ஞாயிறு, ஜூன் 08, 2014

உண்மை மேலோங்கட்டும்...




உறவின் பெயரல்ல;
உண்மையின் உயரமே!
உறவின் ஆயுளை;
உறுதி செய்கிறது!!!

எப்படியெல்லாம் வேதனை வருது?!...



         இன்று காலை என்னுடைய மகிழ்வுந்தின் "வாகன உரிமையை" புதுப்பிக்க சென்றிருந்தேன். நம் ஊரிலும், போர்ச்சுக்கல் நாட்டிலும் ஓட்டுவது போல் "ஆரம்பத்தில்" உச்ச-வேகத்தை பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லமால் வெகு-வேகமாய் ஓட்டிக்கொண்டு இருந்தேன். இங்கெல்லாம்... "அபராதம்" விதிப்பார்களாமே? திடீரென்று என் அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது; வந்து கப்பம் கட்ட சொல்லி! நம் ஊர் பணத்தில் 5100 உரூபாய் - 3 முறை கட்டினேன். காவலர்கள் தான் "ரேடாரை" வைத்துக்கொண்டு இதை கண்டுபிடிக்கிறார்கள் என்பதை உணர்ந்து அவர்களைப் பார்த்த பின்னர் மட்டும் ஒழுங்காய் ஓட்ட ஆரம்பித்தேன். அப்படியிருந்தும் இன்னுமொரு முறை ஓலை வந்தது! இங்கே "ஸ்பீட் கேமரா" எல்லாம் இருக்காமே; முன்ன-பின்ன செத்து இருந்தா தானே சுடுகாடு தெரியும்? சிலர் துபாயில் அபராதம் விதித்திருந்தால் உரிமையை புதுப்பிக்கும் போது வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது என்றும்; துபாயில் 1 கி.மீ. தூரத்துக்கு ஒரு "கேமரா" உண்டென்றும் பீதியை கிளப்பி இருந்தனர்.

       அதனால் கடந்த சில நாட்களாகவே, துபாயில் எத்தனை ஓலைகளோ?! என்ற திகிலுடனே இருந்தேன். எல்லாம் நல்லபடியாய் முடிந்து வந்தால் எவனோ-ஒரு புண்ணியவான் கதவு-பிடியின் மீது "கீரலை" உண்டாக்கி சென்றிருந்தான் (முதல் படம்). அந்த வண்டியின் கதவில் என் வண்டியின் "பெயிண்ட்" ஒட்டியிருந்தது; ஒரே-நேர்க்கோட்டில் 2 தடங்களும் இருந்தன. கண்ணில் கண்ணீரே வந்துவிடும் அளவுக்கு வேதனை! 20 நிமிடங்கள் அவனுக்காய் காத்திருந்து, புகைப்படங்கள் மட்டும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். நானும் ஒரு முறை இன்னொருவரின் வண்டியில் இதுமாதிரி செய்துள்ளேன்; ஒருவேளை, அதற்கான தண்டனையாய் இருக்கும் என்று எண்ணினேன். என்னவள் ஒருமுறை "என்மகள்" என்மருதந்தையின் வண்டியில் "செங்கல்லை" வைத்து தேய்த்து கீறலை உண்டாக்கினாள் என்று சொன்ன குற்றசாட்டு நினைவுக்கு வந்தது. இது அதற்கான, பிரதிபலனாய் கூட இருக்கலாம்; என்மருதந்தையும் அப்படிதானே துடித்திருப்பார்.

ம்ம்ம்... எப்படியெல்லாம் வேதனை வருது???

செல்லாக்காசுக் "காதல்"


தக்க சமயத்தில்;
கிடைக்காத "காசு"
மட்டுமல்ல...

திருமணத்திற்கு பின்;
கிடைக்கும் "காதலும்"
"செல்லாக்காசே!"

பாலைவனத்தில் ஒரு "சோலைவனம்"...



      இரண்டு வாரங்களுக்கு முன், நண்பரின் 4-wheel drive (தமிழில் மொழிபெயர்த்தால் அபத்தமாய் தெரிந்ததால், அப்படியே விட்டுவிட்டேன்) மகிழ்வுந்தில் நெடுந்தூர-பயணம். எனக்கு அம்மாதிரி வண்டியை ஓட்டி எந்த அனுபவமும் இல்லை; வீட்டில் இருந்து கிளம்பும்போதே, அவர் என்னிடம் சாவியை கொடுத்து விட்டார். எனக்கு பெருத்த பயம்; சாவியை வேறு கொடுத்துவிட்டார் - கெளரவ பிரச்சனை! சரியென்று அதில் ஏறி உட்கார்ந்தால் - ஏதோ யானை மீது ஏறி உட்கார்ந்தது போல் இருந்தது; அப்போதே கொஞ்சம்-உதர ஆரம்பித்து விட்டது. இருப்பினும், அதை வெளிக்காட்டாது வண்டியை நகர்த்தி சாலையில் சென்றுவிட்டேன்; நெடுஞ்சாலையை அடைந்தவுடன் கொஞ்சம் பதட்டம் குறைந்தது. ஒரு 30 கி.மீ. தொலைவு கடந்ததும், வெகு-இயல்பாய் எப்போதும் போல் ஒற்றை கையால் ஓட்ட ஆரம்பித்து விட்டேன். நல்ல அனுபவமாய் தான் இருந்தது; ஆங்காங்கே நிறுத்தி சில புகைப்படங்கள் எடுத்தோம்.   

          ஒருவாறாய், மலைகள் நிறைந்த பாலைவனம் எல்லாம் கடந்தோம். இடையில் பார்த்தால், சிறு-சிறு கிராமங்கள்; இந்தியாவில் இருப்பது போன்றே பேரு-நகரங்களில் இருந்து மிகவும் மாறுபட்டு! அதே யதார்த்தமான வாழ்க்கை முறையோடு - எனக்கு பெருத்த் ஆச்சர்யம். அரபு, அமெரிக்கா போன்ற பெரு-நாடுகளை; அழகிய நகரங்கள் மூலமாய் மட்டும் கணிப்பது எத்தனை தவறென்று புரிந்தது. ஆங்காங்கே, பாலைவன மலைகளில் நிலத்தை சமப்படுத்தி பேரிச்சம் பழம் போன்று விவசாயம் செய்கின்றனர். வெப்பத்தை தாங்கும் வண்ணம் அப்பயிர்கள் "குளிர்பதனப்"படுத்தப்பட்டும் வளர்க்கப்படுமாம். அம்மாதிரி ஒன்றை புகைப்படம் எடுக்க தவறி விட்டேன்; பார்த்து இரசித்ததோடு சரி. என்ன ஒரு முயற்சி/முனைப்பு? பாலைவனத்தில் ஒரு சோலைவனம்... என்று  தோன்றியது. அந்த சிறு கிராமத்தில் நம் நாட்டை போன்றே தெருவோர கடைகளை; அத்தனை வெப்பத்திலும் இயற்கையோடு ஒன்றி யதார்த்தமாய் பார்ப்பதற்கே ஆனந்தமாய் இருந்தது. 

சூழல்கள் வெவ்வேறாயினும் மனிதர்களின் இயல்புகள் ஒன்றேயென்பது புரிந்தது!!!

பின்குறிப்பு: நான் கூட, இம்மாதிரியான வாகனங்களில் என்ன இருக்கப்போகிறது என்று மேம்போக்காய் யோசித்ததுண்டு; ஆனால், அம்மாதிரி வாகனத்தை ஓட்டுவது பரம சுகம்; சிறிதும், அலுப்பு தெரியவில்லை - அன்றைய தினம் மட்டும் சுமார் 450 கி.மீ. ஓட்டினேன். இதை விட ஜாம்பவான்கள் எல்லாம் இருக்கிறது என்றார் என் நண்பர். இதை விடவா?! என்ற ஆச்சர்யம் எனக்கு!!

மேலிருக்கும் புகைப்படத்தில் இருக்கும் - நிறைய காற்றடைத்த பலூன்-பொம்மைகளை பார்த்தவுடன் எனக்கு தோன்றியது இதுதான். அடுத்த முறை என்மகள் இங்கு வரும்போது - அந்த கடைகளுக்கு அவளை அழைத்து சென்று - அவள் எல்லாவற்றையும் கை-நீட்டி கேட்பதை பார்த்து இரசிக்க வேண்டும் என்பதே!   

எல்லோரும் இராமனும் கண்ணகியுமே!!!


சந்தர்ப்பமும், சூழலும்
சரியான விகிதத்தில்;
சாதகமான நேரத்தில்
சேர்ந்தடையாத வரை;
இங்கே எல்லோரும்
இராமனும் கண்ணகியுமே!!!

ஞாயிறு, ஜூன் 01, 2014

என்மகளின் அலைபேசி உரையாடல்...



     என் வீட்டார் அனைவரும் - என்மகள் "அலைபேசியில்" சரியாய் உரையாடுவதில்லை என்று எப்போதும் சொல்வதுண்டு. அவர்களிடம் மட்டுமல்ல; என்னிடம் கூட அவள் அதிக நேரம் அலைபேசியில் உரையாடுவதில்லை. இணையத்தில் வேண்டுமானால், அதிக நேரம் உரையாடுவாள்; இதைப்பற்றி என்நண்பனிடம் கூட விவாதித்ததுண்டு. அவன், குழந்தைகள் பெரும்பாலும் (அலை/தொலை)பேசியில் அதிகம் உரையாடுவதில்லை; அது, அவர்களின் இயல்பு என்பான். உண்மைதான்; என்மகளும் அவ்வாறே! ஒருமுறை, அவள் அலைபேசியில் என்னிடம் பேசாததால் - நான் "அறிவிலி"யாய் கோபம் கொண்டதை-கூட முன்பொரு தலையங்கத்தில் எழுதி இருக்கிறேன். ஆனால், அதன்பின் எனக்கு அவள் அலைபேசியில் அதிகம் உரையாடவில்லை என்பதில் பெரிய-கவலையேதும் இல்லை. என்னுடைய கோபம் தவறு எனினும், அவள் என்னிடம் அதிகம் உரையாடவேண்டும் என்ற ஆசை எனக்குள் எப்போதும் இருந்தது. அதே எண்ணம்தான் என்வீட்டில் உள்ளவர்களிடமும் இருந்தது.

       அப்படிப்பட்டவள், சமீபகாலமாய் அலைபேசியில் நீண்ட-நேரம் உரையாடுகிறாள் என்று என் வீட்டார் கூறினர். என்னால் நம்பமுடியவில்லை; ஏனெனில், எனக்கு தெரிந்து அவள் என்னைத்தவிர வேறெவரிடமும் அதிக நேரம் அலைபேசியில் உரையாடுவதில்லை! என்னவளிடம் உரையாடுவதற்கான வாய்ப்பே தேவைப்படுவதில்லை; அவள் என்மகளுடனே இருக்கிறாள். இந்நிலையில் மே-20 ஆம் தேதியன்று என்னவள் "விழி ஒங்ககிட்ட ஏதோ சொல்லனுமாம்; உங்கள ஃபோன் பண்ண சொன்னா!" என்று சொன்னாள்; என்மருதந்தை வீட்டில் இருப்பதாயும், அவர் அலைபேசிக்கு அழைக்கும்படியும் கூறினாள். நான் அப்போது தான் எழுந்து அலுவலகம் கிளம்பிக்கொண்டு இருந்தேன். சரி, அவள் எவ்வளவு நேரம் பேசிவிடப்போகிறாள்?!; அவளிடம் பேசிவிட்டு கிளம்பலாம் என்று அலைபேசியில் அழைத்தேன். இன்னமும், என்னால் அவள் அத்தனை நேரம் பேசியதை நம்பமுடியவில்லை; ஆம்! மேலிருக்கும் புகைப்படங்களைப் பாருங்கள், தெரியும்!

            ஒரு-நிலைக்கு மேல் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை! என்மகளோ அலைபேசியை துண்டிக்கக்கூடாது என்கிறாள்; நானோ, அலுவலகம் கிளம்பவேண்டும். அதிலும், அதற்கு 2 நாட்கள் முன்புதான் என்-மேலதிகாரியிடம் கடுமையான வாக்குவாதம் நிகழ்ந்தது. நானும், சரி என்மகளும் நானில்லாமல் துன்பப்படுகிறாளே - வேலையை விட்டுவிட்டு சென்றுவிடலாமா?! என்று ஆலோசித்துக் கொண்டிருந்த தருணங்கள் அவை. எங்களுக்கென்று இப்போதுதான் பணம் சேமிக்க ஆரம்பித்திருக்கிறேன் என்று வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இங்கே எழுதியுள்ளேன். ஆனால், இன்னமும் ஒரு திடமான பொருளாதார-நிலை வரவில்லை! எனவே, நான் இங்கு இன்னும் சிலகாலம் இருந்தே ஆகவேண்டும்; குறைந்தது, அடுத்த வேலை கிடைக்கும் வரையாவது இருக்கவேண்டும். இந்த சூழலில், நான் காலதாமதமாய் செல்ல விரும்பவில்லை. என்னுடைய இந்த நிலையை என்னவளிடமே நான் விவாதிக்கவில்லை; பின் எங்கனம்/எப்படி என்மகளிடம் கூறுவது?

           எனவே, என்மகளிடம் "அப்பா ஆஃபிசுக்கு போகனும் குட்டி! அப்பா லேட்டா போனா, வீட்டுக்கு போக சொல்லிடுவாங்க; அப்புறம் பாப்பாவுக்கு தேவையானதெல்லாம் வாங்க அப்பாக்கிட்ட பணம் இருக்காதுடி.." அப்படி, இப்படியென்று என்னென்னவோ சொல்லி பார்க்கிறேன். அவளோ "அப்பா! உங்ககிட்ட இப்படி பேசறது ஜாலியா இருக்குதுப்பா; இன்னும் கொஞ்ச நேரம் பேசுங்கப்பா..." என்று சொல்கிறாள். இதைக்கேட்டவுடன், எப்படி அலைபேசியை துண்டிக்க முடியும்? சரியென்று, சிறிது நேரம் பேசிவிட்டு - மீண்டும் "அப்பா ஆஃபிசுக்கு போயிட்டு பேசறன் குட்டி..." என்று சொன்னால், அவள் மீண்டும் அதேவிதமாய் இன்னும் சிறிது நேரம் பேசுங்கள் என்கிறாள். துண்டித்துவிட்டு செல்ல ஒரு-வினாடி தான் ஆகும்; ஆனால், என்மகளின் அந்த-சந்தோசத்தை/அந்த-எதிர்பார்ப்பை அது சிதைத்துவிடும். நான், எப்போதும் முன்கூட்டியே செல்வேன் என்பதால் சரி அவளிடம் பேசிவிட்டு செல்வோம் என்று  தொடர்வேன்; பின், மீண்டும் நான் நேரம் ஆகிறதம்மா என்று சொல்வேன்.

            இப்படியாய், நேரம் செல்ல செல்ல நான் செய்வதறியாது அவளிடமான உரையாடலை "ஸ்கிரீன் ஷாட்" எடுக்க ஆரம்பித்தேன்; அதுவும், "ஃபேன்சி நம்பர்" வரும்வண்ணம் எடுத்த பல "ஷாட்"களில் சிலதான் மேலுள்ளவை. இந்த நேரத்தில்... அவள் சொல்ல, சொல்ல நான் "ம்...ம்...ம்... என்று கொட்டிவிட்டு; அப்புறம்..." என்று கேட்க ஆரம்பித்தேன். அவளோ "அப்பா! நான் என்ன கதையா சொல்றேன்? அப்புறம்; அப்புறம்...ங்கறீங்க?!" என்று கேட்டுவிட்டு சிரிக்கிறாள். நானோ... அப்பா அவசரமாய் கழிவறை செல்லவேண்டும்; பிறகு பேசுகிறேன் என்றால், அவளோ அலைபேசியை எடுத்துக்கொண்டு பேசிக்கொண்டே செல்லுங்கள் என்கிறாள். எனக்கோ அவளின் அறிவார்ந்த பேச்சை இரசிப்பதா? இல்லை நேரம் தவறுகிறதே என்று பதறுவதா?? என்று தெரியவில்லை. இப்படியாய்... அவளிடமான அன்றைய உரையாடல் முடியும்போது நேரம் 63 நிமிடங்களுக்கு சற்று குறைவாய் ஆகி இருந்தது. என்னதான்... என்சூழல் சிறிது பதட்டத்தை கொடுத்திருப்பினும்;

முதன்முதலாய், என்மகள் அவ்வளவு நேரம் பேசியது எனக்கு பெருத்த மகிழ்ச்சியே!!!

பின்குறிப்பு: அன்றைய தினம் முதல் என்மகள் என்னுடன் அதிக-நேரம் அலைபேசியில் பேச ஆரம்பித்து இருக்கிறாள். இப்போதெல்லாம்... மிகக்கவனமாய், தேவையான நேரம் இருக்கும்போது மட்டுமே என்மகளுடன் அலைபேசியில் பேசி வருகிறேன். நான் எதிர்பார்த்து, அவள் அதிகம் பேசவில்லை என்றாலும் கவலை இல்லை... அப்படியும் சில முறைகள் இந்த இடைவெளியில்-கூட நடந்தது. ஆனால், இனியொரு-முறை அவள் எதிர்பாத்து நான் பேசமுடியாத சூழலில் இருக்க எனக்கு விருப்பமில்லை. நேற்று என்னவள் சொன்னது போல், அதிக-நேரம் அலைபேசியை காதோடு வைத்து பேசுவது முறையல்ல... என்பதும் உண்மை! எனவே, சென்ற அக்டோபர்-மாதம் நான் வாங்கிக் கொடுத்த  "ஹெட்-ஃபோனை" என்மகள் உபயோகிக்க பழக்குமாறு என்னவளிடம் கூறினேன்;  அவளும், ஆமோதித்து இருக்கிறாள். இங்கு தான், பெரும்பான்மையில் ஒரு-தந்தையின் சிந்தனையும்; ஒரு-தாயும் சிந்தனையும் "மாறுபடுகின்றன" என்ற உண்மை விளங்கியது. என்னுடையது வெறும் "உணர்வு சார்ந்தது!"; ஆனால், என்னவளின் சிந்தனை "உணர்வுடன்; எம்மகளின் உடல்நலனும்" சேர்த்தது!!

என் கன்னி ஓட்டுப்பதிவு...



          மேலுள்ள புகைப்படத்தில் உள்ளது; என் கன்னி ஓட்டுப்பதிவு நடந்து அதற்கான "மை தடவப்பட்ட" விரல்! இதில் பெருத்த ஆச்சர்யம் இல்லை தான்; ஆனால், நான் இந்த புகைப்படத்தை எடுத்தது மே-30 ஆம் தேதி. வாக்களித்து 1-மாதத்திற்கும் மேலாகியும் இன்னமும் அந்த மை அகலவில்லை. ஒருமுறை, என்சித்தப்பா "ஊராட்சி தேர்தலில்" போட்டியிட்ட போது வாக்களித்து இருக்கிறேன். ஆனால், எந்த பொதுத்தேர்தலிலும் வாக்களித்ததில்லை. 10 ஆண்டுகளாய் வெளிநாட்டில் இருப்பதால் மட்டுமல்ல; அதற்கு முன், இந்தியாவில் இருந்தபோது கூட ஊருக்கு சென்று வாக்களித்ததில்லை. ஆனால், கடந்த முறை விடுப்பில் இந்தியா சென்ற போது தேர்தலும் நடந்ததால் - வாக்களித்தேன். ஆனால், இந்த மை இத்தனை நாட்களா இருக்கும்?! என்று எனக்கு தெரியவில்லை; எந்த முன் அனுபவமும் இல்லை. கடந்த வாரம், நண்பர் ஒருவரிடம் பேசியபோது இது சார்ந்த உரையாடலின் போது இதை தெரிவித்தேன்; அவர், எனக்கு அடுத்த நாளே அழிந்துவிட்டது என்றார். 

          அடுத்த நாளேவா? பின் ஏன் எனக்கு மட்டும் இன்னமும் போகவில்லை?! என்ற கேள்வி எழுந்தது. ஒருவேளை, ஓட்டுப்பதிவு என்பது நம்-கடமை என்று பலரும் சொல்வது எனக்கு சரியாய் விளங்கவில்லை; என்மனதில் அது, ஆழப்பதிய வேண்டும் என்பதாலா? என்று தோன்றியது. அப்படி இருக்குமா?! என்பது பற்றி கவலையில்லை; ஆனால், இது என்-கடமை என்று மட்டும் எனக்கு புரிந்தது. இந்தியாவில் இருந்தபோது கூட "யாருமே இங்கே சரியில்லை; அதனால் வாக்களிக்கவில்லை" என்று கடமை-தவறிய "வாய்ச்சொல்" வீரனாய் பேசுபவர்களில் நானும் ஒருவனாய் தான் இருந்தேன். இனிமேல், எந்த நிலையிலும் என்னுடைய வாக்கை-பதியும் கடமையில் இருந்து தவறக்கூடாது என்ற உறுதி பூண்டேன். இந்தியாவில் இல்லை எனினும், முறையாய்... "அஞ்சல் வழி" வாக்குபதியும் வசதியை பயன்படுத்த வேண்டும் என்ற உறுதி உண்டாயிற்று. இல்லையெனில், எந்த பொது-வாழ்வு சார்ந்த பிரச்சனைகள் குறித்து பதிவுகள் பதிய எனக்கு அருகதை இல்லை என்று தோன்றிற்று...

"மை" ஏன் அழியவில்லை என்று தெரியவில்லை! ஆனால், நான் செய்யவேண்டியது புரிந்தது...

பின்குறிப்பு: இதை பதியும் சில மணித்துளிகள் முன் என்னப்பனை அழைத்து இது பற்றி விவாதித்தேன்; ஏனெனில், எனக்கு 1 நிமிடம் முன்னர் தான் அவர் விரலிலும் அதே-மை தடவப்பட்டது. அவர், இன்னமும் சிறிது இருப்பதாய் கூறிவிட்டு; ஒரு விளக்கத்தை கொடுத்தார். பெரும்பாலும், "புள்ளி"யாய் வைப்பது தான் வழக்கம்; அனால், இவர்கள் "கோடு"போல் போட்டுவிட்டதால் தான் இன்னமும் அழியவில்லை என்ற உண்மையை விளக்கினார். எப்படியாயினும், வாக்களிக்கும் என் கடமை பற்றி உணர்வதற்கு அந்த மை உதவியாய் இருந்ததற்காய் மகிழ்கிறேன்.

உடற்பயிற்சியும் பண-செலவும்...



       சமீபத்தில் ஒரு தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது போல், 2 மாதங்களுக்கு முன்னர் தான் வாடகை-வீட்டை மாற்றினேன். முன்பிருந்த இடம் மிகப்பிரம்மாண்டமானது; அங்கே பெரிய நீச்சல்-குளம், உடற்பயிற்சி மையம் என்று சகல வசதிகளும் இருந்தன. வாடகையும் அவைகளுக்கும் சேர்த்தே வசூலிக்கப்பட்டது; ஆயினும், அங்கே என்மகள் வந்திருந்தபோது (சென்ற/செல்வ)தோடு சரி. அவள் இல்லாமல், ஒரு நாளும் சென்றதில்லை; செல்லவேண்டும், செல்லவேண்டும் என்று நினைப்பேன். நினைப்பதோடு சரி; முனைப்பேதும் செய்(வ/த)தில்லை. இப்படியாய், அந்த வீட்டையும் காலி செய்தாகி விட்டது; புதிய வீட்டிற்கு சென்ற பின், அங்கே கிடைத்த 2 நட்புகளுடன் சேர்ந்து ஒரு "கிளப்பில்" சேர்ந்து இருக்கிறேன். அபுதாபிக்கு நான் வந்த அடுத்த நாள் வாங்கிய "டென்னிஸ்-ராக்கெட்டை" ஒருவழியாய் அந்த கிளப்பில் சேர்ந்தவுடன் உபயோகிக்க ஆரம்பித்து விட்டேன் - 13 மாதங்கள் கழித்து! அப்படியே, ஒருவழியாய் அங்கிருக்கும் உடற்ப்பயிற்சி மையத்திற்கும் செல்ல ஆரபித்திருக்கிறேன். 

         மேலிருக்கும் புகைப்படங்கள் அங்கே எடுக்கப்பட்டவையே! இப்போது 15 கி.மீ. தொலைவு சென்று பயிற்சி மேற்கொள்ளும் செயலை; முன்பு வீட்டின் அருகிலேயே இருந்தும் ஏன் செய்யவில்லை?! என்ற கேள்வி எழுந்தது. ஒருவேளை, இப்போது பணம் கட்டி சேர்ந்திருப்பதால் இருக்குமோ?! என்ற கேள்வியும் எழுந்தது. அப்படி என்றால், அது தவறில்லையா?! உடல்நிலையை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தானே மேலோங்கி இருக்கவேண்டும்? ஏன், பணம் கட்டிவிட்டோம் என்பதால் மட்டும் செய்ய தோன்றியது? ஏன் உடல்நலன் மேல் ஒரு பற்றும்/அக்கறையும் இல்லாமல் போயிற்று? ஏன், நம் வளர்ப்பு முறை அதற்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறது? ஒருவேளை, எனக்கு மட்டும்தான் இப்படியா? என் சுற்றம் சார்ந்து மட்டும் தான் இப்படியா? உடல்நலன் பேணுதல் - ஒரு ஒழுக்கமாய் கற்பிக்கப்பட்டு இருக்கவேண்டாமா? என்று பல கேள்விகள் எழுந்ததன. இனிமேல், இதை ஒரு ஒழுக்கமாய் செய்யவேண்டும் என்று தோன்றியது...

எதனால் ஏற்பட்டது என்பதைக் காட்டிலும்; கடைபிடித்தல்தானே முக்கியமானது?!

பின்குறிப்பு: 7 ஆண்டுகளுக்கு பிறகு, நான் மீண்டும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்ததற்கு கீழுள்ள 2 காரணிகள்-தான் மிகமுக்கியம்.
  1. "அப்பா! என்னை மாதிரி 'ஸ்லிம்'மா ஆகுங்கப்பா; நீங்க 'குண்டா' இருக்கறீங்க" என்று அடிக்கடி என் மகள் சொல்வது.
  2. என் 2-ஆம் தாய் என்று நான் சொல்லும் என் நண்பனின் தாய், வெகு சமீபத்தில் இப்படி சொன்னது: "ஒடம்ப பாத்துக்க கண்ணு! முதல்ல ஒடம்ப கொற; நம்மள நம்பி ஒரு பொண்ணு இருக்குதுங்கறத மனசுல வச்சுக்க!!" என்று அவர்கள் சொன்னதும் தூக்கிவாரிப்போட்டது!    

மாதுளம்-பழ "ஜூஸ்"...



          என்மகளுக்கு மாதுளம்-பழம் மிகவும் பிடிக்கும் என்பதை சமீபத்தில் ஒரு மனதங்கத்தில் குறிப்பிட்டு இருந்தேன். என்மகள் போல் எனக்கு பழங்கள் மேல் அவ்வளவு பிரியம் இல்லை எனினும், ஏனோ மாதுளம்-பழம் மீது மட்டும் தனி அதிருப்தி உண்டு! அதில் இருக்கும் கொட்டையை சாப்பிட்டே ஆகவேண்டும்; அந்த கொட்டை கசப்பாய் இருக்கும் என்பதால் கூட இருக்கலாம். ஆனால், மாதுளம்-பிஞ்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்; அது மிகுந்த துவர்ப்பாய்/கசப்பாய் இருக்கும் எனினும், எனக்கு பிஞ்சு மிகவும் பிடிக்கும். ஆனால், என்மகளுக்கோ எல்லாப்பழமும் பிடிக்கும் எனினும்; மாதுளம்-பழம் மீது மட்டும் தனி பிரியம். இங்கே அபுதாபி உட்பட்ட பல அரபு-நாடுகளில் கிடைக்கும் பழ-ஜூஸ் (பழ-ரசம்) மிகவும் அருமையாய்; முழுக்க, முழுக்க பழத்தில் செய்தது போன்று அடர்த்தியாய் இருக்கும் என்பது அதை பார்த்தோருக்கு தெரியும். நானும், பலவிதமான் ஜூஸ்கள் வாங்குவேன்; எல்லாப்பழமும் கலந்த கலவை-ஜூஸ் கூட வாங்குவேன். 

     ஆனால், மாதுளம்-பழம் ஜூஸ் மட்டும் வாங்கியதில்லை. ஏனோ, ஒரு வாரத்திற்கு முன் அதை வாங்கவேண்டும் என்று தோன்றியது; என்மகளுக்கு பிடித்தது எனக்கு எப்படி பிடிக்காமல் இருக்கலாம்?! சரி, பரிசோதிப்போம் என்று வாங்கினேன். முதலில், பிடிக்கவில்லை எனினும்; பிறகு அதன் சுவை எனக்கு(ம்) பழக ஆரம்பித்தது. விளைவு?! 4 நாட்களில் அதை தீர்த்துவிட்டு இன்னுமொன்று வாங்கினேன்; அவை இரண்டையும் தான் ஒரு-சேர புகைப்படம் எடுத்து மேலே பதிந்துள்ளேன். நான் ஏன் இப்படி செய்கிறேன்?! என்ற கேள்வி எழுந்தது. இது என்மகள் மேலிருக்கும் "பாசமா (அ) பைத்தியக்காரத் தனமா?" என்ற கேள்வியும் வந்தது. இதிலென்ன இருக்கிறது? என்ற பதிலும்; கேள்வியாய் வந்தது. என்மகளுக்கு பிடிக்கும் என்பதால், அதை முயன்று எனக்கும் இப்போது பிடித்தாய் ஆகி இருக்கிறது. அடுத்த முறை என்மகள் வரும்போது இருவரும் சேர்ந்தே பருகுவோம், அவ்வளவு தான்; இதில் பெரிதாய் தவறேதும் இல்லை என்ற உண்மையும் விளங்கியது.

என்மகளுக்காய் இதை கூட நான் செய்யக்கூடாதா என்ன???    

ஞாயிறு, மே 18, 2014

தென்னவனும் - மதிப்பெண்ணும்...



         சென்ற வாரம் பள்ளி-இறுதியாண்டு தேர்வு முடிவுகள் வெளிவந்த அடுத்த கணம்; என்தமக்கை-மகன், என்தமையன்-மகன் தென்னவன் எடுத்த மதிப்பெண்களை இணையதள-பிரதியுடன் அனுப்பி இருந்தான். வார-இறுதி என்பதால் கூடுதலாய் உறங்கிக் கொண்டிருந்த நான், உடனடியாய் எழுந்து முதலில் என்தமக்கை மகனை அழைத்து பேசிவிட்டு; அடுத்து தென்னவனை அழைத்து பேசினேன். எனக்கு பெருத்த சந்தோசம்! வெகு சமீபமாய் நான் அப்படியொரு சந்தோசத்தை அடைந்ததில்லை. பிறகு, என்தமையனிடம் பேசினேன்; ஆனந்தத்தில் என் கண்கள்-ஈரமாகி என் குரல்-உடைந்தது! ஆனால், என்தமையனால் அதை கண்டுகொள்ள முடியவில்லை; என் தாயாய் இருந்திருப்பின், உடனடியாய் "ஏம்பா/ஏண்டா? கொரலு ஒரு மாதிரியா இருக்கு??" என்று கேட்டிருப்பார்! அப்படி எவரேனும், அன்று கேட்டிருந்திருப்பின் - நான் உடனடியாய் அழுதிருப்பேன். அந்த கணம், உணர்வின் வெகு-விளிம்பில் இருந்தேன். எங்களுடைய எவரின் நம்பிக்கையையும் அவன் வீணடிக்கவில்லை!

            தென்னவன் பெற்றிருந்த மதிப்பெண்கள் 1150/1200. இதைவிட, அதிக மதிப்பெண்கள் பலரும் பெற்றிருகின்றனர்! அதைப் பற்றியெல்லாம், துளியும் கவலை இல்லை; எங்கள் குடும்பத்தில் அவன் எடுத்திருப்பது தான் அதிக மதிப்பெண்கள்! இதற்கு 3-ஆண்டுகளுக்கு முன் என்தமக்கை ஏறக்குறைய அதே மதிப்பெண்கள் பெற்றிருந்தான். எனக்கு, இந்த மதிப்பெண்கள்-அடிப்படையிலான கல்வி-முறையில் (இன்னமும்)உடன்பாடு இல்லை எனினும், அவன் எடுத்திருந்த மதிப்பெண்கள் என்னை வெகுவாய் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை! இங்கே எவரின் உடன்பாடும் முக்கியம் இல்லை; அவனின் வாழ்வை-தீர்மானிக்கப்போகும் "உயர்கல்வியை" நிர்ணயிக்கப்போகும் கல்லூரி/கல்வி-நிறுவனம் - இந்த மதிப்பெண்ணை தான் அடிப்படையாய் கொண்டு செயல்பட போகிறது. எனவே, எனக்கு பெருத்த சந்தோசம்; முக்கியமாய், எனக்கும்/என்தமையனுக்கும்; நாங்கள் எவ்வளவு முயன்றும் முடியாத - கணிதத்தில் 200/200 என்ற இலக்கை - அவன் அடைந்ததில் பெரிய திருப்தி.

          அடுத்ததாய், அவன் பொறியியல்-படிப்பில் சேர்வதற்கான "கட் ஆஃப்" மதிப்பெண் 198.5 என்பதை பார்த்தேன். அடடா! இன்னும், 1 அதிகமாய் பெற்றிருந்தால் - நன்றாக இருந்திருக்குமே என்ற "நற்பாசை" எனக்கும் எழுந்தது! மதிப்பெண்-என்ற கல்வி-முறையிலே எந்த நம்பிக்கையும் இல்லாத எனக்கே, இந்த ஆசை எழும்போது?! சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கு எப்படி இல்லாமல் போகும் என்ற கேள்வியும் எழுந்தது! கல்வி-சார்ந்த என்னுடைய முந்தைய தலையங்கங்கள் நினைவுக்கு வந்தன! நான், இன்னமும் அதையேதான் அறிவுறுத்த விரும்புகிறேன்; மதிப்பெண் மட்டுமே - ஒருவரின் தரத்தை நிர்ணயிக்க முடியாது! ஆனால், இதுபோல் அடுத்த-கட்டத்திற்கு இட்டுச்செல்லும் ஒரு கருவியாய் வேண்டுமானால், இருக்கலாம் என்று புரிந்தது! அவன் இயற்பியலில் 199-உம்; வேதியலில், 195-உம் எடுத்திருந்தான்! வேதியலில், இன்னும் 4-மதிப்பெண்கள் பெற்றிருந்தால் கூடுதல்-சிறப்பாய் இருந்திருக்குமே?! என்ற ஆசை எழுந்தது!

     என்னை நானே கேள்வி கேட்க  ஆரம்பித்தேன்! ஏன், அதிக-மதிப்பெண் என்ற எண்ணம் எனக்குள்ளும் வந்தது என்று யோசிக்க ஆரம்பித்தேன்! நான் 912 மதிப்பெண்கள் மட்டும் தான் எடுத்தேன்; ஆனால், அதுவே எங்கள்-பள்ளியின் (திருக்கோவிலூர்) முதல் மதிப்பெண்!  முன்பெல்லாம், இவ்வளவு மதிப்பெண்கள் பெறுவது சாதாரணம் அல்ல; உண்மையில், இன்றும்(கூட) அத்தனை எளிதல்ல! ஆனால், இந்த பிள்ளைகள் - எல்லா சுகத்தையும் இழந்து 1-க்கு; 2-ஆண்டுகள் படிக்கின்றன! ஆம்! 11-ஆம் வகுப்பு படிக்கும்போதே - இவர்களுக்கு 12-ஆம் வகுப்பு பாடங்கள் ஆரம்பித்து விடுகின்றன. அதிலிருந்து, அவர்களுக்கு விடுப்பு என்பதே இல்லாமல் போய்விடுகிறது; நிறைய பிள்ளைகள் தீபாவளி/பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு கூட வீட்டிற்கு வரமுடியாத சூழல். இப்படி, இந்த வயதில் அனுபவிக்க வேண்டிய பலதையும் அனுபவிக்க முடியாமல் - பெருஞ்சிரமப்பட்டு படிக்கும் இவர்களிடம் இன்னமும், எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும்??!!

          இது 99.99-க்கும்; 100-க்கும் உள்ள வித்தியாசத்தைப் போன்றது! 0.01 தான் வித்தியாசம் எனினும், 100 என்பது முற்றிலும் மேன்மை தானே?! என்று நியாப்படுத்த தோன்றியது! ஆனால், மதிப்பெண் மட்டுமே ஒருவரின் தரத்தை நிர்ணயிக்க முடியாது என்பது எப்படி சரியோ; அதுபோல், ஒருவர் படிக்கும் கல்லூரி/கல்வி-நிறுவனம் மட்டுமே(கூட) ஒருவரின் தரத்தை நிர்ணயிக்க முடியாது என்ற உண்மையும் விளங்கியது; இவையிரண்டும், ஒரு காரணியாய் வேண்டுமானால் இருக்கலாம்! எனவே, அவன் எடுத்திருப்பது எந்த விதத்திலும் குறைவில்லாத; நிறைவளிக்கும் மதிப்பெண்ணே! என்று உணர்ந்தேன். எந்த கல்வி-நிறுவனத்தில் வேண்டுமானால் கிடைக்கட்டும்; அவனின் திறமை தான் முக்கியம்! அதை எங்கிருந்து கொண்டு வேண்டுமானாலும், உயர்த்திக் கொள்ளலாம்! அதற்கு ஒரு மாணவனின் தரம் தான் மிக-முக்கியம்; அது தென்னவனிடம் மிகுந்து இருகிறது, என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை! எனவே, அவனுக்கு எந்த கல்வி-நிறுவனத்தில் வேண்டுமானால் இடம் கிடைக்கட்டும் என்ற...

உறுதி மேலோங்கியது! அதையே, என்குடும்பத்தார்க்கும் சொல்லிவருகிறேன்!!!

பின்குறிப்பு: நம் பிள்ளைகள் எத்தனை மதிப்பெண்கள் எடுத்திருப்பினும், அதை வரவேற்போம்! அவர்களின் திறமைக்கேற்ற எதிர்காலம் அவர்களுக்கு நிச்சயம் இருக்கிறது என்பதை உணர்வோம்! நம்புவோம்!! அதிகமாய் எடுத்திருந்தால், மகிழ்ச்சி என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆனால், அதற்காய் துவண்டுவிட வேண்டாம். அவர்களுக்கு உரித்தான - உன்னத வாழ்க்கையை நாம் கண்டிப்பாய் அமைத்து கொடுக்க முடியும். தேர்ச்சி பெற்ற அனைத்து மாணாக்கர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!     

என்மகளின் முதல் கையொப்பம்...



        மேலுள்ள புகைப்படத்தில் இருப்பது - என்மகளின் 1-ஆம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பத்தில் நானும், அவளும் கையொப்பம் இட்ட பகுதி! சென்ற முறை விடுப்பில் இந்தியா சென்றதற்கு என்மகளின் பள்ளி-சேர்க்கையே காரணம் என்பதை முந்தைய தலையங்கத்தில் கூறி இருந்தேன். அவளின் பள்ளியில் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ததும், அவளும் கையொப்பம் இடவேண்டும் என்பதை அறிந்தேன். நான் என்னுடைய 1-ஆம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பத்தில் கையொப்பம் இட்டேனா?! என்பது எனக்கு தெரியவில்லை! இது, எந்த தலைமுறையில் ஆரம்பித்தது  என்பதும் தெரியவில்லை. சேர்க்கை நாளுக்கு 2-வாரங்களுக்கு முன்பிருந்தே என்னவளும்; என் மரு-பெற்றோர்களும் என்மகளுக்கு கையொப்பம் இடும் பயிற்சியை தொடர்ந்து அளித்தனர். பள்ளியில், அவளின் பெயரை எழுதிட சொல்லக்கூடும் என்பதால் அந்த பயிற்சி என்று என்னிடம் கூறியிருந்தனர். எனக்கு, என்மகள் விண்ணப்ப படிவத்தில் கையொப்பம் இடவேண்டும் என்பது தெரியாது!

    என்மகள் அப்படி கையொப்பமாய் எழுதி காண்பித்திருக்கிறாள் எனினும், அவள் முதன்முதலாய் அதிகாரபூர்வமாய் விண்ணப்பத்தில் அப்படி கையொப்பம் இட்டதை கண்டு - பெருத்த சந்தோசம்! இதற்கு முழுமுதல் காரணம் - என்னவளே!! அவளின் பெருத்த முயற்சியும்; அவள் கொடுத்த பயிற்சியும் முக்கிய காரணிகள். வேறெவருக்கும் இப்படி கையொப்பம் இட்டது நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை. அப்படி இட்ட கையொப்பத்தின் நகலை எத்தனை பெற்றோர்கள் எடுத்தனர் என்று தெரியவில்லை. நான் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதை அடுத்த அறையில் சென்று சமர்ப்பிக்கும் முன்னர் - என்னுடைய அலைபேசியில் "தவறாமல்" பதிவு செய்துவிட்டேன். இது எனக்களித்த சந்தோசத்தை விட - என்மகள் வளர்ந்தவுடன் அவளுக்கு பெருத்த சந்தோசத்தை கொடுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை! இது சிலருக்கு சாதரணமாய் படக்கூடும்; ஆனால், இந்த விசயம் எத்தனை பெரியது என்பது என்மகளுக்கு பிற்காலத்தில் புரியும். பணம், சொத்து - இவைகளைக் காட்டிலும்... 

இதுபோன்றவைகளை; என்மகளுக்காய் சேர்ப்பதில் தான் எனக்கு பெருத்த சந்தோசம்!!!