வியாழன், ஆகஸ்ட் 06, 2015

குறள் எண்: 0004 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 001 - கடவுள் வாழ்த்து; குறள் எண்: 0004}
                              

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு 
யாண்டும் இடும்பை இல 

விழியப்பன் விளக்கம்: வேண்டுமென்பதும் வேண்டாமென்பதும், இல்லாதவனின் (கடவுளின்) பாதம் சேர்ந்தவர்க்கு; எதுவுமே துன்பம் இல்லை.

                                                               (அது போல்...)

சரியென்பதும் சரியில்லையென்பதும், சமமென அணுகும் குருவைக் கொண்டிருப்போர்க்கு; எதுவும் குழப்பம் விளைவிக்காது.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திறமையை தேர்ந்தெடுப்பதில்...

{விஜய் டி.வி. யின் சூப்பர் சிங்கர் 5 இன் நிகழ்வொன்றால் கிடைத்த கரு!}


திறமையை தேர்ந்தெடுப்பதில்;
பரிதாபமும் பரிந்துரையும்
ஏன் வருகிறது???

சுய-இன்பம்; சுய-ஒழுக்கமா???



      சுய-இன்பம் என்ற ஒன்று மட்டும் நடைமுறையில் இல்லையானால், கள்ளத்தொடர்புகளும் (ஆண்/பெண் இரண்டு வகை) விபச்சாரங்களும் இப்போது இருப்பதைக் காட்டிலும்; பெருமளவில் பெருகி இருக்கும் என்று தோன்றுகிறது. வெகுநிச்சயமாய்... விவாகரத்து/வேலை-நிமித்தம் போன்ற காரணங்களுக்காய் "கட்டாய தனிக்கட்டை"ஆய் இருக்கும் நபர்கள் விசயத்தில் இது பேருண்மையாகிறது. எனவே...

சுய-இன்பம் என்பது சுய-ஒழுக்கமா??? 

புதன், ஆகஸ்ட் 05, 2015

குறள் எண்: 0003 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 001 - கடவுள் வாழ்த்து; குறள் எண்: 0003}


மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் 

விழியப்பன் விளக்கம்: மலரின்-மீதே நடந்தவனின் (கடவுளின்) மாட்சிமையான பாதங்களை அடைந்தோர்; இப்புவியில் "சாகா வரம்" பெற்று நீடித்து வாழ்வர்.

(அது போல்...)

உண்மையின்-மீதே பயணித்தவரின் உன்னதமான வழிகாட்டுதலைப் பெற்றோர்; செயல்களில் "தோல்வியில்லா வரம்" பெற்று வெற்றிவாகை சூடுவர்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

தொழாஅர் எனின் (குறள் எண்: 0002)

      குறள் எண் 2 - ற்கான விழியப்பன் விளக்கவுரையை நீங்கள் படித்திருக்கக் கூடும். அதை வெளியிட்டவுடன் "குறளும் கோவல்-நட்பும்" என்ற என் வாட்ஸ்ஆப்-குழுவில் குறளையும், விளக்கத்தையும் ஒலிக்-குறுஞ்செய்தியாய் பகிர்ந்தேன். அக்குறளில் வரும் "தொழாஅர்" என்ற சொல்லை சரியாய்-உச்சரித்து; "ழாஅ" என்பது "உயிரளபடை" என்ற இலக்கணம் என்று சொன்னேன். நெடில் உயிர் எழுத்துகளாகிய "ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒளெ" இவை உயிரளபடையின் கீழ் வரும் எழுத்துகள் என்று சொல்லி, அந்த இலக்கணத்தை விளக்கி இருந்தேன். அதில் "ஐ, ஒளெ" இரண்டையும் விட்டுவிட்டேன்; நான் அவை நெடில் அல்ல என்ற எண்ணத்தில் இருந்தேன். இதை மிகச்சரியாய் கவனித்த என் நண்பன் கதிர்வேலின் மகள் பவஸ்ரீ "அப்பா! அவர் ஐ, ஒளெ - இந்த இரண்டு நெடில்களை விட்டுவிட்டார் என்றாளாம். நண்பன் என்னிடம் சொல்லிவிட்டு; எனக்கும் சந்தேகமாய் இருக்கிறது - உன்னப்பனிடம் கேட்டு விளக்கம் கொடு என்றான்.

          நான் அப்போதும்; இல்லை... அவை குறில் எழுத்துகள் என்று வாதிட்டு பின் யோசிக்கும்போது "குறில் ஐந்தும்; நெடில் ஏழும்" என்று சிறுவயதில் படித்தது நினைவுக்கு வந்தது. அதை சரி பார்த்துவிட்டு - என் நண்பனுக்கு இன்னொமொரு ஒலிக்-குறுஞ்செய்தி அனுப்பி "மன்னிக்கவும்! தவறாக சொல்லிவிட்டேன்; மறக்காமல்/மறுக்காமல் உன் மகளிடம் மன்னிப்பு கேட்டேன் என்று சொல்" என்று கூறி இருந்தேன். பல நட்புகளும் அச்சிறு-பிள்ளையிடம் நான் மன்னிப்பு கோரியதை சுட்டிக்காட்டி பாராட்டினர். இதிலென்னப்பா இருக்கிறது?! தவறு என்றால் தவறு; அதை எவர் சுட்டிக்காட்டினாலும், மன்னிப்பு கோருவதே முறை என்றேன். என் முதல் விளக்கவுரையை அவள் திருவாயால் படித்ததை எத்தனை மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டு; இங்கே அதே மகிழ்வுடன் பகிர்ந்தேனோ - அதே உணர்வு மன்னிப்பு கேட்பதிலும் இருக்கவேண்டும் தானே? மன்னிப்பும்/நன்றியும் கூறாமல் "திமிராய்" இருந்த நிலையுண்டு - அது தவறென்பதையும் எழுதி இருக்கிறேன்.

        சரி... நான் விளக்கிய இலக்கணத்திற்கு வருவோம். உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள) ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பதற்கு உயிரளபடை எனறு பெயர். நெடில்-எழுத்துக்கு இரண்டு மாத்திரை; அளபெடுக்கும்போது அதற்கு இனமான குறில் எழுத்தையும் (அ, இ, உ, எ, ஒ என்பன) எழுதுவதால், குறிலுக்கு உரிய ஒரு மாத்திரையும் சேர்த்து உயிரளபெடை மூன்று மாத்திரை நேரம் ஒலிக்கும். இன எழுத்துகள் என்பது ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ ஆகும். "ஐ"காரத்திற்கும் "ஒள"காரத்திற்கும் இணையான குறில் இல்லை என்பதால், முறையே "இ"கரம், "உ"கரம் அடையாளமாக எழுதப்படும் (இவை நான் அங்கே சொல்லவில்லை). பின்னர், உயிரளபடையை "உயிர் + அளபு + படை" என்று பிரித்து;  படை என்றால் - ஒன்றுக்கும் மேற்பட்ட அல்லது விரிவது/அதிகமாகவது என்றேன். அதாவது அவ்வேழு உயிர் எழுத்துகளும் தம் மாத்திரையின் அளவை அதிகமாக்குவது (படையாக்குவது)...

     உயிரளபடை என்றேன்! அப்படி விளக்கியது முற்றிலும் சரியா?! என்று தெரியவில்லை. ஏனெனில், என் நட்புகளுக்கு விளக்கும் போது - அக்கணத்தில் எனக்கு ஏற்பட்ட புரிதலையே அவர்களுக்கு விளக்கினேன். எனவே, இது முற்றிலும் சரியா?! என்று தெரியவில்லை. ஆனால், அவர்கள் என் விளக்கம் மிகச்சரியாய்/மிக-எளிதாய் புரிந்தது என்றனர்; அதுதானே முக்கியம்? சொல்லிக்கொடுப்பது; கேட்போருக்கு புரியவேண்டும் என்பது தானே முதல் விதி? அப்படி பார்ப்பின், என் விளக்கம் சரியே! மேலும் "தொழாஅர்" என்று விளித்து சொல்லும்போது அங்கே தொழுகையின் முக்கியம் அதிகமாய் வலியுறுத்தி சொல்லப்படுகிறது என்றேன். இப்போது நாம் பெரிதுபடுத்தி அல்லது அடிக்கோடிட்டு சொல்வது போல என்றேன். அதாவாது "தொழாதவர் எவர் ஆயினும்" என்று அதிகாரத்துடன் சொல்வது! அப்படி சொல்லும்போது அது எதிர்மறையாய் "சென்றே ஆகவேண்டும்!" என்ற பொருளில்(கூட) வரும் என்றேன். 

       அதை மேலும் எளிதாய் விளக்க பின்வரும் உவமானம் கொண்டு விளக்கினேன்:  நாம் நம் பிள்ளைகளிடம் "இப்போது இங்கே நீ வரவில்லை என்றால்...!" என்று அதிகாரத்துடன் சொல்வோம் அல்லவா?! அதன் உட்பொருள் "இப்போது நீ இங்கு வந்தே ஆகவேண்டும்!" என்பது தானே? அது போல் பெருந்தகையும் "தொழுதே ஆகவேண்டும்" என்பதாயும் உணர்த்தவே அப்படியொரு அளபடையை உபயோகித்திருப்பார் என்றேன். அக்குறள் விளக்கத்தில் "வாலறிவன்" என்பதற்கு பகுத்தறிபவன் என்ற பொருள் கொண்டு; பகுத்தறிவின் மூலமானவன் (கடவுள்) என்று சொல்லி இருக்கிறேன். நான் பார்த்த வகையில் அச்சொல்லுக்கு... "தூய/தூய்மையான அறிவானவன்" என்றே பொருள் சொல்லப்பட்டு இருக்கிறது. அதுவும் பிற்கால விளக்கவுரைகளில் தான். எனக்கென்னவோ "தூய"அறிவு என்பதை விட "பகுத்தறிவு" என்பது தான் சிறந்ததாய் படுகிறது. முன்பே சொன்னது போல், இதுதான் எல்லாம் நம் பெருந்தகையின் பொதுமறையின் மகிமை. உங்கள் அனைவரின் ...


             அன்பு-ஆசிகளுடன் இப்பணி; மென்மேலும் செம்மையாகும் என்று நம்புகிறேன்!!! 

செவ்வாய், ஆகஸ்ட் 04, 2015

குறள் எண்: 0002 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 001 - கடவுள் வாழ்த்து; குறள் எண்: 0002}


கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் 
நற்றாள் தொழாஅர் எனின்


விழியப்பன் விளக்கம்: பகுத்தறிவின் மூலமானவனின் (கடவுளின்) நற்பாதங்களை தொழாத; ஒருவர் கற்றதனால் விளையும் பயன் என்ன?

(அது போல்...)

பிறப்பின் மூலமானவர்களின் (பெற்றோர்) பொற்பாதங்களைத் தொழாத; ஒருவர் பிறந்ததால் அடையும் பயன் என்ன??

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஏனிந்த "விழியப்பன் விளக்கவுரை"???



      "திருக்குறளுக்கு - இருக்கின்ற விளக்கவுரைகள் போதாதா?! இவன் என்ன எழுதிவிடப் போகிறான்?!" என்ற கேள்வி உங்களில் பலருக்கு எழுந்திருக்கும்; தவறில்லை! எனக்கே பலமுறை எழுந்தது. ஒவ்வொரு முறையும் தீர சிந்தித்து; இல்லை, இன்னும் எழுத அதில் நிறைய இருக்கிறது!பல குறள்களுக்கும் "பொது தளத்தில்" இருந்து விளக்கவுரை இல்லை என்ற ஒரு புரிதல் வந்தது. ஆம், நம் வள்ளுவப் பெருந்தகையின் திருக்குறள் "உலகப் பொதுமறை" என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அது பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்ய்யப்பட்டதால் மட்டுமன்று! அதில் உள்ள கருத்துகள் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சூழலில், பல்வேறு நாடுகளில் வாழும் பல்வேறு மொழி பேசும், பல்வேறு மார்க்கத்தில் (மதம்) செல்லும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவாய் உள்ளது என்பதே அதன் பேருண்மை!! அந்த அடிப்படையில், பல குறல்களுக்கும் மேலும் பொதுப்பார்வையில் விளக்கவுரை கொடுக்கலாம் என்று தோன்றியது.

       அது புரிந்ததும், கண்டிப்பாய் "விழியப்பன் விளக்கவுரை" என்று எழுதுவதற்கு தேவையான சாத்தியக்கூறுகளும்; நியாயமான காரணங்களும் இருக்கின்றன என்பது விளங்கியது. உடனே, இப்பணியை துவங்க தீவிரமாய் ஆலோசித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் என் பள்ளி நட்புகள், தமிழ்பால் எங்கள் அனைவருக்கும் உள்ள அன்பால், ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறளை  (அல்லது வாய்ப்பு கிடைக்கும் நாட்களில்) சொல்லி விளக்குமாறு எனக்கு அன்பு கட்டளை இட்டனர். அன்பை மீறமுடியாத நான், என்பார்வையில் விளக்கவுரை எழுதும் எண்ணம் வெகு நாட்களாய் இருக்கிறது என்று சொல்லி நேற்றே (அங்கும்/இங்கும்) ஆரம்பித்துவிட்டேன். "வாட்ஸ்ஆப்"பில் அந்த குழுவிற்கு "குறளும் கோவல்-நட்பும்" என்று தலைப்பும் இட்டேன். முதல் குறளை இங்கே என் வலைப்பதிவில் பதிந்துவிட்டு; என்னுடைய குரலில் அங்கு பேச்சாகவும் பதிந்தேன். முதல் முயற்சி என்பதால், என் விளக்கவுரையின் நோக்கத்தை சிறிது விவரித்தேன்.

           "அகர முதல எழுத்தெல்லாம்..." என்ற குறளுக்கு "மொழியைப் புரிந்துகொள்ள எழுத்துகளை அறிதலும்; உலகைப் புரிந்துகொள்ள கடவுளை அறிதலும் - முதன்மையாம்" என்பதை விழியப்பனின் விளக்கவுரையாய் கொடுத்தேன். இந்த குறளுக்கு பொதுவான விளக்கம் "எழுத்துகளெல்லாம் அகரத்தில் துவங்குவது போல், உலகுக்கு கடவுள் ஆதியாய் இருக்கிறார்" என்பதன் சாராம்சமே! மறுக்கவேயில்லை... அர்த்தத்தில் தவறேதுமில்லை. அதுவா நம் பெருந்தகையின் பொதுமறை? இல்லையே! ஏனெனில் "தமிழ்" மொழி மற்றும் சில/பல மொழிகளில் எழுத்துகள் "அகரத்தில்" துவங்குகின்றன. மற்ற மொழியில்? வேறுபாடுகள் உண்டல்லவா? பின், பொதுவாய் அகரத்தில் துவங்குகின்றன என்பது எப்படி பொதுமை ஆகும்? பொதுமைதானே, நம் பெருந்தகையின் குறள்களிலன் தலையாய சிறப்பும்? எனவே தான் "மொழியைப் புரிந்து கொள்ள" என்றேன். ஆம்... துவக்கம் வேறு எழுத்தில் கூட இருக்கலாம்; ஆனால், மொழியைப் புரிந்து கொள்வதின் துவக்கம்...

          எழுத்துகளை அறிவதில் இருக்கவேண்டும் என்றேன்! இப்போது மொழி என்பது பொதுமை; ஆதலால், எம்மொழியாயினும் சம்மதமே! இந்த விளக்கத்தை கேட்டுவிட்டு மேற்சொன்ன குழுவில் இருக்கும் ஒரு நண்பன் (கதிர்வேல்) தன் பெண்பிள்ளையின் குரலால் என் விளக்கத்தை படிக்க சொல்லி "ஒலிக்குறுஞ் செய்தி (Voice Message)" அனுப்பியிருந்தான். என் முயற்சிக்கு கிடைத்த முதலும்/சிறந்ததுமான பாராட்டாய் அதை அகமகிழ்ந்து ஏற்றுக்கொண்டேன். இது என் வெற்றி அல்ல; நம் பெருந்தகையின் வெற்றி! திருக்குறளை எப்படி வாழ்வியல்/பொதுவியலோடு சேர்த்து பார்ப்பதென்று என் பள்ளிப்பருவத்தில் பயிற்றுவித்த என்னப்பனின் வெற்றி. ஆம் "இளைதாக முள்மரம் கொல்க..." என்ற குறளுக்கு அவர் கொடுத்த விளக்கமும்; அதை பொதுமைப் படுத்திய அவர் தமிழறிவும் இன்னும் என் செவிகளில் "பசுமரத்தாணி போல்" இருக்கிறது. அதை அந்த குறளுக்கான விளக்கவுரை வெளியிடும்போது சொல்கிறேன். 

           அதன் பின்னர், இன்னுமொரு நண்பன் (பாலாஜி) தன் பெண்பிள்ளைகளிடம் அந்த குறளுக்கு விளக்கம் கேட்டு; பின், என் விளக்கத்தையும் கூறியதாய் சொன்னான். வள்ளுவப் பெருந்தகையின் ஆசிர்வாதமாய் அதை ஏற்றேன்; அதற்கு பரந்த மனது வேண்டும். இறையருளால், எங்கள் குழுவில் இருப்போர் எல்லோரும் அப்படியே; எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் மற்றவரின் சிறப்புகளை பாராட்டும் அன்புள்ளம் கொண்டவர். இப்படி ஆக்கப்பூர்வமான செயல்கள் செய்து; சக நட்பை பாராட்டும் நட்பு-வட்டம் கிடைத்தது மிகப்பெரிய கொடை. இதற்கெல்லாம் மேலாய்... என்னுடைய பார்வையையே இன்னுமொரு தளத்திற்கு எடுத்து செல்லும் விதமாய் இன்னுமோர் நட்பு இப்படி கேட்டான்; "புதுமையான விளக்கம் நன்று. ஆயினும், மொழிகள் சில எழுத்துக்கள் இல்லாமலும் அறியப்படுகின்றன. பலரால் எழுத, படிக்க தெறியாமலே மொழியை புரிந்துகொள்ள முடிகிறதே!" என்றான். என்னுள் உடனே ஏற்பட்ட புரிதலை, என் பதிலாய் பின்வருமாறு கொடுத்தேன்.

      "அருமையான கேள்வி  ஜனா! நம் பெருந்தகை எழுத்தை குறிப்பிட்டிருப்பதால் மொழியை பொதுமைப் படுத்தினேன். அவர் எழுத்தைப் பற்றி சொல்லவில்லை எனில், மொழியைக் குறிப்பிட்டது தவறாகும். ஆயினும், எழுத்தில்லா மொழிகள் உண்டென்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. உன் கேள்வியைப் படித்தவுடன் இப்புரிதல் கிடைத்தது: கடவுளை அறியாமல் (அல்லது அறிய விரும்பாமல்) உலகைப் புரிந்து கொள்ள முயலும் குழுக்களும் உண்டு; ஆனால், அவை எண்ணிக்கையில் குறைந்தும்; அதிக நாகரீகம் இல்லாமலும், பொதுவெளியில் பயணிக்க முடியாமல் தனித்து நிற்கும். "ஒருவேளை, எழுத்தில் துவங்காத மொழியும்; கடவுளில் துவங்காத உலகப் புரிதலும், நிரந்தரமோ/நல்லதோ அன்று!" என்பதை மறைமுகமாய்க் கூட விளக்கி இருக்கலாம் என்றேன். என் புரிதலை செம்மையாக்கும் இப்படிப்பட்ட கேள்விகள் மற்றும் "நேர்த்தியான/நேர்மையான" விமர்சங்களைத்தான் நான் தொடர்ந்து ஏக்கத்துடன் எதிர்பார்கிறேன்.  

வாருங்கள்... விமர்சனத்தால் என் விளக்கவுரையை செம்மையாக்குங்கள்!!!

திங்கள், ஆகஸ்ட் 03, 2015

குறள் எண்: 0001 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 001 - கடவுள் வாழ்த்து; குறள் எண்: 0001}

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு                          

விழியப்பன் விளக்கம்: மொழியைப் புரிந்துகொள்ள எழுத்துகளை அறிதலும்; உலகைப் புரிந்துகொள்ள கடவுளை அறிதலும் - முதன்மையாம்.
(அது போல்...)
உணர்வைப் புரிந்துகொள்ள, மனிதத்தை அறிதலும்; உறவைப் புரிந்துகொள்ள பெற்றோரை அறிதலும் - முதன்மையாம்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை...



       சிறிது காலமாகவே திருக்குறளுக்கு என்னுடைய பார்வையில் ஒரு விளக்கவுரை எழுதவேண்டும் என்பது எண்ண-வடிவிலேயே உழன்று கொண்டிருந்தது. சமீப காலமாய் என் நட்புகளும், அதை தொடர்ந்து வலியுறுத்த - அதை இன்று ஆரம்பித்திருக்கிறேன். அட... இந்த வரியை எழுதும்போது தான், இன்று என்னவளின் பிறந்து நாளும் ஆயிற்றே என்ற எண்ணம் வந்தது. இது எதேச்சையாய் அமைந்த ஒற்றுமை; ஆனால், நிச்சயம் மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றுதான்.

   முடிந்தவரை... தினமும் ஒரு திருக்குறள் என்ற அடிப்படையில் விளக்கம் சொல்லவே திட்டம் வகுத்திருக்கிறேன். பார்ப்போம்... எத்தனை வைராக்கியமாய் அதை செய்ய முடிகிறது என்று? மற்ற படைப்புகளைப் போல், இந்த "மாபெரும் முயற்சிக்கும்" உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும்; சரியான-வழிகாட்டுதலையும்; நேர்மையான-விமர்சனத்தையும் எதிர்பார்க்கிறேன். என்னால் முடிந்த வரை, ஒரு சரியான பார்வையில் இந்த விளக்கவுரை இருப்பதில் கவனம் செலுத்துவேன்.

மேலும் எத்தனை ஆண்டுகள் வேண்டும்???


          கண்டிப்பாக நாம் எல்லோரும் "பல்லாண்டுகள் வாழ்க!" என்று பிறருக்கு சொல்லியிருப்போம்; அல்லது பிறர் நமக்கு சொல்ல கேட்டிருப்போம். இன்று (ஆகஸ்ட் 3) என்னவளுக்கு பிறந்த நாள் என்பதால் "பல்லாண்டுகள் வாழ்க" என்று வாழ்த்தினேன். பின்னர்... "பல்லாண்டுகள்" என்றால், சரியாய் எத்தனை ஆண்டுகள் என்றொரு கேள்வி என்னுள் எழுந்தது. "சாகாமல்" எப்போதும் இருக்கவேண்டும் என்று எடுத்துக்கொள்ளலாமா? இல்லை... சாகாவரம் போல் ஒரு சோகம் இருக்கமுடியாது. சரி, 5/10 ஆண்டுகள் என்று கொள்ளலாமா? மீண்டும் இல்லை... எந்த வயதினர் ஆயினும் அது மிகக்குறைந்த எண்ணிக்கையை படும். இருப்பின், எத்தனை ஆண்டுகள் சரியாகும்? என்று யோசிச்சபோது என்னவளைப் பொருத்தவரை ஒன்று புரிந்தது. 
       
        ஆம், மற்றவர்களைப் பற்றி எனக்கு தெரியாது. ஆனால், என்னவளைப் பொருத்தவரை, அவளின் ஒழுக்கம் மற்றும் வைராக்கியத்தின் அடிப்படையில் பின்வருமாறு வாழ்த்தினேன். எம்மகள் "அம்மா! போதுமம்மா. இதுநாள் வரை வாழ்ந்தது போதும். இத்தனை துன்பப்பட்டு என்னைப் பார்த்துக்கொள்ள கடினைப்படுவதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது!" என்று சொல்லும் நாள் வரையிலாவது வாழவேண்டும் என்று வாழ்த்தினேன். ஆம், என்னவள் குறைந்தது "அத்தனை ஆண்டுகள்" ஆவது மீண்டும் மீண்டும் இந்த பொன்னாளை கண்டிடவேண்டும். நேரடியாக இல்லை எனினும், நம் மனதிற்குள்ளாவது, இனி மற்றவரை வாழ்த்தும்போது எத்தனை ஆண்டுகள் வேண்டும் என்பதை நினைத்துக்கொள்வோம்.  


எனவே, எத்தனை ஆண்டுகள் என்பதில் கவனமாய் இருப்போம்!!!

சனி, ஆகஸ்ட் 01, 2015

யோவ் கவிஞரே!

யோவ் கவிஞரே!
வார்த்தைகளற்று, வெறுப்புற்று - வெறுமையில் இருக்கிறேன்.
இயல்பாய் என் மனதை பிரதிபலிக்கிறேன்: எத்தனை பேர் உம்மை தூற்றினாலும்; உம் தமிழ் புலன் மறுக்க முடியாதது. அருமையான/எளிமையான வார்த்தைகள்! ஆனால் ஆழமான/சிந்தனை-மயமான உவமானங்கள்!
பல்லாண்டுகள், வாழ்க வளமுடன் கவிஞரே!!