ஆமாம்... உங்களுக்கு "ஃபிஃப்த்தக்காஸ்"னா என்னன்னு தெரியுமா? - என்னது, தெரியாதா?! - அப்பாடா!... எனக்கும் தெரியாது - நான்கு நாட்களுக்கு முன்பு வரை! அன்று என் மகள் "அப்பா! உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டுமா?" என்றாள்; சொல்லடி என்றேன். இது "ஃபிஃப்த்தக்காஸ் பத்தின கதைப்பா!" என்றாள். உடனே, என்னுள் "ஃபிஃப்த்தக்காஸ்" என்றால் என்ன? என்ற கேள்வி எழுந்தது. அவள், அவளுக்கே உரித்தான மழலை கலந்த மொழியோடு "இன்னைக்கு ஆட்டோவுல போய்க்கிட்டு இருந்தோம் பா!" என்றபடி ஆரம்பித்தாள். நானும் கேட்க ஆரம்பித்தேன்; இடையில் ஓர் முறை, சரி... "ஃபிஃப்த்தக்காஸ்"னா என்னடின்னு கேட்டேன்! அவள் "ஃபிஃப்த்தக்காஸ் பா!" என்று பதில் சொல்லிவிட்டு தொடர்ந்தாள். மீண்டும் ஒருமுறை இடையில், "ஃபிஃப்த்தக்காஸ்"னா என்னம்மான்னு கேட்டேன்; அவளும் "ஃபிஃப்த்தக்காஸ் பா!!"வென சொல்லிவிட்டு தொடர்ந்தாள்! அவள் இரண்டு முறை சொல்லியும் என்னறிவுக்கு எட்டவில்லை!
அதற்கு மேல் கேட்டால், என்னைக் கேலி செய்வாள் என்ற பயம்! ஏனெனில், அவள் படிக்கும் பள்ளி அம்மாதிரி; அவர்களின் ஆங்கில வார்த்தை உச்சரிப்புகள் அப்படி! அடிக்கடி, அவளுக்கும்/என்னவளுக்கும்; என் உச்சரிப்பைக் கேலி செய்வது வழக்கம்! நான் அரசுப் பள்ளியில் படித்தவன் தானே?! எனவே, அதற்கு மேல் கேட்டு, அவமானப் படவேண்டாம்னு "என் யோசனையைத் தொடர்ந்து கொண்டே" அவள் கதையைத் தொடர்ந்து கேட்கலானேன்! அவள் கதையைச் சொல்லி முடிப்பதற்கு, சற்று முன்னர்தான், "ஃபிஃப்த்தக்காஸ்"னா என்னவென்று புரியலாயிற்று! - என்னது? அப்படின்னா, என்னன்னு கேட்கிறீர்களா?! - அப்படின்னா, அதாங்க "ஃபிஃப்த்தக்காஸ்". ஹலோ... ஹலோ...! இருங்க, திட்டாதீங்க! அவள் சொல்லியது போல், நானும் சரியாகத்தான் பதில் சொல்லி இருக்கேன்! அப்படின்னா "Fifth படிக்கும் அக்காs = fifthஅக்காஸ் = ஃபிஃப்த்தக்காஸ்!" இப்போது, உங்களுக்கும் புரிந்திருக்குமே; ஆங்... அதேதான்!
"பிள்ளைமொழி" ஆச்சரியங்களில் இதுவும் ஓர்வகை!!!
பின்குறிப்பு: இந்த "ஃபிஃப்த்தக்காஸ்"னா என்னனு புரிஞ்சப்போ, எனக்கு பயங்கர சிரிப்பு; ஆனால், சிரிக்கவில்லை! ஏனெனில், அவள் கதை சொல்லும்போது, எவரும் சிரித்தால்; அவளுக்கு கோபம் வரும்! அதனால், பவ்யமாய் கேட்டு முடித்தேன்! - என்னது...? ஓ...! - அந்த கதை என்னன்னு கேட்கிறீர்களா?! யாருக்கு தெரியும்?! இந்த "ஃபிஃப்த்தக்காஸ்"னா என்னன்னு யோசிச்சதுல; அவள் சொன்ன கதையைக் கேட்கவே இல்லை! உஷ்ஷ்ஷ்... இதை அவள்கிட்ட சொல்லாம; இரகசியமா வச்சுக்கோங்க ப்ளீஸ்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக