பால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 047 - தெரிந்து செயல்வகை
0461. அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்
விழியப்பன் விளக்கம்: ஓர் செயலால் விளையும் நன்மையை, அச்செயலின் அழிவு மற்றும்
ஆக்கம் இரண்டின் அடிப்படையிலும் கணக்கிட்டு; அதன் பின் செயல்களை
வகுக்கவேண்டும்.
(அது போல்...)
ஓர் சிந்தனையால் உருப்பெறும் படைப்பை, அச்சிந்தனையின் குறை மற்றும் நிறை
இரண்டின் அடிப்படையிலும் மதிப்பிட்டு; அதன் பின் சிந்தனைகளை வலுப்படுத்தவேண்டும்.
0462. தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்
விழியப்பன் விளக்கம்: அனுபவம் வாய்ந்த குழுவுடன் இணைந்து; ஆராய்ந்தறிந்து
செயல்களைச் செய்வோர்க்கு, செயற்கரிய செயலென்று எதுவுமில்லை!
(அது போல்...)
நேர்மை மிகுந்த தலைவருடன் கைகோர்த்து; தேவையறிந்து அரசியல் கற்போரால்,
ஒழிக்கமுடியா ஊழலென்று ஏதுமில்லை!
0463. ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்
விழியப்பன் விளக்கம்: பகுத்தறியும் திறமுடையோர், வருங்கால வரவை கணக்கிட்டு;
நிகழ்காலக் கையிருப்பை இழக்கவைக்கும், செயல்களைச் செய்யமாட்டார்கள்.
(அது போல்...)
மரணத்தை உணர்ந்தோர், பிற்கால வாழ்வை நினைத்து; தற்கால அனுபவத்தை இழக்கும்,
வாழ்வை வாழமாட்டார்கள்.
0464. தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்
விழியப்பன் விளக்கம்: இகழ்ச்சியெனும் குற்றவுணர்விற்கு அஞ்சுவோர்; விளைவைப்
பற்றியத் தெளிவில்லாத, செயல்களைத் துவங்க மாட்டார்கள்.
(அது போல்...)
தானெனும் கர்வத்தை வெறுப்போர்; விமர்சிப்போரின் நோக்கத்தை அறியாமல்,
விமர்சனங்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள்.
0465. வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு
விழியப்பன் விளக்கம்: முறையானத் திட்டங்களை வகுக்காமல், போரை எதிர்கொள்ளுதல்;
பாத்தியில் விதையை விதைப்பது போல், பகைவரை வலிமைப்படுத்தும் வழியாகும்.
(அது போல்...)
நிலையான வருமானத்தை வரையறுக்காமல், கடனை வாங்குதல்; நெருப்பில் நெய்யை
வார்ப்பது போல், துன்பத்தைப் பெருக்கும் செயலாகும்.
0466. செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்
விழியப்பன் விளக்கம்: செய்யக் கூடாதவற்றைச் செய்வது, கெடுதலை உருவாக்கும்! செய்ய
வேண்டியவற்றைச் செய்யாததும், கெடுதலை உருவாக்கும்!
(அது போல்...)
முறையற்ற உறவில் இணைவது, இல்லறத்தைச் சிதைக்கும்! முறையான உறவில்
இணையாததும், இல்லறத்தைச் சிதைக்கும்!
0467. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
விழியப்பன் விளக்கம்: எவ்வொரு செயலாயினும், முற்றிலும் ஆராய்ந்த பின்னர்
துவங்கவேண்டும்; துவங்கியபின் ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றமாகும்!
(அது போல்...)
எந்தவொரு உறவாயினும், பரஸ்பரம் அன்பைப் பரிமாறியபின் இணையவேண்டும்;
இணைந்தபின் பரிமாறிக் கொள்ளலாம் என்பது தவறாகும்!
0468. ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்
விழியப்பன் விளக்கம்: பலரின் துணையோடு செய்திடினும்; விளைவை அறிந்து முறையான
திட்டத்துடன் துவங்காத செயல், முழுமடையாமல் போகும்!
(அது போல்...)
பல்வேறு பட்டங்களைப் பெற்றிருப்பினும்; நோக்கத்தை உணர்ந்து சரியான பயிற்சியுடன்
கற்காத கல்வி, பயனில்லாமல் போகும்!
0469. நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை
விழியப்பன் விளக்கம்: அவரவரின் இயல்பானப் பண்பை உணர்ந்து, செயல்களைச் செய்யத்
தவறுவது; நன்மைப் பயக்கும் செயல்களிலும், தவறை இழைக்கும்.
(அது போல்...)
பிறரின் சுயமான உரிமையை அறிந்து, உறவுகளை வழிநடத்தத் தவறுவது; பெரியோர்
நிர்ணயிக்கும் உறவுகளிலும், விரிசலை உருவாக்கும்.
0470. எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு
விழியப்பன் விளக்கம்: தம் இயல்பு அல்லாதவற்றை, மக்கள் ஏற்கமாட்டர்கள் என்பதால்;
பிறர் இகழாத வகையில், நம் செயல்களை உணர்ந்து வகுக்கவேண்டும்.
(அது போல்...)
தமக்கு ஈடுபாடு இல்லாதவற்றை, மாணவர்கள் கற்கமாட்டார்கள் என்பதால்; அவர்கள்
இன்னலடையாத முறையில், கல்வித் திட்டத்தை மாற்றி அமைக்கவேண்டும்.
*****