ஞாயிறு, ஜூன் 08, 2014

உனது கண்களில்; எனது கனவு...


         
      கடந்த ஜூன்-4 ஆம் தேதி - காலை அலுவலகம் செல்லும்போது; வழக்கம் போல் என்னுடைய மகிழ்வுந்தில் "என்னை எப்போதும் கவர்பவை" என்ற தொகுப்பில் இருக்கும் பாடல்கள் ஒலித்துக் கொண்டு இருந்தன. அப்போது, "ஒன்றாய்? இரண்டாய்?... ஆசைகள்!" என்ற பாடல் ஒலித்தது; அதில் வந்த ஒரு வரி... என்னை "மறுதலித்து" திகைக்க வைத்தது; எப்போதும் கேட்கும்/கேட்ட பாடல் தான்! ஆனால், அன்று மட்டும் அந்த வரி - உடனடியாய்/நேரடியாய் என் மூளையை சென்றடைந்தது என்று எண்ணத் தோன்றுகிறது; அதற்கு முன் அந்த வரியை நான் மனதால் மட்டுமே பார்த்திருக்க வேண்டும். அந்த வரியில் நிறைய முரண்பாடுகள் உள்ளன; என்னதான் அந்த கற்பனையை நான் "இன்னமும்" இரசிப்பினும்/பாராட்டிடினும் - முரண்பாடுகள் தெரிந்த பின் அதை ஒப்புக்கொள்ள முடியவில்லை!  அந்த வரியின் மீதான என் பார்வை இங்கே. உண்மையில், விவாதத்துக்கு உண்டான இந்த வரியைத் தவிர மற்ற எல்லா வரிகளிலும்; அருமையான கற்பனையும்/காதலும் தெரியும்.

         "உனது கண்களில்... எனது கனவினை; காணப் போகிறேன்!" என்பதே அந்த வரி. மேலே குறிப்பிட வண்ணம் - இது அற்புதமான கற்பனை; அன்பு-மிகுந்த, அளவு-கடந்த ஆசை! கேட்பதற்கு சந்தோசமாய் தான் இருக்கிறது - இன்னமும். ஆனால், முரண்பாடுகள்?... முதலில், கனவு என்பது கண்களால் காண்பது அல்ல; உண்மையில், கண்களுக்கு "கனவில்" எந்த தொடர்பும் இல்லை என்று எனக்கு ஆணித்தரமாய் தோன்றியது. கனவு என்பது நம் மனதில்; அதுவும் ஆழ்மனதில் நடக்கும் செயல் என்று வெகு-நிச்சயமாய் உணர்ந்தேன். மேலும், கண்கள் திறந்திருக்கும்போது கனவு சாத்தியமே இல்லை; அதனால் தான் உறங்கும்போது கனவு வருகிறது. இத்தலையங்கம் எழுதும் முன் "கனவு" என்பதன் சரியான அர்த்தத்தை இணையத்தில் படித்தும் தெரிந்து கொண்டேன். மேலும், மருத்துவத் துறையிலும் ஆராய்ச்சி செய்யும் என் நண்பனையும் தொடர்பு கொண்டு விவாதித்தேன்; அவனும் அதை உறுதி செய்தான். அதன் பின்னர் தான் கனவு சார்ந்த; நான் பலமுறை பலவிதங்களில் யோசித்த விசயங்களும் நினைவுக்கு வந்தன.

        ஆங்கிலத்தில் "dream" எனும் கனவிற்கு இது தான் வரையறை: Dreams are successions of images, ideas, emotions, and sensations that occur involuntarily in the mind during certain stages of sleep. இதிலிருந்து, கனவு என்பது முழுக்க முழுக்க மனதோடு சம்பந்தப்பட்டது என்பது தெளிவாகிறது. கண்களுக்கு இங்கே எந்த பணியும் இல்லை. அப்படி இருக்கையில், இந்த வரி எப்படி சரியானதாகும்?! இதை மேலும் என்னுடைய சிந்தனையில் இப்படி சொல்ல ஆசைப்படுகிறேன்: இதை படிக்கும் இந்த சமயம் கூட நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். சிறிதுநேரம் கண்ணை மூடி; உங்களுக்கு மிகவும் பிடித்த ஒருவரின் முகத்தை உருவகப்படுத்தி பார்க்க முயலுங்கள் - எந்த உறவாய் வேண்டுமானால் இருக்கட்டும். ஓரளவிற்கு வேண்டுமானால் ஒரு-உருவம் கிடைக்கும் எனினும், முழுக்க முழுக்க உருவகம் தெரிய "பெரும்பான்மையில்" வாய்ப்பே இல்லை. ஆனால், அதே நபரின்; உங்களுக்கு பிடித்த புகைப்படம் ஒன்றை நினைவுபடுத்தி முயலுங்கள்; உடனே, சாத்தியம் ஆகும்.

         நான் பலமுறை இப்படி பல உறவுகளை பார்க்க முயற்சித்து இருக்கிறேன். ஒன்று விளங்கியது; கண் என்பது பார்பதற்கு மட்டுமே! கண்ணால், ஒரு பொருளை பார்த்து அப்படியே உள்வாங்க முடியும். ஆனால், ஒரு உயிரை அப்படி உள்வாங்க முடியாது என்று தோன்றியது; பொருள் (புகைப்படம் உட்பட) அசைவற்றது; மாறுபாடு இல்லாதது. ஆனால், ஒரு நபர் அப்படியல்ல; அவரின் உருவம் (மனமும் கூட) சமயத்திற்கு தகுந்தார்ப்போல் மாறுபடும். குளிக்கும் முன்னர் ஒரு மாதிரியும், குளித்த பின் வேறு மாதிரியும்; நோயுற்ற போது வேறு மாதிரியும்; இப்படி பல உருவகங்கள் இருக்கும். அதனால், நாம் நினைக்கும் போது உடனே ஒரு உருவகம் தெரிவதில்லை. ஆனால், அவரின் ஒரு புகைப்படத்தை பல முறை பார்த்து உள்வாங்கிக் கொள்ள முடியும். நாம் பெரும்பாலும் ஒருவரின் முகத்தை/கண்களைப் பார்த்து பேசுவதில்லை (நான் முகத்தை/கண்களைப் பார்த்து பேசுவதை ஒரு பயிற்சியாகவே செய்கிறேன் - ஆயினும், அடிக்கடி கவனம் சிதையும்); இது கூட காரணமாய் இருக்கலாம்.  

       ஆனால், யாரை வேண்டுமானாலும் நம் கனவில் "அப்படியே" பார்க்க முடியும்; நம் ஆழ்மனது அனைத்தையும் அப்படியே கிரகரித்து திரும்ப-கொடுக்கும் தன்மை கொண்டது; அதனால் அங்கு சாத்தியம் ஆகிறது. எனவே, கனவு என்பது முழுக்க முழுக்க மனதோடு சம்பந்தப்பட்டது; கண்களுக்கு அங்கே வேலையில்லை என்பது தெளிவாகிறது. சரி! இப்போது விஞ்ஞானம் தாண்டி மெய்ஞானம் சார்ந்து யோசிப்போம். ஒருவரின் கனவு என்பது அவரின் "தனிப்பட்ட இடம் (Personal Space); தனிப்பட்ட சுதந்திரம் (Personal Space)"; அங்கே, வேறெவருக்கும் இடமே இல்லை - எந்த உறவாக இருப்பினும். ஏனெனில், கனவில் மட்டுமே எவர் ஒருவரும் - அவராகவே எந்த நிர்ப்பந்தத்திற்கும் ஆளாகாமல் இருத்தல் சாத்தியம். அதனால் தான், சிலருக்கு கனவின் ஊடே - அவரின் (ஆழ்)மனதில் இருக்கும் விசயங்கள் பேச்சாய்(கூட) வெளிப்படும்; அவையெல்லாம், அவரின் மனதுள் அழுத்தப்பட்ட/ அமுக்கப்பட்ட விசயங்கள். அங்கேயும், இன்னொருவர் நுழைய நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?

       நம் கனவு; நம்மோடு சம்பந்தப்பட்டது! அங்கே, வேறெவருக்கும் எந்த உரிமையும்/வேலையும் இல்லை என்பதை உணரவேண்டும். பல பெற்றோர்கள் எம்மால் முடியவில்லை; எம் பிள்ளைகளாவது செய்யவேண்டும் என்று - குழந்தைகள் மீது திணிப்பது கூட; இந்த உணர்தல் இல்லாததால் தான். பின், அந்த குழந்தைகளின் கனவுகள் என்னாவது? என்று யோசிக்க தவறுவது - கனவு என்பதன் இந்த அடிப்படை புரியாததால் தான் என்று தோன்றுகிறது. மன்னிக்கவும்!... ஆனால், நான் இதை சொல்லியே ஆகவேண்டும். இந்த கனவு திணிப்பில்... பெண்களே முதன்மை வகிக்கிறார்கள் என்பதே என் எண்ணம். ஒருவேளை, ஆண்களைக் காட்டிலும்; அவர்களின் சுதந்திரம் மிகவும்-ஒடுக்கப்பட்டதாய் இருப்பதால் கூட இருக்கலாம். அதிலும், காதலி அல்லது மனைவியாய் இருக்கும் பெண்களுக்கு இது அதிகம் இருப்பதாய் படுகிறது. இந்த வரியை எழுதிய அந்த பெண்-கவிஞருக்கு இந்த தாக்குதல் கூட இப்படியொரு கற்பனையை கொடுத்திருக்கக்கூடும்.

      ஒருவரின் கனவை இன்னொருவர் தெரிந்து கொள்வதற்கே உரிமை இல்லை எனும்போது; ஒருவரின் கனவை இன்னொருவர் மூலம் காண எண்ணுவது (சாத்தியமே எனினும்) எப்படி சரியாகும்?! காதலில் பலதரப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கின்றன; எதிர்பார்ப்பு தெரிந்ததும், அது சாத்தியமா என்று ஆராய வேண்டும். சாத்தியம் இல்லை எனில், வெறும் கனவோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்; அதுவும் தன்-மனதின் மூலமாய் காணும் கனவாய் இருக்கவேண்டும். இந்த புரிதல் இல்லாததால் தான் காதலில்/தாம்பத்யத்தில் ஒருவர் வெகு-எளிதாய், மற்றவரைப் பார்த்து "உன்னை எனக்கு அணு-அணுவாய் தெரியும்" என்கிறார். அடப்போங்கப்பா!... விஞ்ஞானமே "அணு"வை முழுதாய் அறியவில்லை; நீங்கள் எப்படி?! என்றே கோபமாய் கேட்கத் தோன்றுகிறது. இன்னொருவரின் கனவை கூட; அவரே சொல்லாத வரை எவராலும் தெரிந்து கொள்ளமுடியாது! பிறகெப்படி... அணு-அணுவாய் தெரிந்து கொள்ள முடியும்?! இவையாவும் வேண்டாம்... ஒருவரின் கனவு அவரின் சுதந்திரம் என்பது துவங்கி

ஒருவரின் இயல்போடு இருக்க; அவரை அனுமதித்து - நாமும் நம் இயல்போடு இருப்போம்!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக