சில வாரங்களுக்கு முன் வாட்ஸ்-ஆப் "குழு உரையாடலில்" நண்பன் ஒருவன் நாமே, நமக்கு துணை என்பதான தன்னம்பிக்கை பற்றிய ஒரு காணொளியை பகிர்ந்து இருந்தான். நல்ல செய்தி தான்! ஆனால், எனக்கு ஒரு விசித்திர எண்ணம் உதித்தது; அதனால், அந்த காணொளியை "இசையை அனைத்து(Mute) விட்டு" பார்த்தேன். என்ன ஒரு ஆச்சர்ய-அதிர்ச்சி! அது ஒரு சாதாரண தகவல் தான். அதில் வந்த வாசகங்கள், என்னைப் போன்ற வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் கூட, அடிக்கடி எழுதுவது தான். ஆனால், அது-போன்ற பின்னணி இசையால் அவை "பூதாகரமாய்" தோன்றுகின்றன! அந்த காணொளியை தொடர்ந்து சென்ற வாரம், அதே போன்று இன்னுமோர் காணொளி பகிரப்பட்டது. அதன் பின்னர் தான், என் 2 நட்பு குழுவில் அந்த காணொளியை "இசை"இல்லாது பார்க்க சொன்னேன். அவர்களுக்கு, சட்டென்று புரியவில்லை; சிறிது விளக்கம் கொடுத்தேன். என்ன அதிசயம்? என் பரபரப்பு அவர்களையும் சூழ்ந்து கொண்டது.
நீங்களும் முயன்று பாருங்களேன்! ஒரு குழுவில் இருக்கும் நட்பு ஒருவன் "நான் ஒரு பயங்கர பேய் படத்தை, அப்படி பார்த்தேன்! பயங்கர காமெடியாய் இருந்தது!!" என்றான் - அது ஒரு பார்வை. இன்னொரு குழுவில் இருந்து வேறொரு நண்பன் "மேலிருந்து விழும் அருவியைத்தான் நாம் அதிசயித்து பார்ப்போம்! ஆனால், அதை தாங்கி/தூக்கி வந்து கொடுக்கும் மலையைப் பற்றி நாம் நினைப்பதில்லை!!" - நீ சொன்னது போல் அந்த "இசையை"நீக்கிப் பார்த்ததில், இது ஒரு தத்துவம் போல் எனக்கு தோன்றியது என்று இன்னுமோர் பரிமாணத்தை கொடுத்தான். அவனே தொடர்ந்து, தான் ஒரு புத்தகம் எழுதப் போவதாயும்; அதன் கரு இதை மையப்படுத்தி இருக்கும் என்றும் சொன்னான்! எனக்கு பெருத்த மகிழ்ச்சி. என்னுடைய பார்வை, ஒரேயொரு முறை நான் சொன்னதும், என் நட்புகளை எப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது என்ற வியப்பு. அது தானே, என் (எழுத்தின்) நோக்கமும்?! - நான் பார்க்கும் என் பார்வையை பலரையும் கொண்டு சேர்ப்பது!
என்னுடைய பார்வை, வழக்கம் போல் வாழ்க்கையுடன் இது எப்படி ஒன்றிப்போகிறது என்பதாய் தான் இருந்தது. ஒரு மரத்தை நாம் பிரம்மித்து பார்ப்பது போல், அதை "நெடுங்காலமாய்" தாங்கிக்கொண்டு அதற்கு உயிர் கொடுக்கும் "வெளியே தெரியாத" வேரைப்பற்றி பெரிதாய் ஆவல் கொள்வதில்லை. அதுபோல், "வேராய்" இருந்து நம்மை வளர்த்து விட்டு; இன்று "வேறாய்" நிற்கும் பலரைப் பற்றி நாம் நினைப்பதே இல்லை! என்ற உண்மையே எனக்கு முதலில் உதித்தது! இதை, தத்துவமாய் பலரும் பார்க்கக்கூடும்! நான் இதை தத்துவம் என்ற விதத்தில் சொல்லவில்லை; அப்படி தத்துவமாய் தெரிந்தால், எனக்கு பெருத்த சந்தோசமே! என் பார்வை... பலரையும் சென்று விசாலம் அடையவேண்டும் என்பதே என் தலையான நோக்கம். நமக்கு வேராய் இருந்தவர்களை நீக்கிவிட்டு பார்த்தால், நாம் "ஒன்றுமே இல்லை!" என்பது நிதர்சனமாய் தெரியும். அதைத்தான், என் நண்பன் சொன்ன "இசை நீக்கிய" பயங்கர-பேய் படம் உணர்த்தும் உண்மை.
அம்மாதிரி அவ்வாப்போது தோன்றியதால் தான் "என் தமிழுக்கு வித்திட்டவர்", "சிறந்த கணவன் ⇔ சிறந்த தந்தை", "என் மருதமையன்" போன்ற தலையங்கங்கள் எழுதப்பட்டன. என்னால், என்னை "அவர்களோடு" இணைத்தும்/பிரித்தும் பார்த்து; என் சுயம் எது? என்னில் அவர்களின் பங்கு என்ன?? என்பதை உணர முடிந்ததால் தான் "தன்னம்பிக்கை" பற்றிய ஒரு காணொளியைப் பார்த்தவுடன், என்னால் இசையை-விலக்கி வேறுபடுத்தி பார்க்க முடிந்தது. நமக்கே, நம்மை "வேராய்" இருந்து வளர்த்து விட்டவர்களை நினைத்து பார்க்க முடியவில்லை எனில், நம் சுற்றம் மட்டும் நம்மை வளர்த்து விட்டவர்களை கண்டறிந்து; மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, எப்படி நியாயமாகும்? அவர்கள், நம்மையும் போலவே, நாம் இப்போதிருக்கும் நிலையை மட்டுமே பார்க்கும் நிலையில் இருப்போர். இதற்கெல்லாம் உச்சமாய், என்னை இந்த உலகில் இருந்தே விலக்கி பார்த்ததே "மரணத்திற்கு பிறகு, என்ன?" என்ற தலையங்கம். இப்படிப்பட்டவர்கள் எல்லோரும்; "பலரும் உணராத கர்ப்பப்-பைகள்!".
எனவே, அந்த கர்ப்பப்-பைகளை கண்டறிந்து; நினைவுகூர்ந்து பாராட்ட வேண்டும். அவர்களுக்கு நம்மால் இயன்றதை மறுக்காமல்/மறக்காமல் செய்யவேண்டும்! அதையும் "நம் கடமையாய் "செய்திடல் மிகவும் அவசியம்! அதில், நம் தற்பெருமைக்கோ?! புகழுக்கோ?! வேலையே இல்லை. அது "செய்நன்றி உணர்தல்"; அது "கடனடைத்தல்"! அதை, நான் முன்பே சொன்ன "கடன் அடைத்தான் - நெஞ்சம் போல்" எண்ணிப் பார்த்தல் அவசியம். அது யாராய் வேண்டுமானாலும் இருக்கட்டும்! எத்தனை சிறிய வேராய்(உதவியாய்) கூட இருக்கட்டும். அந்த சிறு-வேரும் நம் வளர்ச்சியில் பங்கு வகித்தது என்பதை உணர்தல் வேண்டும். அந்த விதத்தில், நான் என் கடமையை எள்ளளவும் குறைவில்லாது செய்திருக்கிறேன் என்ற நிறைவு எனக்கு எப்போதும் உண்டு. இன்னும் அது போல், சிலருக்கு செய்ய முடியாத "கடனாளியாய்" என் சூழல் கட்டிப் என்னை போட்டிருப்பதும் அறிவேன்! ஆனால், எவரையும் நான் "நினைக்க"மறந்ததில்லை. இப்போதாவது, உங்களை..
"வேராய்" இருந்து வளர்த்தவர்களை நினைத்து; "வேறாய்"உங்களைப் பாருங்கள்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக