ஞாயிறு, செப்டம்பர் 01, 2013

மகளே! விழியமுதினி...

(முன்பு "கவிதை என்று நான் கிறுக்கியது" - இப்போது "விருத்தப்பா"வாய்!
என்னப்பனின் கருத்து கேட்டிட வேண்டும்!!)

அமிழ்ததினும் இனியவள்என் மகளாம்! எல்லா
       விழிகளிலும் அழகாம்அ வளின்ஈர் கண்கள்!
தமிழ்அளிக்கும் அமுததுவாம் அவள்நல் உள்ளம்;
       வழிநடத்தும் ஆலயமாம் அவள்பேர் ஞானம்!!
குமிழ்ந்திடுமாம் அண்டமெலாம் அவள்கால் கீழாம்
       விழிதிறக்கும் முன்னெழுத நினைத்த இப்பேர்
தமிழ்க்கவியோ! தாமதமாய் முடிந்தும்; யாரும்
       விழிவிரிக்கும் வண்ணமாய்வந் ததும் காணீர்!!!

கருவறையில் நுழைந்தவுடன் உறுதி கொண்டேன்;
       விந்தணுவில் வென்றதுஎன் மகள்தான் என்றே!
தெருவறையில் துவங்கிபின் சமையற் கட்டில்
       சாந்தமாகும் இளந்தென்றல் எனவே பெற்றோர்
இருவர்எம் மனமுழுதும் பெயர்என்? என்ற
       சிந்தனையும் மகிழ்தென்றல் உருவில் கண்டோம்!!
ஒருவாறாய் கண்டிட்டேன் எனைசார் மொத்த
       சொந்தமெலாம் கொண்டாடும் புகழ்பேர் ஒன்றாம்!!!

"விழியமுதி னி"யென்றபொன் பெயராம்! அந்த
       பெயர்கண்ட வரலாற்றின் விளக்கம் கேளீர்!!
மொழியதுவின் பால்கொண்ட உயர்ந்த பண்பால்;
       உயர்கண்டம் ஆசியாவின் உயிர் காக்கும்
மொழியாம்நம் தமிழதுவின் "ய/ழ"வும் கொண்டு
       துயர்க்கஞ்சேன் என்றெண்ணி பெயர் கண்டேன்;
"ழ,ய"கரம்ஒன் றாய்சேர்ந்தே! இதுவும் சொல்லும்;
       உயர்குணமும் "எண்ணித்து ணிககர்  மம்"என!!!

கர்வமொன்று முளைத்ததுஎன் மனதில் கேளீர்!
       என்னுயிராம் மகளின்பேர் தனித்து வேண்டி;
ஆர்வமொன்று சூழ்ந்ததென்னுள் - தேடினேன் எங்கும்
       எண்பதுக்கு மேற்பட்டும் தொகுப்பில் மூழ்கி;
ஆர்க்குமிங்கு இல்லையென்றே துருப்பும் கண்டேன்!!
       எண்ணித்து ணிந்தகர்மம் அதுவும் பொய்த்தல்;
சர்வசத்தி யமாய்சாத்தி யமில்லை! என்றே
       என்னய்யன் வள்ளுவன்சொன் னதுவும் மெய்யே!!!     

என்றுநான்கேட் பேன்?மகளும் இசையாய் இப்பேர்
       உரைப்பதையும்! அவளோர்நாள் இசைவாய் சொல்லும்
அன்றுதான்என் மகிழ்திருநாள்!! வருமே அந்நாள்
       விரைவினிலே! "விழியப்பன் கணக்கும்" பொய்த்தல்     
நன்றன்றாம்  எனஉணர்ந்த மகளும் இன்றே
       விரைந்திடுவாள்! எவ்வுலகு(ம்) அழிந்தும் எஞ்சும்  
ஒன்றென்றே இட்டபெயர் வையத்தோர் யார்க்கும்
       பறையறைந்தே செப்பிடுவாள்; அவள்பேர் காப்பாள்!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக