செவ்வாய், ஜனவரி 03, 2017

அதிகாரம் 052: தெரிந்து வினையாடல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 052 - தெரிந்து வினையாடல்

0511.  நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த 
           தன்மையான் ஆளப் படும்

           விழியப்பன் விளக்கம்: நன்மை/தீமை இரண்டையும் ஆராய்ந்து; நன்மையை மட்டுமே செய்யும் 
           இயல்பினரிடம், வினைகளை ஒப்படைக்க வேண்டும்.
(அது போல்...)

           நியாயம்/அநியாயம் இரண்டையும் உணர்ந்து; நியாயமாய் மட்டுமே வியாபாரம் செய்பவரிடம், 
           பொருட்களை வாங்க வேண்டும்.
      
0512.  வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
           ஆராய்வான் செய்க வினை

           விழியப்பன் விளக்கம்: இடையூறுகளை ஆராய்ந்து தகர்த்து, வருவாயைப் பெருக்கி;
           வளத்தை மேம்படுத்தும் திறனுடையவரிடம், வினைகளை ஒப்படைத்தல் வேண்டும்.
(அது போல்...)
           விளைவுகளை அறிந்து முற்காத்து, சிந்தனையை தெளிவாக்கி; கற்பித்தலை
           மேற்கொள்ளும் குருவிடம், நம்மை சேர்ப்பிக்க வேண்டும்.
           
0513.  அன்புஅறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
           நன்குடையான் கட்டே தெளிவு

           விழியப்பன் விளக்கம்: அன்பு/அறிவு/தெரிந்து தெளியும் திறன்/பேராசை இல்லாமை -
           இந்நான்கு நற்குணங்களையும் உடையவரைக் கண்டறிந்து, வினைகளை ஒப்படைக்க
           வேண்டும்.
(அது போல்...)
           உண்மை/ஒழுக்கம்/உறவை மதிக்கும் குணம்/காழ்ப்புணர்ச்சி இல்லாமை - இந்நான்கு
           நற்பண்புகளை இருப்போரைத் தேர்ந்தெடுத்து, உறவுகளைப் பேணுதல் வேண்டும்.

0514.  எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
           வேறாகும் மாந்தர் பலர்

           விழியப்பன் விளக்கம்: அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து, தெளிவடைந்தவர்
           ஆயினும்; வினைகளைச் செய்து முடிக்கும் திறனால், வலுவிழக்கும் மக்கள் பலருண்டு.
(அது போல்...)
           அனைத்து நூல்களையும் கற்றறிந்து, உரையெழுதியவர் எனினும்; பாடங்களை ஆழ்ந்து
           கற்பிக்கும் வகையால், தோல்வியுறும் குருக்கள் பலருண்டு.

0515.  அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
           சிறந்தானென்று ஏவற்பாற் றன்று

           விழியப்பன் விளக்கம்: வினைகளை ஆராய்ந்து, நிறைவேற்றும் திறனுடையோரைத்
           தவிர்த்து; சார்ந்திருக்கும் ஒருவரைச் சிறந்தவரென, வினைகளைச் செய்ய நியமித்தல்
           முறையன்று.
(அது போல்...)
           தவறுகளை நடுநிலையோடு, தண்டிக்கும் இயல்புடையோரை விடுத்து; வேண்டியவர்
           ஒருவரை நியாயவாதியென, நீதியை வழங்க பதவியளித்தல் சரியல்ல.

0516.  செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
           எய்த உணர்ந்து செயல்

           விழியப்பன் விளக்கம்: வினையின் தன்மையோடு, அதைச் செய்வோரின் திறமையையும்
           ஆராய்ந்து; அவ்வினைக்கு சாதகமான காலத்தையும், உணர்ந்து செயல்படவேண்டும்.
(அது போல்...)
           உறவின் இயல்போடு, உறவில் இணைவோரின் இயல்பையும் உணர்ந்து, அவ்வுறவு
           பலப்படும் காரணிகளையும், ஆராய்ந்து அணுகவேண்டும்.

0517.  இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
           அதனை அவன்கண் விடல்

           விழியப்பன் விளக்கம்: குறிப்பிட்ட வினையை, குறிப்பிட்ட இயல்பால் - குறிப்பிட்ட நபர்,
           செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து; அந்த வினையை, அவர்வசம் ஒப்படைக்க
           வேண்டும்.
(அது போல்...)
           தகுதியான உறவை, தகுதியான திறனால் - தகுதியான சுற்றத்தார், வழிநடத்திச் செல்வர்
           என்பதை உணர்ந்து; அந்த உறவை, அவர்களுடன் இணைத்தல் வேண்டும்.

0518.  வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
           அதற்குரிய னாகச் செயல்

           விழியப்பன் விளக்கம்: ஒரு வினையைச் செய்வதற்குத் தகுதியானவராய், ஒருவரை நியமித்த
           பின்; குறுக்கீடு ஏதுமின்றி, முழு அதிகாரத்தையும் - அவருக்கு அளித்தல் வேண்டும்.
(அது போல்...)
           ஒரு நம்பிக்கையை வளர்ப்பதற்குக் காரணியாய், ஓர்சக்தியைத் தேர்ந்தெடுத்த பின்;
           கவனச்சிதறல் ஏதுமின்றி, முழு சிந்தனையும் - அச்சக்தி மேல் இருக்கவேண்டும்.

0519.  வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக
           நினைப்பானை நீங்கும் திரு

           விழியப்பன் விளக்கம்: கொடுத்த வினையின்பால், மாறாத முனைப்புடன் இருப்போரின் 
           நட்பை; தவறாக நினைப்போரை விட்டு, புகழெனும் செல்வம் விலகும்.
(அது போல்...)
           இணைந்த உறவின்பால், குறையாத அன்புடன் இருப்போரின் சிறப்பை; இழிவாக 
           விமர்சிப்போரை விட்டு, மகிழ்ச்சியெனும் ஊக்கம் மறையும்.

0520.  நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
           கோடாமை கோடா துலகு

           விழியப்பன் விளக்கம்: வினைகளைச் செய்ய நியமிக்கப்பட்டவர் நேர்மை தவறாத வரை,                                  
           உலகமும் நேர்மை தவறாது; எனவே, அரசாள்பர் அதிகாரிகளை தினந்தோறும் ஆராய
           வேண்டும்!
(அது போல்...)
           குடும்பத்தை வழிநடத்த முற்படுவோர் வாய்மை மறக்காத வரை, குடும்பத்தினரும் வாய்மை
           மறவார்; ஆகையால், குடும்பத்தலைவர் குடும்பத்தினரை எப்போதும் பாதுகாக்க வேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக