ஞாயிறு, பிப்ரவரி 12, 2017

அதிகாரம் 056: கொடுங்கோன்மை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 056 - கொடுங்கோன்மை

0551.  கொலைமேற்கொண் டாரின் கொடிதே அலைமேற்கொண்டு
           அல்லவை செய்தொழுகும் வேந்து

           விழியப்பன் விளக்கம்: 
பொதுமக்களை கொடுமைப்படுத்தி, அறமல்லவைச் செய்துப் பழகும் 

           அரசாள்பவர்; கொலையைத் தொழிலாகச் செய்வோரை விட, அதீத கொடுமையானவர் 
           ஆவர்.
(அது போல்...)
           உறவுகளை வெறுத்து, வாய்மையல்லவைப் பேசி புறக்கணிக்கும் நபர்; கையூட்டை 
           வழக்கமாய் பெறுவோரை விட, மிக ஆபத்தானவர் ஆவர்.
      
0552.  வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
           கோலொடு நின்றான் இரவு

           விழியப்பன் விளக்கம்: 
செங்கோல் ஏந்திய அரசாள்வோர், மக்களின் உடைமைகளை 

           வேண்டுவது; அரிவாள் ஏந்திய கொள்ளையர், வழிப்போக்கரின் பொருட்களைப் பறிப்பது 
           போன்றதாகும்.
(அது போல்...)
           வேலை செய்யும் பிள்ளைகள், பெற்றோரின் ஓய்வூதியத்தைக் கேட்பது; வேலை அளிக்கும் 
           முதலாளிகள், பணியாளர்களின் சம்பளத்தை அபகரிப்பது போன்றதாகும்.
           
0553.  நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
           நாள்தொறும் நாடு கெடும்

           விழியப்பன் விளக்கம்: 
அரசாள்பவர், ஒவ்வொரு நாளையும் ஆராய்ந்து; முறையான 

           செங்கோலைச் செலுத்தவில்லை எனில், அவர்களின் நாடு ஒவ்வொரு நாளும் வாழ்வியலை 
           இழக்கும்.
(அது போல்...)
           சமுதாயம், ஒவ்வொரு நிலத்தையும் போற்றி; இயற்கையான விவசாயத்தை செய்யவில்லை 
           எனில்,  அதன் சந்ததி ஒவ்வொரு பாரம்பரியத்தையும் வழக்கத்திலிருந்து இழக்கும்.

0554.  கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
           சூழாது செய்யும் அரசு

           விழியப்பன் விளக்கம்: 
ஆராயாமல், செங்கோல் தவறிக் கொடுங்கோலைச் செய்யும் 

           அரசாங்கம்; உணவையும் குடிமக்களையும், ஒரே நேரத்தில் இழக்கும்.
(அது போல்...)
           உணராமல், பொறுமை இழந்து உறவுகளை நீக்கும் பரம்பரை; கலாச்சாரத்தையும் 
           சந்ததியையும், ஒரே தலைமுறையில் இழக்கும்.

0555.  அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே
           செல்வத்தைத் தேய்க்கும் படை

           விழியப்பன் விளக்கம்: 
தேறமுடியாதத் துன்பத்தால், அழும் பொதுமக்களின் கண்ணீர்தானே; 

           கொடுங்கோல் புரியும் அரசாள்பவரின், செல்வத்தை அழிக்கும் ஆயுதம்?
(அது போல்...)
           இருப்பிடம் இழந்ததால், அலையும் விலங்குகளின் சாபம்தானே; காடழிக்கத் திட்டமிடும் 
           இனத்தின், ஆணிவேரை வெட்டும் கோடரி?

0556.  மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
           மன்னாவாம் மன்னர்க்கு ஒளி

           விழியப்பன் விளக்கம்: 
செங்கோலைக் காப்பதே, அரசாள்வோர்க்கு நிலைத்த புகழைத் 

           தரும்; மாறாய் கொடுங்கோல் புரிந்தால், அரசாள்வோரின் புகழ் நிலைக்காது.
(அது போல்...)
           பாதுகாப்பை உயர்த்துவது, வல்லரசுக்கு நீடித்த பலத்தை அளிக்கும்; மாறாய் பாதுகாப்பு 
           மோசமடைந்தால், வல்லரசின் பலம் நீடிக்காது.

0557.  துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
           அளியின்மை வாழும் உயிர்க்கு

           விழியப்பன் விளக்கம்: 
மன்னனின் செங்கோல் சிறக்காத, நாட்டு மக்களின் வாழ்வியல்; 

           மழைத்துளி பொழியாததால், உலகத்துக்கு விளையும் கேட்டைப் போன்றதாகும்.
(அது போல்...)
           பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காத, வீட்டுப் பிள்ளைகளின் வளர்ச்சி; சுற்றுவேலி 
           இல்லாததால், பயிர்களுக்கு உண்டாகும் அழிவைப் போன்றதாகும்.

0558.  இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
           மன்னவன் கோல்கீழ்ப் படின்

           விழியப்பன் விளக்கம்: 
முறையான செங்கோலைச் செலுத்தாத, அரசாள்பவரின் ஆட்சியில்; 

           வறுமையோடு இருப்பதை விட, உடையவராய் இருப்பதே அதீத துன்பமாகும்.
(அது போல்...)
           உண்மையான வாழ்வியலைக் கற்பிக்காத, சமூகத்தின் பார்வையில்; பொய்யராய் 
           இருப்பதை விட, நேர்மையுடன் வாழ்வதே அதிக சிக்கலாகும்.

0559.  முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
           ஒல்லாது வானம் பெயல்

           விழியப்பன் விளக்கம்: 
அரசாள்பவர், செங்கோல் தவறி ஆட்சி செய்தால்; பருவமழையும் 

           தவறி, வானம் பொழியாமல் போகும்.
(அது போல்...)
           சமுதாயம், அறம் தவறி வாழப் பழகினால்;  அடிப்படையும் தவறி, மக்களாட்சி நிலைக்காமல் 
           போகும்.

0560.  ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
           காவலன் காவான் எனின்

           விழியப்பன் விளக்கம்: 
காக்கவேண்டிய அரசாள்வோர், காக்கக் தவறினால்; பசுவின் 
           பயனான பால்வளம் குறையும்! இறைப்பணியைத் தொழிலாய் கொண்டோர், 
           மறைநூல்களை மறப்பர்!
(அது போல்...)
           கற்பிக்கவேண்டிய ஆசிரியர், கற்பிக்கத் தவறினால்; கல்வியின் பயனான சிந்தனை சிதறும்! 
           மனிதத்தை அடிப்படையாய் கொண்டோர், மதத்தை விரும்புவர்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக