இளங்கலை-அறிவியல் சென்னை மாநிலக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நேரமது. அப்போதெல்லாம், என்னப்பனின் பணத்தில், செலவு செய்து கொண்டிருந்த காரணத்தால் - நான் "உணவிற்கு கூட" அதிகம் பணம் செலவழிப்பதில்லை! எங்கள் விடுதியில் "குத்தகை அடிப்படியில்"தான் உணவு-விடுதி நடக்கும்; குத்தகைக்காரர் பணம் போதவில்லை என்று உணவு-விடுதியை "அடிக்கடி" மூடி விடுதல் சர்வ-சாதாரணமாய் நடக்கும் ஒன்று. அப்படி மூடிவிடும் வேலையில்; வெளியில் உணவகத்தில் சாப்பிட வேண்டும்; திருவல்லிக்கேணியில் "முரளி கஃபே" என்ற ஒரு உணவகம் மிகவும் பிரசித்தி பெற்றது. இன்றும் இருக்கிறதா? என்று தெரியவில்லை! அங்கே தான் உணவு-விடுதி மூடப்படும் நாட்களில் சாப்பிடுவது வழக்கம்; ஒரு நாளைக்கு 10-உரூபாய் என்பது என் கணக்கு. காலை/இரவு "ஒரு ப்ளேட்" சாம்பார்-இட்லி! மாலை "ஒரு ப்ளேட்" பரோட்டா! சாம்பார்-இட்லி 2.50 உரூபாய்; பரோட்டா 5 உரூபாய். 10 உரூபாய் கணக்கு சரியாகிவிடும்; எத்தனை நாளானாலும், இதேதான் என் உணவு முறை.
விளையாட்டாய் ஓர்நாள் ஒரு திருமண-மண்டபத்தில் சாப்பிடலாம் என்று நானும்; என் நண்பர்களும் முடிவெடுத்து உள்ளே சென்று "மிகுந்த பயத்துடன்" சாப்பிட்டுவிட்டோம். எங்களுக்கும், அந்த திருமணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை! இப்படியாய், தொடர்ந்து அடிக்கடி ஏதாவது ஒரு திருமணத்தில் சென்று சாப்பிடும் வழக்கம் அதிகமானது. ஒருமுறை, என் நண்பனின் - தந்தையின்; நண்பரின், நண்பர் வீட்டு - முகம்மதியர் திருமணம் ஒன்று! மட்டன்-பிரியாணி என்றான் நண்பன்!! வாயில் எச்சில் ஊறிற்று!! பலவிதமான ஆலோசனைகளுக்கு பிறகு அங்கு சென்று சாப்பிடவும் ஆரம்பித்து விட்டோம். அருமையான சாப்பாடு! சாப்பிட ஆரம்பித்ததும், வீடியோ-எடுப்பவர் தொடர்ந்து எங்களையே எடுப்பதாய் ஒரு உணர்வு! அவசர, அவசரமாய் சாப்பிட்டுவிட்டு; பயத்துடன் ஒருவழியாய் அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டோம். அன்று - எங்கள் அனைவரின் மனதிலும் அப்படியொரு குற்ற உணர்வு; பெருத்த அசிங்கமாய் தோன்றியது. அந்த முகம்மதியர் வீட்டு பிரியாணிதான்...
நாங்கள் திருட்டுத்தனமாய் சாப்பிட்ட இறுதி கல்யாண சாப்பாடு!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக