வியாழன், அக்டோபர் 25, 2018

அதிகாரம் 118: கண்விதுப்பு அழிதல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 3 - காமம்இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 118 - கண்விதுப்பு அழிதல்

1171.  கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
           தாம்காட்ட யாம்கண் டது

           விழியப்பன் விளக்கம்: காதல் எனும் தணியாத நோயை, கண்கள் தாம் காட்டவே யாம் 
           அறிந்தோம்! பிரிந்திருக்கும் காதலரைக் காட்டாமல், இப்போது கண்கள் தாமும் அழுவது 
           எதனாலோ?
(அது போல்...)
           குடும்பம் எனும் தீராத சிக்கலில், பெற்றோர் தாம் சொல்லவே நாம் நுழைந்தோம்! 
           சேர்ந்திருக்கும் சிக்கலை அவிழ்க்காமல், இப்போது பெற்றோர் தாமும் சிக்கலாக்குவது 
           எதனாலோ?
      
1172.  தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
           பைதல் உழப்பது எவன்

           விழியப்பன் விளக்கம்: ஆராய்ந்து உணராமல், அன்று கண்டதும் காதலுற்ற கண்களே! 
           நடந்த பிரிவை உணராமல், இன்றும் உடனடியாய் துன்பத்தில் வருந்துவது ஏன்?
(அது போல்...)
           தகுதியை மதிப்பிடாமல், அன்று கொடுத்ததும் வாக்களித்த மக்களே! நடந்த தவறை 
           உணராமல், இன்றும் அவசரமாய் கோபத்தில் விமர்சிப்பது ஏன்?
           
1173.  கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
           இதுநகத் தக்க துடைத்து

           விழியப்பன் விளக்கம்: அன்று, கண்டதும் காதல் கொண்ட கண்களே; இன்று, பிரிந்ததும் 
           விரைவாய் அழுகின்றன! இம்முரண்பாடு, நகைக்கத் தக்க தன்மை உடையது!
(அது போல்...)
           அன்று, கண்டதும் கும்பிட்டு ஓட்டுகேட்ட கைகளே; இன்று, வென்றதும் துப்பாக்கியால் 
           கொல்கின்றன! இம்முரண்பாடு, அருவருக்கத் தக்க தன்மை கொண்டது!

1174.  பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
           உய்வில்நோய் என்கண் நிறுத்து

           விழியப்பன் விளக்கம்: குணப்படுத்த முடியாத மற்றும் அழிவில்லாத, காதல் எனும் நோயை 
           எனக்கு அளித்துவிட்டு; கண்ணீரைப் பொழிய முடியாத, நீர் வற்றிய கண்களும் 
           வருந்துகின்றன!
(அது போல்...)
           விடுதலை இல்லாத மற்றும் முடிவில்லாத, ஆட்சி எனும் கொடுங்கோலே யாமே 
           தேர்ந்தெடுத்து; விமர்சனம் செய்ய முடியாத, சுயம் இழந்த நாங்களும் வருந்துகிறோம்!

1175.  படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
           காமநோய் செய்தஎன் கண்

           விழியப்பன் விளக்கம்: கடல் கொள்ளாத அளவுக்கு, காதல் எனும் காம நோயை அளித்த 
           என் கண்கள்; தூங்க முடியாத அளவுக்கு, துன்பம் அடைந்து வருந்துகின்றன!
(அது போல்...)
           வானம் கொள்ளாத அளவுக்கு, பணம் எனும் ஊழல் விதையைப் பெற்ற எம் மக்கள்; வாழ 
           முடியாத அளவுக்கு, உரிமை இழந்து வாடுகின்றனர்!

1176.  ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
           தாஅம் இதற்பட் டது

           விழியப்பன் விளக்கம்: என்ன விந்தை? காதல் எனும் காம நோயை, எமக்கு அளித்த கண்கள் 
           தாமும்; நோயின் தாக்கத்திற்கு உள்ளாகி அழுகின்றனவே. இது மகிழ்ச்சியானதே!
(அது போல்...)
           என்ன ஆச்சரியம்? இலவசம் எனும் ஊழல் விதையை, எம்முள் விதைத்த அரசியலார் 
           தாமும்; ஊழல் வழக்கில் சிக்கித் தவிக்கின்றனரே. இது முன்னேற்றமானதே!

1177.  உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
           வேண்டி அவர்க்கண்ட கண்

           விழியப்பன் விளக்கம்: விரும்பி மகிழ்ந்து, தொடர்ந்து அவரைக் கண்ட கண்களே! அவரைப் 
           பிரிந்த துன்பத்தால், வருந்தி வருந்தி உம்முள் இருக்கும் கண்ணீர் அற்றுப் போக!
(அது போல்...)
           விரும்பி ஏற்று, தொடர்ந்து ஆட்சியை அளித்த மக்களே! அவர்கள் செய்த 
           கொடுங்கோன்மையால், வாழ்விழந்து வாழ்விழந்து உம்மிடம் இருக்கும் ஆதரவு அழிந்து 
           போக!

1178.  பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
           காணாது அமைவில கண்

           விழியப்பன் விளக்கம்: மனதால் விரும்பாமல், சொல்லால் விரும்பியோர் இருக்கிறார்கள் 
           தானே? ஆனாலும், அவர்களைக் காணாமல் அமைதி கொள்வதில்லை கண்கள்!
(அது போல்...)
           செயலால் செய்யாமல், வாக்குறுதியால் செயதோர் இருக்கிறார்கள் தானே? ஆனாலும், 
           அவர்களை ஆதரிக்காமல் திருப்தி அடைவதில்லை தொண்டர்கள்!

1179.  வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
           ஆரஞர் உற்றன கண்

           விழியப்பன் விளக்கம்: காதலர் வராதபோதும் தூங்காமல், வந்தபோதும் தூங்காமல்; 
           மத்தளம் போல் இருவழியிலும், அரிய கொடுமையான துன்பத்தை அடைந்தன கண்கள்!
(அது போல்...)
           சோம்பல் வராதபோதும் முனையாமல், வந்தபோதும் முனையாமல்; உலக்கை போல் 
           இருபுறமும், அதிக ஆழமானச் சிதறலை அடைந்தன சிந்தனைகள்!

1180.  மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
           அறைபறை கண்ணார் அகத்து

           விழியப்பன் விளக்கம்: எம்போல், பறையடித்து அறிவிக்கும் கண்களை உடையோரிடம்; 
           காதற்பிரிவு மறைக்கப்படுவதை அறிவது, ஊரில் இருப்போர்க்கு அரிதானது அல்லவே!
(அது போல்...)
           தவளைபோல், குரலெழுப்பி சொல்லும் குணம் உடையோருடன்; கண்ணாமூச்சி 
           விளையாட்டை விளையாடுவது, அவருடன் இருப்போர்க்கு உகந்தது அல்லவே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக