ஞாயிறு, அக்டோபர் 26, 2014

பலரும் உணராத "கர்ப்பப்-பைகள்"!!!



         சில வாரங்களுக்கு முன் வாட்ஸ்-ஆப் "குழு உரையாடலில்" நண்பன் ஒருவன் நாமே, நமக்கு துணை என்பதான தன்னம்பிக்கை பற்றிய ஒரு காணொளியை பகிர்ந்து இருந்தான். நல்ல செய்தி தான்! ஆனால், எனக்கு ஒரு விசித்திர எண்ணம் உதித்தது; அதனால், அந்த காணொளியை "இசையை அனைத்து(Mute) விட்டு" பார்த்தேன். என்ன ஒரு ஆச்சர்ய-அதிர்ச்சி! அது ஒரு சாதாரண தகவல் தான். அதில் வந்த வாசகங்கள், என்னைப் போன்ற வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் கூட, அடிக்கடி எழுதுவது தான். ஆனால், அது-போன்ற பின்னணி இசையால் அவை "பூதாகரமாய்" தோன்றுகின்றன! அந்த காணொளியை தொடர்ந்து சென்ற வாரம், அதே போன்று இன்னுமோர் காணொளி பகிரப்பட்டது. அதன் பின்னர் தான், என் 2 நட்பு குழுவில் அந்த காணொளியை "இசை"இல்லாது பார்க்க சொன்னேன். அவர்களுக்கு, சட்டென்று புரியவில்லை; சிறிது விளக்கம் கொடுத்தேன். என்ன அதிசயம்? என் பரபரப்பு அவர்களையும் சூழ்ந்து கொண்டது.

        நீங்களும் முயன்று பாருங்களேன்! ஒரு குழுவில் இருக்கும் நட்பு ஒருவன் "நான் ஒரு பயங்கர பேய் படத்தை, அப்படி பார்த்தேன்! பயங்கர காமெடியாய் இருந்தது!!" என்றான் - அது ஒரு பார்வை. இன்னொரு குழுவில் இருந்து வேறொரு நண்பன் "மேலிருந்து விழும் அருவியைத்தான் நாம் அதிசயித்து பார்ப்போம்! ஆனால், அதை தாங்கி/தூக்கி வந்து கொடுக்கும் மலையைப் பற்றி நாம் நினைப்பதில்லை!!" - நீ சொன்னது போல் அந்த "இசையை"நீக்கிப் பார்த்ததில், இது ஒரு தத்துவம் போல் எனக்கு தோன்றியது என்று இன்னுமோர் பரிமாணத்தை கொடுத்தான். அவனே தொடர்ந்து, தான் ஒரு புத்தகம் எழுதப் போவதாயும்; அதன் கரு இதை மையப்படுத்தி இருக்கும் என்றும் சொன்னான்! எனக்கு பெருத்த மகிழ்ச்சி. என்னுடைய பார்வை, ஒரேயொரு முறை நான் சொன்னதும், என் நட்புகளை எப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது என்ற வியப்பு. அது தானே, என் (எழுத்தின்)  நோக்கமும்?! - நான் பார்க்கும் என் பார்வையை பலரையும் கொண்டு சேர்ப்பது!

        என்னுடைய பார்வை, வழக்கம் போல் வாழ்க்கையுடன் இது எப்படி ஒன்றிப்போகிறது என்பதாய் தான் இருந்தது. ஒரு மரத்தை நாம் பிரம்மித்து பார்ப்பது போல், அதை "நெடுங்காலமாய்" தாங்கிக்கொண்டு அதற்கு உயிர் கொடுக்கும் "வெளியே தெரியாத" வேரைப்பற்றி பெரிதாய் ஆவல் கொள்வதில்லை. அதுபோல், "வேராய்" இருந்து நம்மை வளர்த்து விட்டு; இன்று "வேறாய்" நிற்கும் பலரைப் பற்றி நாம் நினைப்பதே இல்லை! என்ற உண்மையே எனக்கு முதலில் உதித்தது! இதை, தத்துவமாய் பலரும் பார்க்கக்கூடும்! நான் இதை தத்துவம் என்ற விதத்தில் சொல்லவில்லை; அப்படி தத்துவமாய் தெரிந்தால், எனக்கு பெருத்த சந்தோசமே! என் பார்வை... பலரையும் சென்று விசாலம் அடையவேண்டும் என்பதே என் தலையான நோக்கம். நமக்கு வேராய் இருந்தவர்களை நீக்கிவிட்டு பார்த்தால், நாம் "ஒன்றுமே இல்லை!" என்பது நிதர்சனமாய் தெரியும். அதைத்தான், என் நண்பன் சொன்ன "இசை நீக்கிய" பயங்கர-பேய் படம் உணர்த்தும் உண்மை.

         அம்மாதிரி அவ்வாப்போது தோன்றியதால் தான் "என் தமிழுக்கு வித்திட்டவர்", "சிறந்த கணவன்  சிறந்த தந்தை", "என் மருதமையன்" போன்ற தலையங்கங்கள் எழுதப்பட்டன. என்னால், என்னை "அவர்களோடு" இணைத்தும்/பிரித்தும் பார்த்து; என் சுயம் எது? என்னில் அவர்களின் பங்கு என்ன?? என்பதை உணர முடிந்ததால் தான் "தன்னம்பிக்கை" பற்றிய ஒரு காணொளியைப் பார்த்தவுடன், என்னால் இசையை-விலக்கி வேறுபடுத்தி பார்க்க முடிந்தது. நமக்கே, நம்மை "வேராய்" இருந்து வளர்த்து விட்டவர்களை நினைத்து பார்க்க முடியவில்லை எனில், நம் சுற்றம் மட்டும் நம்மை வளர்த்து விட்டவர்களை கண்டறிந்து; மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, எப்படி நியாயமாகும்? அவர்கள், நம்மையும் போலவே, நாம் இப்போதிருக்கும் நிலையை மட்டுமே பார்க்கும் நிலையில் இருப்போர். இதற்கெல்லாம் உச்சமாய், என்னை இந்த உலகில் இருந்தே விலக்கி பார்த்ததே "மரணத்திற்கு பிறகு, என்ன?" என்ற தலையங்கம். இப்படிப்பட்டவர்கள் எல்லோரும்; "பலரும் உணராத கர்ப்பப்-பைகள்!".

       எனவே, அந்த கர்ப்பப்-பைகளை கண்டறிந்து; நினைவுகூர்ந்து பாராட்ட வேண்டும். அவர்களுக்கு நம்மால் இயன்றதை மறுக்காமல்/மறக்காமல் செய்யவேண்டும்! அதையும் "நம் கடமையாய் "செய்திடல் மிகவும் அவசியம்! அதில், நம் தற்பெருமைக்கோ?! புகழுக்கோ?! வேலையே இல்லை. அது "செய்நன்றி உணர்தல்"; அது "கடனடைத்தல்"! அதை, நான் முன்பே சொன்ன "கடன் அடைத்தான் - நெஞ்சம் போல்" எண்ணிப் பார்த்தல் அவசியம். அது யாராய் வேண்டுமானாலும் இருக்கட்டும்! எத்தனை சிறிய வேராய்(உதவியாய்) கூட இருக்கட்டும். அந்த சிறு-வேரும் நம் வளர்ச்சியில் பங்கு வகித்தது என்பதை உணர்தல் வேண்டும். அந்த விதத்தில், நான் என் கடமையை எள்ளளவும் குறைவில்லாது செய்திருக்கிறேன் என்ற நிறைவு எனக்கு எப்போதும் உண்டு. இன்னும் அது போல், சிலருக்கு செய்ய முடியாத "கடனாளியாய்" என் சூழல் கட்டிப் என்னை போட்டிருப்பதும் அறிவேன்! ஆனால், எவரையும் நான் "நினைக்க"மறந்ததில்லை. இப்போதாவது, உங்களை..

"வேராய்" இருந்து வளர்த்தவர்களை நினைத்து; "வேறாய்"உங்களைப் பாருங்கள்!!!

ROAR - ஒரு "நினைவு" முன்னோட்டம்...



     திரு. பத்ரசாமி சின்னசாமி அண்ணாச்சி அவர்களின் "ஆட்கொல்லி புலி வேட்டை" பற்றிய கவிதையை பலரும் படித்திருப்பீர்! 25.10.2014 அன்று இங்கே அபுதாபியில் கத்தி திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்த போது; இடைவேளையில் "Roar" என்ற ஹிந்தி திரைப்படத்தின் "முன்னோட்டம்" காண நேர்ந்தது. அது அண்ணாச்சியுடன் தொடர்பு உள்ளதால், அவருக்கு இந்த "திறந்த பதிவை" முக-நூலில் பகிர்ந்தேன்! அது உங்களுக்கே இங்கே...

*******

அண்ணாச்சி!

Roar என்ற ஹிந்தி திரைப்படத்தின் முன்னோட்டத்தை கத்தி திரைப்படத்தின் இடைவேளையின் போது பார்த்தேன். கதைக்களம் - நீங்கள் செய்திட்ட அதே "ஆட்கொல்லி"புலி வேட்டை! உடனே, உங்களிடம் கீழ்வருவனவற்றை பகிரவேண்டும் என்று தோன்றியது:
  • உங்களுக்கு கிடைக்காத ஒரு வாய்ப்பு படத்தில்: அதாவது, புலியை வேட்டையாடுவது தவறென்று வாதிட ஒரு அழகுப் பெண்மணி; ஹீரோவிடம் "அழகாய்"சண்டை செய்கிறார்! உங்கள் அனுபவத்திற்கு, சண்டையையே அழகு என்று சொல்லிவிட்ட பின், அந்த பெண்ணைப் பற்றி விவரிக்க ஏதும் இல்லை! ;) ம்ம்ம்... என்ன செய்வது? நீங்கள் சாதாரண "நிஜ"ஹீரோ!! 
  • என்னைப்பொருத்த அளவில், சமீபத்தில் இப்படி ஒரு வேட்டை நிகழ்த்தியது; நீங்களும் உங்கள் குழுவும் தான். இம்மாதிரி ஒரு படம் எடுக்கப்பட்டு இருப்பது உங்களுக்கோ/அல்லது வேறு வன-இலாக்காவிற்கோ தெரியப் படுத்தப்பட்டு இருக்கிறதா?
  • அதில் ஒரு சீன்! அந்த ஆட்கொல்லி புலி ஒருவரை வாயில் கவ்விக்கொண்டு நெடிய மரத்தின் பாதி அளவிற்கு பாய்ந்து அதில் அந்த நபரை மோதுகிறது. "பாலிவுட்" படமாயிற்றே?! ஹீரோ சும்மா இருப்பாரா??!! ஒரு காட்சியில் "பாய்ந்து வரும் புலியை, முன்னங்கால்கள் இரண்டையும் தன் கைகளால் பிடித்து; ச்சும்மா, ஒரு சுழற்று-சுழற்றி வீசி எறிகிறார்!!!". ம்ம்ம்... நீங்க என்னடான்னா "பொங்கல் பண்டிகையையும் மறந்துவிட்டு; பலரையும் உங்களோடு வைத்துக்கொண்டு" 10 நாட்கள் போராடி இருக்கிறீர்கள்! ;) இருப்பினும், இறுதியில் உங்களுக்கு கெட்ட பெயர்! :(
  • அந்த காடும், காட்டில் சுற்றும் ஹீரோ, மேற்கூறிய பெண்ணும் அபார அழகுடன் (சுற்றிக் கொண்டு) இருக்கிறார்கள்! ம்ம்ம்... நீங்கள் காட்டில் இருந்துகொண்டே அனுப்பிய புகைப்படங்கள் என் மனக்கண்ணில் "உங்கள் விழுப்புண்களோடு" வந்து சென்றன. :(
  • ஒரு 2 நிமிடத்திற்கும் குறைவான முன்னோட்டம் பார்த்தே, எனக்கு இவ்வளவு தோன்றி இருக்கிறதே?! படத்தில் என்ன இருக்கும் என்று ஆவல் எழுந்தது. அக்டோபர் 31-ஆம் தேதி இங்கு வெளியாகிறதாம். 
  • "ஹிந்தி தெரியாததால்" மிகவும் தேர்வு செய்த படங்களை மட்டும் தான் எப்போதாவது பார்ப்பேன்! ஆனால், இந்த கதை தான் உங்கள் மூலம் ஏற்கனவே தெரியுமே?! அதனால்... உங்களுக்காகவே இந்த படத்தை பார்க்கலாம் என்று இருக்கிறேன்.
முன்குறிப்பு: படம் பார்த்துவிட்டு, இன்னும் பிற கேள்விகளை/கருத்துகளை பதிந்து உங்களை "டேக்" செய்வேன் என்று இப்போதே எச்சரிக்கை செய்கிறேன்!! ;) முடிந்தால், நீங்களும் பாருங்களேன்! நம் விவாதத்திற்கு ஏதுவாய் இருக்கும்! ;)     

திருமண வாழ்க்கை என்பது...



திருமண வாழ்க்கை என்பது...

அடங்க முடிந்தோர்க்கு "அமர்க்களம்"!
புரிய முயல்வோர்க்கு "போர்க்களம்"!!

- இது ஆண்/பெண் இருபாலருக்கும் பொருந்தும்!!!

வெறிச்சோடி போனடதா வாழ்க்கை!!!



சதுரங்க வேட்டை என்ற படத்தில் வரும் "வெறிச்சோடி போனடதா வாழ்க்கை!" என்ற பாடலை எத்தனை பேர் வியந்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை!  எனக்கும், படம் பார்த்த போது, அந்த பாடல் அத்தனை அழுத்தமாய் மனதில் பதியவில்லை.

பின்னர் மீண்டும், மீண்டும் அந்த பாடலைக் கேட்டபோது தான், எத்தனை வியப்பான பாடல் என்று புரிந்தது. குறிப்பிட்டு சொல்ல விரும்புவது பின்வரும் வரிகள்:

"ஒனக்கு மட்டும் சொந்தம் இல்லை ஊரச்சுற்றும் காசு!
அது வேசிப்போல வந்து வந்து வெலகிப்போகும் தூசு!!"

ஒரு சராசரி மனிதனின் ஆசைகளையும், வாழ்க்கை மேல் வரும் சராசரி வெறுப்பையும்; மிக எளிமையான வார்த்தைகளைக் கொண்டு "சரமாரியாய்" விளக்கி இருக்கும் பாடல். பாடலின் வரிகளுக்கு - சற்றும் குறைவில்லாத குரலும், இராகமும் - பாடலுக்கு பெருத்த வலு சேர்த்திருக்கிறது.

"வியப்பானவை" என்ற என்னுடைய பாடல் தொகுப்பில் சமீபத்தில் இணைந்திருக்கும் பாடல்! 

நம் எண்ணமும் செயலும்...



பெரும்பான்மையில், நம்மை சுற்றியுள்ளவர்களின் எண்ணமும்/ செயலும் தான் நம்முடைய எண்ணங்களையும்/செயல்களையும் தீர்மானிக்கின்றன. நல்லதோ/கெட்டதோ - நம்மளவில் அது சரியென்ற எண்ணத்துடனே நாமும் "தொடர்ந்து" பயணிக்கிறோம். 

தனித்து பயணிக்கும்போது பெரிய பாதிப்பு இருப்பதில்லை!
சேர்ந்து பயணிக்கவேண்டிய உறவுகளில் தான் பல சிக்கல்கள்!!

காகிதக் கப்பல்...



காகிதக் கப்பல், கடலுல கவுந்துடுச்சா?! காதலில் தோத்துட்டு கன்னத்துல கைய வச்சுட்டான்!! ...

"மெட்ராஸ்" தமிழ் திரைப்படத்தில் வரும் பாடல்!

யோவ் பாலா!
நீர் சாதா கானா இல்லையா!!
"தத்துவ"கானா!!!

கத்தி (2014)



      நேற்று (25.10.2014) அபுதாபியில் உள்ள சஃபீர்-மால் திரையரங்கில் 13:00 மணி காட்சிக்கான  நுழைவுச் சீட்டு வாங்கிவிட்டு; அருகே இருக்கும் "சங்கீதா"வில் ஃபுல்-மீல்ஸ் அடித்துவிட்டு திரையரங்கினுள் நுழைந்து அமர்ந்தேன். சரியாய் 13:00 மணிக்கு காட்சி துவங்கியது. மிகச் சிறந்த படம் இல்லை என்றாலும்; விஜய் படங்களில் ஒரு மாறுபட்ட படம். ஆனால், இன்னமும் விஜய் படங்களில் எனக்கு பிடித்த படம் என்றால் அது "துப்பாக்கி" தான்! துப்பாக்கி தான் இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற என் ஆவலை; அதிலும், திரையரங்கில் பார்க்கவேண்டும் என்ற என்னத்தை உருவாக்கியது. முருகதாஸ் மேலும், அப்படியொரு நம்பிக்கை! நான் மிகவும் எதிர்பார்த்துவிட்டேன் போல?! ஆனால், அவர்கள் அளவில் சரியாய் செய்திருக்கிறார்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை! 

    என் பார்வையை பகிர்வதற்கு முன், பெரும்பான்மையான விமர்சனங்கள் சொல்லும் ஒரு குற்றச்சாட்டு: "கோலா"பற்றி விளம்பரம் செய்த விஜய்-க்கு இந்த படத்தில் நடிக்க தகுதியில்லை என்பது!! விஜய் என்பவர் ஒரு நடிகர். இரண்டிலும், அவர் நடித்திருக்கிறார். "கோலா"விளம்பரம் தவறென்றால் அதை ஒதுக்கி விடுங்கள்! நல்லதை எடுத்துக்கொள்ளுங்கள். ஏன்... மதுபான விளம்பரங்களில் "எத்தனை கோடி"கொடுத்தாலும், நடிக்க மாட்டேன் என்ற சச்சின் கூட பல வருடங்கள் "பெப்சி"விளம்பரத்தில் நடித்திருக்கிறார். அதை நாமெல்லாம், கை தட்டி கொண்டாடியவர்... இன்னமும் கொண்டாடுபவர் தானே?! இம்மாதிரி, மற்றும் சில நடிகர்கள் முரணான காதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஒரு பட்டியலை "ஃபேஸ்புக்"கில் பார்த்தேன். அங்கே கேட்டிருக்கும் கேள்வியையே நானும் இங்கே கேட்கிறேன்: "விஜய்"செய்தால் மட்டும் என் தவறு? எனவே, அதையெல்லாம் விடுத்துவிட்டு படம் சொல்லும் செய்தியைப் பார்ப்போம்.

      மேலும், இவர்களிடம் எம்.ஆர்.ராதா (குறிப்பாய் இரத்தக்கண்ணீர்) ஸ்டைலில்: "ஏண்டாப்பா! நியாயஸ்தன்களா?!... ஒடம்புல துணி இருக்கா? இல்லையாண்ணே?? தெரியாம டிரெஸ்ஸ போட்டுக்கிட்டு பல படங்கள்லையும் நடிச்ச பொண்ணுங்க அம்மனா நடிக்கும் போது எங்கடாப்பா போனீங்க?!... அடப்பாவிகளா! கொஞ்சோண்டு ட்ரெஸ் போடறதால-மட்டும், அந்த பொண்ணுங்கள "அம்மாதிரி"ன்னு நெனைக்கறதும் தப்பு! அம்மனா நடிச்சதால, கடவுளா நெனைக்கறதும் தப்புடா! தப்புடாப்பா!... தப்பு!!..." - இப்படித்தான் சொல்ல தோணுது. அவர்களை வெறும் நடிகர்/நடிகையராய் மட்டும் பார்போம். ஏதேனும் ஒரு தவறாவது செய்து, பின்னர் அதை திருத்தி வளர்ந்தவர்கள் தான் நாம் எல்லோரும்! விஜய்யும் அதை உணர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இல்லை என்றாலும்; பரவாயில்லை. அது வெறும் நடிப்பு! தேவையானது/தேவையற்றது என்பதை நாம் தான் முடிவு செய்யவேண்டும்! 

       இடையில், படத்தின் கதை வேறொருவருடையது என்பதே, பலரும் குற்றம் சாட்டிக்கொண்டு இருக்கிறார்கள், மேலும், அது சார்ந்த வழக்கும் நடந்து கொண்டிருப்பதை கேள்வி. இப்போதைக்கு, எனக்கு கதை எவருடையது என்பது பற்றி கவலை இல்லை; இது, அவர்களின் பிரச்சனை. மேலும், நீதிமன்றத்தில் வழக்கில் இருக்கும் ஒன்றைப் பற்றி, நான் கருத்து சொல்ல ஏதுமில்லை! வழக்கம்போல், கதை என்னவென்பது பற்றி எந்த தகவலும் என்னுடைய பார்வையில் இருக்காது. பலரும், முழுக்கதையும் சொல்லி இருக்கலாம்! எனக்கு அதில் உடன்பாடு இல்லை. எனவே, படத்தை பற்றிய என் நடுநிலையான பார்வை மட்டும் கீழே:
  • "லைக்கா" மொபைல் லோகோவும், விளம்பரமும் தமிழகத்தில் மட்டும் தான் நீக்கப்பட்டு இருக்கிறது போலும்! இங்கே... எந்த "ஆரவாரமும்" இல்லாமல் அந்த விளம்பரத்தோடு தான் படம் ஆரம்பித்தது. அடப்பாவிகளா!... நம் இலங்கைத் தமிழர்கள் அதிகம் இருப்பது, இலங்கையிலும்; வெளிநாடுகளில் தானே?! அவர்கள் எல்லோரும் அமைதியாய் தானே பார்க்கிறார்கள்?! யாருக்காக அய்யா?!... இன்னமும் இந்த அரசியல்? "(தமிழ்/தனி) ஈழம் கனவு, இனியும் வேண்டுமா?!" என்ற என் தலையங்கம் தான் (மீண்டும்)நினைவுக்கு வந்தது.
  • பெருசு/பழசு என்று முதியோர்களை ஒதுக்கி "முதியோர் இல்லங்களை" வளர்த்துவிட்ட இந்த சமுதாயத்தில்; ஒரு முதியோர்-கூட்டத்தை வைத்துக்கொண்டு படத்தின் கருவை நகர்த்தி இருப்பது; அதிலும், அதில் விஜய் போன்ற நடிகர் நடித்திருப்பது பாராட்டுதலுக்கு உரியது. சபாஷ்!
  • "டைட்டில்"எழுத்துக்கள் ஓடும் போது, பின்னணியில் வரும் நிழற்படங்களும்; சிறு-"அனிமேஷன்"களும் படத்தின் கருவோடு சம்பந்தப்பட்டவை! முன்பே, கதையைப் பற்றி சிறிது தெரிந்திருந்ததால் தான் என்னால், அதை இரசிக்க முடிந்தது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை! ஆனால், இதுவரை எவரும் அது பற்றி சொல்லவில்லை; கவனிக்கவில்லையோ என்று கூட தோன்றியது! என்பதால், அதை இனிமேல் படம் பார்க்கும் பலரும் இரசிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இதை சொல்கிறேன்.
  • சிறைச்சாலையில் இருந்து விஜய் தப்பிக்கும் அந்த முதற்காட்சியில் "ஒரு லாஜிக்கே... இல்லையேப்பா!" என்று நாம் யோசிக்க சிறிது அவகாசம் கொடுத்து; அதை நாம் மேலும் சிந்திக்கும் முன்னர் அதை "உடைத்திருப்பது" பாராட்டப்படவேண்டிய ஒன்று! படத்தில் இது போல் பல காட்சிகள்.... "லாஜிக்" இல்லாமல் இருக்கறதே?! என்று நாம் யோசிப்பதை இயக்குனரும் யோசித்து அதை காட்சிகளால் விளக்கி இருப்பது அருமை. குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு காட்சி: ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்று விஜயை பேட்டி எடுப்பது போல் வரும் காட்சி.
  • கம்யூனிசத்தை ஒரேயொரு இட்லியை உதாரணம் கொண்டு விவரித்து இருப்பது சிறப்பு! படத்தில், ஆங்காங்கே, இதுபோல் பல கூறிய-வசனங்கள் உள்ளன. குறிப்பிட்டு சொல்ல... "நம்மள பட்டினி போட்டவங்களுக்கு; நாம சோறு போடணும்!"; "தற்கொலை செய்துகொள்வது என் மதத்திற்கு எதிரானது; ஆனால், ஒரு ஏழைக்கு துணை போகணும்ங்கற (சரியான வசனம் நினைவில் இல்லை!) செயலை முன்னிறுத்தி இதை செய்கிறேன்!" போன்ற வசனங்கள்.
  • இறந்தவர்களை ஒவ்வொருவராய் பார்த்துவிட்டு; ஒரு முகம்மதியர் சடலத்தின் அருகே அமர்ந்து விஜய் அழும் காட்சி, அருமை! இதற்கு முன் "துள்ளாத மனமும் துள்ளும்" என்ற படத்தில் விஜய் அழுவது எனக்கு பிடித்திருந்த ஒன்று. "அழுவது போல் நடிப்பது" மிகவும் கடினமான ஒன்று! விஜய்யின் நடிப்பு திறன் அதிகரித்து இருப்பதாய் எனக்கு தோன்றியது. "ஸ்டீரியோ டைப்"விஜய் நடிப்பைப் பார்த்து; வெறுப்பானவர்களில் நானும் ஒருவன் என்பதால், இதை அழுந்த சொல்ல நினைக்கிறேன்! விஜயின் நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது; ஆனால், இன்னும் நெடும்தூரம் போகவேண்டும்!
  • விஜயின் நண்பராய் வரும் சதீஷ் பல இடங்களில் "சபாஷ்" வாங்குகிறார். குறிப்பாய் "I love him"னு; சமந்தா சொன்னதும்; என்னடா?! இது??!! இந்த பொண்ணு, லூசு மாதிரி சொல்லுதேன்னு நாம யோசிச்சுக்கிட்டே... அதிகமா கடுப்பாகறதுக்குள்ள; சதீஷை வைத்து அந்த காட்சியை - குறிப்பாய்... அந்த வசனத்தை நியாப்படுத்தி இருப்பது பாராட்டுக்கு உரியது.
  • சமந்தா அணிந்துவரும் "ச்சுடிதார்கள்" அனைத்தும்; மிக-எளிமையாய்; அதே சமயம் "மிக அழகாய் (அவர் உட்பட!)" காட்டுகிறது. ஆனாலும் "ராஜா ராணி"பட பார்வையில் சொன்னது போல், இவருக்கும் குட்டைப்பாவாடை (என்னளவில்)பொருத்தமாய் இல்லை!
  • சில சண்டைக்காட்சிகள் இரசிக்கும் வண்ணம் இருக்கின்றன. ஆனால், கீழே சொல்லி இருப்பது போல், பல அவலங்களும் உள்ளன.
  • படத்தின்-கரு பெரும் பாராட்டுதலுக்கு உரியது! பன்னாட்டு நிறுவனங்களால், அழிந்து வரும் விவசாய நிலங்கள் பற்றிய விழிப்புணர்வை அருமையாய் விளக்கி இருக்கிறது. அதிலும், கதாநாயகன் முதுகலை "நீரியல் (Hydrology)" படித்திருப்பதாய் காட்டி இருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்று! ஏனெனில், இப்போது வரும் பல படங்களில் பல கதாநாயகர்கள் என்ன "வேலை" செய்கிறார்கள் என்றே காட்டுவதில்லை. ஆனால், தண்ணி அடிக்க; தம் அடிக்க; மற்றும் பலதுக்கும் சர்வ-சாதரணமாய் அவர்களிடம் பணம் இருக்கும்! இங்கே அதற்கு விதிவிலக்கு.
  • அதேபோல், இன்னமும் பலராலும் உணரப்படாத "தண்ணீர்"வறட்சியை சாட்டையால் அடித்தது போல் சொல்ல முயன்றிருக்கும் விதம் வெகுவாய் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
  • பெரும்பாலும், இம்மாதிரியான கதைக்களங்கள் கொண்ட படங்கள்; பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும். அப்படி ஏதும் இல்லாமல் (சம்பளம் பற்றி நான் குறிப்பிடவில்லை!!!), மிக-எளிமையாய் படம் எடுக்கப்பட்டு இருப்பதும் சிறப்பு! ஒரு பாடலில் சில செட்டிங்கள், செலவு கண்டிருக்கும். ஆனால், அந்த "கிதார்"உட்பட அந்த செட்டிங்குகள் அனைத்தும் அருமை.
  • போராட்டம் முடிந்து விஜய் நெடிய-வசனம் பேசும்போது பின்னணி இசை ஏதும் அறவே இன்றி காட்சி படுத்தி இருப்பது, மிகவும் அருமை! குறிப்பாய், நம் ஊரில் இரசிகர்களின் விசில்-சத்தத்திற்கு இடையில் வசனங்கள் நன்றாக கேட்கும்.
  • "இம்மாதிரி படத்தில் சொல்லிவிட்டால்" ஆயிற்றா? என்று பலரும் வாதிடலாம்! நாம் ஒப்புக்கொண்டாலும்/ ஒப்புக்கொள்ளா விட்டாலும் திரைப்படம் என்பது ஒரு வலிமை-மிகுந்த ஆயுதம். பல்வேறு தரப்பினரும், "சூரியூர் போராட்டம் போல்" களத்தில் நின்று இதுசார்ந்து போராடுவதை யாரும் மறுக்கவில்லை; மறுக்க முடியாது! அவர்களுக்கான, ஆதரவாய் இதை எடுத்துகொள்வோம். இம்மாதிரி பல தரப்பினரும், களத்தில் பனி செய்துகொண்டிருப்பினும்; இந்த திரைப்படம் தான் அதை பெருமளவிற்கு வெளியுலகிற்கு கொண்டு வந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இப்போது, நம்மில் பலருக்கும் இது தெரிந்திருக்கிறது! இப்போது, நாம் என்ன செய்யப்போகிறோம்?! என்று நம்மை நாமே கேள்வி கேட்பது தான் புத்திசாலித்தனம். நம்மிடம் கொண்டு வந்து சேர்த்ததே, அவர்களின் மிகப்பெரிய கடன் என்பதாய் தான் நாம் உணரவேண்டும். 
   
         படத்தில், வழக்கம் போல், பல படங்களிலும் வருவது போல் சில அபத்தங்களும்/லாஜிக்-மீறல்களும் {உதாரணம்: சர்வசாதாரணமாய் ஒரு நீதிபதியை மிரட்டுவது!} இருப்பினும்; சிலவற்றை கண்டிப்பாய் மாற்றவேண்டும் என்ற ஆதங்கத்தில் இங்கே பட்டியல் இட்டுள்ளேன்!
  • முதலில், எதற்கு இரட்டை வேதங்கள் என்பது இன்னமும் எனக்கு விளங்கவே இல்லை! ஒரு வேடத்திற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. அந்த வேடத்தை நீக்கி இருந்தால், சில மணித்துளிகள் குறைந்திருக்கும். அது, படத்தை இன்னமும் கருத்தை மையப்படுத்தி/முதன்மை படுத்தி சொல்ல பயன்பட்டிருக்கும். அது, ஒரு சருக்கல்! 
  • நான் "துப்பாக்கி"படத்திலேயே சொன்னது போல், கதையின் நாயகியாய் வருபவருக்கு போதுமான அளவிற்கு காட்சி அமைப்புகள் இல்லை எனில்; அந்த படத்திற்கு கதாநாயகியே தேவை இல்லை! என்ற என் கூற்றில் (இன்னமும்)எந்த மாற்றமும் இல்லை! இந்த படத்திலும் சமந்தாவிற்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை எனினும், பல படங்களிலும் வருவது போல் (ஒரு சில பாடல்கள் தவிர!)அவரை "சதைப்பிண்டமாய்(மட்டும்)" காண்பிக்கவில்லை என்பது ஆறுதல். "ராஜா-ராணி" திரைப்படத்தில் 2 கதாநாயகிகள் இருந்தும்; அவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் இருந்தன. அந்த அளவில் இல்லை எனினும், ஓரளவிற்காவது; வாய்ப்பு இருக்கவேண்டும். இல்லையேல்... கதாநாயகியே தேவை இல்லை என்பது என் பார்வை.
  • இம்மாதிரி வலுக்கட்டாயமாய், கதாநாயகியை ஒரு படத்தில் திணிக்கும் போது, வேறு வழியே இல்லாமல்; பாடல் காட்சிகள் திணிக்கப்படுகின்றன. சாதரணமாகவே, அம்மாதிரியான பாடல்கள் நம்மை வெறுப்பேற்றும்! அதிலும், இம்மாதிரியான ஒரு கதைக்களத்தில் "கதாநாயகன்" சமுதாய நோக்கில் "குழாயில்"அடைந்து போராட்டம் செய்யும் போது "ரிங்கை(மோதிரம்) மாற்றிக்கொண்டு; engaged என்ற வார்த்தையை கொண்டு" ஒரு அபத்தமான வசனம் வைப்பதே எரிச்சலான விசயம்! அதிலும், அங்கே ஒரு பாடலை வைப்பது எரிச்சலிலும், எரிச்சல்.
  • போராட்டத்தின் போது, அந்த சமந்தாப் பொண்ணு "சமத்தா" கதாநாயகன் கூடவே சுத்துது! ஒரு வசனம் இல்லை!! "ஒரு நோட்டீஸ்"கூட யாருக்கும் கொடுக்கலை!! இப்படி பல காட்சிகள்... கடைசில டைரக்டருக்கே போரடிச்சு ஒரு சீன்ல "சென்னையில, மொத்தம் எத்தனை ஏரி இருக்குது?!"ன்னு கேட்டு ஒரு-வசனம் பேச வச்சுட்டாரு போல?! ஆனால், எல்லா சீன்லயும் "நல்லா டிரஸ் பண்ணிக்கிட்டு" கூடவே சுத்துது!! ;)
  • ஆ... ஊன்னா... விஜய் "ப்ளூ பிரிண்ட்" கேக்கறாரு! உடனே, அதுவும் வந்துடுது!! அவரு, ச்சும்மா அனாவசியமா "அனிமேஷன்" உதவியோட "பூமியைப் பிளந்து"சென்று பார்த்துடுவாரு! "கவுண்டர் ஸ்டையிலுல; அடேங்கப்பா! ரீலு அர்ந்து போயிடாதாப்பா!!"ன்னு தான் கேட்கணும்.
  • அவன "செதில், செதிலா வெட்டனம்!"ங்கறது பல படத்துலயும் வர்ற ஒரு வசனம்! அடப்பாவிகளா! மனுசனுக்கு மீனு மாதிரி செதிலாவா? இருக்குன்னு கேட்கனும்னு தோணுது! ஆனால், யாருக்கிட்ட கேட்பதென்று தான் தெரியவில்லை! 
  • மக்களே! தயவு செஞ்சு "எட்டி உதைத்ததும்"ஒருவர் பறந்து போற மாதிரி சீன்களை இனிமே வைக்காதீங்கய்யா! உங்களுக்கு புண்ணியமா போகும்! ஒன்னும் வேணாம்யா... ஒரு 25-கிலோ (எடைக்)கல்லை, "யாராவது"ஒரு ஹீரோவை எட்டி உதைச்சு பறக்க வைக்க சொல்லிட்டு; அசால்டா நிக்க சொல்லுங்க பார்ப்போம்! நல்ல பாடி-பில்டிங் உள்ளவங்களுக்கே கஷ்டம் அய்யா! என்ன தான் "அவங்க துணை நடிகர்கள்"னாலும் இப்படியாய்யா பந்தாடுவீங்க?! தயவு செஞ்சு இனிமேலயாவது நிறுத்துங்கப்பா!!! 
  • பின்னணி இசை பல இடங்களில் நெருட வைக்கிறது. அனிருத் இன்னமும் "விஜய் படத்திற்கு" இசை அமைக்கும் வாய்ப்பு-அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை போலும்! பெரும்பாலும், பின்னணியில் பாடல்-வரிகளே இசையாய் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. சில சண்டைக் காட்சிகள் போன்று சில இடங்களில் இரசிக்கும் வண்ணம் இருப்பினும், பல இடங்களில் நெருடல்கள் தான்!
  • உணர்ச்சி பொங்கி பேசும் பல காட்சிகள் "விஜய்யின்; வழக்கமான - அதிகப்படியான - உடல்மொழி"யால் எரிச்சல் தருவது மட்டுமன்றி; அந்த காட்சிகளின் அழுத்தத்தை குறைத்து விடுகிறது! இதை விஜய்யை காணும் வாய்ப்பு இருக்கும் யாரும் அவருக்கு எடுத்துக் கூறினால், நமக்கு "நடிப்பில் சிறந்த"இன்னுமோர் நடிகர் கிடைப்பார்! என்பது என் நம்பிக்கை.

என்-எண்ணம்: படத்தின் கரு/சமுதாயப்-பார்வை/விஜய்யின் வித்தியாசப் படம் - இப்படி ஏதேனும் ஒரு அடிப்படையிலாவது; ஒவ்வொருவரும் ஒருமுறையாவது பார்க்கவேண்டும் என்பதே என் எண்ணம். ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் பார்ப்பது அவரவரின் விருப்பம்; ஆனால், கண்டிப்பாக ஒருமுறையேனும், அதிலும் (பார்க்கும் வாய்ப்பிருப்போர்) திரையங்கில் பார்க்கவேண்டும்! 

செவ்வாய், அக்டோபர் 21, 2014

தீப-ஒளியும் என் வாழ்த்து-ஒலியும்...


மறிக்கும் திரியின் "ஒளி"யின்,
முடிவில்; பிறந்திடும் "ஒலி"யில்,
மலர்வதாம் மனமகிழ் தீபாவளி!
மலரட்டும் உங்கள் இ(தய/ல்ல)த்தில்;
அருள்-தீப ஒளி!!

உடையில் மட்டுமேன் புதியது?
உளத்திலும் கூடட்டுமே! எங்கும்
உறவுகள் பலப்படட்டுமே!! ஆங்கே
உண்மை உயிர்த்தெழட்டும்! அதுவே
குறள்-தீப ஒளி!!

பண்டங்கள் தொண்டை தாண்டிடின்
பல்சுவையும் அழிந்திடும்! ஆயின்,
பண்புகள் அண்டை சேர்ந்திடின்;
பல்வளமும் பொழிந்திடும்!! சேரட்டும்
சீர்-தீப ஒளி!!

குணத்தூய்மை பெருகி, "ஒலி-மாசு"
குறையட்டும்! பண்டிகை ஆட்டத்தில்
கொண்டோர் இலாதோரை சேர்ப்பதே;
"கொண்டு-ஆட்டம்" ஆகும்! பெருகட்டும்
சேர்-தீப ஒளி!!

பட்டாசு புகை குறைந்து;
பயனுள்ள "(ஓசோன்)படலம்" வாழட்டும்!
பங்காளிகள் ஒன்றுடன் கூடியே;
பயனற்ற "(வறட்டு)பகை" அழியட்டும்!!
வள(ர்)-தீப ஒளி!!

        - விழியப்பன் எனும் இளங்கோவன் இளமுருகு
                 {www.vizhiyappan.blogspot.com}

ஞாயிறு, அக்டோபர் 12, 2014

தங்க குங்குமச் சிமிழ்



      சில வாரங்களுக்கு முன், என்னவள் தங்கத்தில் குங்குமச் சிமிழ் ஒன்று வேண்டும் என்றாள்.  அதுவரை, தங்கத்தில் குங்குமச் சிமிழ் இருக்கும் என்றோ; அதுபற்றிய அறிதலோ எனக்கில்லை. இரண்டு வாரங்களுக்கு முன் என்னைக் காண இங்கே வந்திருந்த நட்பு ஒருவருடன் துபாயில் தங்க  ஆபரணக் கடைகள் பெருமளவில் இருக்கும் "Gold Souq" என்ற பகுதிக்கு சென்றிருந்தேன். அவரும், தங்க நகைகள் வாங்கவேண்டும் என்ற திட்டம் வைத்திருந்தார். ஒரு கடையில் முதன்முதலாய் தங்கத்தில் குங்குமச் சிமிழைப் பார்த்தேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பின்னர், இந்தியாவில் இருக்கும் என்னவளிடம் "வாட்ஸ்ஆப்"பில் அதை புகைப்படமாய் அனுப்பி அவளின் ஒப்பம் கேட்டேன். அவளும், பிடித்திருக்கிறது என்றாள். உடனே, வாங்கி என் நண்பரிடம் கொடுத்தனுப்ப திட்டமிட்டேன். ஆயினும், இன்னும் வேறு இடங்களில் பார்க்கலாம் என்று உள்ளெண்ணம் கூறிற்று. மீண்டும் சென்ற வாரம் "Bur Dubai" என்ற இடத்திற்கு சென்று வேறு சில இடங்களில் பார்த்தேன். 

     என்ன ஒரு ஆச்சர்யம்? மிக அற்புதமான ஒரு சிமிழைக் கண்டேன். உடனே, வாங்கியும் விட்டேன்; அதுதான், மேலுள்ள படத்தில் இருப்பது. இதற்கு முன் எத்தனையோ தங்க நகைகள்/ஆபரணங்கள் வாங்கி இருப்பினும், எனக்கு இன்றுவரை தங்கத்தின் மீது எந்த பற்றுதலும் இல்லை. ஆனால், இந்த குங்குமச் சிமிழை வாங்கியபோது ஒரு பேரானந்தம் பொங்கியது. 20 ஆண்டுகளுக்கும் மேலாய் காலை/மாலை இருவேளையும் குளித்தவுடன் நான் குங்குமம் வைக்கத் தவறியதே இல்லை (குளிக்காத ஒரு சில நாட்கள் தவிர!). இதேமாதிரி அமைப்பில்; துருப்பிடிக்காத-இரும்பில் செய்யப்பட்ட சிமிழ் ஒன்று என்னிடம் பல ஆண்டுகள் இருந்தது. அந்த நினைவுதான் அப்படி என்னை பேரானந்தப்பட செய்தது என்று பின்னால் புரிந்தது. இதை என் தற்பெருமைக்காய் இங்கே எழுதவில்லை. என் குடும்பத்திற்கு நான் செய்யவேண்டிய கடமையில், தற்பெருமைக்கு என்ன வேலை?! இது ஒருவகை சேமிப்பே எனினும், நான் சேமிப்பாகவும் நான் கருதவில்லை! இந்த குங்குமச் சிமிழை வாங்கியதில்...

என்குடும்பத்திற்காய் வாங்கினேன் என்ற நெகிழ்வு தவிர வேறொன்றுமில்லை!!!

பின்குறிப்பு: முதலில் சென்றபோதும், அடுத்த முறை சென்றபோதும் - தன்னுடைய பொன்னான நேரத்தை எனக்காய் செலவிட்ட நண்பர் திரு. பிரசாந்த் தியாகராஜன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். 

டெல்லி சம்பவம் உணர்த்துவது...



      சமீபத்தில் டெல்லியில் இருக்கும் உயிரியல் பூங்காவில் இளைஞர் ஒருவர் துரதிஷ்டவசமாய் புலியால் கொல்லப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த காணொளியை மீண்டும், மீண்டும் பார்த்து, பலரையும் போல் என்மனமும் மிகவும் வேதனை அடைந்தது. என்னுடைய ஆதங்கத்தை கேள்விகளாய் என் முக-நூல் அண்ணாச்சி திரு. பத்ரசாமி சின்னசாமி அவர்களிடம் கேட்டிருந்தேன். வன-அதிகாரி என்ற வகையில் அவருடைய அனுபவித்ததை பதில்களாய் கொடுத்ததை இந்த இணைப்பில் காணலாம். என்னளவில், அங்கே கூடியிருந்தவர்கள் தங்களின் உணர்ச்சியை கொஞ்சம் அடக்கி, சிறிது யோசித்திருந்தால்  அந்த இளைஞரை காப்பாற்றி இருக்கலாம் என்றே தோன்றியது. இறந்தது, எவரோ என்று எளிதாய் எடுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால், என்னுடைய ஆற்றாமையை "அடச்சே! ஒரு மிருகத்திடம் அத்தனை பேரும் தோற்று உள்ளார்களே?!" அப்புறம் என்ன "நாம் நம் சக மனிதர்களிடம் வீராப்பு" காட்டுவது?! அடப்போங்கடா! மனுஷப்பசங்களா!! என்று வெளிப்படுத்தி இருந்தேன். 

    ஒருநாள் என் தம்பி திரு. வினோத் முருகன் "வாட்ஸ்ஆப்"பில் தடய-அறிவியல் துறையின் விளக்கத்துடன் கூடிய மேலுள்ள புகைப்படத்தை பகிர்ந்தான். என்போன்ற பலரும் எண்ணியிருந்தது போல், கற்களால் அடித்ததால் "தனக்கு ஏற்பட்ட" பயத்தால் புலி அந்த இளைஞரை கவ்வி செல்லவில்லையாம்! அந்த கற்களால், அந்த இளைஞருக்கு ஆபத்து என்று எண்ணி, பயந்துதான் கவ்வி சென்றதாம். தன் குட்டியையே அப்படி கவ்வி எடுத்து செல்வதுதான் புலியின் இயல்பு. ஆனால், "மனிதனின் சதை தன்னினத்தை போலில்லை; அதனால், கவ்வுதல் அவனைக் கொன்றுவிடும்"! என்று பாவம் அந்த புலிக்கு தெரியவில்லை. அந்த புலியின் நல்லெண்ணம், இறுதியில் அந்த இளைஞனின் உயிரைக் காவு கொடுத்துவிட்டது! என்னுடைய ஆற்றாமை இன்னும் அதிகமானது. அதன் விளைவாய் இன்னொரு பதிவில் இரண்டு குறிப்புகளை கொடுத்தேன்: 1. மனிதர்களுள் பல மிருகங்கள் உள்ளன! 2. மிருகங்களில் சில மனித(ர்கள்/ம்) இருக்கி(றார்கள்/றது) - என்பவையே அவை. சாமான்யர்கள் நமக்கு...

இம்மாதிரியான விலங்குகளின் அடிப்படை குணாதிசயங்களை அறிதல் - மிகமுக்கியம்!!!

வேறு இனத்தவர் யாருமே இல்லையா???




       சென்ற வாரம் ஓர்நாள் "யான்" என்ற தமிழ் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு இளைஞி "கலாச்சாரம்" என்று பலரும் சொல்வதை மீறும் ஒரு விசயத்தை செய்தால் என்ன? என்று தன் தோழியோடு விவாதிப்பது போல் ஒரு காட்சி. அருகில் ஒரு மூத்த தம்பதியரை காண்பித்து, அதில் கணவர் "கலி முத்திடுச்சு... ஷிவ, ஷிவா!" என்று சொல்வதைப்போல் ஒரு காட்சி வரும். இதுபோன்று, முன்பே வேறு சில படங்களிலும் ஒருவர் பேசுவது போல் வந்திருக்கிறது.  


     அது என்ன? இம்மாதிரியான காட்சிகளின் போது "ஒரு குறிப்பிட்ட இன"தம்பதியரை சித்தரித்து, அவர்கள் பேச்சு-மொழியிலேயே வசனங்கள் அமைப்பது? என்ன சொல்ல வருகிறார்கள்? ஆற்றாமையால் என்னுள் எழுந்த கேள்விகள் கீழ்வருவன:  
  1. இம்மாதிரி, கலாச்சார காப்பாற்றுதலை அந்த "இன"த்தவர் மட்டும்தான் கடைபிடிக்கின்றனர்! என்று சொல்ல வருகின்றனரா?
  2. அல்லது, அந்த இனத்தை சேர்ந்தவர்கள் தான் கலாச்சார-மாற்றத்திற்கு இடையூராய் இருகின்றனர்! என்று சொல்ல வருகின்றனரா?  
   நன்றாய் கவனியுங்கள். அந்த தம்பதியர், பின்னர் "ஒரேயொரு"காட்சியில் கூட எந்த திரைப்படத்திலும் இடம் பெற மாட்டனர். பின்னர், ஏன் அந்த தம்பதியர் "இந்த இனத்தவர்" என்று "அழுந்த"சொல்ல வேண்டும்? யாரென்று-கூட தெரியாமல் "வெறும் ஒலி"வடிவில் (அல்லது எழுத்து வடிவில்) கூட அந்த வசனத்தை இடம் பெற செய்யலாமே??

பெருந்தகையின் "பஞ்ச்"



எனக்கு தெரிந்து திருவள்ளுவர் போல் இத்தனை "பஞ்ச்"களை ஈரடியில் சொல்லிட்டவர் இதுவரை யாரும் இல்லை... இனி(யும்) வரப்போவதில்லை!!!

"ஒலி"யால் உணர்த்திய சொல்லும்/செயலும்...



    "ஜீவா" என்ற தமிழ் திரைப்படத்தில் வரும் "ஒவ்வொன்றாய் திருடுகிறாய்" என்ற பாடலில் என்னென்ன திருட்டு என்று சில பட்டியல்கள் வரும். பாடலின் இறுதியில் "ஒரு பட்டியலை" மீண்டும் சொல்லும்போது...

    "மூன்றாவது" என்று சொல்லிவிட்டு ஓரிரு நிமிடத்துளிகள் இடைவெளியில் ஒரு "ஒலி"மட்டும் கேட்கும். அதைக் கேட்டு வியந்திருக்கிறீர்களா?! அந்த வார்த்தையை அப்படியே சொல்லாய் சொல்லாமல்; அந்த செய்கை(யி/யா)ல் விளையும் சத்தத்தை மட்டும் "ஒலி"யாய் கொடுத்திருப்பது மிகப்பிரம்மாதம்.

- அதிலும், அந்த "ஒலி"யே ஒரு "தனிச்சுவை"!!!

"இரட்டை" அர்த்த பாடல்கள்...




         நாடோடி-வம்சம் என்ற தமிழ் படத்தில் "குத்த வரவா? குத்த வரவா??" என்றொரு பாடல் வருகிறது. கேட்டவுடன் அதிலுள்ள "இரட்டை"அர்த்தம் அனைவருக்கும் தெரியும். அநேகமாய், இந்நேரம் அந்த பாடல் இரவுநேரப் பேருந்துகள் நிற்கும் "மோட்டல்"களில் அதிக சத்தத்துடன் ஒலித்துக் கொண்டிருக்கும். இதை எவர் தவறென்று சுட்டிக்காட்டி தட்டி கேட்பது?!

      இம்மாதிரி பாடல்கள் "இரண்டு மாதிரியாய்" இருக்கிறது என்று சுட்டிக்காட்டினால் என்னை, "ஒரு மாதிரியாய்" பார்க்கிறார்கள்.  ஹா... ஹா... ஹா...

ம்ம்ம்... என்ன சொல்வது?!

"யான்" யா எப்போதும் மும்பை???



"யான்" தமிழ் திரைப்படமும் இப்போது மும்பையை-அடிப்படையாய் கொண்ட தமிழ்ப்பட பட்டியலில்! அது என்னாங்கய்யா? டான்/ரெளடி கேரக்டர்னா; உடனே மும்பை?! தீவிரவாதம்/தேசத்துரோக செயல்கள் என்றால்; உடனே மும்பை??!! 


தெரியாமல் தான் கேட்கிறேன்! நம் ஊரில் டான்/ரெளடி(யே) இல்லையா? இல்லை, அவர்களை எல்லாம் டான்/ரெளடி என்று ஒப்புக்கொள்வதில்லையா?? நம் ஊரில் எல்லாம் தீவிரவாத/தேசத்துரோக செயல்கள் நடைபெறவே இல்லையா (சிறிய அளவில்தான் என்றாலும் கூட!)??? 

உங்களால், மும்பை மேல் ஒரு நல்ல எண்ணம் எங்களுக்கு வர மறுக்கிறதய்யா! என்றுதான் இவைகளை எல்லாம் நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள்??!!