(காதலை, காமத்தால் உணர்த்தலாம்! காமத்தை, காதலால் உணர்த்தமுடியாது!!)
காதலும், காமும்! இத்தலையங்கத்தை எழுதவேண்டும் என்று முடிவெடுத்து பலமாதங்கள் ஆகின்றது!! சில, மிகவும் ஆழமான கருத்துக்கள் கொண்ட தலையங்கங்கள் எழுதிய பின்னும் - இதை எழுத மட்டும் ஓர் இனம்புரியாத தயக்கமும், பயமும் கலந்து இருந்து வந்தது. இதற்கு முதற்காரணம், காமம் என்பதை ஏதோ ஒர்-தவறான விசயம் போன்று பார்க்கும் ஓர் சமுதாயத்தில் நாம் இருப்பதே. நாம் என்னதான் முற்போக்கு சிந்தனைகளை வளர்த்துக்கொன்டாலும் - இம்மாதிரி சில விசயங்களில் இன்னமும் வெளிப்படையாய் இல்லை. நான் சொல்ல வந்த விசயத்தை சரியாய் சொல்லி இருக்கிறேன் என்று நம்புகிறேன்; இல்லையெனில், என் பார்வையை சரி செய்யுங்கள். இங்கே நான் எடுத்துக்கொண்டிருக்கும் "காமம்" வரையறைக்கு உட்பட்ட ஓர் ஆணுக்கும்-பெண்ணுக்கும் இடையே நடக்கும் ஓர் விசயம்; அதற்கு திருமணம் ஆகியிருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை! ஆனால், அடுத்தவரின் கணவன்/மனைவி-யாய் இல்லாதிருத்தல் வேண்டும்!! பெண்ணுக்கு உடன்பாடு இல்லாது அடையப்பெறும் காமம் பற்றி நான் இங்கே விவரிக்கவில்லை - மனைவியே ஆனாலும், அது கற்பழிப்பிற்கு சமம்!!! அதனால் தான் "வரையறைக்கு உட்பட்ட" என்று குறிப்பிட்டேன். காமம் என்பதை ஆழப்-புரியாது அல்லது காமத்தை வெல்லாது - காதல் என்பது இருவருக்குள் உண்மையாய், உறுதியாய் இருக்க வாய்ப்பேயில்லை. இதைத்தான் என்னுடைய புதுக்கவிதை ஒன்றில் "காதலும், காமமும் கலக்கும் கலவை" முக்கியம் என்று குறிப்பிட்டேன்.
வெறும் காதல் மட்டுமே கொண்டு - காதலர்கள் வெற்றிபெற முடியாது என்பது என் அபிப்பிராயம்! காமம் அங்கே கலக்கவேண்டும்; அப்போது தான் காதல் நிரந்தரமாகும்!! இங்கே, காமம் என்றவுடன் "உச்சகட்டமான-நிகழ்வு" என்று தவறாய் எண்ணிவிடாதீர்கள்; அப்படி இருப்பினும் தவறில்லை!!! சாதாரண தழுவலில், சாதாரண பேச்சில், சாதாரண தொடுதலில், சாதாரண பார்வையில் - இப்படி எதில் வேண்டுமானாலும் - நம்மை கவர்ந்த பெண்ணிடம்/ஆணிடம் காமத்தை கலக்கமுடியும். "காதலாகி, காதலாகி..." என்ற தமிழ்த்திரைப்பாடலை - இத்தலையங்கத்தை படித்த பின் மீண்டுமோர்-முறை கேளுங்கள்; ஆயிரம அர்த்தங்கள் சொல்லும்; அதில் கூறியிருப்பவை அனைத்தும் காமத்துடன் தொடர்புடைய செயல்கள் - ஆனால், காதலை வெளிப்படுத்த/விளக்க கூறப்பட்டவை. கண்டிப்பாய், இந்த உணர்வு காதலி/மனைவி என்ற உறவிடத்தில் மட்டும் தான் கிடைக்கும். வேறு-விதமான பெண்களிடம் "கூடுதலாய்(கூட)" எளிதில் காமம் கிடைத்துவிடும்; ஆனால், "காதல்(சிறிதும்)" கிடைக்காது! கண்டிப்பாய், இங்கே "காதலுடன் கூடிய காமத்தை" விரும்பும்/வேண்டும் ஆண்-மக்களே அதிகம்!! இல்லையெனில், ஆண்களை விட அதிக எண்ணிக்கையிலல்லவா "விலைமாதர்கள்" இருக்கவேண்டும்? திருமணத்திற்கு முன் "காதல் தலைதூக்கி இருக்கவேண்டும்"; திருமணமான பின், "காமம் தலைதூக்கி இருக்கவேண்டும்" என்பது என் எண்ணம். ஆனால், இது முரண்பட்டு நடக்கும் போது தான் காதல், திருமண-வாழ்க்கை இவையிரண்டிலும் பிரச்சனைகள் பெரிதாகின்றன.
இங்கே, இயற்கையால் அல்லது இறைவனால் - இன்னுமொரு முரண்பாடான விசயம் நடக்கிறது! ஆணுக்கு காதல் என்பதை உணரத்தெரிந்த அளவிற்கு அதை உணர்த்த தெரிவதில்லை! பெண்ணுக்கு காமம் என்பதை உணர/அனுபவிக்க தெரிந்த அளவிற்கு அதை தேவையான நேரத்தில் பகிர்ந்தளிக்க தெரிவதில்லை!! ஆண், பெண் இருவரில் காதல் யாருக்கு அதிகம் என்ற போட்டி இருக்கலாம்!!! ஆனால், காமத்தில் அப்படி இருக்கக்கூடாது/இருக்கமுடியாது; காமம் என்பது கொடுப்பதுமல்ல; பெறுவதுமல்ல; அது பகிரப்படுவது! அதனாலேயே, அதில் இருவரின் மனமொத்த சம்மதமும் தேவைப்படுகிறது. காதலை - காமத்தை முன்னிறுத்தி பார்க்க ஆணுக்கும், காமத்தை - காதலை முன்னிறுத்தி பார்க்க பெண்ணுக்கும் இயற்கையா(ய்/ல்) விதிக்கப்பட்டிருக்கிறது. திருமணத்திற்கு முன், காதலர்கள் திருமணம் ஆகிவிட்டதை போன்றே பழகுகிறார்கள் - ஆனால், மேற்கூறிய காமம் மற்றும் காதல் இவையிரண்டின் முதன்மை (priority) ஆணுக்கும், பெண்ணுக்கும் வெவ்வேறாய் இருப்பதால் தான் பல பிரச்சனைகள் வருகிறது. திருமணம் ஆகாத இருவருக்குள் இப்பிரச்சனை வரும்போது - அது எளிதில்(தவறான வழியில்) தீர்க்கப்பட்டு விடுகிறது - அதவாது, பிரிந்துவிடுகின்றனர்! திருமணமான இருவருக்குள் இப்பிரச்சனை வரும்போது கடிந்துகொண்டு(தவறான வழியில்) ஒன்றாய் வாழ முயற்சிக்கின்றனர் - ஒன்று குழந்தையை முன்னிறுத்தி அல்லது குடும்பத்தை முன்னிறுத்தி!! ஆக, இரண்டு சூழலிலும் இது பெரும்பான்மையில் தவறாகத்தான் போகிறது!!!
திருமணமாகும் முன் - இப்பிரச்சனை வரும்போது, அவர்கள் பெரும்பாலும் பிரிந்துவிடுவதால் - "நீண்ட கால" அடிப்படையில் அதன் பின் பிரச்சனைகள் எழ பெரிதும் வாய்ப்பில்லை. ஆனால், ஏதேனும் ஓர் காரணத்திற்காய் ஒன்றுசேர்ந்து இருக்கும் திருமண-வாழ்க்கையில் தான் பெரிதும் பிரச்சனைகள் வருகின்றன! இயல்பிலேயே பெண்கள் "காமம் வேண்டும்" என்பதை நேரடியாய் கேட்காதவர்களாய் இருக்கிறார்கள்; பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வளர்க்கப்பட்டதால் கூட இருக்கலாம்! அல்லது, ஆண் தானே வருவான் என்பதால் கூட இருக்கலாம்!! அதனால்தானோ என்னவோ, பிரச்சனை என்று வரும்போது - முதலில், அவர்கள் காமத்தை மறுத்துவிடுகின்றனர்! அதன் விளைவுதான், பிரச்சனை என்றவுடன் பிறந்த-வீட்டிற்கு சென்று விடுவது - அது அவர்களின் பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை; ஆனால், காமம் என்பது அவர்களுக்கு இரண்டாம்-பட்சம் என்பதால் தான் அதை செய்கிறார்கள்!!! ஒருவேளை, காமம் முதன்மையானது என்பதால் தான் - ஆண் தன்னுடைய பிறந்த-வீட்டிற்கு செல்வதில்லையோ???!!! இங்கே, "மனைவி அமைவதெல்லாம்..." என்ற பாடல் நினைவிற்கு வருகிறது; அதில் ஓர் வரி வரும் "கணவனின் துணையோடு தானே, காமத்தை வென்றாக வேண்டும்..." என்று! ஆனால், இந்த வரி "மனைவியின் துணையிருந்தால் தானே, காமக்கழிவு வெளியாதல் கூடும்" என்றிருந்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. மேற்கூறிய ஒன்றை மீண்டும் கூற விழைகிறேன் - காமம் என்பது பகிரப்படுவது!!!
காதல் சார்ந்த பிரச்சனை எனில், இங்கே முதலில் சொதப்புவது ஆண்கள் தான்! காமம் கிடைக்கவில்லை எனின், அவனுக்கு முன்பே-தெரிந்த அளவில் கூட காதலை வெளிப்படுத்துவதில்லை!! வாதத்திற்காய் சொல்லவில்லை - அவனுக்கென்று ஓர் பெண் இருக்கும்போது (திருமணமான பின்னோ அல்லது திருமணத்திற்கு முன்னோ) - ஓர் ஆண் காமத்தை வேறொரு பெண்ணிடம் தேடி செல்வதில்லை; அவனுக்கு அந்த தைரியமும் குறைவு!! காமம் பகிரப்படாததால், கோபம் அடைகிறான். ஆணுடைய கோபம், பிரச்சனையை பெரிதாக்கிவிடுகிறது; அவனுடைய கவலை மேலும் விரிவடைகிறது! ஆனால், இங்கே கவனிக்கவேண்டியது - காமத்துடன் சேர்ந்து, காதலும் குறைகிறதென்ற பேருண்மை!!! காதல்(உம்) குறைந்தவுடன், அந்த உறவு ஒன்றாய் சேர்ந்து இருப்பினும் முறிந்ததற்கு சமம்! இங்கே ஆண்களை 4 வகைப்படுத்தலாம்: 1. வெகு-சிலரே எனினும், காமத்தை - வன்முறையைக் கொண்டாவது அடைபவர்; 2. வேறு வழியில்லை என்று இருப்பவர்; 3. வேறொரு பெண் மூலம் அடைபவர்; 4. 2 அல்லது 3-ல் எதை தேர்ந்தெடுப்பது என்று அல்லாடுபவர். சிறிதும் யோசிக்காது, என்னால் ஒன்று சொல்லமுடியும் - ஓர் 50 அகவையை தாண்டிய பிறகு - காமத்தை பின்னிறுத்தி பார்ப்பது இருவருக்கும் சாத்தியம்! அது இயல்பும் கூட!! ஆனால், 50 அகவைக்கு முன் எக்காரணத்திற்காகவும் காமத்தை மறுப்பது - இந்த உறவுகளுக்கு நல்லதல்ல!!! காதலை, காமத்தால் உணர்த்தலாம்; காமத்தை, காதலால் உணர்த்தமுடியாது. ஏனெனில், காதல் என்பது உணர்வு; ஆனால், காமம் என்பது உணர்ச்சி! மேலும்...
காதலின் வெற்றி - காமத்தை வெல்வதிலுள்ளது!!!
பின்குறிப்பு: முதலில், தலைப்பை "காமமும், காதலும்" என்று தான் யோசித்திருந்தேன்! தலையங்கத்தை எழுதும்போது தான் - முதலில், காமம் என்றிருப்பின் தவறாய் போய்விடுமோ என்றோர் அச்சம்!! அதனால், காதல் முதலில் வந்துவிட்டது; உண்மைதானே, காதல் இல்லையெனில் - அங்கே, காமம் உணர்ச்சியாய் இருப்பதில்லை - மாறாய், "வெறியாய்" இருக்கும்!!!
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்கு