வெள்ளி, ஜனவரி 13, 2017

"உழவர் திருநாள்" வாழ்த்தும்/அழைப்பும்...


இயற்கைப்பாசம் என்று"பசுத்தோல் புலியாய்"
“செயற்கைக் காளைப்பாசம்" காட்டுவரல்லர்!
வெண்பொங்கலோடு கரும்பும் இன்னபிறவும்
உண்பதற்கு உரமாய்உழவாய்  உதவிட்டஎம்

காளைக்கென தனிப்பொங்கல் ஒன்றையிட்டு
காளைகளும் பிள்ளைகளென அகமகிழ்ந்து
காலையிலே தூக்கம்துக்கம் இரண்டும்நீக்கி
காளைகளைக் குளிப்பாட்டிக் கும்பிடுவோர்!!

"வணங்கிடும் நாமேஎங்ஙனம் வதைப்போம்?"
விளங்கிடுமா இக்கதறலும் ”ஏறுதழுவலை
விளங்காமல்” விலங்குகாக்க வழக்குபதிந்த
விந்தைகூட்டத்திற்கு? தீர்ப்பீர் நியாயன்மீர்!

உப்பிட்டவரை மட்டுமல்ல!எம் வாழ்க்கையில்
துப்பிட்டவரையும் உள்ளவரை நினைப்போம்!
தமிழ்ப்பால் குடித்துதமிழ்த் தாயால்வளர்ந்த
தமிழர்களா துப்பிட்டகாளையின் கழுத்தறுப்பர்?

உற்றாருடன் ஊரேகூடிடும் உழவர்திருநாளில்
உம்மையும் வாழ்த்திவணங்கி அழைக்கிறோம்!
காளையை வணங்கும்எம் குணம்காணவாரீர்!
காணற்கரிய அக்காட்சியை கண்டுணர்வீர்!எம்

தழுவலுக்காய் ஏங்கியிருக்கும் காளைகளைத்
தழுவுவதற்காய் தவமிருக்கும் எந்தமிழ்நாட்டு
காளையர்களின் உள்ளுணர்வை உணர்ந்து
காளைகளைக் களங்களதனில் விட்டுவிடுவீர்!

பொங்கலிடும் எம்மவரவர் உள்ளமெலலாம்
பொங்கிடட்டும் புன்னகையும்! தமிழர்யாமும்
பொங்குஞ்சாய் பொத்திட்டக் காளைகளும்
பொங்கியெழுந்து புகட்டும் யாம்தழுவிடவே!

                - விழியப்பன் (எனும்) இளங்கோவன் இளமுருகு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக