சமீபத்தில் ஒரு தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது போல், 2 மாதங்களுக்கு முன்னர் தான் வாடகை-வீட்டை மாற்றினேன். முன்பிருந்த இடம் மிகப்பிரம்மாண்டமானது; அங்கே பெரிய நீச்சல்-குளம், உடற்பயிற்சி மையம் என்று சகல வசதிகளும் இருந்தன. வாடகையும் அவைகளுக்கும் சேர்த்தே வசூலிக்கப்பட்டது; ஆயினும், அங்கே என்மகள் வந்திருந்தபோது (சென்ற/செல்வ)தோடு சரி. அவள் இல்லாமல், ஒரு நாளும் சென்றதில்லை; செல்லவேண்டும், செல்லவேண்டும் என்று நினைப்பேன். நினைப்பதோடு சரி; முனைப்பேதும் செய்(வ/த)தில்லை. இப்படியாய், அந்த வீட்டையும் காலி செய்தாகி விட்டது; புதிய வீட்டிற்கு சென்ற பின், அங்கே கிடைத்த 2 நட்புகளுடன் சேர்ந்து ஒரு "கிளப்பில்" சேர்ந்து இருக்கிறேன். அபுதாபிக்கு நான் வந்த அடுத்த நாள் வாங்கிய "டென்னிஸ்-ராக்கெட்டை" ஒருவழியாய் அந்த கிளப்பில் சேர்ந்தவுடன் உபயோகிக்க ஆரம்பித்து விட்டேன் - 13 மாதங்கள் கழித்து! அப்படியே, ஒருவழியாய் அங்கிருக்கும் உடற்ப்பயிற்சி மையத்திற்கும் செல்ல ஆரபித்திருக்கிறேன்.
மேலிருக்கும் புகைப்படங்கள் அங்கே எடுக்கப்பட்டவையே! இப்போது 15 கி.மீ. தொலைவு சென்று பயிற்சி மேற்கொள்ளும் செயலை; முன்பு வீட்டின் அருகிலேயே இருந்தும் ஏன் செய்யவில்லை?! என்ற கேள்வி எழுந்தது. ஒருவேளை, இப்போது பணம் கட்டி சேர்ந்திருப்பதால் இருக்குமோ?! என்ற கேள்வியும் எழுந்தது. அப்படி என்றால், அது தவறில்லையா?! உடல்நிலையை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தானே மேலோங்கி இருக்கவேண்டும்? ஏன், பணம் கட்டிவிட்டோம் என்பதால் மட்டும் செய்ய தோன்றியது? ஏன் உடல்நலன் மேல் ஒரு பற்றும்/அக்கறையும் இல்லாமல் போயிற்று? ஏன், நம் வளர்ப்பு முறை அதற்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறது? ஒருவேளை, எனக்கு மட்டும்தான் இப்படியா? என் சுற்றம் சார்ந்து மட்டும் தான் இப்படியா? உடல்நலன் பேணுதல் - ஒரு ஒழுக்கமாய் கற்பிக்கப்பட்டு இருக்கவேண்டாமா? என்று பல கேள்விகள் எழுந்ததன. இனிமேல், இதை ஒரு ஒழுக்கமாய் செய்யவேண்டும் என்று தோன்றியது...
எதனால் ஏற்பட்டது என்பதைக் காட்டிலும்; கடைபிடித்தல்தானே முக்கியமானது?!
பின்குறிப்பு: 7 ஆண்டுகளுக்கு பிறகு, நான் மீண்டும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்ததற்கு கீழுள்ள 2 காரணிகள்-தான் மிகமுக்கியம்.
- "அப்பா! என்னை மாதிரி 'ஸ்லிம்'மா ஆகுங்கப்பா; நீங்க 'குண்டா' இருக்கறீங்க" என்று அடிக்கடி என் மகள் சொல்வது.
- என் 2-ஆம் தாய் என்று நான் சொல்லும் என் நண்பனின் தாய், வெகு சமீபத்தில் இப்படி சொன்னது: "ஒடம்ப பாத்துக்க கண்ணு! முதல்ல ஒடம்ப கொற; நம்மள நம்பி ஒரு பொண்ணு இருக்குதுங்கறத மனசுல வச்சுக்க!!" என்று அவர்கள் சொன்னதும் தூக்கிவாரிப்போட்டது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக