வெள்ளி, நவம்பர் 04, 2016

அதிகாரம் 046: சிற்றினஞ்சேராமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 046 - சிற்றினஞ்சேராமை

0451.  சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
           சுற்றமாச் சூழ்ந்து விடும்

           விழியப்பன் விளக்கம்: பேரின்பம் கண்ட உயர்ந்தோர், சிற்றின்பம் நாடும் தாழ்ந்தோர்க்கு 

           அஞ்சுவர்; தாழ்ந்தோரோ, சிற்றின்பம் நாடுவோரைச் சுற்றமாகச் சூழ்வர்.
(அது போல்...)
           விவசாயத்தை உயிரெனும் விவசாயிகள், விளைநிலம் அழிக்கும் வியாபாரிகளை எதிர்ப்பர்; 
           வியாபாரிகளோ, விளைநிலத்தை அழிப்போரைப் பங்காளிகளாய் சேர்ப்பர்.
        
0452.  நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
           இனத்தியல்ப தாகும் அறிவு

           விழியப்பன் விளக்கம்: 
சேரும் நிலத்தின் தன்மைக்கேற்ப, நீரின் தன்மை வேறுபடும்; 

           அதுபோல் சேரும் இனத்தின் இயல்புக்கேற்ப, மக்களின் அறிவு வேறுபடும்.
(அது போல்...)
           ஊற்றப்படும் அச்சின் உருவுக்கேற்ப; உருகிய உலோகம் உருமாறும்; அதுபோல் தத்தம் 
           தலைமையின் தன்மைக்கேற்ப, கட்சியின் செயல்பாடுகள் அமையும்.
           
0453.  மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
           இன்னான் எனப்படுஞ் சொல்

           விழியப்பன் விளக்கம்: 
ஒருவரின் உணர்ச்சி, அவரின் மனநிலையை ஒட்டி இருக்கும்; 

           அதுபோல் ஒருவர் இவ்வகையானவர் என்பது, அவரின் சுற்றத்தையொட்டி  
           வரையறுக்கப்படும்.
(அது போல்...)
           பிள்ளைகளின் செயல்பாடுகள், பெற்றோர்களின் இயல்பை ஒட்டி அமையும்; அதுபோல் 
           ஆட்சியாளர் இத்தகையானவர் என்பது, அவர்களின் தொண்டர்களால் நிர்ணயிக்கப்படும்.

0454.  மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
           இனத்துள தாகும் அறிவு

           விழியப்பன் விளக்கம்: 
அறமற்ற சுற்றத்தை உடையவரின் அறிவு, அவரின் மனதைப்  

           பிரதிபலிப்பதாய் தோற்றமளித்து; இறுதியில், அவரின் சுற்றத்தைப் பிரதிபலிப்பதாய் மாறும்.
(அது போல்...)
           நேர்மையற்ற சுயத்தை உடையவரின் வசதி, அவரின் உழைப்பை உணர்த்துவதாய் 
           பறைசாற்றி; பின்னர், அவரின் ஊழலை உணர்த்துவதாய் முடியும்.

0455.  மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
           இனந்தூய்மை தூவா வரும்

           விழியப்பன் விளக்கம்: 
சிந்தனையின் தூய்மை மற்றும் செயலின் தூய்மை - இவையிரண்டும், 

           ஒருவரின் இனத்தின் தூய்மையைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும்.
(அது போல்...)
           பெற்றோரின் வாய்மை மற்றும் பிள்ளைகளின் வாய்மை - இவ்விரண்டும், அவரின் 
           முன்னோர்களின் வாய்மையைக் கொண்டு வகுக்கப்படும்.

0456.  மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
           இல்லைநன் றாகா வினை

           விழியப்பன் விளக்கம்: 
தூய்மையான மனமுடையவரின் வம்சம், நல்வழியில் பயணப்படும்; 
           தூய்மையான இனத்தைக் கொண்டவரின் செயல்கள், நன்மையளிக்காமல் இருப்பதில்லை.
(அது போல்...)
           ஊழலற்ற ஆட்சியின் நீட்சி, நல்லவர்களால் தொடரப்படும்; ஊழலற்றத் தொண்டர்களை 
           உடையோரின் கட்சி, வெற்றியடையாமல் இருப்பதில்லை.

0457.  மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
           எல்லாப் புகழும் தரும்

           விழியப்பன் விளக்கம்: 
மனதின் வலிமை, உலக உயிர்களின் வளர்ச்சிக்கு உதவும்; அதுபோல் 
           ஒரு இனத்தின் வலிமை, எல்லா வகையான புகழுக்கும் வித்திடும்.
(அது போல்...)
           விவசாயத்தின் வளர்ச்சி, நாட்டின் பொருளாதார திடத்திற்கு வித்திடும்; அதுபோல் ஒரு 
           கிராமத்தின் வளர்ச்சி, வல்லரசுக்கான அனைத்து காரணிகளையும் வலுப்படுத்தும்.

0458.  மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
           இனநலம் ஏமாப் புடைத்து

           விழியப்பன் விளக்கம்: 
மிகுந்த மனவலிமையை உடையவர் ஆயினும், சான்றோர்களுக்கு; 
           அவர்கள் சார்ந்த இனத்தின் வலிமை, மேலும் பாதுகாப்பை அளித்திடும்.
(அது போல்...)
           உயரிய சுயவொழுக்கம் பேணுபவர் எனினும், ஆட்சியாளர்களுக்கு; அவர்கள் ஆளும் 
           மக்களின் சுயவொழுக்கம், கூடுதல் பலத்தைக் கொடுக்கும்.


0459.  மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
           இனநலத்தின் ஏமாப் புடைத்து

           விழியப்பன் விளக்கம்: 
மனதின் வலிமையால், ஒருவரின் பிறவிப்பயன் பெருகும்; அப்பயனும், 
           அவர் சார்ந்த இனத்தின் மிகுந்த வலிமையால் பாதுகாக்கப்படும்.
(அது போல்...)
           தொழிலாளியின் உழைப்பால், நிறுவனத்தின் வளர்ச்சி விரிவடையும்; அவ்வளர்ச்சியும், அவர் 
           சார்ந்த சங்கத்தின் அதீத உழைப்பால் நிலைத்திருக்கும்.

0460.  நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
           அல்லற் படுப்பதூஉம் இல்

           விழியப்பன் விளக்கம்: 
நல்ல இனத்தை விட, ஒருவருக்கு சிறந்த துணை ஏதுமில்லை; 
           அதுபோல் தீய இனத்தை விட, ஒருவருக்கு அதீத துன்பத்தை அளிப்பதும் ஏதுமில்லை.
(அது போல்...)
           இயற்கை உரத்தை விட, மண்வளத்திற்கு சிறந்த பாதுகாப்பு ஏதுமில்லை; அதுபோல் 
           இரசாயன உரத்தை விட, மண்வளத்திற்கு அதிக அழிவை அளிப்பதும் ஏதுமில்லை.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக