சனி, மார்ச் 19, 2016

குறள் எண்: 0230 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  023 - ஈகைகுறள் எண்: 0230}

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் 
ஈதல் இயையாக் கடை

விழியப்பன் விளக்கம்: இறப்பதை விட துன்பம் ஏதுமில்லை! ஆனால், இரப்பவர்க்கு கொடுக்க முடியாத இயலாமையில் - இறத்தலும் மகிழ்ச்சியாகும்.
(அது போல்...)
தற்கொலையை விட கோழைத்தனம் ஏதுமில்லை! ஆனால், சரணடைந்தோரை மன்னிக்க முடியாத சூழலில் - தற்கொலையும்  வீரமாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வெள்ளி, மார்ச் 18, 2016

குறள் எண்: 0229 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  023 - ஈகைகுறள் எண்: 0229}

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய 
தாமே தமியர் உணல்

விழியப்பன் விளக்கம்: சேமிப்புக் கிடங்கில் நிரப்பியவற்றை, தாமே தனியாக உண்ணுதல்; பிறரிடம் யாசிப்பதை விட, மிகவும் கொடுமையானது.
(அது போல்...)
மனதின் ஆழத்தில் தேங்குபவற்றை, தனக்குள்ளே மறைத்து வைப்பது; பிறரின் பகையை விட, மிகவும் ஆபத்தானது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கொலை எப்படி கெளரவமாகிறது???


வியாழன், மார்ச் 17, 2016

குறள் எண்: 0228 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  023 - ஈகைகுறள் எண்: 0228}

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்

விழியப்பன் விளக்கம்: தம்முடையதென சேமித்து, செல்வத்தை இழக்கும் இரக்கமற்றோர்; கொடுப்பதால் விளையும், பேரின்பத்தை அறியாரோ?
(அது போல்...)
தன்மானமென வாழ்ந்து, வாழ்க்கையை இழக்கும் இனவெறியர்கள்; மனிதத்தால் கிடைக்கும், உயர்வை உணராரோ?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

"விபச்சார நுகர்வர்கள்"...


புதன், மார்ச் 16, 2016

குறள் எண்: 0227 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  023 - ஈகைகுறள் எண்: 0227}

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது

விழியப்பன் விளக்கம்: உணவைப் பகிர்ந்து உண்ணும், அறநெறியைப் பழகியவரை; பசியெனும் கொடுநோய், வருத்துவது சாத்தியமில்லை.
(அது போல்...)
கற்றதைப் புரிந்து கற்பிக்கும், திறமையை உடையவரை; கர்வமெனும் மனநோய், சிதைப்பது அரிதானது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சமூகமும் சபித்தலும்...


செவ்வாய், மார்ச் 15, 2016

குறள் எண்: 0226 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  023 - ஈகைகுறள் எண்: 0226}

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் 
பெற்றான் பொருள்வைப் புழி

விழியப்பன் விளக்கம்: வறியவர்களின், கொடியப் பசியைத் தீர்ப்பதே; ஒருவர், தான் சம்பாதித்த செல்வங்களை சேமிக்கும் தேர்ந்த வழிமுறையாகும்.
(அது போல்...)
நம்பியர்வர்களின், வருத்தும் சந்தேகத்தை ஒழிப்பதே; ஒருவர், தான் கற்ற அறநெறிகளைப் பராமரிக்கும் சிறந்த ஒழுக்கமாகும்.

திங்கள், மார்ச் 14, 2016

குறள் எண்: 0225 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  023 - ஈகைகுறள் எண்: 0225}

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை 
மாற்றுவார் ஆற்றலின் பின்

விழியப்பன் விளக்கம்: தவமிருப்போரின், பசியைப் பொறுக்கும் வலிமை; வறியவர்களின் பசியை, உணவுதந்து மாற்றுவோரின் வலிமைக்கு பிற்பட்டதே.
(அது போல்...)
நீதிபதிகளின், சட்டங்களை நிலைநாட்டும் தீர்ப்பு; சாமானியர்களின் பிரச்சனையை, வாய்மொழியால் தீர்ப்போரின் செயலுக்கு பிற்பட்டதே.

தற்கொலை என்பது...


ஞாயிறு, மார்ச் 13, 2016

குறள் எண்: 0224 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  023 - ஈகைகுறள் எண்: 0224}

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு

விழியப்பன் விளக்கம்: கேட்கப்பட்டதைக் கொடுத்து, கேட்டவர் முகம் மலர்வதைக் காணும்வரை; கொடுக்காமல் காத்திருக்கும் நேரத்தில், கேட்டவருக்காக இரக்கப்படுவது நீடிக்கும்.
(அது போல்...)
நடந்ததை விவாதித்து, நடந்ததற்காக மனசாட்சியின் தீர்ப்பைப் பெறும்வர; விவாதிக்காமல் இருக்கும் இடைவெளியில், நடந்ததற்காக வருந்துவது நீடிக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை