நான் தற்போது குடியிருக்கும் வீட்டில் 5-க்கும் மேற்பட்ட பேரீச்சம்-பழ மரங்கள் இருக்கின்றன. அவைகளை சாப்பிடலாமா? நமக்கு சாப்பிட அனுமதி உண்டா?? என்ற குழப்பங்கள்! எவரும் பறிக்காமல் பழங்கள் கீழே விழுந்து வீணாவதை காண முடிந்தது. அதனால், சென்ற-வாரத்தில் ஓர் நாள் - ஒரு பழத்தை பறித்து சாப்பிட்டால்.... அட! அட!! அட!!! என்ன ஒரு சுவை?! இதை எழுதும்போதே... நாவில் எச்சில் ஊறுகிறது. அரபு மற்றும் வளைகுடா நாடுகளில் பேரீச்சம்-பழம் பிரசித்து பெற்றது என்பது அனைவர்க்கும் தெரியும். ஆனால், மரத்திலிருந்து அப்படியே பறித்து சாப்பிடுதலில் உள்ள சுவையை; அதை உணர்ந்தோருக்கு மட்டுமே புரிய வாய்ப்பிருக்கிறது. முதன்முதலில் சாப்பிட்ட கணம் முதல்... அதற்கு இணையான இன்னுமொரு பழத்தை எனக்கு நினைவூட்டியது. என்னவென்பதை... கொஞ்சம் சஸ்பென்ஸ்!!?? இருக்கட்டும் என்று பின்குறிப்பில் கொடுத்துள்ளேன். பின்னர், ஒரு கைப்பை நிறைய பறித்து கொஞ்சம், கொஞ்சமாய் வைத்து சாப்பிட ஆரம்பித்தேன்.
என்மகள் எல்லா பழங்களையும் விரும்பி சாப்பிடுவாள் என்று முன்பே குறிப்பிட்டுள்ளேன். ஆனால், பல தரம்-வாய்ந்த பேரீச்சம் பழங்களை பலமுறை வாங்கி சென்றும்; அவள் அதை மட்டும் சாப்பிடுவதில்லை. அதன் காரணம், சென்ற வாரம் புரிந்தது. மரத்தில் இருந்து பழத்தை பறித்து, பின் 3/4 நாட்கள் ஆனவுடன் சுவை மாறிவிடுகிறது. அதாவது, பழத்தில் இருக்கும் நீர் வெளியேறியவுடன் - அது இறுக்கமாகி விடுகிறது (கடைகளில் கிடைப்பது போல்!). மேலும், நீரின் அளவு குறைந்து விடுவதால்; திகட்டும்-அளவிற்கு இனிப்பின் அளவு கூடிவிடுகிறது. இதுதான், என்மகள் சாப்பிடாததற்கு காரணம் என்று தெரிந்தது. பின்னர், ஓர்நாள் அந்த பழங்களை கழுவி - சாப்பிடாமல் வைத்துவிட்டேன். என்ன விந்தை? அடுத்த நாள், கழுவியதன் மூலம் கிடைக்கப்பெற்ற நீரை உள்வாங்கி பழங்கள் சுய-சுவையை அடைந்துவிட்டது. இதுபோல், முன்பொரு முறை மணிலா-அவித்ததை எழுதியது நினைவிருக்கலாம். என்னவளிடம் "அம்மாதிரி செய்து" செய்ய சொல்லியிருக்கிறேன். பார்ப்போம்...
நீரும்-இனிப்பும் அளவாய் இருக்கும் பழங்களை என்மகள் விரும்புகிறாளா?! என்று!!!
பின்குறிப்பு: அந்த பழம்... "சப்போட்டா"பழம்! ஆம்... நன்கு கனிந்த சப்போட்டா-பழத்தை, தோலை-நீக்கி வாயில் போட்டவுடன் ஒரு-சுவை வருமே?! அதே சுவைதான், மரத்திலிருந்து பறிக்கப்பட்ட பேரீச்சம்-பழத்தில் இருக்கின்றது. மேலும், சப்போட்டா போலவே; பேரீச்சம்-கொட்டை தானாய் பழத்தில் இருந்து பிரிந்து தனியாய் வரும் பாருங்கள்! ம்ம்ம்... அதை சுவைத்தால் தான் அந்த அனுபவம் கிடைக்கும்!! முயன்று பாருங்களேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக