ஞாயிறு, செப்டம்பர் 29, 2013

குழந்தை வளர்ப்பில் - தந்தையின் பங்கு!


(ஓர் தந்தையாய் என்னை முழுமனதாய்-அங்கீகரித்த "என்னவளுக்கு" சமர்ப்பனம்!!!)

       நேற்று காலை, என் நண்பனின்-நண்பர் ஒருவர் முக-நூலில் ஓர் பதிவை வெளியிட்டிருந்தார்! அது ஓர் நகைச்சுவயான கதை - அதை படிக்க இங்கே சொடுக்குங்கள்! அதை படித்தவுடனேயே எனக்கு பிடித்துபோனது! ஆனால், அந்த தந்தையை "அத்தனை அறிவிலியாய்" காட்டி இருந்தது என்னை வேதனைக்கு உள்ளாக்கியது. உடனே, எனக்கு குறையாய் பட்ட விசயத்தை சுட்டிக்காட்டி பகிரவேண்டும் என்றெண்ணி, பின் அன்று மாலை வரை தள்ளிவைத்தேன். அந்த நண்பருக்கு பல வாசகர் வட்டம் இருப்பதை அறிந்து கொஞ்சம் யோசித்தேன்; பயமல்ல! அது மிகப்பெரிய உறவும்-உணர்வும் சார்ந்த கதை! என்னுடைய கருத்து தவறாய் எடுத்துக்கொள்ளப்பட்டால், எழுதியவர் மட்டுமல்ல; அவரின் வாசகர் வட்டத்தையும் நான் சமாளிக்கவேண்டும். முதலில், அதற்கு என்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்; அதற்கான பொருமையை நான் முன்கூட்டியே பழக ஆரம்பித்துவிட்டேன். ஏனெனில், ஒர் கட்டத்தில் என்னுடைய கருத்தும் - அது சார்ந்த விவாதங்களும் "தனி-நபர்" வரை கொண்டுசெல்லும் அபாயம் இருப்பதையும் உணர்ந்தேன் (அப்படித்தான் இறுதியில் சென்றது!). எல்லாவற்றையும் என்னுள் விவாதித்து - நேற்று மாலை என்னுடைய கருத்தை வெளியிட்டும் விட்டேன். அட...அட...அட... அந்த நிமிடம் முதல் இந்த நிமிடம் வரை; இன்னமும் எங்கள் விவாதம் ஓயவில்லை! இதில், பரிதாபம் என்னவென்றால் - நான் மட்டும் தனித்து இருப்பதாய் படுகிறது; இருக்கட்டுமே, தனியாய் இருந்தால் என்ன? மோதித்தான் பார்ப்போமே! ஹா...ஹா...ஹா...

        குழந்தை வளர்ப்பில் - அத்தி பூத்தார்ப்போல் அங்கொன்றும், இங்கொன்றும் - தவறான தாய்-கள் இருக்கிறார்கள் எனினும், பெரும்பான்மையில் தாய்-க்கு நிகர் எவருமில்லை! இது, எனக்கு தெளிவாய் தெரியும்! இதற்கு ஓர் தாயாய், அவள் தாயான தருணம் முதல்(மட்டுமல்லாது!) பார்த்ததன் அடிப்படையில் நான் கொடுக்கும் உதாரணம் "என்னவள்"; என்னவளை அவள் கருவுற்ற நாள் அன்று முதல் என்பதைக் காட்டிலும் - "அவள் கருவுறுவதற்கு ஆயத்தமான நாள் முதலே" உண்ர்ந்தவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன். இதை விளக்கிட பின்வரும் 2 காரணிகள் போதும்: 1. அவள் கருவுற்றிருக்கிறாள் என்பதை அவளே முதலில் உணர்ந்து அன்று காலையே என்னிடம் சொன்னாள்! எனக்கு அதிசயமாய் இருந்தது; ஆணுக்கே உறிய தோரணையில் - உனக்கு எப்படி தெரியும்? என்றேன்! நான் உணர்கிறேன்! என்றாள். எனக்கு தெரியாமல் (அவளுடைய பெட்டியையும் நான் தான் அடுக்கினேன் என்ற போதும்) திருமணமான பின் அவள் முதன்முதல் என்னுடன் போர்த்துக்கல் நாட்டிற்கு வந்தபோது, எனக்கே தெரியாமல் "கருவுற்றிருப்பதை அறியும் கையடக்க கருவி" ஒன்றை வாங்கி வந்திருக்கிறாள்; அப்படி ஒன்று இருக்கிறது என்றே எனக்கு அன்று தான் தெரியும் (இதுபோன்று தான் ஆண்/தந்தை பின்தங்கி இருக்கிறான்!). அதில், பரிசோதனை செய்து எனக்கு முடிவை காண்பித்தாள்; பின் இருவரும் சேர்ந்தே வெறொரு கருவியையும் வாங்கி பரிசோதனை செய்த (பார்க்க! இடது புகைப்படம்) பின்னர் தான் மருத்துவரையே பார்க்க சென்றோம்.

       ஓர் பெண் பிறக்கும்போதே தாயாகிறாளா? என்பது எனக்கு தெரியாது; ஆனால், குழந்த பெற ஆயத்தமாகும் முன்னரே "ஓர் தாயாய் யோசிக்க ஆரம்பிக்கிறாள்" என்பது எனக்கு வெகு நிச்சயமாய் தெரியும்! 2. ஓர்முறை எம்மகளுக்கு மருந்து ஒன்றை வாங்கி வரச்சொன்னாள், என்னவள்! நானும், உடனே வாங்கி வந்தேன்! அதை ஓர்முறை பார்த்தவள், கொதித்தெழுந்து விட்டாள்; "முடிவுக்காலம் (Expiry Date)" பார்த்து வாங்கமாட்டீங்களா? என்றாள். என்னடா இது, வீணாப்போனதை கூடமா விற்பார்கள்? என்று எண்ணினேன் (உண்மையில், முடிவுக்காலம் 1 மாதத்தில் இருந்தது - அதைக்கூட ஓர் தாய் ஏற்கமாட்டாள்!). இது தான், ஓர் ஆண் குணம் அல்லது ஓர் தந்தையின் குணம்; அதுமாதிரி பார்க்கவேண்டும் என்று பெரும்பான்மையான ஆண்(தந்தை)களுக்கு தெரியாது! இங்கே தான் தாயும், தந்தையும் வெவ்வேறு உலகத்தை சேர்ந்தவர்கள் என்பதை "எளிதில்" உணரமுடியும்; இப்படித்தான், குழந்தை வளர்ப்பில் ஓர் தந்தை அந்நியப்பட்டு இருப்பதை காட்டவேண்டும். இதுதான், யதார்த்தம்! இதை விடுத்து - மேற்கூறிய கதையில் வரும் உவமானத்தில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை. ஆயினும், அந்த கதை சொல்லும் நீதியில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை! இதைத்தான் என்னுடன் வாதிடுபவர்களுக்கு புரியவைக்க சிரமப்பட்டு போராடிக்கொண்டு இருக்கிறேன். ஆண் இப்போது தான், "குழந்தை வளர்ப்பில்" தனக்கும் பங்கு உண்டு என்பதை உணர்ந்திருக்கிறான். அவனை முதலில், அவன் செய்யும் சிறு-செயலையும் பாராட்டி வரவேற்கவேண்டும் என்பதே என் வாதம்.

      இதை முதலில், அவனின் மனைவி - அதாவது ஓர் தாய் தான் வரவேற்று அவனுக்கு சகலமும் கற்றுக்கொடுக்க வேண்டும். அவள் நேரடியாய் "உங்களுக்கு இதெல்லாம் தெரியாது..." என்றோ அல்லது மறைமுகமாய் வெறொருவரிடம் "அவருக்கு அதெல்லாம் ஒன்றும் தெரியாது..." என்றோ கூறி அவனை விளக்கி வைக்கக்கூடாது. அவன் செயலை பரிகாசம் செய்யக்கூடாது; குறிப்பாய், மேற்கூறிய கதையில் வரும் "சற்றும் உண்மை இருக்க வாய்ப்பில்லாத" உதாரணம் கொண்டு! நான் மேற்குறிப்பிட்ட 2 விசயங்கள் போன்று எவ்வளவோ உள்ளன! அதைப்போன்ற விசயங்களைக் கூறி விளக்கவேண்டும்! அதை விடுத்து - இப்படி ஏன் ஓர் ஆணை/தந்தையை சித்தரிக்கவேண்டும்? "இதைக்கூட பார்த்து வாங்கமாட்டீங்களா??" - இதைக்கேட்ட நாள் முதல், எந்த அவசரத்திலும் ஓர் திண்பொருளைக் கூட முடிவுக்காலம் பார்க்காமல் வாங்குவதில்லை! ஆண் எதையும் புரிந்து கொள்ளமுடியாத முட்டாள் அல்ல; குழந்தை வளர்ப்பில் "அவனுக்கு முந்தைய தலைமுறை ஈடுபட்டதாய்; கதையாய் கூட" கேட்டறியாதவன்! அதை முதன்முதலாய் செய்ய முற்படுகையில் - அவனை இருகரம் கூப்பி வரவேற்கவில்லை எனினும், அவனுக்கு ஆறுதலாய் இருக்கவேண்டும் என்னவள் எனக்கு இன்றளவில் அவள் எனக்கு செய்திட்ட பெரு-விசயம், பின்வருவது: 2011 ஆம் ஆண்டு "சனவரி மாதம் 27 ஆம் தேதி" போர்த்துக்கல் நாட்டில் இருந்து நானும் என்மகளும் மட்டும் இந்தியா சென்றோம்! அன்று என்மகளுக்கு 18 மாதங்களுக்கு 6 நாட்கள் குறைவு! இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா?

       சொல்கிறேன்! அன்று வரை என்மகள் தாய்ப்பால் அருந்தினாள்! பல நாட்கள் முன்பிருந்தே என்னவள் நிறுத்த முயற்சித்தும் - என்மகளின் பிடிவாதத்தால் இயலாமல் போயிற்று! அவள் கடைசியாய் "லிஸ்பன்" விமான-நிலையத்தில் தாய்ப்பால் அருந்தினாள் - அதாவது, நாங்கள் "பாதுகாப்பு பரிசோதனை"க்கு செல்லும் வரை!! ஓர் குழந்தையை தாய்ப்பால் மறக்கடிக்க செய்வது எத்தனை கடினம் என்பதை இதைப் படிக்கும் தாய்மார்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை. தாய்ப்பாலை நிறுத்திய உடன் தாய்க்கு என்னென்ன விளைவுகள் இருக்கும் என்பதையும் நான் சொல்லத் தேவயில்லை! நான் இல்லாது, என்னவளே அவளின் பிரச்சனையை சமாளிக்கவேண்டும் என்பதும் அவளுக்கு தெரியும்! அவள் இல்லாது, எம்மகள் படப்போகும் பிரச்சனையும் அவளுக்கு தெரியும்!! ஓர் தந்தையாய் நான் அனைத்தையும் சமாளிப்பேன் என்ற பெருத்த-நம்பிக்கையைக் கொண்டு; என்னையும் திடப்படுத்தி எங்களை வழியனுப்பி வைத்தாள்! என்மகளை; என்னவள் என்னிடம் கொடுத்தது போலவே - இந்தியா சென்று சேர்ப்பித்தேன் {என்மகள் அன்று அணிந்திருந்த ஆடை (பார்க்க! வலது புகைப்படம்) கூட இன்னும் என் நினைவில் இருக்கிறது!}. அங்கு சென்றதும் யாரைப் பார்த்தாலும் அழுவாள்! என்னை, கழிவறை செல்லக் கூட அவள் அனுமதிப்பதில்லை. என்மகளுக்கு சாதாரண பாலை பழக்க - என்குடும்பம் முழுதும் சேர்ந்து போராடினோம்! மீண்டும் என்மகளுடன் தனியாய் விமானப்-பயணம் செய்யும் வாய்ப்பிற்காய் காத்துக்கொண்டு இருக்கிறேன்; அது ஓர் இனிய-அனுபவம்!

        இங்கே என்னுடைய தற்பெருமையை கூறவருவதாய் எவரும் தவறாய் எண்ணவேண்டாம்; அது என் நோக்கமும் அல்ல! அதேபோல், நீங்கள் உங்கள் குழந்தைக்கு என்னென்ன செய்தீர்கள் என்று ஒப்பிட்டு-பட்டியல் இடவும் வேண்டாம்! என்மகள் என்னிடம் இருக்கும்போது, என்னவளால் எந்த-மனக்குறையும் இன்றி வெகு-நிம்மதியாய் இருக்கமுடியும்; இது ஓர்-தந்தையாய் என்மேல் என்னவளுக்கு இருக்கும் நம்பிக்கை! அவளின் நம்பிக்கையும், அவள் தந்த ஊக்கமும் தான் என்னை குழந்தை-வளர்ப்பில் வெகுவாய் ஈடுபடுத்தியது. இதை அனைத்தையும் தாண்டி, எங்களுக்குள் எப்படிப்பட்ட கருத்து வேறுபாடு/பிரச்சனை வரினும்; குழந்தை-வளர்ப்பில் எனக்குள்ள உரிமையை ஒருபோதும் அவள் தடுத்ததில்லை! கணவன்/மனைவி என்ற "இருவருக்குள்" பிரச்சனை வரும்போது; இந்த சமுதாயமும்/சட்டமும் "குழந்தை வளர்ப்பு" என்பதை முன்னிறுத்துகிறது! ஆனால், அதற்கான பயிற்சியை ஓர்-தந்தைக்கு அளிப்பதில்லை! என்ற கசப்பான உண்மையே என்னுடைய என்னுடைய வாதத்திற்கு காரணம். இது குறித்து, என்னுடைய ஆற்றாமையை "குழந்தை யாரிடம் வளரவேண்டும்???" என்ற தலையங்கத்தில் பதிவு செய்து இருக்கிறேன். எனவே, மேற்கூறியதை வெறும்-கதையாய் மட்டும் என்னால் பார்க்கமுடியவில்லை! இப்படிப்பட்ட கதைகளும்/பேச்சுக்களும் தான்; கணவன்/மனைவி பிரச்சனை வரும்போது - அங்கே "பிள்ளை-தந்தை"பிரிவை முதன்மைப்படுத்துகிறது! "எனக்கு அப்படி நேரவில்லை!" என்று; என்னால் "சும்மா" இருக்கமுடியவில்லை! எனவே, பிள்ளை வளர்ப்பில்...
   
தந்தயின் பங்கை - முதலில் துவங்க அனுமதிப்போம் என்பதே என் வேண்டுகோள்!!!

பின்குறிப்பு: தயவுசெய்து மீண்டும், "அது உடல் சார்ந்தது", "பத்து மாதம் சுமந்தவளுக்கு தெரியும்" என்று விவாதிக்காதீர்கள்! என்மகள் கருவுற்ற நாள் முதல், பிறந்த 10-ஆவது நிமிடம் அவளை என்கரங்களில் தாங்கியது வரை, தனியாய் என்னவளுடன் இருந்து - அவளின் தாய்மையை "உடலால் இல்லை" எனினும், உணர்வால் உணர்ந்தவன்! அதை நானே, இவ்வலைப்பதிவின் முதல்-தலையங்கத்தில் எழுதியவனும் கூட!! பெண்கள் - கருவைத் தாங்கும் வரத்தை விரும்பி-பெறவுமில்லை; ஆண்கள் அந்த வரத்தை வெறுத்து-மறுக்கவுமில்லை! இது இயற்கை/இறைவனால் அமையப்பெற்றது; இது மாறு-பட்டும் இருந்திருக்கக்கூடும்! அதனால், இது போன்ற வாதத்தை தயவுசெய்து முன் நிறுத்தாதீர்கள்! "அந்த வரத்தை மதிக்காத அளவிற்கு ஆண்வர்க்கம் இன்னும் தரம்-தாழவில்லை"! மேலும், இங்கே எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் வாதம் "குழந்தை வளர்ப்பது பற்றி! குழந்தை பெறுவது பற்றி அல்ல"! அருள்கூர்ந்து - இவை இரண்டும் முற்றிலும் மாறுபட்ட இருவேறு பிரிவுகள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக