மேலுள்ள புகைப்படத்தில் உள்ளது; என் கன்னி ஓட்டுப்பதிவு நடந்து அதற்கான "மை தடவப்பட்ட" விரல்! இதில் பெருத்த ஆச்சர்யம் இல்லை தான்; ஆனால், நான் இந்த புகைப்படத்தை எடுத்தது மே-30 ஆம் தேதி. வாக்களித்து 1-மாதத்திற்கும் மேலாகியும் இன்னமும் அந்த மை அகலவில்லை. ஒருமுறை, என்சித்தப்பா "ஊராட்சி தேர்தலில்" போட்டியிட்ட போது வாக்களித்து இருக்கிறேன். ஆனால், எந்த பொதுத்தேர்தலிலும் வாக்களித்ததில்லை. 10 ஆண்டுகளாய் வெளிநாட்டில் இருப்பதால் மட்டுமல்ல; அதற்கு முன், இந்தியாவில் இருந்தபோது கூட ஊருக்கு சென்று வாக்களித்ததில்லை. ஆனால், கடந்த முறை விடுப்பில் இந்தியா சென்ற போது தேர்தலும் நடந்ததால் - வாக்களித்தேன். ஆனால், இந்த மை இத்தனை நாட்களா இருக்கும்?! என்று எனக்கு தெரியவில்லை; எந்த முன் அனுபவமும் இல்லை. கடந்த வாரம், நண்பர் ஒருவரிடம் பேசியபோது இது சார்ந்த உரையாடலின் போது இதை தெரிவித்தேன்; அவர், எனக்கு அடுத்த நாளே அழிந்துவிட்டது என்றார்.
அடுத்த நாளேவா? பின் ஏன் எனக்கு மட்டும் இன்னமும் போகவில்லை?! என்ற கேள்வி எழுந்தது. ஒருவேளை, ஓட்டுப்பதிவு என்பது நம்-கடமை என்று பலரும் சொல்வது எனக்கு சரியாய் விளங்கவில்லை; என்மனதில் அது, ஆழப்பதிய வேண்டும் என்பதாலா? என்று தோன்றியது. அப்படி இருக்குமா?! என்பது பற்றி கவலையில்லை; ஆனால், இது என்-கடமை என்று மட்டும் எனக்கு புரிந்தது. இந்தியாவில் இருந்தபோது கூட "யாருமே இங்கே சரியில்லை; அதனால் வாக்களிக்கவில்லை" என்று கடமை-தவறிய "வாய்ச்சொல்" வீரனாய் பேசுபவர்களில் நானும் ஒருவனாய் தான் இருந்தேன். இனிமேல், எந்த நிலையிலும் என்னுடைய வாக்கை-பதியும் கடமையில் இருந்து தவறக்கூடாது என்ற உறுதி பூண்டேன். இந்தியாவில் இல்லை எனினும், முறையாய்... "அஞ்சல் வழி" வாக்குபதியும் வசதியை பயன்படுத்த வேண்டும் என்ற உறுதி உண்டாயிற்று. இல்லையெனில், எந்த பொது-வாழ்வு சார்ந்த பிரச்சனைகள் குறித்து பதிவுகள் பதிய எனக்கு அருகதை இல்லை என்று தோன்றிற்று...
"மை" ஏன் அழியவில்லை என்று தெரியவில்லை! ஆனால், நான் செய்யவேண்டியது புரிந்தது...
பின்குறிப்பு: இதை பதியும் சில மணித்துளிகள் முன் என்னப்பனை அழைத்து இது பற்றி விவாதித்தேன்; ஏனெனில், எனக்கு 1 நிமிடம் முன்னர் தான் அவர் விரலிலும் அதே-மை தடவப்பட்டது. அவர், இன்னமும் சிறிது இருப்பதாய் கூறிவிட்டு; ஒரு விளக்கத்தை கொடுத்தார். பெரும்பாலும், "புள்ளி"யாய் வைப்பது தான் வழக்கம்; அனால், இவர்கள் "கோடு"போல் போட்டுவிட்டதால் தான் இன்னமும் அழியவில்லை என்ற உண்மையை விளக்கினார். எப்படியாயினும், வாக்களிக்கும் என் கடமை பற்றி உணர்வதற்கு அந்த மை உதவியாய் இருந்ததற்காய் மகிழ்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக