புதன், பிப்ரவரி 22, 2017

"ஆதி பான" கடை...


     வெளி மாநிலத்தில் இருந்து, தமிழ்நாட்டிற்கு "பொதுநல போர்வையில்" ஒரு கைதேர்ந்த வியாபாரி  வந்தார்! "இங்கே டாஸ்மாக் நிறைய இருக்கிறது; அதனால் பலரும் மது அருந்திவிட்டு ஆனந்தத்தைத் தொலைக்கிறார்கள்!" என்று வேதனைப்பட்டார். உடனே பலரும், அவரை வியந்தனர்! அதைக் கண்ட அவர் "மதுவிலிதுந்து விடுபட உங்களுக்கு கற்று தருகிறேன்! நீங்கள் உண்மையான ஆனந்தத்தை அடையளாம்!" என்று சொல்லி ஒரு குடிசையில் பாடம் எடுக்க ஆரம்பித்தார்! குடியிலேயே மூழ்கித் தவித்த பலரும், அதில் இருந்து "தாமாக மீளவே முடியாது!" என்ற மாயையான நம்பிக்கையால்; அதில் சேர்ந்தார்கள்! பணம் அதிகமாய் கிடைக்க, அந்த வியாபாரி அதைப் பெரிய "கார்ப்பரேட் நிறுவனமாய்" மாற்றினார்! "கார்ப்பரேட் என்றாலே மயங்கும்" பலரும், அதில் சேர்ந்தார்கள். பணம் மென்மேலும் பெருக, தமிழகம் கடந்து; பல மாநிலங்களையும் தாண்டி, வெளிநாடுகளிலும் அந்த நிறுவனம் கிளைகளை உருவாக்கியது! 

     பல்கிப் பெருகிய கிளைகளால், பணத்தோடு படைபலமும் சேர; பல ஆக்கிரமிப்புகளைச் செய்தார், அந்த வியாபாரி. ஒரு கட்டத்தில், அவரின் அடியார்கள் எல்லோரும் அவர் சொல்வதே வேதமென நம்ப; வியாபாரத்தின் உச்சம் தொட எண்ணினார்! "மதுவருந்துவதே கெட்ட பழக்கம்!" என்று சொல்லி மயக்கி வந்தவர்; திடீரென "நான் ஒரு நல்ல பானத்தை அறிமுகம் செய்கிறேன்!"; அதன் பெயர் “சோம பானம்!”; அதைத்தான் “ஆதி ஞானிகள்” பருகினர்! அதை மக்கள் மறந்து விட்டதால்தான், இப்போது எல்லோரும் ஆனந்தமின்றி தவிக்கின்றனர்.  எனவே, குடியின் பிடியில் இருந்து "உண்மையாகவே விடுபட வேண்டுமெனில்"; ஆதி காலத்து மதுவான "சோம பானம்" பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என பிரசங்கம் செய்தார்! அதுதான், உண்மையான ஆனந்தத்திற்கு வழி என்று ஆனந்த கூக்குரலிட்டார். உடனே ஆங்காங்கே "ஆதி பானம்" கிடைக்க சிறிய கடைகளை நிறுவினார்! கூட்டம், பெரிய அளவில் அலைமோதவே... 

      122 வகையான பானங்களுடன், மிகப்பெரிய "ஆதி பான" கடையை நிறுவி அதை வெகு விரைவில், மிகப் பிரம்மாண்டமாய் திறக்கவிருக்கிறார்! அதை ஆரம்பிக்கும்போதே, மிகப்பெரிய அளவில் ஆரம்பிக்க; அற்புதமான திட்டம் ஒன்றை வகுத்தார், அந்த நவீன வியாபாரி! ஏற்கனவே, பணமும்/படையும் உள்ள அவர்; தன்னுடன் அரசியல் அதிகாரத்தையும் இணைக்க திட்டமிட்டார்! அதுதான், ஆக்கிரமித்த இடத்தில் எழுந்தருளியுள்ள; தன் மாபெரும் கடைக்கு பாதுகாப்பு என்பதை உணர்ந்தார்! எனவே "உலக அளவில் தொடர்புடைய" ஒரு அரசியல்வாதியை தேர்ந்தெடுத்தார்!". அவரை அழைத்து வந்து, இந்த பெரிய "ஆதி பான" கடையைத் திறக்கவிருக்கிறார். அதனால், உலகெங்கும் தன் கடைக்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்பது அவர் திட்டம். ஆக "மதுபான அடிமையில் இருந்து மீட்கிறேன்!" என்று உறுதியளித்த அவர்; இறுதியில் "மாற்றான ஒரு மது பானத்தை" அறிமுகப் படுத்துகிறார்! என்னவொரு வியாபார யுக்தி? வாருங்கள்... 

“ஆதி பானம்” பருகுவோம்!
“அதி ஆனந்த” கூத்தடிப்போம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக