வியாழன், மே 05, 2016

குறள் எண்: 0277 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்:  028 - கூடாவொழுக்கம்; குறள் எண்: 0277}

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து

விழியப்பன் விளக்கம்: புறத்தில் - குன்றிமணியின் அகன்ற செம்மையாய் தோன்றிடினும்; அகத்தில் - குன்றிமணியின் குறுகிய கருமையைக் கொண்டவரை உடையது இவ்வுலகம்.
(அது போல்...)
பேச்சில் - இயற்கையின் பரந்த கருணையாய் பொழிவதும்; செயலில் - இயற்கைசீற்றத்தின் கொடிய சீரழிவுமான இரட்டையரைக் கொண்டது சமூகம்.

புதன், மே 04, 2016

குறள் எண்: 0276 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்:  028 - கூடாவொழுக்கம்; குறள் எண்: 0276}

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து 
வாழ்வாரின் வன்கணார் இல்

விழியப்பன் விளக்கம்: மனதளவில் ஆசைகளைத் துறவாமல், வெளியில் துறந்தவர் போல்; ஏமாற்றி வாழ்வோரை விட, இரக்கமற்றோர் வேறெவருமில்லை.
(அது போல்...)
நடைமுறையில் ஊழல்களை ஒழிக்காமல், மேடையில் ஒழித்தது போல்; ஏமாற்றி ஓட்டுகேட்போரை விட, இழிவானோர் வேறெவருமில்லை.

செவ்வாய், மே 03, 2016

குறள் எண்: 0275 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்:  028 - கூடாவொழுக்கம்; குறள் எண்: 0275}

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று 
ஏதம் பலவுந் தரும்

விழியப்பன் விளக்கம்: "ஆசைகளைத் துறந்துவிட்டோம்!" என்போரின் பொய்யொழுக்கம்; "என்ன செய்தோம்? என்ன செய்தோம்?" என வருந்தும் பல துன்பங்களைக் கொடுக்கும்.
(அது போல்...)
"ஊழல்களை ஒழித்துவிட்டோம்!" என்போரின் பொய்ப்பிரச்சாரம்; "ஏன் தோற்றோம்? ஏன் தோற்றோம்?" என வருந்தும் பல நிகழ்வுகளை உருவாக்கும்.

திங்கள், மே 02, 2016

குறள் எண்: 0274 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்:  028 - கூடாவொழுக்கம்; குறள் எண்: 0274}

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து 
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று

விழியப்பன் விளக்கம்: தவக்கோலம் கொண்டும், தீவினைகளைச் செய்வது; வேடர்கள் புதரில் மறைந்து, பறவைகளைக் கண்ணிவைத்து பிடிப்பது போன்றதாகும்.
(அது போல்...)
எல்லா-வளமும் இருந்தும், பிறர்பொருளை அபகரிப்பது; கோழைகள் பிறரின் ஆதரவுடன், எதிரிகளை மறைந்திருந்து தாக்குவது போன்றதாகும்.

ஞாயிறு, மே 01, 2016

குறள் எண்: 0273 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்:  028 - கூடாவொழுக்கம்; குறள் எண்: 0273}

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

விழியப்பன் விளக்கம்: மனதை ஒருமுகப்படுத்தும் வலிமையற்றோரின், வலிய தவக்கோலம்; வலுவற்ற பசு, வலிமையான புலியின் தோலைப் போர்த்திக்கொண்டு மேய்வது போன்றதாகும்.
(அது போல்...)
ஊழலைக் களையெடுக்கும் திராணியற்றோரின், புரட்சிப் பிரச்சாரம்; இளம் குழந்தை, முதிய வயதினரின் வேடத்தை அணிந்துகொண்டு மிரட்டுவது போன்றதாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, ஏப்ரல் 30, 2016

குறள் எண்: 0272 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்:  028 - கூடாவொழுக்கம்; குறள் எண்: 0272}

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம் 
தான்அறி குற்றப் படின்

விழியப்பன் விளக்கம்: மனசாட்சிக்குத் தெரிந்தே, குற்றச்செயல்களைச் செய்வாராயின்; ஒருவரின்  விண்ணளவு தவத்தால் என்ன பயன்?
(அது போல்...)
குடிமக்களுக்குத் தெரிந்தே, ஊழல்களைச் செய்கிறதெனின்; ஓர்கட்சியின் கண்டமளவு ஆதரவாளர்களால் என்ன நன்மை?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வெள்ளி, ஏப்ரல் 29, 2016

குறள் எண்: 0271 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்:  028 - கூடாவொழுக்கம்; குறள் எண்: 0271}

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்

விழியப்பன் விளக்கம்: வஞ்சக மனதுடையோரின், பொய்யான ஒழுக்கத்தைக் கண்டு; அவரின் உடம்பிலுள்ள ஐவகை பூதங்களும், தம்முள்ளே சிரிக்கும்.
(அது போல்...)
காழ்ப்புணர்வு உடையோரின், போலியான உறவைக் கண்டு; அவரின் பிணைப்பிலுள்ள ஐவகை உறவுகளும், மனதுள்ளே இகழும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கம்யூனிசத்தின் தோல்வி...


கொள்கைகளை...
தம்செயலில் பிரதிபலிக்காது,
எண்ணத்திலும் உள்வாங்காது;
மேடைகளில் மட்டும்,
"வீர-வசனமாய்" பேசுவதே...

கம்யூனிசத்தின் தோல்வி!

வியாழன், ஏப்ரல் 28, 2016

அதிகாரம் 027: தவம் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 03 - துறவறவியல்;  அதிகாரம்: 027 - தவம்

0261.  உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை 
           அற்றே தவத்திற் குரு

           விழியப்பன் விளக்கம்: தனக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறுப்பது மற்றும் பிற உயிர்களுக்கு
           துன்பம் விளைவிக்காதது - போன்ற தன்மைகளே, தவத்தின் காரணிகளாம்.
(அது போல்...)
           நாம் செய்த தவறுகளை ஏற்பது மற்றும் பிறரின் தவறுகளைப் பூதாகரமாக சித்தரிக்காதது -
           போன்ற குணங்களே, மனிதத்தின் கோட்பாடுகளாம்.

0262.  தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை 
           அஃதிலார் மேற்கொள் வது

           விழியப்பன் விளக்கம்: நல்லறம் பழகும் மனத்திடம் உள்ளவர்க்கே, தவம் செய்வது 
           சாத்தியமாகும்; நல்லறம் இல்லாதோர், தவம் பழகுவது  வீண்செயலாகும்.
(அது போல்...)
           சுயம் காக்கும் ஒழுங்கியல் தெரிந்தவர்க்கே, சமூக சேவை கைகூடும்; சுயம் உணராதோர்,
           சமூகசேவை ஆற்றுவது பயனற்றதாகும்.
           
0263.  துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் 
           மற்றை யவர்கள் தவம்

           விழியப்பன் விளக்கம்: அறமல்லவற்றைத் துறந்து, தவம் மேற்கொள்வோர்க்கு; 
           உணவளித்து உதவிடத்தான், மற்றவர்கள் தவம் மேற்கொள்வதை மறந்தனரோ?
(அது போல்...)
           சுயவாழ்வைத் தொலைத்து, அரசியலில் ஈடுபடுவோர்க்கு; ஆதரவுக்கரம் நீட்டத்தான், 
           பொதுமக்கள் அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்த்தனரோ?

0264.  ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் 
           எண்ணின் தவத்தான் வரும்

           விழியப்பன் விளக்கம்: பகைவரை வீழ்த்தவும் மற்றும் சுற்றத்தாரை உயர்த்தவும் 
           எண்ணினால்; அவை தவம் செய்யும் இயல்பினால் நிறைவேறும்.
(அது போல்...)
           தீவினைகளை அழிக்கவும் மற்றும் நல்வினைகளைப் பெருக்கவும் முனைந்தால்; அவை 
           தேடல் விதைக்கும் சிந்தனையால் சாத்தியமாகும்.

0265.  வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் 
           ஈண்டு முயலப் படும்

           விழியப்பன் விளக்கம்: வேண்டியதை வேண்டிய வண்ணமே, பெறமுடியும் என்பதால்; 
           செய்யக்கூடிய தவம் சார்ந்த செயல்களை, உடனடியாய் செய்ய முயலவேண்டும்.
(அது போல்...)
           உணர்வுகளை உணர்வுப் பூர்வமாக, உணரமுடியும் என்தால்; பேணக்கூடிய தாய் சார்ந்த 
           உறவுகளை, விரைவாய் பேணத் துவங்கவேண்டும்.

0266.  தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் 
           அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு

           விழியப்பன் விளக்கம்: தவம் சார்ந்த செயல்கள் செய்வோரே, பிறவிக்கடனை செய்வோர் 
           ஆவர்; மற்றவரெல்லாம் ஆசைக்கு அடிமையாகி, வீண்செயல்கள் செய்வராவர்.
(அது போல்...)
           வாய்மை சார்ந்த வாக்குறுதிகள் அளிப்பவையே, மக்களாட்சியை உணர்ந்த
           கட்சிகளாகும்; மற்றவையெல்லாம் பதவிக்கு அடிமையாகி, ஊழல்கள் செய்பவையாகும்.

0267.  சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் 
           சுடச்சுட நோற்கிற் பவர்க்கு

           விழியப்பன் விளக்கம்: நெருப்பில் சுடுவதால், சுடுவதற்கு ஏற்ப ஒளிரும் பொன் போல்; தவம் 
           மேற்கொள்வோரின் பகுத்தறிவு, துன்பங்களின் அளவுக்கேற்ப விரிவடையும்.
(அது போல்...)
           அறச்செயலில் ஈடுபடுவதால், ஈடுபாட்டிற்கு ஏற்ப வளரும் மனிதம் போல்; வாழ்வியலை 
           ஆய்வோரின் தெளிவு, சிந்தனைத் திறனுக்கேற்ப வலுவடையும்.

0268.  தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய 
           மன்னுயி ரெல்லாந் தொழும்

           விழியப்பன் விளக்கம்: தவம் பழகுவதால், தன்னுயிர் மற்றும் தான் எனும் அகந்தையைத் 
           துறந்தவரை; மன்னுலகிலுள்ள மற்ற உயிர்கள் அனைத்தும் வணங்கும்.
(அது போல்...)
           பொதுமை பழகுவதால், சுயகுடும்பம் மற்றும் சுயகட்சி எனும் வளர்ச்சிகளைத்
           தவிர்த்தவரை; சமூகத்திலுள்ள மற்ற தலைவர்கள் அனைவரும் மதிப்பர்.

0269.  கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் 
           ஆற்றல் தலைப்பட் டவர்க்கு

           விழியப்பன் விளக்கம்: தவம் பழகுவதால் விளையும், ஆற்றலைப் பெற்றவர்க்கு; இறப்பைக் 
           கடக்கும் அதிசயமும் சாத்தியமாகும்.
(அது போல்...)
           சுயம் உணர்வதால் விளையும், புரிதலை உடையவர்க்கு; காமத்தை வெல்லும் 
           தனித்திறமும் தன்வயப்படும்.

0270.  இலர்பல ராகிய காரணம் நோற்பார் 
           சிலர்பலர் நோலா தவர்

           விழியப்பன் விளக்கம்: மனவலிமை இல்லாத மக்கள், பலராக இருக்க காரணம்; தவம் 
           செய்வோர் சிலராகவும், தவம் செய்யாதோர் பலராகவும் இருப்பதே ஆகும்.
(அது போல்...)
           நல்லாட்சி செய்யாத தலைவர்கள், பலராக இருக்க காரணம்; பொதுநலம் கருதுவோர் 
           சிலராகவும், பொதுநலம் கருதாதோர் பலராகவும் இருப்பதே ஆகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

குறள் எண்: 0270 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்:  027 - தவம்; குறள் எண்: 0270}

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்

விழியப்பன் விளக்கம்: மனவலிமை இல்லாத மக்கள், பலராக இருக்க காரணம்; தவம் செய்வோர் சிலராகவும், தவம் செய்யாதோர் பலராகவும் இருப்பதே ஆகும்.
(அது போல்...)
நல்லாட்சி செய்யாத தலைவர்கள், பலராக இருக்க காரணம்; பொதுநலம் கருதுவோர் சிலராகவும், பொதுநலம் கருதாதோர் பலராகவும் இருப்பதே ஆகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதன், ஏப்ரல் 27, 2016

குறள் எண்: 0269 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்:  027 - தவம்; குறள் எண்: 0269}

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு

விழியப்பன் விளக்கம்: தவம் பழகுவதால் விளையும், ஆற்றலைப் பெற்றவர்க்கு; இறப்பைக் கடக்கும் அதிசயமும் சாத்தியமாகும்.
(அது போல்...)
சுயம் உணர்வதால் விளையும், புரிதலை உடையவர்க்கு; காமத்தை வெல்லும் தனித்திறமும் தன்வயப்படும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை