ஞாயிறு, ஆகஸ்ட் 11, 2013

இன்று, என் முதல் பிறந்த நாள்!



          இன்று (11.08.2013), என் முதல் பிறந்த நாள்!  என்ன, ஆச்சர்யமாய் இருக்கிறதா? உண்மைதான், 41 அகவை கடந்து 42-வது அகவையில் காலடி எடுத்து வைப்பினும் - என்மகள் இந்த பிறந்தநாளின் போது தான், முதன்முதலில் பிறந்தநாள் வாழ்த்தினை கூறினாள். கண்டிப்பாக, என்னவள் கூறிதான் "என்மகளுக்கு இன்று, எனக்கு பிறந்தநாள் என்று" தெரிந்திருப்பினும் - அவளின் வாழ்த்தும், விசாரிப்பும் எனக்கு பெருத்த-வியப்பை தந்தது. மேலும், அவள் விசாரித்த விதம் என் அம்மாவை நினைவுபடுத்தியது; "என் தாய்க்கு பின் அவள்தான்" என்பதை உணர்ந்தேன்! ஆம், "தாய்க்கு பின் தாரம்" என்பது வெற்றி பெற்றதாய் தெரியவில்லை - அது பல பிரச்சனைகளைத் தான் உருவாக்கி இருக்கிறது; மேலும், "தந்தைக்கு பின் யார்" என்பதும் கூறப்படவில்லை என்பதை முன்பொரு தலையங்கத்தில் விளக்கி இருக்கிறேன். எனவே, "தாய்க்கு பின் தன்மகள்" என்பதே பொருந்தும் என்று உணர்கிறேன்; இதை உணர்ந்தவுடன் நான் - மீண்டும் பிறந்ததாய் நம்பினேன்! எனவே,  இது முதல் பிறந்தநாள் தானே?

        என்மகள் - முதலில், அப்பா! "ஹாப்பி பர்த்டே" என்றாள்; பின், உங்களுக்கு இன்னைக்கு "ஹாப்பி பர்த்டே"வா? என்றாள்; ஆம், என்றேன்!! "கேக்" வாங்கிட்டீங்களா? என்றாள்! இல்லை என்றேன்; ஏன் என்றாள்!! நீ தான் என்னுடன் இல்லையே! என்றேன். பின் - தீபா-அக்கா, அரவிந்த், தென்னவன் (என் தமக்கை மற்றும் தமையன் பிள்ளைகள்) எல்லாம் வந்திருக்காங்களா?? என்றாள்! இல்லை என்றேன்; ஏன் என்றாள்? அவளின் பிறந்த-நாளுக்கு எல்லோரும் வந்து வாழ்த்தியது போல் (அல்லது உடனிருந்தது போல்) தன்-தந்தையின் பிறந்த நாளுக்கு எல்லோரும் இருப்பார்கள்/இருக்கவேண்டும் என்று எதிர்ப்பார்த்திருக்கிறாள்! என் அம்மாதான் ஒவ்வொரு முறையும் - சாப்பிட்டியா? என்ன சமைச்ச?? என்று உணர்வும், உறவும் சார்ந்து விசாரிப்பார்! அதன் பின், என் தமக்கை - அவ்வப்போது விசாரிப்பார்!! நான், என்னுடைய எல்லா உறவுகளையும் - இம்மாதிரி அவ்வப்போது விசாரிப்பினும் - இவ்விருவர் தவிர வேறெந்த உறவும் என்னை இப்படி விசாரித்ததில்லை - இப்போது, என்மகள் சேர்ந்திருக்கிறாள்!

என்மகளுக்காகவாவது - இனி, என்னுடைய பிறந்தநாளை கொண்டாடவேண்டும்!!!

ஞாயிறு, ஆகஸ்ட் 04, 2013

காதலும், காமமும்...

(காதலை, காமத்தால் உணர்த்தலாம்! காமத்தை, காதலால் உணர்த்தமுடியாது!!)

      காதலும், காமும்! இத்தலையங்கத்தை எழுதவேண்டும் என்று முடிவெடுத்து பலமாதங்கள் ஆகின்றது!! சில, மிகவும் ஆழமான கருத்துக்கள் கொண்ட தலையங்கங்கள் எழுதிய பின்னும் - இதை எழுத மட்டும் ஓர் இனம்புரியாத தயக்கமும், பயமும் கலந்து  இருந்து வந்தது. இதற்கு முதற்காரணம், காமம் என்பதை ஏதோ ஒர்-தவறான விசயம் போன்று பார்க்கும் ஓர் சமுதாயத்தில் நாம் இருப்பதே. நாம் என்னதான் முற்போக்கு சிந்தனைகளை வளர்த்துக்கொன்டாலும் - இம்மாதிரி சில விசயங்களில் இன்னமும் வெளிப்படையாய் இல்லை. நான் சொல்ல வந்த விசயத்தை சரியாய் சொல்லி இருக்கிறேன் என்று நம்புகிறேன்; இல்லையெனில், என் பார்வையை சரி செய்யுங்கள். இங்கே நான் எடுத்துக்கொண்டிருக்கும் "காமம்" வரையறைக்கு உட்பட்ட ஓர் ஆணுக்கும்-பெண்ணுக்கும் இடையே நடக்கும் ஓர் விசயம்; அதற்கு திருமணம் ஆகியிருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை! ஆனால், அடுத்தவரின் கணவன்/மனைவி-யாய் இல்லாதிருத்தல் வேண்டும்!! பெண்ணுக்கு உடன்பாடு இல்லாது அடையப்பெறும் காமம் பற்றி நான் இங்கே விவரிக்கவில்லை - மனைவியே ஆனாலும், அது கற்பழிப்பிற்கு சமம்!!! அதனால் தான் "வரையறைக்கு உட்பட்ட" என்று குறிப்பிட்டேன். காமம் என்பதை ஆழப்-புரியாது அல்லது காமத்தை வெல்லாது - காதல் என்பது இருவருக்குள் உண்மையாய், உறுதியாய் இருக்க வாய்ப்பேயில்லை. இதைத்தான் என்னுடைய புதுக்கவிதை ஒன்றில் "காதலும், காமமும் கலக்கும் கலவை" முக்கியம் என்று குறிப்பிட்டேன்.

         வெறும் காதல் மட்டுமே கொண்டு - காதலர்கள் வெற்றிபெற முடியாது என்பது என் அபிப்பிராயம்! காமம் அங்கே கலக்கவேண்டும்; அப்போது தான் காதல் நிரந்தரமாகும்!! இங்கே, காமம் என்றவுடன் "உச்சகட்டமான-நிகழ்வு" என்று தவறாய் எண்ணிவிடாதீர்கள்; அப்படி இருப்பினும் தவறில்லை!!!  சாதாரண தழுவலில், சாதாரண பேச்சில், சாதாரண தொடுதலில், சாதாரண பார்வையில் - இப்படி எதில் வேண்டுமானாலும் - நம்மை கவர்ந்த பெண்ணிடம்/ஆணிடம் காமத்தை கலக்கமுடியும். "காதலாகி, காதலாகி..." என்ற தமிழ்த்திரைப்பாடலை - இத்தலையங்கத்தை படித்த பின் மீண்டுமோர்-முறை கேளுங்கள்; ஆயிரம அர்த்தங்கள் சொல்லும்; அதில் கூறியிருப்பவை அனைத்தும் காமத்துடன் தொடர்புடைய செயல்கள் - ஆனால், காதலை வெளிப்படுத்த/விளக்க கூறப்பட்டவை.  கண்டிப்பாய், இந்த உணர்வு காதலி/மனைவி என்ற உறவிடத்தில் மட்டும் தான் கிடைக்கும். வேறு-விதமான பெண்களிடம் "கூடுதலாய்(கூட)" எளிதில் காமம் கிடைத்துவிடும்; ஆனால், "காதல்(சிறிதும்)" கிடைக்காது! கண்டிப்பாய், இங்கே "காதலுடன் கூடிய காமத்தை" விரும்பும்/வேண்டும் ஆண்-மக்களே அதிகம்!! இல்லையெனில், ஆண்களை விட அதிக எண்ணிக்கையிலல்லவா "விலைமாதர்கள்" இருக்கவேண்டும்? திருமணத்திற்கு முன் "காதல் தலைதூக்கி இருக்கவேண்டும்"; திருமணமான பின், "காமம் தலைதூக்கி இருக்கவேண்டும்" என்பது என் எண்ணம். ஆனால், இது முரண்பட்டு நடக்கும் போது தான் காதல், திருமண-வாழ்க்கை இவையிரண்டிலும் பிரச்சனைகள் பெரிதாகின்றன.

         இங்கே, இயற்கையால் அல்லது இறைவனால் - இன்னுமொரு முரண்பாடான விசயம் நடக்கிறது!  ஆணுக்கு காதல் என்பதை உணரத்தெரிந்த அளவிற்கு அதை உணர்த்த தெரிவதில்லை! பெண்ணுக்கு காமம் என்பதை உணர/அனுபவிக்க தெரிந்த அளவிற்கு அதை தேவையான நேரத்தில் பகிர்ந்தளிக்க தெரிவதில்லை!! ஆண், பெண் இருவரில் காதல் யாருக்கு அதிகம் என்ற போட்டி இருக்கலாம்!!! ஆனால், காமத்தில் அப்படி இருக்கக்கூடாது/இருக்கமுடியாது; காமம் என்பது கொடுப்பதுமல்ல; பெறுவதுமல்ல; அது பகிரப்படுவது! அதனாலேயே, அதில் இருவரின் மனமொத்த சம்மதமும் தேவைப்படுகிறது. காதலை - காமத்தை முன்னிறுத்தி பார்க்க ஆணுக்கும், காமத்தை - காதலை முன்னிறுத்தி பார்க்க பெண்ணுக்கும் இயற்கையா(ய்/ல்) விதிக்கப்பட்டிருக்கிறது. திருமணத்திற்கு முன், காதலர்கள் திருமணம் ஆகிவிட்டதை போன்றே பழகுகிறார்கள் - ஆனால், மேற்கூறிய காமம் மற்றும் காதல் இவையிரண்டின் முதன்மை (priority) ஆணுக்கும், பெண்ணுக்கும் வெவ்வேறாய் இருப்பதால் தான் பல பிரச்சனைகள் வருகிறது. திருமணம் ஆகாத இருவருக்குள் இப்பிரச்சனை வரும்போது - அது எளிதில்(தவறான வழியில்) தீர்க்கப்பட்டு விடுகிறது - அதவாது, பிரிந்துவிடுகின்றனர்!  திருமணமான இருவருக்குள் இப்பிரச்சனை வரும்போது கடிந்துகொண்டு(தவறான வழியில்) ஒன்றாய் வாழ முயற்சிக்கின்றனர் - ஒன்று குழந்தையை முன்னிறுத்தி அல்லது குடும்பத்தை முன்னிறுத்தி!! ஆக, இரண்டு சூழலிலும் இது பெரும்பான்மையில் தவறாகத்தான் போகிறது!!!

       திருமணமாகும் முன் - இப்பிரச்சனை வரும்போது, அவர்கள் பெரும்பாலும் பிரிந்துவிடுவதால் - "நீண்ட கால" அடிப்படையில்  அதன் பின் பிரச்சனைகள் எழ பெரிதும் வாய்ப்பில்லை. ஆனால், ஏதேனும் ஓர் காரணத்திற்காய் ஒன்றுசேர்ந்து இருக்கும் திருமண-வாழ்க்கையில் தான் பெரிதும் பிரச்சனைகள் வருகின்றன! இயல்பிலேயே பெண்கள் "காமம் வேண்டும்" என்பதை நேரடியாய் கேட்காதவர்களாய் இருக்கிறார்கள்; பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வளர்க்கப்பட்டதால் கூட இருக்கலாம்! அல்லது, ஆண் தானே வருவான் என்பதால் கூட இருக்கலாம்!! அதனால்தானோ என்னவோ, பிரச்சனை என்று வரும்போது - முதலில், அவர்கள் காமத்தை மறுத்துவிடுகின்றனர்! அதன் விளைவுதான், பிரச்சனை என்றவுடன் பிறந்த-வீட்டிற்கு சென்று விடுவது - அது அவர்களின் பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை; ஆனால், காமம் என்பது அவர்களுக்கு இரண்டாம்-பட்சம் என்பதால் தான் அதை செய்கிறார்கள்!!! ஒருவேளை, காமம் முதன்மையானது என்பதால் தான் - ஆண்  தன்னுடைய பிறந்த-வீட்டிற்கு செல்வதில்லையோ???!!! இங்கே, "மனைவி அமைவதெல்லாம்..." என்ற பாடல் நினைவிற்கு வருகிறது; அதில் ஓர் வரி வரும் "கணவனின் துணையோடு தானே, காமத்தை வென்றாக வேண்டும்..." என்று! ஆனால், இந்த வரி "மனைவியின் துணையிருந்தால் தானே, காமக்கழிவு வெளியாதல் கூடும்" என்றிருந்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. மேற்கூறிய ஒன்றை மீண்டும் கூற விழைகிறேன் - காமம் என்பது பகிரப்படுவது!!!

    காதல் சார்ந்த பிரச்சனை எனில், இங்கே முதலில் சொதப்புவது ஆண்கள் தான்! காமம் கிடைக்கவில்லை எனின், அவனுக்கு முன்பே-தெரிந்த அளவில் கூட காதலை வெளிப்படுத்துவதில்லை!! வாதத்திற்காய் சொல்லவில்லை - அவனுக்கென்று ஓர் பெண் இருக்கும்போது (திருமணமான பின்னோ அல்லது திருமணத்திற்கு முன்னோ) - ஓர் ஆண் காமத்தை வேறொரு பெண்ணிடம் தேடி செல்வதில்லை;  அவனுக்கு அந்த தைரியமும் குறைவு!! காமம் பகிரப்படாததால், கோபம் அடைகிறான்.  ஆணுடைய கோபம், பிரச்சனையை பெரிதாக்கிவிடுகிறது; அவனுடைய கவலை மேலும் விரிவடைகிறது! ஆனால், இங்கே கவனிக்கவேண்டியது - காமத்துடன் சேர்ந்து, காதலும் குறைகிறதென்ற பேருண்மை!!! காதல்(உம்) குறைந்தவுடன், அந்த உறவு ஒன்றாய் சேர்ந்து இருப்பினும் முறிந்ததற்கு சமம்!  இங்கே ஆண்களை 4 வகைப்படுத்தலாம்: 1. வெகு-சிலரே எனினும், காமத்தை - வன்முறையைக் கொண்டாவது  அடைபவர்; 2. வேறு வழியில்லை என்று இருப்பவர்; 3. வேறொரு பெண் மூலம் அடைபவர்; 4. 2 அல்லது 3-ல் எதை தேர்ந்தெடுப்பது என்று அல்லாடுபவர். சிறிதும் யோசிக்காது, என்னால் ஒன்று சொல்லமுடியும் - ஓர் 50 அகவையை தாண்டிய பிறகு - காமத்தை பின்னிறுத்தி பார்ப்பது இருவருக்கும் சாத்தியம்! அது இயல்பும் கூட!! ஆனால், 50 அகவைக்கு முன் எக்காரணத்திற்காகவும் காமத்தை மறுப்பது - இந்த உறவுகளுக்கு நல்லதல்ல!!! காதலை, காமத்தால் உணர்த்தலாம்; காமத்தை, காதலால் உணர்த்தமுடியாது. ஏனெனில், காதல் என்பது உணர்வு; ஆனால், காமம் என்பது உணர்ச்சி! மேலும்...

காதலின் வெற்றி - காமத்தை வெல்வதிலுள்ளது!!!

பின்குறிப்பு: முதலில், தலைப்பை "காமமும், காதலும்" என்று தான் யோசித்திருந்தேன்! தலையங்கத்தை எழுதும்போது தான் - முதலில், காமம் என்றிருப்பின் தவறாய் போய்விடுமோ என்றோர் அச்சம்!! அதனால், காதல் முதலில் வந்துவிட்டது; உண்மைதானே, காதல் இல்லையெனில் - அங்கே, காமம் உணர்ச்சியாய் இருப்பதில்லை - மாறாய், "வெறியாய்" இருக்கும்!!!

காதலின் சிகரம்???


காதல் - காமத்தின் அகரம்!
காமம் - காதலின் சிகரம்!!
அகரமில்லா, சிகரமும்;
சிகரமில்லா, அகரமும்;
"அஸ்த்திவாரம்" அற்ற
"அழகு-மாளிகை" - ஆபத்தானது!!!

கடனடைத்தான் நெஞ்சம்???


“கடன்பட்டான் நெஞ்சம்” - தெரியும்!
“கடனடைத்தான் நெஞ்சம்” ... ??
கவலைகளைக் கருவறுத்த
களிப்பு-அம்புகளின் தஞ்சமது!!!

நண்பர்கள் தினம்!!!



        இன்று நண்பர்கள் தினம்! பலரும், இன்று தங்களது நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் கூறியவண்ணம் உள்ளனர். எனக்கும், சில வாழ்த்துக்கள் வந்தன; அவற்றிற்கு நன்றிகளும் தெரிவித்தேன்!! சமூக-வலைதளங்களிலும் இது சார்ந்த பல வாழ்த்துக்களையும், செய்திகளையும் காண முடிந்தது. இதுபற்றி என்னுடைய பார்வையை எழுதவேண்டும் என்று தோன்றியது; ஒரு மணி நேரத்திற்குள், இந்த சிந்தனை வந்து அதை மனதங்கமாய் எழுதி பதிவும் செய்துவிட்டேன். இது என்னுடைய பார்வை தான்! இதில் எவருக்கு மாற்றுக்கருத்து இருப்பினும் - நான் மறுப்பின்றி ஏற்றுக்கொள்கிறேன். மிகப்பெரிய என்ற அளவில் இல்லை எனினும் - எனக்கும் ஓர் நெருங்கிய நட்பு வட்டம் உள்ளது; அதிலும் என்னுடைய முக்கிய நண்பர்கள் என்று சிலரை அவ்வப்போது என்னுடைய வலைப்பதிவில் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறேன். நானோ அல்லது என் நட்பு-வட்டத்தில் எவரோ இதுவரை "நண்பர்கள் தினம்" என்று சொல்லப்படும் இந்த நாளில் - இதுவரை வாழ்த்துக்கள் சொல்லியதில்லை. ஓரிரு முறை, எதேச்சையாய் தொலைபேசியில் உரையாடிய போது -  நானும், சுரேசும் "ச்சும்மா" வாழ்த்து சொல்லியிருக்கிறோம். 

      "அன்பே சிவம்" படத்தில் வருவது போல் "இது என்ன, காதலா? அடிக்கடி சொல்லிக்கொண்டு இருக்க??" என்றே வினவத் தோன்றுகிறது. எனக்கு இந்த வாழ்த்துக்கள் கூறுவது பிடிக்கவில்லை என்பதை காட்டிலும், இதை சார்ந்த ஓர் பயம் எழுகிறது. காதலுக்கு அடுத்து அல்லது நிகராக - நாம் அனைவரும் நட்பை பார்க்கிறோம் என்பதை ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். என்னுடைய பயம் எல்லாம், இதுமாதிரி வாழ்த்துக்கள் சொல்லி - நட்புவட்டத்திற்குள்ளும் பெரிய எதிர்ப்பார்ப்புகளை உருவாக்கி விடுவோமா! என்பதுதான்; எதிர்பார்ப்பு இல்லாதது தானே நட்பு!! அதனால் தான், பிறந்தநாள் வாழ்த்து சொல்லாததால் காதலர்கள் இடையே வரும் பிரச்சனைகள் போல் - "நண்பர்கள் தின" வாழ்த்து சொல்லவில்லை என்று நண்பர்களிடையே பிரச்சனை வந்துவிடுமோ என்ற ஐயம் வருகிறது. இது போல், அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்ற பல தினங்களில் எனக்கு உடன்பாடு இல்லை. நம்முடனே, நாமாய் இருக்கும் நண்பர்களை...

வாழ்த்துவதற்கு - தனியே எதற்கோர் தினம்???      

தமிழ் இனி...



     என் நண்பர் - ஜனார்தன் ஜெயராமன் - பரிந்துரை செய்ததன் பேரில், சமீபத்தில் "தமிழ் இனி" என்றொரு குறும்படத்தை பார்த்தேன். பெரும்பாலும், உங்களில் நிறைய பேர் அதை பார்த்திருக்கக்கூடும்! இரண்டு தலைமுறை கடந்து வெளிநாடு-வாழ்  தமிழ்குடும்பம் எப்படி இருக்கும் என்பதை அழுத்தமாய் பதிவு செய்திருக்கின்றனர்.  ஆனால், இதனால் தமிழ் அழிந்துவிடும் என்ற கூற்றும் அது சார்ந்த கவலையும் தேவையற்றது. ஏனெனில், தமிழ் வாழ என்ன செய்யவேண்டும் என்று முன்பே கூறியிருக்கிறேன்.  வெளிநாட்டில் வாழும் பெற்றோர் மற்றும் அவர்களின் குழந்தைகள் வளரும் சூழல் அவ்வாறு உள்ளது என்பதை எள்ளளவும் மறுப்பதற்கில்லை!! அங்கே, தமிழ் தேவையில்லை என்பதும் ஒப்புக்கொள்ளக்கூடியதே!!! அந்த பெற்றோருக்கோ அல்லது குழந்தைகளுக்கோ தமிழில் எழுத/படிக்க தெரியவில்லை என்பதை வேண்டுமானால் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், உடைந்து போன-நிலையிலாவது தமிழில் பேசத்தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்ளவே முடியாது. 

   அந்த குறும்படத்திலேயே, வேற்றுமொழி பேசும் ஓர் தாயும் அவரின் மகனும் - அவர்களின் தாய்மொழியில் உரையாடும் ஓர் சிறிய-காட்சி வரும்! அதைப்பற்றி இயக்குனர் பெரிதாய் விளக்கிடவில்லை; அது தேவையுமில்லை என்றே தோன்றுகிறது - எங்கிருந்தாலும், விருப்பமிருப்பின் தாய்மொழியில் கண்டிப்பாய் பேசிடமுடியும் என்று எடுத்துக்கொள்ளலாம்! அல்லது, தாய்மொழி உரையாடல்தான் சிறந்தது என்றும் எடுத்துக்கொள்ளலாம். இங்கே, தாய்மொழி மீது பெற்றோருக்கு ஓர் மதிப்பும், ஈர்ப்பும் இருப்பின் - எந்த தேசத்திலிருப்பினும் தாய்மொழியில் தடையின்றி பேசமுடியும் என்று தோன்றுகிறது. என் மச்சானின் மகளும், அது போன்று பல குழந்தைகளும் - "சௌதாம்ப்டன்" நகரில் இருந்துகொண்டே எப்படி தமிழை கற்கிறார்கள் என்பதை முன்பே விளக்கி இருந்தேன். அம்மாதிரி, தமிழில் எழுத/படிக்க கூட அவசியமில்லை; குறைந்தபட்சம் தமிழில் பேச வைக்கவாவது முயலலாமே?!  ஏனெனில், தாய்மொழி தெரியாத குழந்தையின் சிந்தனை...

சிறப்பாய் அமைந்திடுதல் சாத்தியமன்று!!!

ஞாயிறு, ஜூலை 28, 2013

என்ன விதமான மனநிலை இது???




       நாம் ஒவ்வொருவரும், ஓர் விசயத்தை ஏதாவது ஓர் சூழ்நிலையில் கவனித்திருக்கக்கூடும்! இறந்த ஒருவரைப் பற்றி பெரும்பாலும் எவரும் தவறாய் விமர்சிப்பது இல்லை!! இறந்தவர் ஓர் பெரிய-போக்கிரியாய் அல்லது பெரிய-சர்வாதிகாரியாய் இருந்திருப்பினும் - இறந்த பின் அவரைப் பற்றி பெரிதாய் விமர்சிப்பது இல்லை; அல்லது சில நாட்களுக்கு பிறகு விமர்சிப்பது (குறைந்து/நின்று) விடுகிறது!!! "விஸ்வரூபம்" திரைப்படத்தில் ஓர் காட்சி வரும்; தீவிரவாதத்துக்கு உதவிய ஒருவர் இறந்துவிடுவார். அவரைப் பற்றிய கலந்துரையாடல் வரும்போது, ஓர் பெண்மணி, அவர் தான் இறந்துவிட்டாரே; அவரைப்பற்றி ஏன் விமர்சிக்கவேண்டும்? என்பார். உடனே, கமல் "இறந்துவிட்டால், எல்லாவற்றையும் மன்னித்துவிட வேண்டுமா? அப்போ "ஹிட்லரையும்" மன்னித்துவிடலாம் என்பார்". காண்பதற்கு இது ஓர் சாதாரண உரையாடல் போல் தோன்றினாலும், ஆழ்ந்து பார்த்திடின் - சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட ஓர் குடிமகனின் கோபத்தை/அக்கறையை அது உணர்த்துவது புரியும். இந்த நிகழ்வை, இறப்பதற்கும் செய்த தவறுக்கும் என்ன தொடர்பு என்பது போல் பல-கோணங்களில் விவாதிக்க முடியும் - நான், தொடர்ந்து வலியுறுத்துவது போல், இது தான் கமல்! அவரை "உதட்டோடு முத்தம்" கொடுப்பவர் என்ற ஓர்-கீழ்த்தரமான வட்டத்துக்குள் பார்ப்பது முறையல்ல. எப்படியாயினும், ஒருவர் இறந்துவிட்டால் அனைத்தையும் மறந்துவிட்டு அவரை தூற்றிட்ட உறவுகள் அனைத்தும் - அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு "உண்மையாய்" அழுவர்.

        இதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்; பார்த்து கொதித்திருக்கிறேன்! இது கமல் கேட்டது போல், ஏன் மன்னிக்கவேண்டும் என்றல்ல!! என்னுடைய பார்வை, வேறுவிதமாய் இருந்து வந்திருக்கிறது; இறந்தவுடன் (மன்னித்/மறந்)துவிட்டு அவரின் இறுதி-நிகழ்ச்சியில் அழுகிறீர்களே?! அதை ஏன் அவர்கள் உயிரோடு இருக்கும்போது செய்யவில்லை? என்ற கோபம் எனக்கு தலைதூக்கும்!! என்னதான், ஒருவர் இறந்தவுடன் வரும் அழுகை "உணர்ச்சி-வெடிப்பின் (Emotional Burst)" வெளிப்பாடு எனினும் - அதில் ஓர் உண்மை இருக்கிறது என்பதை எவரும் மறுக்கவோ/மறைக்கவோ முடியாது. இருப்பினும், அந்த உணர்வு ஏன் - சம்பந்தப்பட்டவர் உயிரோடு இருக்கும்போது வருவதில்லை? என்னைப் பல நாட்கள் உறுத்திக்கொண்டிருக்கும் சிந்தனை இது; இருக்கும்போது ஒருவரை சிறிதும் மதிக்காது, அவர் இறந்தபின் அவருக்காய் கதறி-அழும் செயல் எனக்கு பெருத்த அபத்தமாய் தோன்றும்; இறந்தவருக்கு அந்த செயல் - தெரியப்போவதில்லை! "உணர்ச்சி-வெடிப்பின்" காரணமாய் விளைவது(தான்) எனினும் - அது பெருத்த தவறாய் எனக்கு தோன்றும். அதனாலேயே, என்னுடைய அத்தை ஒருவர் இறந்த போது நான் அவரின் இறுதிநிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை; பெங்களூரில் இருந்து கிளம்பி, பின் நின்றுவிட்டேன். எங்கள் உறவுகள் அவர் இருக்கும்போது செய்த பலசெயல்கள்  என்னுடைய நினைவுக்கு வந்து சென்றது; இதையெல்லாம் மீறி அவர்களின் "அர்த்தமில்லாத-அழுகையை" பார்க்க என் மனது ஒப்புக்கொள்ளவில்லை!!!

         இம்மாதிரி ஓர் செயல் எப்படி நடக்கிறது - என்ன விதமான மனநிலை இது??? இதை தீவிரமாய் ஆழ்ந்து யோசிக்கும்போது - முதலில் புரிந்தது, இவர்கள் - சம்பந்தப்பட்டவர்கள் உயிரோடு இல்லை என்பதை உணர்கிறார்கள்; அவர்கள் மேல் இனியும் கோபமாய்/ஆதங்கமாய் இருப்பதில் எந்த நியாயமும் இல்லை என்று உணர்வதாய் பட்டது! இது பாராட்டப்படவேண்டிய செயல் தானெனினும், இந்த நிகழ்வு சம்பந்தப்பட்டவர் உயிரோடு இருக்கும்போது ஏன் நிகழவில்லை என்ற கேள்வி வந்தது!? ஒருவேளை, அவர்கள் இறந்துவிடுவார்கள் என்று தோன்றவில்லையா!? இருக்கக்கூடும்; ஏனெனில், எழுத்துசித்தர்-பாலகுமாரன் அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவது போல் "நமக்கு முன்னே பிறந்தவர், நம்முடன் பிறந்தவர், நமக்கு பின் பிறந்தவர் - இப்படி அனைவரும் இறந்தாலும்; நாம்(மட்டும்) உயிர்த்திருப்போம் என்று நாம்-ஒவ்வொருவரும் திடமாய் நம்புகிறோம்" என்ற கூற்றுதான் நினைவுக்கு வருகிறது. எத்தனை பேருண்மை இது?! நாம் இறந்துவிடுவோம் என்று நாம் நம்புவதே இல்லை - எந்த நிலையிலும்! இதை ஓர் அம்சமாய் "மரணத்திற்கு பிறகு, என்ன?" என்ற தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். நம்முடைய மரணத்தையே நாம் நம்பவில்லை எனும்போது - நம்முடைய எதிரியின் மரணத்தை பற்றி நாம் யோசிப்பதில்லை என்பதில் பெருத்த-ஆச்சர்யம் இல்லை என்று படுகிறது. இதை எண்ணும் போது, "மரணத்திற்கு பிறகு, என்ன?" என்ற தலையங்கத்தை மேலும் விளக்கவேண்டும் என்று தோன்றியது.

    அத்தலையங்கத்தில் குறிப்பிட்டது போல் என்னுடைய சுற்றமும், நட்பும் செய்த/செய்யும் பல செயல்களை மரணத்திற்கு பின் ஒன்றுமேயில்லை என்ற உண்மையை உணர்ந்ததால்தான் என்னால் மன்னிக்கவும்/ மறக்கவும் முடிகிறது. கண்டிப்பாய், முதலில் நம்முடைய மரணத்திற்கு பின் எந்த காழ்ப்புணர்ச்சியும் இருக்கப்போவதில்லை என்பதை நாம் உணரவேண்டும். அதேபோல், நம் எதிரியாய் நினைக்கும் எவருடைய மரணத்திற்கு பின்னும் நம்முடைய காழ்ப்புணர்ச்சிகள் எதுவும் இருக்கப்போவதில்லை என்ற உண்மையையும் உணரவேண்டும். அதாவது, காழ்ப்புணர்ச்சியால் விளையும் எந்த செயலும் எவரேனும்-ஒருவரின் எவரின் மரணத்திற்கு பின் நிலைக்கப்போவதில்லை என்று விளக்கமாய் கூறிடவேண்டும் என்று தோன்றியது. பின் ஏன், நாம் உயிர்த்திருக்கும்போதே இதனை உணர்ந்து நம்-மனதை பண்பட செய்யக்கூடாது?! அதுவும், இங்கே எவரின் வாழ்வும் நிரந்தரமில்லை எனும் நிலையில்லாத-வாழ்க்கையில், முடிந்தவரை நாம் நம்முடைய காழ்ப்புணர்ச்சிகளை விரைவில் மாற்றிகொள்வது அவசியமில்லையா?! இதற்கு ஏன் ஒருவரின் மரணம் வரை காத்திருக்கவேண்டும்! மறுப்பின்றி, மண்ணில் பிறந்தோர் அனைவரும் இறக்கத்தான் போகிறோம்! எப்போது என்பது மட்டும்-தான் எவருக்கும் தெரியாது! பின் ஏன், இம்மாதிரி எண்ணத்தை முயன்று உருவாக்கி நம்மை நாமே செம்மைப்படுத்திக் கொள்ளக்கூடாது?! முயன்றால் முடியாதது எதுவும் இல்லை; இந்த கணத்தில் இருந்தாவது முயன்று தான் பார்ப்போமே!!!

       இந்த முயற்சியில் நாம் வென்றால் - நாம் இழப்பது நம்முடைய காழ்ப்பு/ பகைமை உணர்ச்சிகளை தான்! அந்த இழப்பு நம்முடைய வாழ்க்கையை வெற்றியடையச்-செய்யும் என்பது தீர்க்கமான உண்மை. இம்மாதிரியான பல சிந்தனைகளுக்கும் வித்து என்-சிறிய வயதில் என்னுள்ளே எழுந்த "இறந்த பிறகு என்னவாய் ஆவோம்?" என்ற அந்த கேள்விதான். என்னுள் எழுந்த அந்த கேள்வியும்; அந்த கேள்வியால் விளைந்த நன்மைகளும் இன்னும் பலரையும் சென்று சேர்ந்திடவேண்டும் என்ற நல்லெண்ணத்தால்தான் - இதை  என்னுடைய கடமையாய் எண்ணி மீண்டும், மீண்டும் வலியுறுத்துகிறேன். இறந்தபின் நாம் சிந்தும் கண்ணீரால், எந்த பலனும் இருக்கப்போவதில்லை!  அல்லது அந்தநேரத்தில் நிகழும் மனமாற்றம் சம்பந்தப்பட்டவருக்கு நிச்சயம் தெரியப்போவதில்லை! பின், எதற்காய்/எவர்க்காய் இம்மாதிரியான காழ்ப்பு/பகைமை உணர்ச்சிகளை கொள்ளவேண்டும்? இம்மண்ணுலகில் இருக்கும் வரை - நம்மால் இயன்றவரை இத்தகைய உணர்ச்சிகளை விட்டுவிட்டு - சம்பந்தப்பட்டவர் உயிர்த்திருக்கும் போதே அன்பு பாராட்ட முயல்வோம்!! இல்லையெனில், "என்ன விதமான மனநிலை இது?" என்ற கேள்வி எவர்-மூலமாவது தொடர்ந்துகொண்டே தானிருக்கும். என்ன ஓர் விந்தை! மரணம் என்ற ஓர் நிகழ்வு எத்தனை விதமான யோசனைகளைகளுக்கு வித்திடுகிறது? மரணத்தின் மர்மம் மட்டும் தெரிந்துவிட்டால், வாழ்க்கை சுவராசியமாய் இருக்காது போலும்! அதனால் தானோ, இன்னமும் தொடர்கிறது இந்த கேள்வி...

இறந்த பிறகு என்ன ஆவோம்???                     

எத்தனை பேருக்கு கிடைத்ததிது/கிடைக்குமிது???




    மேலிருக்கும் புகைப்படங்கள், என்மகளின் 4-ஆவது பிறந்தநாள் (சூலை 2, 2013) கொண்டாட்டத்தின் போது எடுத்தவை! இரண்டு புகைப்படங்களிலும் இருப்பவர் - என்மகளின் வகுப்பு-ஆசிரியை!! அவரை இந்த கொண்டாட்டத்திற்கு அழைத்தது - முழுக்கமுழுக்க என்னுடை செயல். அவரை இம்மாதிரி விழாவிற்கு அழைத்தது சரியில்லை என்று (நேரிடையாகவும்/மறைமுகமாகவும்) சிலர் கூறினர். அவர்கள், இந்த நிகழ்வை எந்த விதத்தில் பார்த்தனர் என்று தெரியவில்லை; என்னுடைய பார்வையும் கோணமும் வேறானது. அவர்களின் கூற்றைப் போல், என்மகளும் - அவளின் நண்பிகளும் சிலமணித்துளிகள் கொண்டாட்டத்தை மறந்து உரைந்துபோய் நின்றது உண்மை! அதைத்தான் முதல் புகைப்படம் உணர்த்துகிறது - குறிப்பாய், என்மகள்! அபூர்வமாய் தான் அவள் இப்படி "பவ்யமாய்" இப்படி நிற்பாள்!! ஆனால், அதன்பின் அவர்கள் இயல்பு-நிலைக்கு திரும்பி விட்டனர். ஆசிரியை/ஆசிரியர் என்பவர் "ஒழுங்க படிக்கலைன்னா??!!" என்று குழந்தைகளை மிரட்டுவதற்காய்-மட்டும் அல்ல!!!

   நம்மில், எத்தனை பேருக்கு 4 வயதில் நமக்கு சொல்லிக்கொடுத்த ஆசிரியை/ஆசிரியரை நினைவிருக்கிறது? 12 ஆண்டுகளும் ஒரே பள்ளிக்கூடத்தில் படித்த/படிக்கும் சிலருக்கு இது சாத்தியமாதல் கூடும்! எவருக்காய் இயற்பியலில் ஆராய்ச்சி செய்யவேண்டும் என்று எண்ணினேனோ, அந்த 12-ஆம் வகுப்பு ஆசிரியரை(யே) அதன் பின் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை - அவருக்காய் நான் ஆராய்ச்சி-படிப்பை படித்தேன் என்பது கூட அவருக்கு(இன்றுவரை) தெரியாது!! அவரை தொடர்பு  கொள்ள இன்றுவரை முயன்றுகொண்டிருக்கிறேன் - இது தான் எதார்த்தம்!!! ஆனால், என்மகளுக்கு - அவளின் ஆசிரியையுடன் அவளின் பிறந்தநாளன்று புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது! அதிலும், 2-ஆவது புகைப்படத்தை போன்றொரு நினைவுச்சின்னம் எத்தனை பேருக்கு கிடைத்திருக்கிறது? வெகுநிச்சயமாய், என்மகள் ஓர் 20 ஆண்டுகள் கழித்து இதற்காய் என்னை மெச்சுவாள் என்ற நம்பிக்கை இருக்கிறது; எனக்கு அதுதான் முக்கியமாய் படுகிறது...

மற்றவர்களின் அர்த்தமில்லாத விமர்சனம் அல்ல!!!    

Quinoa எனும் "திணை-அரிசி"




      என் நண்பன் "சுரேஷ் பாபு" வெகுநாட்களாய் "Quinoa" என்று ஒன்று உள்ளது; அது அரிசிக்கு மாற்றானது - அது உடலுக்கு நல்லது என்று கூறிவருகிறான். என்னுடைய உடல் பருமன் கூடிக்கொண்டே போவதால் - என்னை அதை உண்ணும்படி வற்புறுத்தினான்! நானும், போர்த்துக்கல் நாட்டில்  இருந்தபோதும்; இங்கே அபு-தாபியிலும் அதை தொடர்ந்து  தேடிக்கொண்டே இருந்தேன்!! ஆனால், இதுவரை "Organic" மூலம் பயிரடப்பட்ட விலையுரந்த "Quinoa"-வையே பார்த்தேன். நானும், அது அவனிருக்கும் "அமெரிக்கா" போன்ற நாடுகளில் தான் கிடைக்கும் என்று விட்டுவிட்டேன். என் சமீபத்திய இந்திய-பயணத்தின் போதுதான் "Quinoa" என்பது "திணை-அரிசி" என்று உணர்ந்தேன். நண்பனாலும், அது எப்படி இருக்கும் என்று விளக்கமுடிந்ததே தவிர அது "திணை-அரிசி" என்று தெரியவில்லை. எனக்கு பெருத்த அதிர்ச்சியாய் இருந்தது; ஏனெனில், நான் சிறு-பிள்ளையாய் இருந்த போது என்-அம்மா திணை-அரிசியில் பல உணவு வகைகள் செய்து கொடுத்தது நினைவிலிருக்கிறது.

     இப்போது என்னுடைய கிராமத்தில் கூட கேழ்வரகு, கம்பு போன்ற பல தானியங்களை போல் "திணை-அரிசி"-யின் புழக்கமும் மலிந்துவிட்டது. திணை-அரிசி அங்கங்கே இயற்கையாய் விளைவதை கூட என் கிராமத்தில் கண்டிருக்கிறேன். இந்த உணவு வகைகள் குறையத்-துவங்கி, பின் அதை உண்போர் "வசதி-இல்லாதவர்" என்ற உருவகமும் தோன்ற ஆரம்பித்தது. திணை-மாவு, கேழ்வரகு-மாவு, கம்பு-மாவு போன்ற வேறு-வகைகளில் உண்டனர்; பின், அதுவும் அறவே நின்றுவிட்டது. இப்போது, உணவகங்களில் "Raagi-Dosa" தின்பது வசதியானோர் என்றாகிவிட்டது. ஏன்டா! அதைத்தானடா கிராமத்தில் "கூழ்" என்றும் முருங்கை-இல்லை சேர்த்து "கேழ்வரகு-அடை" போன்று கொடுத்தனர் என்று கூவத்தோன்றுகிறது! இப்போது - சென்னை, புதுவை பொன்ற நகரங்களில் "கூழை" சாலையோர கடைகளில் வாங்கி-குடிப்பது வெகுவாய் பெருகிவிட்டது!! திணை-அரிசியும் மறுபிரவேசம் எடுக்குமோ??? இதுபோன்ற மாற்றங்கள் தானாய் விளைந்ததாய் தெரியவில்லை! சரி...

இதை எவர் குற்றம் என்று கூறுவது???    

எத்தனை மென்மை???



     சென்ற வாரம் - ஓர் மாத கால விடுப்பில், இந்தியாவிலிருந்து - இங்கே அபு-தாபி வந்த பின், வழக்கமான "வீடு சுத்தம்" செய்யும் வேலையை செய்தேன். இந்த முறை, பெரிதும் மெனக்கிட்டு 3 மணி நேரம் சுத்தம் செய்தேன்; முதலில் வீட்டை கூட்டி-பெருக்கிய பின் கிடைத்த "தூசுக்கும்பலை" பார்த்ததும், எனக்கு பெருத்த ஆச்சர்யம்! உடனே, அதை புகைப்படமாய் எடுத்தேன். அதைத்தான் இந்த படைப்பின்-படமாய் தந்துள்ளேன். இப்படியுமா, மென்மையான தூசுகள் இருக்கும் என்று ஓர் ஆச்சர்யம்!! முதலில் வீட்டை கூட்ட ஆரம்பித்த போது இத்தனை சேரும் என்று நினைக்கவே இல்லை. இங்கே, தூசு மிகவும் மென்மையாய், சிறிதாய் இருக்கும் என்று உணர்ந்திருக்கிறேன். 6 மாத குழந்தை வைத்திருக்கும் என் தமக்கை-மகனிடம் கூட, குழந்தையை பத்திரமாய் பார்த்துக்கொள் - இங்கிருக்கும் தூசு அத்தனை மென்மை என்று பலமுறை எச்சரித்து இருக்கிறேன். எனினும், அந்த துகள்களை ஒன்றாய் சேர்த்து, அத்தனை அருகில் பார்த்தவுடன் ஓர் பரவசம் அடைந்தேன். 

       குளிர்பிரதேசங்களில் காணும் "பனிப்படலம்" போல், சிலமுறை "தூசுப்படலத்தை" பனிப்படலம் போலவே வாகனம் ஓட்டும்போது உணர்ந்திருக்கிறேன். எனினும், மேற்கூறிய நிகழ்வு என்னை அது பற்றி நிறைய யோசிக்க வைத்தது. இந்த சூழல் தான், இங்கிருக்கும் அமீரக-மக்களை அப்படியொரு உடையை அணிய வைத்திருக்கிறது என்று எண்ணத் தோன்றியது. குறிப்பாய், பெண்கள்! கண்ணை மட்டும் விடுத்து உடல் அத்தனையையும் துணியால் போர்த்த - இது முதன்மையான காரணமாய் இருக்கவேண்டும். உடையும், உணவும் - சூழல் சார்ந்து அமைவது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தானே?! இது போல், பலவிசயங்கள் என்னுள் எழுந்தன; ஆயினும், இது "மனதங்கம்" என்பதால் விளக்கமாய் எழுதப்போவதில்லை. உங்களுள் எழும் மற்ற விசயங்களை, "விருப்பிருந்து" வாய்ப்பு-கிடைப்பின் பின்னூட்டமாய் பகிருங்கள். கற்பனையும், அதை சார்ந்த விளக்கங்களும் இங்கிருந்து/இதிலிருந்து தான் எழவேண்டும் என்ற நியதியில்லை! எனவே...

விரையட்டும், உங்கள் கற்பனைக்-குதிரை!!!    

சனி, ஜூலை 27, 2013

முன்னுரை...



      இந்த வாரம் முதல் எனக்கு பிடித்த விசயங்களை, நான் வியந்து பார்த்த விசயங்களை சுருக்கமாய் எழுத எத்தனித்து, இன்னுமொரு பிரிவை உருவாக்கி இருக்கிறேன். விவரித்து எழுதும் வடிவத்தை - வழக்கமாய், எல்லோரும் அழைப்பது போல் - "தலையங்கம்" என்று குறிப்பிடுவது போல் அல்லாது, ஓர் புதிய வடிவில் பெயரிடுதல் வேண்டும் என்று தோன்றியது. எனவே, சிறிது நேரம் செலவிட்டு ஓர் பெயர்-வடிவத்தை கண்டிட்டேன்; இவ்வாறு, வேறெவரும் குறிப்பிடுகின்றனரா என்று எனக்கு தெரியவில்லை! இந்த பகுதியை "மனதங்கம்" என்று அழைக்க விரும்புகிறேன். மனிதனின் உடலில் முதலில் முக்கியமானது "தலை" என்பதால் தான் விவரித்து எழுதும் விசயத்தை "தலையங்கம்" என்று அழைப்பதாய் தோன்றியது!! "மனம்" என்பது "தலை"-க்கு அடுத்த முக்கியமான பகுதி என்பதால்தான் இந்த பிரிவை "மனதங்கம்" என்று பெயரிட்டிருக்கிறேன். மேலும், இதில் என் மனதில் பட்ட/மனதை தொட்ட விசயங்களை எழுத எத்தனிருப்பதாலும், இந்த பெயரிடுதல் மிகவும் பொருத்தமாய் இருப்பதாய் உணர்ந்தேன். இந்த பகுதியின்-பெயர் புதியதாய்/பொருத்தமாய் இருப்பதாய் நீங்களும் நம்புவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது - அவ்வாறே, இந்த பகுதியில் வரும் படைப்புகளும் இருக்கும்.

உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிகள் பல!!!