செவ்வாய், மார்ச் 14, 2017

அதிகாரம் 059: ஒற்றாடல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 059 - ஒற்றாடல்

0581.  ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
           தெற்றுஎன்க மன்னவன் கண்

           விழியப்பன் விளக்கம்: உளவுத்துறை மூலம் செய்திகளைச் சேகரிப்பது/புகழ் நிரம்பிய
           அறநூல்களை நிறுவுவது - இவ்விரு செயல்களும், அரசாள்பவரின் இரு கண்களென
           உணரவேண்டும்.
(அது போல்...)
           உண்மை பேசி உறவுகளைப் பேணுவது/நேர்மை மிகுந்த பிள்ளைகளை வளர்ப்பது -
           இவ்விரு விடயங்களும், இல்லறத்தின் இரு கரங்களென எண்ணவேண்டும்.
      
0582.  எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
           வல்லறிதல் வேந்தன் தொழில்

           விழியப்பன் விளக்கம்: ஆதரவாளர்/எதிர்ப்பாளர்/பொதுமக்கள் - இவர்கள் எல்லோர்க்கும்,
           நிகழ்பவை எல்லாவற்றையும்; எக்காலத்திலும், உளவுத்துறை மூலம் விரைந்து அறிவதே
           அரசாள்பவரின் கடமையாகும்.
(அது போல்...)
           உறவுகள்/பகைவர்/நட்புகள் - இவர்கள் எல்லோரின், அனைத்து இன்னல்களையும்;
           எந்நிலையிலும், கலந்துரையாடல் மூலம் அறிந்து தேற்றுவதே வாழ்வியலின்
           அடிப்படையாகும்.
           
0583.  ஒற்றினால் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
           கொற்றம் கொளக்கிடந்தது இல்

           விழியப்பன் விளக்கம்: உளவுத்துறை மூலம் இரகசியங்களை அறிந்து, அவற்றை ஆராய்ந்து
           தெளியாத அரசாள்வோர்க்கு; நிலையான வெற்றியைப் பெற்றிட, வேறேதும் வழியில்லை.
(அது போல்...)
           இளைஞர்களை மையப்படுத்தி பிரச்சனைகளை அணுகி, அவற்றைத் தீர்க்க முயலாத
           சமூகத்திற்கு; திடமான மாற்றத்தைக் கண்டிட, மாற்று வழியில்லை.

0584.  வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு 
           அனைவரையும் ஆராய்வது ஒற்று

           விழியப்பன் விளக்கம்: தமக்கு வேண்டியவர்/வேண்டாதவர் என்ற பேதமின்றி,
           அனைவரையும் நடுநிலையோடு அணுகி; உளவுத்தொழில் ஆற்றுவதே, ஒற்றரிவோரின்
           கடமையாகும்.
(அது போல்...)
           தம்மைக் கவர்ந்தவர்/கவராதவர் என்ற வித்தியாசமின்றி, அனைவரையும் தம்மியல்போடு
           நெருங்கி; ஆய்ந்தறிந்து  உணர்வதே; தேடலுள்ளோரின் அடிப்படையாகும்.

0585.  கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
           உகாஅமை வல்லதே ஒற்று

           விழியப்பன் விளக்கம்: சந்தேகம் விளைவிக்காத தோற்றத்துடன் - எவரும் சந்தேகிப்பேனும்,
           கண்ணில் அச்சமின்றி; எந்நிலையிலும் தன்னை வெளிப்படுத்தாத, வல்லமைக் கொண்டதே
           ஒற்றுத் தொழிலாகும்.
(அது போல்...)
           பகையை உருவாக்காத உறுதியுடன் - எவரும் பகைத்தாலும், பேச்சில் பொய்யின்றி;
           எக்காலத்திலும் தன்னிலை இழக்காத, வைராக்கியம் உடையதே நட்பெனும் உறவாகும்.

0586.  துறந்தார் படிவத்தர் ஆகி இறந்தாராய்ந்து
           என்செயினும் சோர்விலது ஒற்று

           விழியப்பன் விளக்கம்: பற்றற்றோரின் தன்மையுடன், விருப்பு/வெறுப்பு கடந்து ஆராய்ந்து;
           ஆராயப்படுவோர் என்ன துன்பம் செய்தாலும், சோர்வு அடையாததே உளவுத்துறை.
(அது போல்...)
           நடுநிலையான இயல்புடன், ஆண்/பெண் பேதமின்றி பேணிக்காத்து; குழந்தைகள்
           எவ்வகை குறை கொண்டிருந்தாலும், வெறுப்பு அடையாதோரே பெற்றோர்கள்.

0587.  மறைந்தவை கேட்கவற்று ஆகி அறிந்தவை
           ஐயப்பாடு இல்லதே ஒற்று

           விழியப்பன் விளக்கம்: இருளில் மறைவாய் நடக்கும் விடயங்களைக் கேட்டறிந்து,
           அறிந்தவற்றில்; எவ்வித ஐயப்பாடும் இல்லாத, தெளிவைக் கொண்டதே உளவுத்துறை.
(அது போல்...)
           மனதில் புதைந்து இருக்கும் உணர்வுகளைக் வெளிக்கொணர்ந்து, கொணர்ந்தவற்றில்;
           எவ்வித அவநம்பிக்கையும் கொள்ளாத, அன்பை உடையோரே உறவுகள்.

0588.  ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
           ஒற்றினால் ஒற்றிக் கொளல்

           விழியப்பன் விளக்கம்: ஓர் உளவுக்குழு தந்த உளவுச் செய்திகளை, வேறோர்
           உளவுக்குழுவால்; உளவுபார்த்து உறுதிசெய்வது, அரசாள்பவர்க்கு சிறந்தது.
(அது போல்...)
           ஓர் உறவு சொல்லும் புரளிச் செய்திகளை, வேறோர் உறவால்; சரிபார்த்து முடிவெடுப்பது,
           உறவுசங்கிலிக்கு உகந்தது.

0589.  ஒற்றுஒற்று உணராமை ஆள்க உடன்மூவர்
           சொல்தொக்க தேறப் படும்

           விழியப்பன் விளக்கம்: ஒரே விடயத்திற்கு, ஒருவரையொருவர் அறியாமல் பல ஒற்றர்களை
           நியமித்து ஆளவேண்டும்; மூன்று ஒற்றர்களின் கூற்று ஒத்திருப்பின், அதில் தெளிவடைய
           வேண்டும்.
(அது போல்...)
           ஒரே பிரச்சனைக்கு, ஒருவரையொருவர் அறியாமல் பல உறவுகளை விசாரித்து
           அறியவேண்டும்; மூன்று உறவுகளின் விளக்கம் ஒன்றினால், அதைப் பரிசீலிக்க வேண்டும்.

0590.  சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
           புறப்படுத்தான் ஆகும் மறை

           விழியப்பன் விளக்கம்: உளவுத்துறையினரைச் சிறப்பிப்பதை, ஊரறிய செய்யவேண்டாம்;
           அப்படிச் செய்தால், உளவுத்துறை இரகிசியங்களை - அரசாள்பவரே வெளிப்படுத்தியதாய்
           அமையும்.
(அது போல்...)
           புரளிப்பேசுவோரை எதிர்ப்பதை, வெளிப்படையாய் செய்யவேண்டாம்; அப்படிச் செய்தால்,
           தன்னைப் புரளிப்பேச - தானே வரவேற்பதாய் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக