்த உண்மையே அதற்கு முக்கிய காரணம். அதை பலருக்கும் பயன்பட(வே) இங்கே பகிர்ந்துள்ளேன்.

    ஒரு குழந்தை பென்சிலையோ/இரப்பரையோ தொலைத்துவிட்டு வந்தால்; அதற்கு அந்த குழந்தையின் பொறுப்பின்மை(மட்டுமே) காரணமல்ல! அதை, அதே வயதில் இருக்கும் ஒரு குழந்தை "சாமர்த்தியமாய்??!!" திருடுகிறது என்பதையும் நாம் உணரவேண்டும்!! வேண்டுமென்றே எந்த குழந்தையும் தொலைத்துவிட்டு வருவதில்லை! அதை ஒரு குழந்தை திருடுவதால் தான் அப்படியொரு நிகழ்வு நடக்கிறது. அப்படி "திருடும் ஒரு குழந்தையாய்"தான் என் இளம்வயதில் இருந்திருக்கிறேன். நடிகர் வடிவேல் சொல்வது போல் "என்னுடைய திருட்டு; ஒரு நூதன-திருட்டாய்!" இருக்கும். அதாவது, அந்த 4/5 வயதில் ஒரு "கிரிமினல்"எண்ணத்தோடு செயல்பட்டிருக்கிறேன். என்னுடன் பயிலும் சக-குழந்தையின் பென்சில்/இரப்பர் எனக்கு பிடித்துவிட்டது என்றால், அந்த குழந்தையிடம் "எங்க வாங்கின?!" என்பது போன்ற தகவலை கேட்பேன். அதற்கு அடுத்த நாள் "எங்கப்பாவும்; எனக்கு அதே மாதிரி பென்சில்/இரப்பர் வாங்கித்தரன்னு சொல்லி இருக்கார்" என்பேன்.

          அடுத்த நாள் தான், அந்த பென்சில்/இரப்பரை திருடுவேன்! அதற்கடுத்த நாள், ரொம்ப தைரியமாக அதே பென்சில்/இரப்பரை வகுப்புக்கு எடுத்து செல்வதோடு மட்டுமல்லாமல், அதே குழந்தையிடம் காட்டி "பாத்தியா?! எங்கப்பா அதே மாதிரி வாங்கி கொடுத்தார்!" என்பேன். முன்பே, அந்த குழந்தையிடம் இப்படியொன்று நடக்கப்போகிறது என்று சொல்லி இருந்ததால், அந்த குழந்தை என் மேல் எந்த சந்தேகமும் இல்லாமல் "என் பென்சில்/இரப்பர் தொலைஞ்சிடுச்சு!" என்று பரிதாபமாய் சொல்லும். நானும், அப்படியா?! என்று கேட்பேன். இப்படி நான் பென்சில்களையும்/இரப்பர்களையும் திருடி இருக்கிறேன். என்னப்பன் நான்(/நாங்கள்) கேட்டு எதையும் இல்லையென்று சொன்னதில்லை; உண்மையில், நாங்கள் கேட்காமலேயே அவர் வாங்கிக் கொடுப்பதே வழக்கம். அது என்னவென்று தெரியவில்லை! அந்த வயதில் அப்படியொரு சந்தோசம்; அந்த திருட்டு-பழக்கத்தில்!! நான் 3-ஆவது படிக்கும் வரை அப்படி செய்திருக்கிறேன்.

           அதற்கு பின் "எனக்கு தமிழ் வரவில்லை!" என்ற காரணத்திற்காய் என்னை, என்னப்பன் எங்கள் கிராமத்து பள்ளியில் சேர்த்துவிட்டார். அதன் பின், எந்த குழந்தையிடமும் எனக்கு பிடித்தவண்ணம் பென்சிலோ/இரப்பரோ பார்த்ததில்லை! என்னப்பனும்/எங்கள் குடும்பமும் பல பொருட்களை எங்கள் கிராமத்திற்கு அறிமுகம் செய்ததை சமீபத்தில் ஒரு தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதனால், என்னைவிட சிறப்பானதாய் எவரிடமும் நான் பார்த்ததில்லை; எல்லா பென்சில்களையும்/இரப்பர்களையும் நான் திருடுவதில்லை! எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே அப்படி "நூதனமாய்" திருடுவேன்; அப்படியொரு நியாயமான-கொள்கை??!! எனக்கு. என்னவளிடம் இதை சொல்லி "என்னை மாதிரி ஏதாவது ஒரு குழந்தை திருடி இருக்கும்! ரொம்ப திட்டாத அவளை!" என்பேன். என்மகளுக்கு எண்ணற்ற பென்சில்கள்/இரப்பர்கள் வாங்கி கொடுத்திருக்கிறேன்; அதுவும், எல்லாம் இங்கே வெளிநாடுகளில் வாங்கிய/தரமான பொருட்கள்!

        அதனால், என்னைப்போல் ஏதாவது ஒரு குழந்தை/பல குழந்தைகளை  கவர்ந்திருக்கக் கூடும்! என்மகள் போன்ற குழந்தைகளை கடிந்து கொள்வதில் எந்த நியாயமும் இல்லை! எப்படி கவனமாய் இருந்தாலும், அது களவாடப்படும்! என்மகளிடம் ஓர் உயரிய குணம் உண்டு; அவளுக்கு எவர் எடுத்தது என்பது தெரிந்திருந்தும்; "அவள் என் ஃபிரண்டுப்பா!" என்பாள். அதை கேட்கும்போதெல்லாம் என்னிடம் களவு-கொடுத்தவர்களும்; நான் அவர்களின் ஃபிரண்ட் என்பதால்தான் காட்டிக்கொடுக்காமல் இருந்திருப்பரோ?! என்று என்னுள் எழுவதுண்டு. நான் செய்த தவறுக்காய், என்மகள் இன்று பதிலுக்கு தொலைக்கிறாள் என்று தோன்றும்!! அதுவும், பென்சில்/இரப்பர் மட்டுமில்லாமல் "வாட்டர் பாட்டில், ஸ்கேல்,... என்று" பலதும் தொலைப்பாள். இது என்மகளின் தவறு என்பதைக் காட்டிலும், நான் செய்ததற்கான வினை என்றே நான் எண்ணுவேன். எனவே, உங்களின் குழந்தை ஒரு பொருளை தொலைத்துவிட்டால், அதை கோபத்தோடு அணுகாமல்; அருள்கூர்ந்து, அது உங்கள்...

குழந்தையின் தவறல்ல! மாறாய் என்போன்ற குழந்தைகளின் தவறென்று உணருங்கள்!!!

பின்குறிப்பு: குழந்தைப்பருவம் தாண்டியபின்; 12-ஆம் வகுப்பு படிக்கும்போது ஒரு நண்பனின் "பேனாவை"அதே போல் சொல்லி திருடியிருக்கிறேன். இப்போதும் கூட "கான்ஃபரன்ஸ்" செல்லும் போது; கம்பெனிகள் வைத்திருக்கும் "அன்பளிப்பு" பொருட்களை எடுப்பதில் "அப்படியொரு" ஆனந்தம்! இது, திருட்டு இல்லையெனினும் அங்கே சென்று; தேவையில்லாமல் "சிரிப்பென்ற பெயரில் ஒரு வழி-வழிந்துவிட்டு" எடுப்பது "திருட்டு போலவே!" தோன்றும். கண்டிப்பாய், இதை பலரும் செய்திருப்பீர்கள் என்று எனக்கு நிச்சயமாய் தெரியும்!! நான் என்னுடைய உயரதிகாரிகள் அப்படி செய்வதைக்கூட பார்த்திருக்கிறேன்.  

ஃபர்ஸ்ட் அடிச்ச "பியர்"...




      கண்டிப்பா எல்லாருக்கும் மொத, மொத "தண்ணி அடிச்சது" நியாபகம் இருக்கும்! எனக்கு ரொம்ப-தெளிவா நியாபகத்துல இருக்குது!! 1991-ல B. Sc., செகண்ட்-இயர் படிக்கும்போது நான் மொத "பியர" அடிச்சேன். நான் தண்ணி அடிக்க ஆரம்பிச்ச கதை ரொம்ப வித்தியாசமானது! இதுமாதிரி, யாருக்காவது நடந்திருமாங்கறது சந்தேகம் தான்... ஆனா, எனக்கு அப்படித்தான் நடந்தது.

      நானும், என் ஃபிரண்டும் "கார்ட்ஸ்"ஆடிக்கிட்டு இருந்தோம்! கார்ட்ஸ்-ஆடும்போது "பெட்" இல்லாம ஆடறது நெறைய பேருக்கு புடிக்காது! எனக்கு கண்டிப்பா புடிக்காது; அதனால, "அது-இது"ன்னு யோசிச்சப்போ என் ஃபிரண்ட் "எது"ன்னு சொன்னான்; அவன் சொன்ன பெட் "பியர்"!  அதாவது, தோக்கறவங்க; ஜெயிக்கரவங்களுக்கு "பியர்"வாங்கிக் கொடுக்கனம்னு முடிவானது. எனக்கு,  அந்த பழக்கம் இல்லைன்னாலும்; சரின்னு ஒத்துக்கிட்டேன். அப்புறம், ஒரு வழியா ஆடி கேம்-முடியும்போது பார்த்தா "நான் தோத்துட்டேன்!". நான், என் ஃபிரண்டுக்கு பியர் வாங்கி கொடுக்கணும்.

       சரின்னு "மெட்ராஸ்-டிரிப்லிகேன்ல" அப்போ இருந்த ஒரு "ஒயின் ஷாப்"புக்கு போனோம்! கடைக்குள்ள போனதும் "ஒரு திருட்டு யோசனை?!" வந்துச்சு... சரி, அவனுக்கு மட்டும் ஏன் வாங்கி கொடுக்கணும்?! நாமளும் ஒன்னு வாங்கி அடிச்சா என்னனு தோனுச்சு! சரின்னு, மச்சி "ரெண்டா வாங்கலாம்டா!"; நானும் அடிக்கப்போறேன்னு சொன்னேன். அவன், சரி மச்சி! ஆனா, முடியலைன்னா ஏதும் அசிங்க பண்ணிடாதடா! என்கிட்ட கொடுத்துடுன்னான்; சரி, மச்சி! என்னால முடியலன்னா ஒனக்கு கொடுத்துடறேன்னு சொல்லி 2-பியர் வாங்கிக்கிட்டு உள்ளே போனோம்!

         நான், அன்னைய தேதிக்கு சுமார் 1-வருஷத்துக்கு மேல காலைல எழுந்ததும் 1 அல்லது 1.5 லிட்டர் தண்ணி குடிக்கற பழக்கத்த வச்சிருந்தேன்! இன்னைக்கு வரைக்கும் காலைல எழுந்ததும், மொதல்ல செய்யற வேலை அது தான்! அதனாலேயே என்னவோ, அந்த பியரை (வெறும் 650 மில்லி லிட்டர் தானே??!!​) ரெண்டு மொடக்குல குடிச்சுட்டேன். நல்ல எதமான-கூலிங்ல இருந்ததாலையோ என்னவோ?! எனக்கு ஒண்ணுமே தடங்களா இல்லை! அவன் சரியான காண்டாயிட்டான்... அவன் இன்னும் அரை-பியர் கூட குடிச்சி முடிக்கல! அவன் மெட்ராசுக்கே உரிய அந்த வார்த்தைய சொல்லி..."நெஜமா இதுக்கு முன்னாடி" தண்ணி அடிச்சதுல்ல?! அப்படின்னு கொஞ்சம் கூட நம்பாம கேக்கறான்! இல்லடா... ஒனக்கு தான் தெரியுமே! நான் எப்படா, குடிச்சிருக்கேன்?!-ன்னு கேட்டேன்! அவனுக்கு, இன்னும் ஒரு-அரை பியராவது கிடைக்கும்னு நெனைச்சு ஏமாந்த காண்டு வேற! இல்லடா, நான் தான் காலைல எழுந்ததும் தண்ணி குடிப்பன் இல்ல?! அதனால தான் குடிச்சுட்டன் போல?!ன்னேன்! அவனுக்கு அது "பிரஸ்டிஜ்"இஷ்ஷுவா வேற போயிடுச்சு! அவனைவிட சீக்கிரமா வேற குடிச்சுட்டன் இல்ல?! அப்பறம், ஒரு வழியா ஹாஸ்டலுக்கு போயி சேர்ந்துட்டோம். ஆனாலும், அவனால, தாங்க முடியல; எல்லார்க்கிட்டயும் மீண்டும் அந்த மெட்ராஸ்-ஸ்பெஷல் வார்த்தைய சொல்லி நடந்ததை சொல்லி அவன் மனச தேத்திக்கிட்டான்!

            நான் மொதல்ல அடிச்ச அந்த பியர் "ப்ளாக் & நைட்" வேற! அது, ஸ்ட்ராங்கான பியர் வேறயாம்! அவனுக்கு அந்த காண்டு வேற! ஆனா, அதுக்கப்பறம் நம்ம ஃபேவரைட் "கோல்டன் ஈகிள்"ங்கறது வேற விசயம்!

        அப்படி ஆரம்பிச்ச அந்த "கருமம் பிடிச்ச!!??" பழக்கத்தை இன்னைக்கு வரைக்கும் சுத்தமா-நிறுத்த முடியல! எவ்வளவோ கொறைஞ்சுடுச்சுன்னாலும், இன்னமும் சுத்தமா நிறுத்த முடியல!! கூடிய சீக்கிரம் நிறுத்திடுவேன்; நிறுத்திடனும்! "தம்மடிக்கற" பழக்கத்த நிறுத்தறது தான் ரொம்ப கஷ்ட்டம்னு எல்லாருக்கும் தெரியும்! அதையே, சுத்தமா நிறுத்தி 3.5 வருஷம் ஆவுது! இது ஒன்னும் பெரிய விசயம் இல்லை. என்னதான் 3 மாதம், 4 மாதம்-னு அடிக்காம இருந்தாலும், என்னைக்காவது ஒரு-நாளு திரும்ப ஏதாவது பார்ட்டி, அது-இதுன்னு ஏதாவது வந்துடுது! ஏம்-பொண்ணு கூட இல்லைங்கறது கூட காரணமா இருக்கலாம்! தம்மையே-அவளால நிறுத்தியாச்சு!! ஆனா, இத அவ இல்லாதப்பவே சுத்தமா நிறுத்திடம்னு "ட்ரை" பண்ணிக்கிட்டு இருக்கேன்; பார்ப்போம்...

என்ன இருந்தாலும்; அந்த ஃபர்ஸ்ட் பியர் மறக்கமுடியாத அனுபவம்!!!        

"குஞ்சு"க்கோழிகள்...

{இப்புதுக்கவிதைக்கு கரு-கொடுத்த; என்மகளின் செயலை 
ஓர் மனதங்கமாய் எழுதியிருக்கிறேன்!}

(சில)குஞ்சுகளும்!
கோழிகளை;
பாதுகாப்பதுண்டு!!!

என்னைப் பாதுகாத்த என்மகள்...



   சென்ற முறை இந்தியா சென்றிருந்தபோது என்மகள் செய்த விசயம் ஒன்று என்னை ஆச்சர்யபடுத்தியது! இதுபோல், பலரின் குழந்தைகளும் செய்திருக்கக்கூடும். ஆனால், என்மகள் அப்படி செய்ததை பார்த்ததும்; என்னுள் தோன்றியது "குஞ்சுகளும்; இங்கே கோழிகளை காக்கும்!" என்பதே! ஆம்; நம் குழந்தைகளும் நம்மை "குஞ்சுகளை; காக்கும் கோழிகள்"போல பாத்துகாக்கும், இது போன்ற செயல்கள் நடக்கும். நிகழ்வு இதுதான்: என்னுடைய உறவு ஒருவர், அவரின் வருத்தமான நிகழ்வு ஒன்றை சொல்லிக்கொண்டிருந்தார். எங்கள் ஊர்-பக்கம் இம்மாதிரி நிகழ்வுகளை கூறும்போது நம்மை கேள்வி கேட்பது போல் பலரும் கேட்பர்! அவர் அப்படித்தான் ஒரு கேள்வியாய் என்னிடம் "...என்ன தான் நடந்திருக்கட்டுமேப்பா! நீ என்னை ஒரு வார்த்தை கேட்கக்கூடாதா?!..." என்றார்! அவரின் பேச்சு ஆற்றாமையாய் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது! எங்கோ விளையாடிக்கொண்டிருந்த என்மகள் அவர் அப்படி என்னை-கேட்டதை கேட்டுவிட்டு ஓடோடி வந்தாள்.

         ஓடி வந்தவள், எங்கள் இருவருக்கும் இடையில் நின்று என்னை "கோழி அடைகாப்பது போல்" மறைத்துக்கொண்டு நின்றுகொண்டாள்! அவர் என்னை திட்டுவதாய் நினைத்துவிட்டாள் அவள்; அவளின் புரிதல் அவ்வாறு! முகத்தை கோபமாய் வைத்துக்கொண்டு "எங்கப்பா பாவம்! அவர என் திட்டறீங்க?!..." என்று கிட்டத்திட்ட அவரிடம் சண்டை போடுகிறாள். எனக்கு பெரிய-சிரிப்பு வருகிறது; அவரோ அப்படி ஆழ்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்! சிரித்தால், நன்றாக இருக்காது என்று நினைத்து என்மகளிடம் "இல்லடி! அப்பாவை திட்டடலடி!!..." என்று என்ன-சொல்லியும் என்மகள் கேட்கவில்லை! எனக்கு சிரிப்பு வரும் அதே வேலையில், அவளின் செய்கை எனக்கு ஆச்சர்யத்தையும் கொடுத்தது! அப்போதுதான், மேற்கூறியவண்ணம் என்மகள் போல் கோழிகளை பாதுக்காக்கும் பல "குஞ்சுக்"கோழிகளும் இங்கே உண்டு! என்று தோன்றியது. அதை "குஞ்சுக்" கோழிகள் என்று ஒரு புதுக்கவிதையாயும்  எழுதியிருக்கிறேன். இதுபோல் நம்...

குழந்தைகள்; நம்மை தொடர்ந்து ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருப்பர்!!!

பின்குறிப்பு: இன்றைய மன-நிலையில்/வயதில் என்மகள் இப்படி தவறாய் புரிந்துகொண்டு; மற்றவரிடம் வாதிடுவதை(வேண்டுமானால்) பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் இங்கே "பல குழந்தைகள் வளர்ந்து; பெரியவர்கள் ஆன பின்னும்" இப்படிப்பட்ட தவறான புரிதலோடு பிறரிடம் சண்டைகள் போடுவதுண்டு. எனவே என்மகள் வளர்ந்தபின், இப்படி நடந்துகொள்ளாமால் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற உண்மை(யும்) புரிந்தது!!!   

காதலியும்/மனைவியும்...






விழியப்பன் நினைப்பது (23032014):

காதலி (அல்லது) நிச்சயிக்கப்பட்ட பெண் - திருமணத்திற்கு முன் "தன்னுடன் பேசிக்கொண்டே; மற்ற வேலைகளையும் செய்யும்" ஆணிடம் "நீங்க பெரிய திறமைசாலி! எப்படி பல-வேலைகளையும்; ஒரே நேரத்தில் செய்கிறீர்கள்?!" என்று அதிசயித்து கேட்பாள்!

அதே பெண், திருமணமான பின் அதே-ஆணிடம்; "உங்களுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா?! நான் சொல்றதை கொஞ்சமாவது காது-கொடுத்து கேக்கறீங்களா??!! ஏதாவது ஒரு வேலைய உருப்படியா செய்ங்க" என்று சொல்வாள்!!

- இவையிரண்டில் எது உண்மையான நிலைப்பாடு??!!