ஞாயிறு, ஜூன் 08, 2014

பாலைவனத்தில் ஒரு "சோலைவனம்"...



      இரண்டு வாரங்களுக்கு முன், நண்பரின் 4-wheel drive (தமிழில் மொழிபெயர்த்தால் அபத்தமாய் தெரிந்ததால், அப்படியே விட்டுவிட்டேன்) மகிழ்வுந்தில் நெடுந்தூர-பயணம். எனக்கு அம்மாதிரி வண்டியை ஓட்டி எந்த அனுபவமும் இல்லை; வீட்டில் இருந்து கிளம்பும்போதே, அவர் என்னிடம் சாவியை கொடுத்து விட்டார். எனக்கு பெருத்த பயம்; சாவியை வேறு கொடுத்துவிட்டார் - கெளரவ பிரச்சனை! சரியென்று அதில் ஏறி உட்கார்ந்தால் - ஏதோ யானை மீது ஏறி உட்கார்ந்தது போல் இருந்தது; அப்போதே கொஞ்சம்-உதர ஆரம்பித்து விட்டது. இருப்பினும், அதை வெளிக்காட்டாது வண்டியை நகர்த்தி சாலையில் சென்றுவிட்டேன்; நெடுஞ்சாலையை அடைந்தவுடன் கொஞ்சம் பதட்டம் குறைந்தது. ஒரு 30 கி.மீ. தொலைவு கடந்ததும், வெகு-இயல்பாய் எப்போதும் போல் ஒற்றை கையால் ஓட்ட ஆரம்பித்து விட்டேன். நல்ல அனுபவமாய் தான் இருந்தது; ஆங்காங்கே நிறுத்தி சில புகைப்படங்கள் எடுத்தோம்.   

          ஒருவாறாய், மலைகள் நிறைந்த பாலைவனம் எல்லாம் கடந்தோம். இடையில் பார்த்தால், சிறு-சிறு கிராமங்கள்; இந்தியாவில் இருப்பது போன்றே பேரு-நகரங்களில் இருந்து மிகவும் மாறுபட்டு! அதே யதார்த்தமான வாழ்க்கை முறையோடு - எனக்கு பெருத்த் ஆச்சர்யம். அரபு, அமெரிக்கா போன்ற பெரு-நாடுகளை; அழகிய நகரங்கள் மூலமாய் மட்டும் கணிப்பது எத்தனை தவறென்று புரிந்தது. ஆங்காங்கே, பாலைவன மலைகளில் நிலத்தை சமப்படுத்தி பேரிச்சம் பழம் போன்று விவசாயம் செய்கின்றனர். வெப்பத்தை தாங்கும் வண்ணம் அப்பயிர்கள் "குளிர்பதனப்"படுத்தப்பட்டும் வளர்க்கப்படுமாம். அம்மாதிரி ஒன்றை புகைப்படம் எடுக்க தவறி விட்டேன்; பார்த்து இரசித்ததோடு சரி. என்ன ஒரு முயற்சி/முனைப்பு? பாலைவனத்தில் ஒரு சோலைவனம்... என்று  தோன்றியது. அந்த சிறு கிராமத்தில் நம் நாட்டை போன்றே தெருவோர கடைகளை; அத்தனை வெப்பத்திலும் இயற்கையோடு ஒன்றி யதார்த்தமாய் பார்ப்பதற்கே ஆனந்தமாய் இருந்தது. 

சூழல்கள் வெவ்வேறாயினும் மனிதர்களின் இயல்புகள் ஒன்றேயென்பது புரிந்தது!!!

பின்குறிப்பு: நான் கூட, இம்மாதிரியான வாகனங்களில் என்ன இருக்கப்போகிறது என்று மேம்போக்காய் யோசித்ததுண்டு; ஆனால், அம்மாதிரி வாகனத்தை ஓட்டுவது பரம சுகம்; சிறிதும், அலுப்பு தெரியவில்லை - அன்றைய தினம் மட்டும் சுமார் 450 கி.மீ. ஓட்டினேன். இதை விட ஜாம்பவான்கள் எல்லாம் இருக்கிறது என்றார் என் நண்பர். இதை விடவா?! என்ற ஆச்சர்யம் எனக்கு!!

மேலிருக்கும் புகைப்படத்தில் இருக்கும் - நிறைய காற்றடைத்த பலூன்-பொம்மைகளை பார்த்தவுடன் எனக்கு தோன்றியது இதுதான். அடுத்த முறை என்மகள் இங்கு வரும்போது - அந்த கடைகளுக்கு அவளை அழைத்து சென்று - அவள் எல்லாவற்றையும் கை-நீட்டி கேட்பதை பார்த்து இரசிக்க வேண்டும் என்பதே!   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக