புதன், அக்டோபர் 14, 2015

குறள் எண்: 0073 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 008 - அன்புடைமைகுறள் எண்: 0073}

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு

விழியப்பன் விளக்கம்: அன்போடு இரண்டற கலந்த வாழ்க்கையின் பயன்; உன்னதமான உயிர்க்கும், உடலுக்கும் இடையிலானத் தொடர்பைப் போன்றது.
(அது போல்...)
உண்மையோடு இணைந்த செயல்களின் பலம்; உன்னதமான தொப்பூழ்-கொடிக்கும், கருவுக்கும் இடையிலான இணைப்பைப் போன்றது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

அன்புடைமை என்ன சொல்கிறது??? (அதிகாரம் 008)



        இல்வாழ்க்கை எனும் அதிகாரம் 005-இற்கான விளக்கவுரையைத் துவங்கியபோது - அதன் முதற்-குறளே; திருமண வாழ்க்கை எத்தனை சிரமமானது என்பதை உணர்த்துகிறது, என்பதை யோவ் வள்ளுவரே! என்ற தலைப்பில் பதிவாய் எழுதிய அனுபவம் இன்னும் பசுமையான நினைவாய் இருக்கிறது. இல்வாழ்க்கையின் அடிப்படையான "வாழ்க்கைத்துணை நலம்" மற்றும் "புதல்வரைப் பெறுதல்" என்ற அடுத்த இரண்டு அதிகாரங்களும் கூட; பெருத்த சவாலைக் கொடுப்பவை. முதல் நான்கு-அதிகாரங்களும் "வேறு மாற்றேயில்லை! அவை நான்கையும் தவறாமல் கடைபிடிக்கப்பட வேண்டியவை!!" என்பதால் - அதைப் பற்றி பெரிதும் சிந்திக்க மாட்டோம். அதன் விளைவாகவே, அவை நான்கையும் படித்துவிட்டு "அப்படி ஒன்னும் இல்லையேப்பா!" என்று எவரேனும் நினைத்திருந்தால், அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். நம் பொதுமறையில் இருக்கும் ஒவ்வொரு குறளும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டியது எனினும்...

          முதல் நான்கைத் தாண்டிப் பார்க்கும் போது, அப்படியொரு கண்டிப்பு இல்லாமல் இருப்பது போல் புலப்படும். ஆனால், இதுவரை விளக்கவுரை எழுதிய 5, 6 & 7 எண்ணிட்ட அதிகாரங்களிலும் உள்ள ஒவ்வொரு குறளையும் - ஆழ்ந்து பார்த்தால்; வாழ்க்கை சிறந்திட, அவை ஒவ்வொன்றும் எத்தனை அவசியம் என்பது புரியும். இப்படி - குறள்களைச் சொல்லி இருக்கும் விதத்தில் மட்டுமல்ல! அதிகாரங்களை வரிசைப் படுத்தி இருப்பதிலும்; நம் பெருந்தகையின் மாட்சிமையும்/ஆளுமையும் தெளிவாய் புரிகிறது. மேற்குறிப்பிட்ட மூன்று அதிகாரங்களில் "தனிப்பதிவாய்" எழுதிட, பல விஷயங்கள் உள்ளன. அவைகளில் இருக்கும் ஒவ்வொரு குறளுக்கும் தேவையான கருத்துப்படம் தேர்ந்தெடுக்க பட்ட சிரமங்களைக் கூட; தனிப்பதிவாய் எழுதலாம். என்மகளைக் காண விடுப்பில் சென்றிருந்தமையால், இன்றுவரை அவற்றைச் செய்திட முடியவில்லை! மன்னியுங்கள்; விரைவில் கண்டிப்பாக எழுதிட முனைகிறேன். அப்படி ஒவ்வொரு அதிகாரத்தையும்;

             வாழ்க்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படியாய் உணர்த்தியதோடு  - ஒவ்வொரு படியை ஏறுவது எவ்வளவு சிரமம் என்பதையும் "குறளில் பொதிந்திருக்கும்" ஆழ்ந்த கருத்துகள் மூலம் "மறைவாய்" உணர்த்தி இருக்குகிறார் நம் பெருந்தகை. அந்த வகையில், 008-ஆவது அதிகாரமாய் வரும் "அன்புடைமை" என்பதும் சற்றும் குறைவில்லாதது! எவரேனும் "என்ன பெருசா! அன்பு தானே?!" என்று யோசித்தால், உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள். நான் அடிக்கடி சொல்வது போல், மேலோட்டமாய் திருக்குறளைப் படிப்பது பெருந்தகையின் சிறப்பை உணர வழிசெய்யாது! அப்படி ஏதும் இல்லாமலா, "பொதுமறை" என்று வரையறை செய்யமுடியும்? அன்பு என்றால் "ஒருவரை நேசிப்பது!" என்ற அளவில் தான் நம்மில் பெரும்பாலோனோருக்கு அன்பைப் பற்றிய வரையறை இருக்கும். இதை விட, அன்பு என்றால் "ஆண்-பெண் இருபாலருக்கு இடையேயான; காமம் சார்ந்த உணர்வு!!" - என்பதான தவறான புரிதலே பலருக்கும் இருக்கிறது.

          அதனால் தான், அன்புக்கு இனையான "Love" என்ற வார்த்தையே, பெரும்பான்மையில், நம் தமிழ்ச் சமூகத்தில் தவறாய் பார்க்கப்படுகிறது என்று தோன்றுகிறது. எனவே, அதுவும் கூட தவறான அன்பல்ல! அல்லது, அது மட்டுமே அன்பல்ல!! என்பதைப் பதியவும் கடமைப் பட்டிருக்கிறேன். அன்பு இல்லாத ஒருவர் எப்படி "பொதுநலம்" இல்லாமல் இருப்பார்? (குறள் எண்: 0072); அன்போடு இணைந்த வாழ்க்கை உடலும்-உயிரும் இணைந்தது போன்றது (குறள் எண்: 0073); மற்றும், அன்பு இருந்தால் தான் உயரிய நட்பெனும் உறவையே அடையமுடியும் (குறள் எண்: 0074) - இப்படி பல்வேறு வகைகளில் அன்பை சொல்கிறார், நம் பெருந்தகை. அன்பை - பல்விதமான அறநெறிகளுடன்/பல்விதமான ஒப்பீடுகளுடன்/பல்விதமான உறவுகளுடன் - விளக்கி சொல்கிறார். அதனால் தான், ஒவ்வொன்றுக்கும் "தனி அதிகாரமாய்; 10 குறள்கள்" எழுதி இருக்கிறார் நம் பெருந்தகை. அதே வகையில் தான், அன்பு என்பதைக் கூட அவர் பல வகையில் விளக்க...

       காரணம்! மேலோட்டமாய் பார்த்தால், ஒவ்வொரு குறளும் வெறும் "எழுசீர்கள் கொண்ட ஈரடியாய் தோன்றலாம்!" ஆனால், ஒவ்வொரு குறளையும் ஆழத் தோண்டிப் பார்த்தால், ஆயிரமாயிரம் கிடைக்கும். எனவேதான், இந்தப் பணியை மேற்கொண்டிருக்கிறேன். "ஈரடிகளில் எவர் வேண்டுமானாலும்; திருக்குறள் போன்று எழுதலாம்!" ஆனால், திருக்குறளுக்கு இணையாய்; இப்படி ஆழ்ந்த கருத்துக்களோடு எழுத இனி ஏதும் இல்லை! எனவே தான், நான் அப்படி எழுதுவதில்லை; அப்படி எவரேனும் எழுதுவதைப் பார்ப்பினும் ஒரு நிலையாமை கொள்கிறேன். சிலரிடம் "அப்படி எழுதவேண்டாமே?!" என்று வேண்டுகோளாய் சொல்வதுண்டு! சிலரிடம், அதைக்கூட சொல்வதில்லை. நான் சொல்வதை ஏற்பர் என்று நம்புவோர் இடத்தில் சொல்வதுண்டு; இல்லையேல், அதை சொல்லி ஏதும் தேவையற்ற விவாதத்தை; எதிர்கொள்ள விரும்புவதில்லை! எனவே, அப்படி வேறொன்றை எழுதுவதை விட்டுவிட்டு; மற்ற அதிகாரங்களைப் போல்...

அன்புடைமையையும்... ஆழத் தோண்டுவோம் வாருங்கள்!!!    

பின்குறிப்பு: என்னவொரு விந்தை? இந்த பதிவுக்கான கருத்துப்படம் தேடிக்கொண்டு... மேலும் தேடிக்கொண்டே இருக்கும்போது; என்னுடைய கணினியில் "யார் யார் சிவம்?" என்ற பாடல் ஒலிக்கத் துவங்கியது. அந்தப்பாடல்... இதோ! முடியவும் போகிறது. ஆனால், என் கருத்துப்பட தேர்வு...; ம்ம்ம்! ஆனால், பொருத்தமான ஒன்றைக்  கண்டிப்பாகத் தேடிப் பிடித்து வி----!

செவ்வாய், அக்டோபர் 13, 2015

குறள் எண்: 0072 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 008 - அன்புடைமைகுறள் எண்: 0072}

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

விழியப்பன் விளக்கம்: அன்பில்லாதோர், அனைத்தும் தமக்கே சொந்தமெனக் கருதுவர்;  அன்புடையோர் - தம் உடலும், பிறர்க்கு சொந்தமென நினைப்பர்.
(அது போல்...)
அமைதியற்றோர், பிறரின் மகிழ்ச்சியைக் கெடுக்க எண்ணுவர்; அமைதியானோர், தன் மகிழ்ச்சியை, எல்லோர்க்கும் கடத்திட முயல்வர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

குழந்தைகள் - குழந்தைகளாக வளரட்டும்!!!



             சமீப-காலமாய் அடிக்கடி நிகழ்வது போல், வாட்ஸ்-ஆப்பில் வெளிவந்த ஒரு காணொளியால் என்னுள் நிகழ்ந்த சிந்தனைகளே; இத்தலையங்கம் ஆனது. அந்தக் கானொளியில் 4-வயது மதிக்கத்தக்க "மழலைக் கூட" மாறாத ஒரு பெண்குழந்தை, பல கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தாள். நம் நாட்டின் பிரதமர் யார்? எத்தனை மாநிலங்கள்? அதன் தலைநகரங்கள் போன்ற கேள்விகள் அடங்கியிருந்தன. நட்பொருவரின்  "நான் வெட்கப்படுகிறேன்; அதில் எனக்கு 2/3 கூட எனக்கு தெரியாது!" என்ற பதிவுதான்; என்னை உடனடியாக பார்க்கத் தூண்டியது. பார்த்து முடித்தவுடன், என்னுள் எழுந்த கேள்வி "இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது?!" என்பது தான். எவரோ ஒருவர் சொல்லிக்கொடுத்ததை அக்குழந்தை சொல்லி இருக்கிறாள். மறுக்கவேயில்லை! அக்குழந்தையின் மனனம்-செய்யும் திறமையை நான்(உம்) மதிக்கிறேன். மனனம் செய்வதால்; எந்த பலனும் இல்லை என்பதை நாம் நன்கறிவோம்; நானும், கல்வி பற்றிய பல பதிவுகளில்...

      விளக்கியிருப்பதால், அதுபற்றி விவாதிக்க ஏதுமில்லை!  இந்தக் காணொளியைப் பலரும் பார்த்திருப்பீர்கள் என்பதால்; அதைப் பற்றியும் விரிவாய் ஏதும் எழுதப்போவதில்லை. தன் பெயர், இருப்பிடம் போன்ற கேள்விகள் கடந்த பின்; தேசம் பற்றிய கேள்விகள் ஆரம்பித்தது. அதில் ஒரு கேள்வி "What is our national language?" என்பது; அதற்கு "ஹிந்தி" எனப் பதில்! எனக்குப் பெருத்த ஆற்றாமை எழுந்தது; நம் தேசத்துக்கு "தேசிய மொழி"யே கிடையாது, வெறும் அலுவல்-மொழி (Official language) மட்டுமே! எனவே "ஒரு கேள்விக்கு பதில் தெரியாது குற்றமல்ல! ஆனால், தவறான-கேள்விக்கு; தவறான-பதில் தெரிந்து வைத்திருப்பது பெருங்குற்றம்!!" என்று பதில் அளித்துவிட்டு, காணொளியை மேற்கொண்டு பார்க்கத் துவங்கினேன். இது, மொழி மேல் எனக்கிருக்கும் வெறியல்ல! என்னையே, நான் "தமிழ் பேசும் இந்தியன்" என்றுதான் வரையறுப்பேன். தேசிய மொழி என்ற ஒன்றே இல்லாதபோது; ஒரு பிஞ்சின் உள்ளத்தில்...

         நஞ்சு விதைக்கப்படுகிறதே?! என்ற ஆற்றமையே காரணம். மேலும், என்னுடைய கேள்வி "4 வயதான குழந்தைக்கு இப்படிப்பட்ட பதில்கள் தெரிந்திருப்பதால்; எவருக்கு என்ன பயன்??!!" என்பதே. பார்ப்பதற்கு, சில நிமிட-காணொளியாய் தெரியலாம். இதைப் பயிற்றுவிக்க - அதை சரியீடு பார்க்க எத்தனை மணி நேரங்கள் செலவிடப்பட்டு இருக்கும்? எத்தனை முறை இந்த காணொளி மீண்டும்/மீண்டும் எடுக்கப்பட்டு இருக்கும்? - இவை எல்லாவற்றையும் கணக்கிட்டால்; அக்குழந்தை தன் "குழந்தைப்"பருவத்தின் எத்தனை நாட்களை இழந்திருக்கும்?! சரி, அப்படியும்... அந்த குழந்தைக்கு என்ன பலன்? உண்மையில், இதைக் காண்பித்து பெருமைப் பட்டுக்கொள்ளும் - அந்த பெற்றோர்களுக்கு கூட எந்த பலனும் இல்லை; ஒரு வரட்டு-சந்தோசம் மட்டுமே எஞ்சும். நிறைய குழந்தைகள் "அரட்டை அரங்கம்" போன்ற நிகழ்சிகளில் - இதை விட அற்புதமான மனன-திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம், இப்போது குறைந்தது...

      30 வயது இருக்கும்! அவர்களில் எவரேனும் ஒருவரின் "பிற்காலச்" சாதனைப் பற்றி நாம் கேள்விப்பட்டது உண்டா? எல்லோரும் சாதிக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்கவில்லை; எவரேனும் ஒருவர்?! இதே அடிப்படையில் தான் "ஒவ்வொரு வருடமும் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்று சாதித்தவர்கள் - பிற்காலத்தில் சாதித்தது என்ன?" என்ற கேள்வியும். இவற்றால் என்ன பயன்? இப்படிப்பட்ட மனனம் செய்தலில் எந்தப் பலனும் இல்லை என்பதேன்; பலருக்கும் புரிய மறுக்கிறது?! நம் அடிப்படை கல்வி முறையே "இந்த மனனம் செய்யம்" வழக்கத்தால் தானே சிதைந்து போய் இருக்கிறது? அதை நாமே நேரடியாய் அனுபவித்த பின்னரும்; ஏன் வருங்காலத்தை இப்படி ஒரு "பொய்யான" அணுகுமுறையால் தொடர்ந்து சிதைத்துக் கொண்டிருக்கிறோம்?! மும்பை என்ற பதிலுடைய இரண்டு கேள்விகளுக்கு "மும்பை என்று சொல்லிவிட்டு; I live in Mumbai" என்று இரண்டு இடங்களிலும் சொல்லி சிரிக்கிறாள் அக்குழந்தை. அது...

           தேவையற்ற பதில் என்பது கூட அவளுக்கு தெரியாது; தெரியவேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில், அது அந்தக் குழந்தையின் தவறே அல்ல! அசோகச்-சக்கரத்தில் எழுதப்பட்டிருக்கும் வாசகத்திற்கு பொருள் சொல்லிவிட்டு "அது அமீர்-கானைப் பற்றிய தொலைக்காட்சித் தொடர்!" என்று சொல்கிறாள் அவள். அதையும், எவரோ தவறாக சொல்லிக் கொடுத்ததே காரணம். அவ்வாறு, தவறென்றே தெரியாமல் சொல்வது தான், ஒரு குழந்தையின் இயல்பான அறிவு; அதை ஏன் மாற்றி மிகுந்த அறிவுள்ள குழந்தை என்பதாய் கற்பிக்கவேண்டும்? இவற்றை விடுங்கள்; இந்த பதில்களைத் தெரிந்து வைத்திருப்பதால் அந்த குழந்தைக்கு என்ன பலன்? இது "அவர்கள் குழந்தை! அவர்கள் என்னவோ செய்துவிட்டு போகட்டும்!!" என்று விதண்டா-வாதமாய் சொல்லலாம். இல்லை! இது அவர்கள் சார்ந்தது மட்டுமல்ல; அப்படியெனில், எதற்கு சமூக வலைதளங்களில் உலவ விடவேண்டும்? சரி... ஹிந்தி தான் தேசிய மொழி எனும்போது, ஹிந்தியிலேயே...

       கேள்வி-கேட்டு அதைப் பகிர்ந்து இருக்கலாமே?! இது பெருமளவில் சென்று சேரவேண்டும் என்பதே அதின் அடிப்படை; எனவே, இது மற்றப் பெற்றோர்களையும் பாதிக்கும் செயல். ஒரு உயரியப் பொறுப்பில் இருக்கும் என் நட்பொன்றே "இதைப் பார்த்து நான் வெட்கப்படுகிறேன்!" என்று உணர்ச்சி வயப்பட்டு கூறும்போது "சாமான்யர்கள் இதை எப்படி எதிர்கொள்வார்கள்?!" ஏற்கனவே "பக்கத்து வீட்டுப் பிள்ளைகளைப்" போல்; தம் பிள்ளைகள் இல்லையே?! என்று அங்கலாய்க்கும் பெற்றோர்கள் தான் இங்கு அதிகம், என்பது நம் எல்லோருக்கும் தெரியும். நாமே கூட, அப்படிப்பட்ட ஒப்பீடுகளால் பாதிக்கப் பட்டு இருக்கக் கூடும்! எனவே, இதை அவர்களின் தனிப்பட்ட சுதந்திரமாய் பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு குழந்தைக்கென்று ஒரு தனிச்சிறப்பு இருக்கும்; அதைக் கண்டறிவது, குழந்தை வளர்ப்பில் மிக முக்கியம். அப்படிப்பட்ட ஒன்றை கண்டறிந்து மற்றவர்களுக்கு பரப்பினால், அது மிகச்சிறந்தாய் இருக்கும். இல்லையேல்...

         அவர்கள் பார்த்துவிட்டு, அவர்கள் சுற்றத்தோடு நிறுத்திகொள்ள வேண்டும்.  எல்லாவற்றையும் மீறி; இது - ஒரு குழந்தை, இந்த வயதில் செய்யவேண்டியதே அல்ல! என்பதையே இங்கு அடிக்கோடிட்டு வலியுறுத்த விரும்புகிறேன். மேலும் "இதுதான் ஒரு குழந்தையின் திறமை என்ற மாயை" மற்ற பிள்ளைகள் மேல் திணிக்கப்படுகிறது; அது, தவிர்க்கப்படவேண்டும் என்பதே என் பார்வை. மனனம் என்பது குழந்தையின் அறிவல்ல! இது புரியாததால் தான், எல்லா பிள்ளைகளும் "மாநிலத்தின் முதலாவதாக" வரவேண்டும் என்ற ஆசை பிறக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன் விடுப்பில் சென்றபோது "என் குடும்பத்தார்; என் மகளை, அவளின் நண்பியோடு ஒப்பிட்டு பேசினர்!" உடனே, அதை மறுத்து "எந்த குழந்தையோடும், என் மகளை ஒப்பிடாதீர்கள்!" என்றேன். என்மகள் இப்படி இருப்பதால் தான், அவள் என்மகள்! வேறொருவரின் குழந்தை; வேறுமாதிரி இருப்பதால் தான் - அவர்களின் மகள்! "உயர்வோ/தாழ்வோ" என்மகளை, வேறு எவரோடும்...

      நான் ஒப்பிடுவதில்லை; மற்றவர்களையும், அப்படி ஒப்பிட நான் அனும்பதிப்பது இல்லை! என்மகள் - அவளின் இயல்போடு இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம். மேலும் "உண்மை பேசுதல்/அறநெறியுடன் இருத்தல்/பிறருடன் இருப்பவற்றைப் பகிர்தல்/..." இப்படி குழந்தைகளுக்கு கட்டாயம் போதிக்கப்படவேண்டிய விசயங்கள் பல உள்ளன; அவை ஒரு சமுதாயத்தையே உயர்த்தும். நான் அப்படி செய்து வருகிறேன். அதை விடுத்து, மேற்குறிப்பிட்ட காணொளி போன்றவை எந்த முன்னேற்றத்தையும் உருவாக்காது. அது, பல பெற்றோர்களைத் தம் குழந்தைகளை; தவறான முறையில் அணுகவே உதவிடும். குழந்தைகளை - அவர்களின் போக்கில்; அவர்களுக்கே உரித்தான மழலையோடு வளர விடவேண்டும்! அங்கே, நம் அறிவை உட்புகுத்தவோ; அல்லது நம் தற்பெருமைக்காய்; தவறான உதாரணத்தை மற்றவர்களுக்கு பறைசாற்றுவதோ தவறு! அதனால் தான், குழந்தை வளர்க்க என்ற ஒரு புதுக்கவிதையை எழுதினேன். ஆம்...

குழந்தைகள் - தம் இயல்புக்கே உரித்தான; குழந்தைகளாய் வளரவேண்டும்!!!

பின்குறிப்பு: அந்தக் குழந்தையின் புகைப்படத்தை தான் முதலில் இத்தலையங்கத்தின் தலைப்படமாய் வைக்க எண்ணினேன். பின், அவளின் புகைப்படம்-கூட மற்ற பிள்ளைகளின் மேல் எந்த பாதிப்பையும் விளைவிக்கக் கூடாது என்பதால்; அதையும் தவிர்த்துவிட்டேன். 

திங்கள், அக்டோபர் 12, 2015

குறள் எண்: 0071 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 008 - அன்புடைமைகுறள் எண்: 0071}

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்

விழியப்பன் விளக்கம்: அன்பை அடைக்கும் தாழ்ப்பாள் உண்டோ? நம் அன்புக்குரியவரின் துன்பம் கண்டு; அது, கண்ணீராய் - ஆரவாரப் பெருக்கெடுக்கும்.
(அது போல்...)
மனசாட்சியை அழிக்கும் ஆயுதம் உண்டோ? நம் எதிரியின் வீழ்ச்சியே ஆயினும்; அது, சிந்தனையாய் - நம்மை சலனப்படுத்தும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, அக்டோபர் 11, 2015

அதிகாரம் 007: புதல்வரைப் பெறுதல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 007 - புதல்வரைப் பெறுதல்

0061.  பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த 
           மக்கட்பேறு அல்ல பிற

           விழியப்பன் விளக்கம்: பெறக்கூடியவற்றில், பகுத்தறிவுடையப் பிள்ளைகளைப் பெறும் 
           பேறைவிட; உயர்ந்த வேறொன்றை நாமறியோம்.
(அது போல்...)
           வாழ்வியலில், தேடலுடைய சிந்தனைகளை விதைக்கும் ஒழுக்கத்தைவிட; 
           மேன்மையளிக்கும் வேறொன்று ஏதுமில்லை.

0062.  எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் 
           பண்புடை மக்கட் பெறின்

           விழியப்பன் விளக்கம்: பழியில்லாப் பண்புடைய பிள்ளைகளைப் பெற்றிடின்; ஏழு 
           பிறப்பிலும், தீயவையேதும் நம்மை சேர்ந்திடாது.
(அது போல்...)
           பிழையில்லாத் திறனுடையக் கலைஞர்களை உடையின்; ஏழு சுவரங்களிலும், 
           குறையேதும் இசையில் கலந்திடாது.

0063.  தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் 
           தம்தம் வினையான் வரும்

           விழியப்பன் விளக்கம்: ஒருவரின் செல்வம் என்பது அவரது குழந்தைகளே; அத்தகைய 
           செல்வம், அவரவரின் வினைப்பயனால் நிர்ணயிக்கப்படும்.
(அது போல்...)
           ஒருவரின் ஒழுக்கம் என்பது அவரது செயல்பாடுகளே; அத்தகைய ஒழுக்கம், 
           அவரவரின் சிந்தனையால் பண்படும்.

0064.  அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் 
           சிறுகை அளாவிய கூழ்

           விழியப்பன் விளக்கம்: நம் பிள்ளைகளின், சின்னஞ்சிறு கை துழாவுமேயானால்; கூழ் கூட,     
           அமிழ்தைவிட இனிமையானதாகும்.
(அது போல்...)
           நம் உறவுகளின், கடுகளவு ஆறுதல் கிடைக்குமேயானால்; மலையளவு இன்னலும், 
           கால்மிதிக்கும் சிறுகல்லாகும்.
          
0065.  மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் 
           சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

           விழியப்பன் விளக்கம்: பிள்ளைகளைத் தழுவுதல், உடலுக்கு இன்பம்; மற்றும், அவர்கள் 
           பேசுவதைக் கேட்பது செவிக்கு இன்பமாகும்.
(அது போல்...)
           உடலைப் பேணுதல், குடும்பத்திற்கு வளம்; மற்றும், உள்ளிருக்கும் ஆன்மாவைப் 
           பேணுதல் சமுதாயத்திற்கு வளமாகும்.

0066.  குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் 
           மழலைச்சொல் கேளா தவர்

           விழியப்பன் விளக்கம்: பிள்ளைகளின் மழலைப் பேச்சைக் கேளாதவர்களே; குழல் 
           மற்றும் யாழ் இவைகளிலிருந்து வரும் ஒலியை - இனிதென்பர்.
(அது போல்...)
           அறவழியில் பயணிக்கும் வைராக்கியம் இல்லாதவர்களே; குற்றம் மற்றும் முறையற்றச் 
           செயல்களின் மூலம் பயணிப்பதை - சரியென்பர்.

0067.  தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து 
           முந்தி யிருப்பச் செயல்

           விழியப்பன் விளக்கம்: அவையின் நாயகர்களாக இருக்கச்செய்தலே; ஓர் தந்தை தன் 
           பிள்ளைகளுக்கு செய்யக்கூடிய நன்மையாகும்.
(அது போல்...)
           தலைசிறந்தக் குடிமக்களாக இருக்கவைப்பதே; ஓர் தலைவன் தன் நாட்டுமக்களுக்குச் 
           செய்யும் கடமையாகும்.

0068.  தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து 
           மன்னுயிர்க் கெல்லாம் இனிது

           விழியப்பன் விளக்கம்: நம் பிள்ளைகள் அறிவுடையவர்களாய் இருப்பது, நம்மைவிட; 
           அகண்ட மண்ணுலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும், அதிக மகிழ்வளிக்கும்.
(அது போல்...)
           தன் தொண்டர்கள் நற்தலைவர்களாய் வளர்வது, தன்னைவிட; பரந்த நாட்டிலுள்ள 
           எல்லா மக்களுக்கும், அதிக நன்மையளிக்கும். 

0069.  ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் 
           சான்றோன் எனக்கேட்ட தாய்

           விழியப்பன் விளக்கம்: தன்பிள்ளைகளைச் சான்றோர் எனப், போற்றப்படுவதைக் கேட்கும் 
           தாய்; அவர்களை ஈன்றெடுத்தப் பொழுதைவிட, பேர்மகிழ்ச்சி அடைவாள்.
(அது போல்...)
           தன்பிள்ளைகள், முதன்முதலாய் அப்பா என்றழைக்கக் கேட்கும் தந்தை; அவர்கள் 
           கருவடைந்த நேரத்தைவிட, பன்மடங்கு ஆனந்தமடைவான்.

0070.  மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை 
           என்னோற்றான் கொல்எனும் சொல்

           விழியப்பன் விளக்கம்: "இவர்களின் தந்தை எத்தகைய நோன்பு நோற்றிருப்பான்?" என்று 
           பிறரை வியக்கவைப்பதே; பிள்ளைகள், தந்தைக்கு செலுத்தும் நன்றிக்கடனாம்.
(அது போல்...)
           "இவர்களின் ஆட்சியாளர் என்ன வரம் பெற்றிருப்பார்??" என்று பிறரைப் புகழவைப்பதே; 
           குடிமக்கள், ஆள்பவருக்குக் கொடுக்கும் ஊக்கமாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை 

குறள் எண்: 0070 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 007 - புதல்வரைப் பெறுதல்குறள் எண்: 0070}

மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை 
என்னோற்றான் கொல்எனும் சொல்

விழியப்பன் விளக்கம்: "இவர்களின் தந்தை எத்தகைய நோன்பு நோற்றிருப்பான்?" என்று பிறரை வியக்கவைப்பதே; பிள்ளைகள், தந்தைக்கு செலுத்தும் நன்றிக்கடனாம்.
(அது போல்...)
"இவர்களின் ஆட்சியாளர் என்ன வரம் பெற்றிருப்பார்??" என்று பிறரைப் புகழவைப்பதே; குடிமக்கள், ஆள்பவருக்குக் கொடுக்கும் ஊக்கமாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, அக்டோபர் 10, 2015

குறள் எண்: 0069 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 007 - புதல்வரைப் பெறுதல்குறள் எண்: 0069}

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

விழியப்பன் விளக்கம்: தன்பிள்ளைகளைச் சான்றோர் எனப், போற்றப்படுவதைக் கேட்கும் தாய்; அவர்களை ஈன்றெடுத்தப் பொழுதைவிட, பேர்மகிழ்ச்சி அடைவாள்.
(அது போல்...)
தன்பிள்ளைகள், முதன்முதலாய் அப்பா என்றழைக்கக் கேட்கும் தந்தை; அவர்கள் கருவடைந்த நேரத்தைவிட, பன்மடங்கு ஆனந்தமடைவான்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வெள்ளி, அக்டோபர் 09, 2015

குறள் எண்: 0068 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 007 - புதல்வரைப் பெறுதல்குறள் எண்: 0068}

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து 
மன்னுயிர்க் கெல்லாம் இனிது

விழியப்பன் விளக்கம்: நம் பிள்ளைகள் அறிவுடையவர்களாய் இருப்பது, நம்மைவிட; அகண்ட மண்ணுலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும், அதிக மகிழ்வளிக்கும்.
(அது போல்...)
தன் தொண்டர்கள் நற்தலைவர்களாய் வளர்வது, தன்னைவிட; பரந்த நாட்டிலுள்ள எல்லா மக்களுக்கும், அதிக நன்மையளிக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வியாழன், அக்டோபர் 08, 2015

குறள் எண்: 0067 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 007 - புதல்வரைப் பெறுதல்குறள் எண்: 0067}

தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து 
முந்தி யிருப்பச் செயல்

விழியப்பன் விளக்கம்: அவையின் நாயகர்களாக இருக்கச்செய்தலே; ஓர் தந்தை தன் பிள்ளைகளுக்கு செய்யக்கூடிய நன்மையாகும்.
(அது போல்...)
தலைசிறந்தக் குடிமக்களாக இருக்கவைப்பதே; ஓர் தலைவன் தன் நாட்டுமக்களுக்குச் செய்யும் கடமையாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதன், அக்டோபர் 07, 2015

குறள் எண்: 0066 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 007 - புதல்வரைப் பெறுதல்குறள் எண்: 0066}

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் 
மழலைச்சொல் கேளா தவர்

விழியப்பன் விளக்கம்: பிள்ளைகளின் மழலைப் பேச்சைக் கேளாதவர்களே; குழல் மற்றும் யாழ் இவைகளிலிருந்து வரும் ஒலியை - இனிதென்பர்.
(அது போல்...)
அறவழியில் பயணிக்கும் வைராக்கியம் இல்லாதவர்களே; குற்றம் மற்றும் முறையற்றச் செயல்களின் மூலம் பயணிப்பதை - சரியென்பர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை