சனி, ஏப்ரல் 22, 2017

அருணாச்சலம் முருகானந்தம்


          திரு. அருணாச்சலம் முருகானந்தம் - கோவையில் ஓர் ஊரகப் பகுதியைச் சேர்ந்த இவரை; உங்களில் பலருக்கும் முன்பே தெரிந்திருக்கக் கூடும். இன்றுதான், இவரைப் பற்றி; தொலைகாட்சி ஒன்றின் திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சியின் மூலம் அறிந்தேன். ஹிந்தி மொழியில் "PadMan" என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளிவருவதாகவும்; அது திரு. அருணாச்சலம் முருகானந்தம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றியது என்றும் அந்நிகழ்ச்சியில் கூறப்பட்டது. யார் இவர்? என்ற ஆர்வம் எழுந்தது. உடனே, அவரைப் பற்றி இணையத்தில் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். என்னுடைய ஆச்சரியம் பல்கிப் பெருகியது. சூழல் காரணமாய் அவரின் உறவுகளாலேயே அவமானப் படுத்தப்பட்டு; தனிமைப் படுத்தப்பட்டது அறிந்து மனம் கனத்தது. அவற்றையெல்லாம் கடந்து, அவரின் எண்ணத்தை செயலாக்கி; அவர் வெற்றியை நிலைநாட்டிய விதம் மனத்தைக் கவர்ந்தது; அவரின் வைராக்கியம் எனக்குப் பிடித்திருந்தது.

      2016-இல் இந்திய அரசின் "பத்மசிறீ" விருதை பெற்றிருக்கிறார்! அப்படி அவர் சாதித்தது என்ன? தன் மனைவி "விடாய்க்கால அணையாடைகளை (Sanitary Pads)" வாங்க இயலாத சூழலில், கந்தலான/அழுக்கான துணிகளை உபயோகிப்பதை பார்த்து வேதனைப்பட்டு இருக்கிறார். அவ்வாடைகள் ஏன் அதிக விலைக்கு விற்கப்படுகிறது? என்று வியந்து; குறைந்த விலையில் தயாரிக்க ஆராய்ந்திருக்கிறார். மிகக் குறைந்த விலையில், அவ்வாடைகளைத் தயாரிக்கும் இயந்திரத்தை வடிவமைத்து; அதற்கான உரிமம் பெற்றிருக்கிறார். தென்னிந்தியாவில் அதீத பிரபலம் இல்லையெனினும்; வட இந்தியாவில் பல பின்தங்கிய மாநிலங்களில் இவரின் இயந்திரமும், அதன் உற்பத்தியும் மிக பிரபலமாம். பல வெளிநாடுகளிலும், இவரது கண்டுபிடிப்பில் உருவான இயந்திரம் உபயோகப்படுத்தப் படுகிறதாம். அவரைப் பற்றிய தகவல்கள், என்னை மென்மேலும் ஆச்சரிய படுத்தியது. அவரைப் பற்றி மேலும் அறிய விரும்புவோர்...

          "அருணாச்சலம் முருகானந்தம்" என தமிழிலோ அல்லது "Arunachalam Muruganantham" என ஆங்கிலத்திலோ இணையத்தில் தேடுங்கள்! "விடாய்க்கால அணையாடைகளை" வாங்கமுடியாத இயலாமையில்; விளைந்த சிந்தனை, அவரை இவ்வுயரம் தொடும் அளவிற்கு உழைக்க வித்திட்டிருக்கிறது. பெரிய அளவில் வியாபாரமாய் செய்ய விருப்பமின்றி, பல பெண்களுக்கும் சேவையின் அடிப்படையில் பயிற்சி கொடுத்து; அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவுகிறாராம். மாதவிடாய் காலங்களில், தம் வீட்டுப் பெண்களையே "தீண்டாத தகாதவர் போல்" பாவித்த அன்றைய காலகட்டத்தில்; அந்த சூழலில், அதை அவர்களுடன் "நேரடியாய் விவாதித்து" அதற்கான தீர்வை காணும் அவரின் முனைப்பு பெருத்த போற்றுதலுக்குரியது. இன்றும், மாதவிடாய் சம்பத்தப்பட்ட விடயங்களை; தமக்கு சம்பந்தமில்லை என விலகி நிற்கும் ஆண்களே அதிகம். அவ்வாடைகளின் பெயரைக் கடையில் சொல்லைக்கூட, பலருக்கும் தயக்கம் இருக்கிறது.

         ஆனால், 1962-இல் பிறந்து அன்றைய ஆணாதிக்க சூழலில் வளர்ந்த; இவர் எப்படி இவ்வளவு ஆழமாய் யோசித்து/அணுகி தீர்வைக் காண முடிந்தது? என இன்னும் வியந்து கொண்டிருக்கிறேன். என் வியப்பு உங்களையும் சென்று சேரவேண்டும் என்பதற்கே இத்தலையங்கம். மாதவிடாய் சம்பந்தப்பட்ட விடயங்களில்; பெண்களை விட, ஆண்களுக்கு அதிக புரிதல் இருக்கவேண்டும். அந்நிகழ்வுகளை, ஆண்கள் உணர்வுபூர்வமாய்  உள்வாங்கினால் மட்டுமே; அந்த சமயங்களில் பெண்களுக்கு பேருதவியாய் இருக்கமுடியும். உண்மையில், அந்நாட்களில் பெண்களுக்கு உடலியல் சார்ந்த பிரச்சனைகளை விட; உளவியல் சார்ந்த பிரச்சனைகளே அதிகம். அதை மிகச்சரியாய் இந்த மனிதர் உணர்ந்திருப்பதாய் தோன்றுகிறது. அதனால் தான், ஒரு காலகட்டத்தில்; சூழல் காரணமாய் அவருக்கு உறவுப் பெண்களே உதவிட முடியாத போதும், விலங்குகளின் இரத்தத்தை தம் உடலில் "சிறு பைகளில் அடைத்து" கட்டிக்கொண்டு...

    அதிலிருந்து இரத்தத்தைச் சொட்டச்செய்து, தன் ஆராய்ச்சியை செய்திருக்குக்கிறார். என்னவொரு அதிசய மனிதர் இவர்? அவரின் வைராக்கியம் அவருக்கான அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது. மேற்குறிப்பிட்ட திரைப்படம் வெளிவந்த பின், அவர் மேலும் பிரபலமாகக் கூடும்! இதுபோல், சாதிப்பதற்கான விடயங்களும்/சாத்தியக்கூறுகளும் நம்மைச் சுற்றி ஏராளமாய் இருக்கின்றன. ஆனால், அதற்கான வாய்ப்புகளும்/முனைப்புகளும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை! வாழ்க்கையெனும் ஓட்டத்தில், எதற்கு ஓடுகிறோம் என்றே தெரியாமல் ஓடிக் கொண்டிருப்போரே இங்கு அதிகம். இருப்பினும், அந்த ஓட்டத்தின் இடையே கிடைக்கும் நேரத்தில்; இம்மாதிரியான மனிதர்களை பற்றி தெரிந்துகொள்ளவாவது முயல்வோமே? என்னை எட்டிய, இந்த சிந்தனை பிறருக்கு எட்டவேண்டும் என்ற எண்ணத்தில் இதைப் பகிர்கிறேன். இம்மாதிரியான விடயங்களை படிக்கும் போது, நம்முள்ளும் ஏதேனும் ஒரு உந்துததால் எழக்கூடும்.

வாழ்த்துகள் திரு. அருணாச்சலம் முருகானந்தம் அவர்களே!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக