ஞாயிறு, நவம்பர் 19, 2017

குறள் எண்: 0840 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 084 - பேதைமை; குறள் எண்: 0840}

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்

விழியப்பன் விளக்கம்: அறிவார்ந்தோர் நிறைந்த நட்புக் குழுவில், அறியாமை கொண்டோர் இணைவது; தூய்மையான படுக்கையின் மேல், கழுவாத காலை வைப்பது போன்றதாகும்!
(அது போல்...)
திறமையானோர் வழிநடத்திய அரசியல் கட்சியை, அடிமை வழிவந்தோர் நிர்வகிப்பது; அழகான சிலையின் மேல், வெளுக்காத உடையை அணிவிப்பது போன்றதாகும்!

சனி, நவம்பர் 18, 2017

ஒருவரை/ஒன்றை விரும்ப/வெறுக்க தேவைப்படும் காரணம்...

குறள் எண்: 0839 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 084 - பேதைமை; குறள் எண்: 0839}

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்

விழியப்பன் விளக்கம்: பிரிந்து செல்லும்போது, துன்பமளிக்க எதுவொன்றும் இல்லை என்பதால்; அறியாமை கொண்டோரிடம் கொள்ளும் நட்பு, மிகவும் இனிமை ஆனதாகும்!
(அது போல்...)
வெறுத்து கைவிடும்போது, சோம்பலளிக்க எதுவும் இல்லை என்பதால்; போதைப் பழக்கங்களில் கொள்ளும் நாட்டம், அதிக ஒவ்வாமை உடையதாகும்!

வெள்ளி, நவம்பர் 17, 2017

குறள் எண்: 0838 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 084 - பேதைமை; குறள் எண்: 0838}

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்

விழியப்பன் விளக்கம்: நட்பியலில் அறியாமை கொண்டவரிடம், அதிக மதிப்புடைய பொருள் கிடைத்தால்; அவரின் நிலைமை, பித்தம் உடையவர் ஒருவர் மதுவருந்தியது போலிருக்கும்!
(அது போல்...)
பிரிவினையில் பிரம்மை கொண்டவரிடம், அதீத சக்தியுடைய அதிகாரம் கிடைத்தால்; அவரின் செயல்கள், கூர்மையான ஆயுதத்தில் நஞ்சை கலந்தது போலிருக்கும்!

வியாழன், நவம்பர் 16, 2017

குறள் எண்: 0837 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 084 - பேதைமை; குறள் எண்: 0837}

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை

விழியப்பன் விளக்கம்: நட்பியலில் அறியாமையுள்ள ஒருவரிடம், பெருமளவு செல்வம் சேரும்போது; அவர்களுக்கு தொடர்பற்றோரும் பசியாற, அவர்களின் சுற்றத்தார் பசித்திருப்பர்!
(அது போல்...)
அரசியலில் பொய்மையுள்ள ஒருவரிடம், அதிகளவு ஆட்சியதிகாரம் சேரும்போது; எதிர்க்கட்சியும் ஊழலால் பயனடைய, வாக்களித்த மக்கள் அல்லாடுவர்!

புதன், நவம்பர் 15, 2017

குறள் எண்: 0836 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 084 - பேதைமை; குறள் எண்: 0836}

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்

விழியப்பன் விளக்கம்: கூடா நட்பை உணரமுடியாத அறியாமை கொடோர், ஒரு செயலைத் துவங்கினால்; அச்செயல் மட்டுமா தடம் புரளும்? அவர்களும் சேர்ந்தே தடம் புறள்வர்!
(அது போல்...)
தவறான தலைவரை அறியமுடியாத அனுபவமின்மை உடையோர், ஓர் கட்சியை ஆதரித்தால்; அக்கட்சி மட்டுமா ஊழல் செய்யும்? அவர்களும் சேர்ந்தே ஊழல் செய்வர்!

செவ்வாய், நவம்பர் 14, 2017

குறள் எண்: 0835 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 084 - பேதைமை; குறள் எண்: 0835}

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு

விழியப்பன் விளக்கம்: நட்பியலில் அறியாமை கொண்டோர்; முதல் பிறவியிலேயே; ஏழு பிறப்புகளுக்கும் நரகத்தில் தள்ளும் செயல்களை, செய்யும் ஆற்றலுடையோர் ஆவர்!
(அது போல்...)
வேலையில் அறமின்மை உடையோர், வாரத்தின் முதல்நாளே; ஏழு நாட்களுக்கும் விரக்தியில் ஆழ்த்தும் சோம்பலை, கொள்ளும் திறமுடையோர் ஆவர்!

திங்கள், நவம்பர் 13, 2017

குறள் எண்: 0834 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 084 - பேதைமை; குறள் எண்: 0834}

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்

விழியப்பன் விளக்கம்: நட்பியல் சார்ந்த நூல்களைக் கற்றுணர்ந்தும்/பிறருக்கு எடுத்துரைத்தும்; தாம் பின்பற்றாத அறியாமை நிறைந்தோரை விட, அதீத அறியாமை கொண்டோர் எவருமில்லை!
(அது போல்...)
அரசியல் சார்ந்த அறங்களை அறிந்தும்/பிறருக்குக் கற்பித்தும்; தாம் பழகிடாத கொடுங்கோன்மை நிறைந்தோரை விட, அதிக கொடுங்கோன்மை உடையோர் எவருமில்லை!

ஞாயிறு, நவம்பர் 12, 2017

குறள் எண்: 0833 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 084 - பேதைமை; குறள் எண்: 0833}

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்

விழியப்பன் விளக்கம்: தீயவைக்கு நாணாதது/தேவையை நாடாதது/நல்லோரிடம் அன்பில்லாதது/முறையான எவ்வொன்றையும் பேணாதது - இவையாவும் நட்பியலின் அறியாமையாகும்!
(அது போல்...)
இலவசத்துக்கு வெஃகாதது/ஊழலாளிகளை ஒதுக்காதது/நல்லோரை ஆதரிக்காதது/நியாயமான விதிகளைக் கடைப்பிடிக்காதது - இவையாவும் மக்களாட்சியின் எதிர்வினைகளாகும்!

சனி, நவம்பர் 11, 2017

7-ஆம் ஆண்டு துவக்கம்...

ஃபிஃப்த்தக்காஸ்?!


        ஆமாம்... உங்களுக்கு "ஃபிஃப்த்தக்காஸ்"னா என்னன்னு தெரியுமா? - என்னது, தெரியாதா?! - அப்பாடா!... எனக்கும் தெரியாது - நான்கு நாட்களுக்கு முன்பு வரை! அன்று என் மகள் "அப்பா! உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டுமா?" என்றாள்; சொல்லடி என்றேன். இது "ஃபிஃப்த்தக்காஸ் பத்தின கதைப்பா!" என்றாள். உடனே, என்னுள் "ஃபிஃப்த்தக்காஸ்" என்றால் என்ன? என்ற கேள்வி எழுந்தது. அவள், அவளுக்கே உரித்தான மழலை கலந்த மொழியோடு "இன்னைக்கு ஆட்டோவுல போய்க்கிட்டு இருந்தோம் பா!" என்றபடி ஆரம்பித்தாள். நானும் கேட்க ஆரம்பித்தேன்; இடையில் ஓர் முறை, சரி... "ஃபிஃப்த்தக்காஸ்"னா என்னடின்னு கேட்டேன்! அவள் "ஃபிஃப்த்தக்காஸ் பா!" என்று பதில் சொல்லிவிட்டு தொடர்ந்தாள். மீண்டும் ஒருமுறை இடையில், "ஃபிஃப்த்தக்காஸ்"னா என்னம்மான்னு கேட்டேன்; அவளும் "ஃபிஃப்த்தக்காஸ் பா!!"வென சொல்லிவிட்டு தொடர்ந்தாள்! அவள் இரண்டு முறை சொல்லியும் என்னறிவுக்கு எட்டவில்லை!

       அதற்கு மேல் கேட்டால், என்னைக் கேலி செய்வாள் என்ற பயம்! ஏனெனில், அவள் படிக்கும் பள்ளி அம்மாதிரி; அவர்களின் ஆங்கில வார்த்தை உச்சரிப்புகள் அப்படி! அடிக்கடி, அவளுக்கும்/என்னவளுக்கும்; என் உச்சரிப்பைக் கேலி செய்வது வழக்கம்! நான் அரசுப் பள்ளியில் படித்தவன் தானே?! எனவே, அதற்கு மேல் கேட்டு, அவமானப் படவேண்டாம்னு "என் யோசனையைத் தொடர்ந்து கொண்டே" அவள் கதையைத் தொடர்ந்து கேட்கலானேன்! அவள் கதையைச் சொல்லி முடிப்பதற்கு, சற்று முன்னர்தான், "ஃபிஃப்த்தக்காஸ்"னா என்னவென்று புரியலாயிற்று! - என்னது? அப்படின்னா, என்னன்னு கேட்கிறீர்களா?! - அப்படின்னா, அதாங்க "ஃபிஃப்த்தக்காஸ்". ஹலோ... ஹலோ...! இருங்க, திட்டாதீங்க! அவள் சொல்லியது போல், நானும் சரியாகத்தான் பதில் சொல்லி இருக்கேன்! அப்படின்னா "Fifth படிக்கும் அக்காs = fifthஅக்காஸ் = ஃபிஃப்த்தக்காஸ்!" இப்போது, உங்களுக்கும் புரிந்திருக்குமே; ஆங்... அதேதான்!

"பிள்ளைமொழி" ஆச்சரியங்களில் இதுவும் ஓர்வகை!!!

பின்குறிப்பு: இந்த "ஃபிஃப்த்தக்காஸ்"னா என்னனு புரிஞ்சப்போ, எனக்கு பயங்கர சிரிப்பு; ஆனால், சிரிக்கவில்லை! ஏனெனில், அவள் கதை சொல்லும்போது, எவரும் சிரித்தால்; அவளுக்கு கோபம் வரும்! அதனால், பவ்யமாய் கேட்டு முடித்தேன்! - என்னது...? ஓ...! - அந்த கதை என்னன்னு கேட்கிறீர்களா?! யாருக்கு தெரியும்?! இந்த "ஃபிஃப்த்தக்காஸ்"னா என்னன்னு யோசிச்சதுல; அவள் சொன்ன கதையைக் கேட்கவே இல்லை! உஷ்ஷ்ஷ்... இதை அவள்கிட்ட சொல்லாம; இரகசியமா வச்சுக்கோங்க ப்ளீஸ்!