ஞாயிறு, ஆகஸ்ட் 11, 2013

சமையலும், ஆணாதிக்கமும்!!!

          கடந்த முறை, என் மரு-பெற்றோர் வீட்டில் நான் "பிரியாணி" சமைத்த போது முதல் முறையாய் - என்மகள் "அப்பா, உங்களுக்கு சமைக்க தெரியுமா? நீங்களா சமைக்க போறீங்க??" என்று அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்துடன் கேட்டாள்! எனக்கும் அதிர்ச்சி தான் அவளின் கேள்வி!! அதன்பின் 3 சமயங்களில் அவள் அதே கேள்வியை கேட்டாள்!!! அவள், இறுதியாய் அவ்வாறு கேட்டது; இங்கே அபு-தாபி வந்திருந்த போது; அப்போது, என்னவள் "ஏன் அவர் சமைத்தால் என்ன? எல்லோரும் கலந்து தான் செய்யவேண்டும்" என்றாள். என்னவள் அவ்வாறு கூறியதில் எந்த தவறும் இல்லை! ஆனால், அவள் கூறிய தோரணம் என்னை திகிலடையச் செய்தது. இந்நிகழ்வு பற்றி இதுவரை என்னவளுடன் விவாதித்ததில்லை; அது, தேவையுமில்லை! ஆனால், என்னுள் என்மகளின் கேள்வி பெருத்த ஆலோசனையை உருவாக்கியது!! ஓர் 3 வயது பெண்குழந்தை அப்படி கேட்க காரணம் என்னவென்று யோசிக்க ஆரம்பித்தேன். அந்த கேள்விக்கும், ஆணாதிக்கத்திற்கும் - ஆணாதிக்கத்தை எதிர்க்கும் பெண்-வர்க்கத்திற்கும் தொடர்பு உள்ளதை போல் தோன்றியது. இது பற்றிய ஓர் தலையங்கத்தை எழுதவேண்டும் என முடிவெடுத்தேன்; இந்த தொடர்பை பற்றி என்னுடைய பார்வையை பதிவு செய்யவேண்டும் என்று எண்ணினேன். என்மகள் அந்த கேள்வியை திரும்ப-திரும்ப கேட்க, என்ன காரணம் என்று முதலில் யோசிக்க ஆரம்பித்தேன். அதற்கு எனக்கு கிடைத்த விடை - அவள் வளரும்  சூழலும், அவள் காணும் நடைமுறையும் தான் காரணம் என்று புரிந்தது. 

        ஆம்! என் பெற்றோர் வீடு, என் மரு-பெற்றோர் வீடு, என் தமையன் வீடு, என் தமக்கை வீடு என்று எல்லா வீடுகளிலும் - பெண் எனும் உறவே சமைப்பதை காண்கிறாள். அவள் எந்த ஆணும் சமைப்பதை கண்டதில்லை; எனவே, அவளுக்கு-அவளின் தந்தை சமைப்பது புதியதாய்/புதிராய் தெரிந்திருக்கிறது. இங்கே அவள் சந்தித்த வீடுகளை - இரண்டாய் பிரித்து பார்க்க எண்ணுகிறேன்; என் பெற்றோர் வீடும், என் தமக்கை வீடும் ஓர் பிரிவு என்று வைத்துக்கொள்வோம்! என் மரு-பெற்றோர் வீடும், என் தமையன் வீடும் மற்றோர் பிரிவு! காரணம்; என் அம்மாவும், தமக்கையும் வேலைக்கு செல்லவில்லை - இல்லத்து-மனைவிகள். என் மரு-தாயும், என் மரு-தமக்கையும்(அண்ணி) வேலைக்கு செல்பவர்கள். பெண்கள், பொருளாதார நெருக்கடி காரணமாய் அல்லது விருப்பம் காரணமாய் வேலைக்கு செல்ல ஆரம்பித்த பிறகுதான் - இம்மாதிரியான பிரச்சனைகள் தோன்ற ஆரம்பித்தன என்பதால் தான் இரண்டு பிரிவுகளாய் வகுத்துள்ளேன். பெண்கள் வேலைக்கு செல்லாத/செல்லமுடியாத காலகட்டத்தில் - வீட்டில் இருந்துகொண்டு எல்லா வீட்டு வேலைகளையும் செய்தனர்; ஆண் பொருளீட்டும் வேலையை மட்டும் கவனிக்க ஆரம்பித்தான் என்பது தான் முதலில் இயல்பாய் இருந்திருக்கிறது; நானும், அதை வாய்ப்பு கிடைக்கும்போது கூறியிருக்கிறேன். இவையெல்லாம், என்மகளுக்கு முழுதாய் புரிந்திருக்க வாய்ப்பில்லை எனினும் - அவளின் பார்வையில் எல்லா ஆண்களும் (அல்லது அந்தந்த வீட்டு தந்தைகள்) சமைக்கவில்லை; ஏன் என்னப்பன் (ஓர் ஆண்) சமைக்கவேண்டும் என்று தோன்றியிருக்கலாம். 

         ஏனெனில், கண்டிப்பாய் என்மகளுக்கு ஆண், பெண் - பாலின வேறுபாடு தெரியும்; அதை அவளின் பள்ளியே கூட சொல்லிக் கொடுத்திருக்கிறது. அவளும், வீட்டுக்கு வந்தவுடன் நீ-ஆண், நீ-பெண் என்று வேறுபடுத்தி கூறியிருக்கிறாள். எனவே, அவளின் பார்வையில் - ஆண் சமைப்பதில்லை/சமைக்க-கூடாது      என்று புரிந்து கொண்டிருக்கிறாள்; எனவே தான் அந்த கேள்வி வந்தது! இதை நம்முடைய பார்வையில் இருந்து பார்த்தால் - வேலைக்கு செல்லும்/செல்லாத பெண்கள் இருக்கும் இரண்டு வீடுகளிலும், பெண்(தாய்) தான் சமைக்கிறாள் என்று எடுத்துக்கொள்ளலாம். என் மரு-தமக்கை கூட பரவாயில்லை; அவர் பள்ளி-ஆசிரியை; பகல் நேர வேலை மட்டும்தான். ஆனால், என் மரு-தாய் தலைமை செவிலியர் (Head Nurse); 3 சுழற்சி (shift) முறைகளிலும் வேலை செய்பவர். வீட்டில் பணிப்பெண் இருந்தால் கூட, அவர் அதிகாலை 4 அல்லது 5 மணிக்கு மேல் தூங்கி நான் பார்த்ததே இல்லை! என்னவளிடம் மட்டுமல்ல; என் மரு-தாயிடமே இது பற்றி உயர்வாய் கூறியதுண்டு - என்னை மிகவும் பிரம்மிக்கவைத்த  இல்லத்தரசி அவர்!!! அவருக்கு சமையலறையில்/வீட்டில் பெரும்பான்மையான உதவிகள் செய்பவர் - என்னவளின் தாய் மாமா. அவர் ஆண்தானே; ஆனால், வேலை செய்கிறாரே என்பதை என்மகள் உணரவில்லை போலும்! ஒருவேளை, அவள் அந்தந்த வீட்டில் தந்தையாய் இருக்கும் ஆணை மட்டும் தான் அப்படி பார்த்தாலோ? எது, எப்படியோ - கண்டிப்பாய் என்மகளின் கேள்விக்கும் ஆணாதிக்கத்திற்கும் ஓர் தொடர்பு இருப்பது நிச்சயம் என்றுணர்ந்தேன்.

          இங்கே, ஆண்களுக்கு நான் சொல்ல விரும்புவது: வேலைக்கு செல்லும் பெண்களோ அல்லது வீட்டில் இருக்கும் பெண்களோ - அவர்களுக்கு வீட்டு வேளைகளில் உதவியாய் இருக்கவேண்டும் என்பதே! என்மகள் பார்த்த இந்த தருணங்களில்தான் நான் வேலை செய்தேன் என்பதில்லை; என்மகள் என்னுடன் இருந்தது - அவளின் ஒன்றரை வயது வரைதான். எனவே-அவளுக்கு, நான் என்னென விதத்தில் சமைப்பேன்; எந்தெந்த வீட்டு வேலைகளை செய்வேன் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லாது போயிற்று. அதே போல், திருமணமாகி என்னவள் என்னுடன் இருந்தது - 3 ஆண்டுகள் மட்டுமே; அதன் பின்னர் அவர்கள் இருவரும் என் மரு-பெற்றோர் வீட்டில் உள்ளனர். அந்த 3 ஆண்டுகளில் - 95 %-க்கு மேல் காலையில் எழுந்து சுவைநீர் கலப்பது, என்மகள் பிறந்த பின் அவளுக்கு பால் காய்ச்சுவது, பாலுடன் கலந்த உணவு தயார் செய்வது என்பது போன்ற வேலைகளை நான் தான் செய்வேன் - பின்னர் தான் என்னவளை எழுப்புவேன். மற்ற வீட்டு வேலைகளை இருவரும் பகிர்ந்தே செய்துள்ளோம். இது என்மகளுக்கு தெரியாமல் போயிற்று; ஆனால், என்னவளுக்கு தெரியும்!! இவைகளை என் பெருமை-கூறிட கூறவில்லை என்பது "அடுத்த-பத்தியை" படிக்கும்போது புரியும். என்னை விட அதிகமாய் என்னுடைய மரு-தமையன் என் தமக்கைக்கு செய்வார்/செய்துகொண்டிருக்கிறார். இதையும், என்மகள் கவனிக்க அவளுக்கு "போதிய-வாய்ப்பு" கிடைக்கவில்லை. ஆக, மேற்கூறிய இரண்டு  பிரிவுகளை இப்போதைய தலைமுறையுடன் ஒப்பிடும்போது பின்வருவதை புரிந்துகொள்ளலாம். 

    ஆணாதிக்கம் என்பது மாறியிருக்கிறது, என்பதே அந்த புரிதல்! என்னுடைய பெற்றோர்/மரு-பெற்றோர் தலைமுறையில் - வேலைக்கு செல்லும்/செல்லாத பெண்கள் - இரண்டு வீடுகளிலும் வீட்டு வேலைகளை அவர்களேதான் செய்தார்கள்/செய்கிறார்கள். இப்போதைய தலைமுறையில் - இரண்டு வீடுகளிலும் (நான் மற்றும் என் மரு-தமையன் போன்று) பெரும்பான்மையான ஆண்கள் வீட்டு-வேலைகளில் உதவியாய் இருக்கிறார்கள்! அதவாது, ஆணாதிக்கம் என்ற திமிர்/அகம்பாவம் மாறி, அழியத் துவங்கி இருக்கிறது. ஆணாதிக்கத்தின் பிடியில் சிக்கியிருந்த பெண்களின் வரலாறு மிக-நீண்டது; அதிலிருந்து அவர்கள் மீண்டு வர இன்னும் பல-தலைமுறைகள் வேண்டும்; நாம் இடைப்பட்ட காலத்தில் இருக்கிறோம் என்று முன்பே கூறி இருக்கிறேன். இந்த-தலைமுறை ஆண்கள் பெரும்பாலானோர் வீட்டு வேலைகளில் உதவியாய் இருக்கின்றனர்; ஆனால், அவர்கள் முழுவதுமாய் மாற அல்லது முழுவதுமாய் உதவிட - பெண்கள், பொறுமை காத்திட வேண்டும்! என்னவளுக்கு நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை! என்மகளை கருவறையில் சுமந்திருந்தபோது - ஓர் அதிகாலை எழுந்து மிகக்கடுமையாய் "இன்னுமா சுவை-நீர் போடவில்லை? அப்படி என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்??" என்றாள்! அவளின் உடலும், மனமும் சோர்ந்திருந்த காலமது என்பது புரிந்தாலும் - எனக்கு செய்வதறியா கோபம் வந்தது உண்மை! ஆனால், அதை இன்றுவரை அவளிடம் கூறியதில்லை!! இம்மாதிரி தருணங்களை - இருவரும் - எதிர்கொள்வது மிகவும் முக்கியம்!!! 

          என்னவளோ, என்-தமக்கையோ, என் மரு-தமக்கையோ, என் மரு-தாயோ; ஏன், என் தாயே-கூட - அவருடைய தந்தை ஏன்; அவரின் தாய்க்கு உதவியாய் இல்லை என்று கேட்டதில்லை/கேட்பதில்லை! இந்த உறவுகளில், எவரேனும் ஒருவரிடம் "உங்கள் தந்தை, உங்களின் தாய்க்கு உதவியாய் இல்லையே?" என்று கேளுங்கள்! உடனே, "எங்கப்பா வெளியில் சென்று அனைத்து வேலைகளையும் செய்கிறார்; செய்துவிட்டு, மிகுந்த-அயர்ச்சியுடன் வருகிறார்..." என்று சொல்லிக்கொண்டே போவார்கள்!! என்னவோ, இவர்களின் கணவன்கள் மட்டும், "காலை முதல், மாலை வரை..." ஊர் சுற்றிவிட்டு; மாதமானதும் "சம்பளத்தை... களவாடிக்கொண்டு வருவதைப்போல்" கூறுவர்!! ஆணாதிக்கத்திற்கு எதிராக போர்க்கொடி பிடிக்கும் அனைத்து பெண்களும்; அதை செய்வது "தன்னுடைய கணவன் மட்டுமே" என்றெண்ணுவதாய் படுகிறது. இதை, அவரவர் தந்தையிடமும் எதிர்பார்த்(திருந்)தால் - ஆணாதிக்கத்தின் தடமே மறைந்திடும்!  அதேபோல்தான், என்மகளும்; அவள்-தந்தை சமைப்பது தவறு என்பது போல் பார்க்கிறாள்! மற்றபெண்களின் தந்தை அவர்களுக்கு எவ்வளவு முக்கியமோ; அதற்கு சற்றும் குறையாத(ஏன் மிகுந்தே கூட) முக்கியத்துவம் என்மகள் போன்ற குழந்தைகளுக்கும் - அவர்களின் தந்தையிடம் இருக்கும் - என்பதை உணரவேண்டும். அக்குழந்தைக்கு பொறுமையும், நிதானமும் கொண்டு வரலாறு-மொத்தத்தையும் விளக்கிட வேண்டும்! ஏனெனில், ஆணாதிக்கத்தை முற்றிலும் ஒழிப்பது என்பது; உடனடி-உணவு (Instant Food) அல்ல. மாறாய்...

அது பாரம்பரிய-உணவு; நிதானமாய் தான் (த/தா)யாராகும்!!!

பின்குறிப்பு: சமையல் மற்றும் வீட்டு-வேலை இரண்டையும் உதாரணத்திற்காய் தான் எடுத்துக்கொண்டேன்! அதே போல், என்மகளின் கேள்வி சமையல் குறித்ததாய் மட்டும் நின்றுவிடாது!! அவள், வளரவளர - அவளது கேள்வியின் பரிமாணங்களும் வளரும்; அவையனைத்தையும் - இதே அடிப்படையில் - எதிர்கொள்ளவேண்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக