வியாழன், டிசம்பர் 28, 2017

குறள் எண்: 0879 (விழியப்பன் விளக்கவுரை)


{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 088 - பகைத்திறம் தெரிதல்; குறள் எண்: 0879}

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து

விழியப்பன் விளக்கம்: பயனற்ற முள்மரத்தை, இளையதாக இருக்கும் போதே வேரறுக்க! வளர்ந்து முதிர்ந்த நிலையில், அதை களைய முற்படுவோரின் கையைக் காயப்படுத்தும்!
(அது போல்...)
அறமற்ற தீக்குணத்தை, வளர ஆரம்பிக்கும் போதே அழிக்க! வளர்ந்து ஆக்கிரமித்த நிலையில், அதை அழிக்க முற்படுவோரின் வாழ்க்கையை அழிக்கும்!

செவ்வாய், டிசம்பர் 26, 2017

குறள் எண்: 0877 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 088 - பகைத்திறம் தெரிதல்; குறள் எண்: 0877}

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து

விழியப்பன் விளக்கம்: துன்பம் அடைந்ததை அறியாத நல்லோர்க்கு, அதைத் தெரிவிக்காதீர்! அதுபோல் வலிமையின்மையை அறியாத பகைவர்களுக்கு, அதை வெளிப்படுத்த விரும்பாதீர்!
(அது போல்...)
பணம்பெற்ற குற்றத்தை உணராத வாக்காளர்களை, தூற்றிப் பேசாதீர்! அதுபோல் மக்களாட்சியை உணராத ஊழல்வாதிகளுக்கு, அதைக் கற்பிக்க மறவாதீர்!

திங்கள், டிசம்பர் 25, 2017

குறள் எண்: 0876 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 088 - பகைத்திறம் தெரிதல்; குறள் எண்: 0876}

தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்

விழியப்பன் விளக்கம்: பகைவர்களின் திறத்தை அறிந்திருந்தாலும் அறியாதிருப்பினும்; பாதகமான சூழலில், அவர்களுடன் உறவாடாமலும்/பகைகொள்ளாமலும் இடையில் இருக்கவேண்டும்!
(அது போல்...)
தீப்பழக்கங்களின் வீரியத்தை உணர்ந்திருந்தாலும் உணராதிருப்பினும்; வற்புறுத்தலான சூழலில், அவற்றை செய்யாமலும்/மறுக்காமலும் பொறுத்துக் கடக்கவேண்டும்!

ஞாயிறு, டிசம்பர் 24, 2017

குறள் எண்: 0875 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 088 - பகைத்திறம் தெரிதல்; குறள் எண்: 0875}

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று

விழியப்பன் விளக்கம்: இருவேறு பகைகளை எதிர்க்கும்போது, தமக்கு துணை இல்லாது போனால்; ஒருவர், அவ்விரு பகைககளில் சரியான ஒன்றை, இனிய துணையாக்கிட வேண்டும்!
(அது போல்...)
இருவகை தீப்பழக்கங்கள் இருக்கும்போது, தம் உடல்திடம் குறைந்து போனால்; ஒருவர், அவ்விரு தீப்பழக்கங்களில் வீரியமான ஒன்றை, முயன்று நிறுத்திட வேண்டும்!

சனி, டிசம்பர் 23, 2017

குறள் எண்: 0874 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 088 - பகைத்திறம் தெரிதல்; குறள் எண்: 0874}

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு

விழியப்பன் விளக்கம்: பகையையும் நட்பாக்கிக் கொண்டு செயல்படும், தகைமைப் பண்புடையோரின்; ஆளுமையின் கீழ், உலகம் நிம்மதியாய் இயங்கும்.
(அது போல்...)
தோல்வியையும் அனுபவமாய் ஏற்று வழிநடத்தும், உயர்வானக் குணமுடையோரின்; தலைமையின் கீழ், குடும்பம் நேர்மையாய் வளரும்.

வெள்ளி, டிசம்பர் 22, 2017

குறள் எண்: 0873 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 088 - பகைத்திறம் தெரிதல்; குறள் எண்: 0873}

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்

விழியப்பன் விளக்கம்: தனியொருவனாய், பலரின் மேலும் பகையை மேற்கொள்பவர்; மனச்சீர்மை இல்லாதவரை விட, தாழ்ந்தவர் ஆவர்!
(அது போல்...)
சுயேச்சையாய், பலரை எதிர்த்துத் தேர்தலைச் சந்திப்போர்; கட்சி மாறுவோரை விட, உயர்ந்தவர் ஆவர்!

வியாழன், டிசம்பர் 21, 2017

குறள் எண்: 0872 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 088 - பகைத்திறம் தெரிதல்; குறள் எண்: 0872}

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை

விழியப்பன் விளக்கம்: வில்லை ஏராகக் கொண்ட உழவராம், படைவீரரோடு பகை கொண்டாலும்; சொல்லை ஏராகக் கொண்ட உழவராம், படைப்பாளியோடு பகை கொள்ளக்கூடாது!.
(அது போல்...)
அன்பை சிறகாய் கொண்ட பறவையாம், செயலில் குறை இருப்பினும்; அறத்தை சிறகாய் கொண்ட பறவையாம், சிந்தனையில் குறை இருக்கக்கூடாது!

புதன், டிசம்பர் 20, 2017

குறள் எண்: 0871 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 088 - பகைத்திறம் தெரிதல்; குறள் எண்: 0871}

பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று

விழியப்பன் விளக்கம்: பகை என்னும் பண்பற்ற ஒன்றை; ஒருவர், கேலிக்கை சார்ந்தும், விரும்புவது முறையானது அல்ல!
(அது போல்...)
கையூட்டு என்னும் அறமற்ற ஒன்றை; ஒருவர், குடும்பத்தை முன்னிறுத்தியும், கையாள்வது மனிதமானது அல்ல! {குறிப்பு: "கையாள்வது" - கொடுப்பது/பெறுவது என்ற இரு பொருளிலும்!}

செவ்வாய், டிசம்பர் 19, 2017

அதிகாரம் 087: பகைமாட்சி (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 087 - பகைமாட்சி

0861.  வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
           மெலியார்மேல் மேக பகை

           விழியப்பன் விளக்கம்: வலிமையான எதிரிகளுக்கு எதிரான பகையை, தவிர்க்க வேண்டும்! 
           வலிமையற்ற எதிரிகளை பகைக்க, தவறாமல் விருப்பம் கொள்ள வேண்டும்!
(அது போல்...)
           அராஜகமான ஆட்சியை சீராக்கப் போராடுவதை, கைவிட வேண்டும்! அரஜாக்கமற்ற 
           ஆட்சியை சீராக்க, மறவாமல் முயற்சி மேற்கொள்ள வேண்டும்!
      
0862.  அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
           என்பரியும் ஏதிலான் துப்பு

           விழியப்பன் விளக்கம்: சுற்றத்திடம் அன்பின்றி/வலிமையான துணையின்றி/தானும் 
           வலிமையின்றி - இருக்கும் ஒருவன்; எதிர்த்து வரும் பகைவரின் வலிமையை, எவ்வாறு    
           எதிர்கொள்வான்?
(அது போல்...)
           சிந்தனையில் நாட்டமின்றி/பகுத்தறியும் குருவின்றி/தானும் பகுத்தறிவின்றி - இருக்கும் 
           ஒருவன்; வாழ்வில் வரும் சவால்களின் பாதிப்பை, எப்படி சமாளிப்பான்?
           
0863.  அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
           தஞ்சம் எளியன் பகைக்கு

           விழியப்பன் விளக்கம்: அனைத்திலும் அச்சமும்/எதிலும் அறியாமையும்/எல்லோரிடமும் 
           முரணும்/எதையும் ஈயாமலும் - இருக்கும் ஒருவன்; பகைவர்கள் வெல்வதற்கு, எளியவனாய் 
           இருப்பான்!
(அது போல்...)
           அனைவரையும் ஜாதியால்/எதையும் இலவசத்தால்/எவற்றையும் ஊழலால்/யாதையும் 
           வன்முறையால் - சிதைக்கும் தலைவன்; மக்களாட்சி தோற்பதற்கு, காரணமாய் அமைவான்!

0864.  நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
           யாங்கணும் யார்க்கும் எளிது

           விழியப்பன் விளக்கம்: “கோபத்தை ஒழிக்காமல்/நிறைவான தன்மையின்றி” இருக்கும் 
           ஒருவனை வெல்வது; எந்நாளும்/எவ்விடத்திலும்/எவருக்கும் எளிதானது ஆகும்!
(அது போல்...)
           “ஊழலை ஒழிக்காமல்/பொதுமையான எண்ணமின்றி” இருக்கும் தலைவனை ஆதரிப்பது; 
           எக்காலமும்/எவ்வகையிலும்/எந்நாட்டுக்கும் தீமையானது ஆகும்!

0865.  வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
           பண்பிலன் பற்றார்க்கு இனிது

           விழியப்பன் விளக்கம்: "அறவழியை ஆராயாத/வாய்ப்புகளைப் பயன்படுத்தாத/படுபழியை 
           ஆராயாத/பண்பும் இல்லாத" ஒருவன்; பகைவர்களுக்கு இனிமையான எதிரியாய் இருப்பான்!
(அது போல்...)
           "நற்கூட்டணியை நாடாத/மக்களைப் பேணாத/ஊழல்பழியை அழிக்காத/அரசியல் 
           அறமில்லாத" கட்சி; மக்களுக்குக் கொடியத் தண்டனையாய் இருக்கும்!

0866.  காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
           பேணாமை பேணப் படும்

           விழியப்பன் விளக்கம்: ஆராய்ந்து அறியாத சினமும்/எப்போதும் குறையாத பேராசை - 
           இவற்றைக் கொண்டவனின் பகைமை, பகைவரால் விரும்பிப் பேணப்படும்!
(அது போல்...)
           ஆழ்ந்து உணராத கூட்டணி/எவற்றிலும் நீங்காத ஊழல் - இவற்றை செய்வோரின் எதிர்ப்பு, 
           எதிர்க்கட்சியால் போற்றி ஏற்கப்படும்!

0867.  கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
           மாணாத செய்வான் பகை

           விழியப்பன் விளக்கம்: நம்முடன் இருந்துகொண்டே, நாம் செய்யும் செயல்களுக்கு; 
           எதிர்வினை ஆற்றுவோரின் பகையை, எதுவொன்றையும் விலையாகக் கொடுத்தும் 
           பெறவேண்டும்!
(அது போல்...)
           மக்களுடன் இருந்துகொண்டே, மக்கள் விரும்பும் மாற்றத்திற்கு; எதிராகச் 
           செயல்படுவோரின் தோல்வியை; எதையும் இழப்பீடாகக் கொடுத்தும் நிர்ணயிக்கவேண்டும்!

0868.  குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
           இனனிலனாம் ஏமாப் புடைத்து

           விழியப்பன் விளக்கம்: நற்குணம் ஏதுமின்றி/பல்வேறு குற்றங்களைச் செய்யும் ஒருவன், 
           அனைத்து துணைகளையும் இழப்பான்; அதுவே, பகைவர்களின் வெற்றிக்கு துணை புரியும்!
(அது போல்...)
           நீர்ப்பாசனம் ஏதுமின்றி/பல்வகைக் குறைகளுடன் இருக்கும் நிலம், எல்லா வளங்களையும் 
           அழிக்கும்; அதுவே,  தொழிற்சாலைகளைப் பெருக்கி விவசாயத்தை அழிக்கும்!

0869.  செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
           அஞ்சும் பகைவர்ப் பெறின்

            விழியப்பன் விளக்கம்: அறம்சார் அறிவின்றி, அனைத்துக்கும் அச்சப்படும் பகைவர்கள் 
            வாய்ப்பின்; அவர்களை எதிர்ப்போர்க்கு, எல்லாவகை இன்பங்களும் விலகாமல்
            நிலைத்திருக்கும்!
(அது போல்...)
            தேர்தல் நெறியின்றி, அனைவருக்கும் பணமளிக்கும் வேட்பாளர்கள் இருப்பின்; தேர்தலை 
            நடத்துவோர்க்கு, அனைத்து குழப்பங்களும் தொடர்ந்து நிறைந்திருக்கும்!

0870.  கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
           ஒல்லானை ஒல்லா தொளி

           விழியப்பன் விளக்கம்: கல்லாதவனாய்/கோபமுடையவனாய்/முயற்சியின்றி பொருள் 
           சேர்ப்பவனாய்/எந்நாளும் பகையுணர்வு உடையவனாய் - இருக்கும் ஒருவனை, புகழ் 
           சேர்ந்திடாது!
(அது போல்...)
           திறமற்றதாய்/அராஜகமாய்/அன்பின்றி மக்களை வதைப்பதாய்/எல்லாவற்றிலும் ஊழல் 
           உடையதாய் - இருக்கும் ஓர்க்கட்சி, வரலாற்றில் நிலைத்திடாது!

குறள் எண்: 0870 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 087 - பகைமாட்சி; குறள் எண்: 0870}

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி

விழியப்பன் விளக்கம்: கல்லாதவனாய்/கோபமுடையவனாய்/முயற்சியின்றி பொருள் சேர்ப்பவனாய்/எந்நாளும் பகையுணர்வு உடையவனாய் - இருக்கும் ஒருவனை, புகழ் சேர்ந்திடாது!
(அது போல்...)
திறமற்றதாய்/அராஜகமாய்/அன்பின்றி மக்களை வதைப்பதாய்/எல்லாவற்றிலும் ஊழல் உடையதாய் - இருக்கும் ஓர்க்கட்சி, வரலாற்றில் நிலைத்திடாது!

திங்கள், டிசம்பர் 18, 2017

குறள் எண்: 0869 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 087 - பகைமாட்சி; குறள் எண்: 0869}

செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்

விழியப்பன் விளக்கம்: அறம்சார் அறிவின்றி, அனைத்துக்கும் அச்சப்படும் பகைவர்கள் வாய்ப்பின்; அவர்களை எதிர்ப்போர்க்கு, எல்லாவகை இன்பங்களும் விலகாமல் நிலைத்திருக்கும்!
(அது போல்...)
தேர்தல் நெறியின்றி, அனைவருக்கும் பணமளிக்கும் வேட்பாளர்கள் இருப்பின்; தேர்தலை நடத்துவோர்க்கு, அனைத்து குழப்பங்களும் தொடர்ந்து நிறைந்திருக்கும்!