"திருக்குறளுக்கு - இருக்கின்ற விளக்கவுரைகள் போதாதா?! இவன் என்ன எழுதிவிடப் போகிறான்?!" என்ற கேள்வி உங்களில் பலருக்கு எழுந்திருக்கும்; தவறில்லை! எனக்கே பலமுறை எழுந்தது. ஒவ்வொரு முறையும் தீர சிந்தித்து; இல்லை, இன்னும் எழுத அதில் நிறைய இருக்கிறது!பல குறள்களுக்கும் "பொது தளத்தில்" இருந்து விளக்கவுரை இல்லை என்ற ஒரு புரிதல் வந்தது. ஆம், நம் வள்ளுவப் பெருந்தகையின் திருக்குறள் "உலகப் பொதுமறை" என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அது பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்ய்யப்பட்டதால் மட்டுமன்று! அதில் உள்ள கருத்துகள் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சூழலில், பல்வேறு நாடுகளில் வாழும் பல்வேறு மொழி பேசும், பல்வேறு மார்க்கத்தில் (மதம்) செல்லும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவாய் உள்ளது என்பதே அதன் பேருண்மை!! அந்த அடிப்படையில், பல குறல்களுக்கும் மேலும் பொதுப்பார்வையில் விளக்கவுரை கொடுக்கலாம் என்று தோன்றியது.
அது புரிந்ததும், கண்டிப்பாய் "விழியப்பன் விளக்கவுரை" என்று எழுதுவதற்கு தேவையான சாத்தியக்கூறுகளும்; நியாயமான காரணங்களும் இருக்கின்றன என்பது விளங்கியது. உடனே, இப்பணியை துவங்க தீவிரமாய் ஆலோசித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் என் பள்ளி நட்புகள், தமிழ்பால் எங்கள் அனைவருக்கும் உள்ள அன்பால், ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறளை (அல்லது வாய்ப்பு கிடைக்கும் நாட்களில்) சொல்லி விளக்குமாறு எனக்கு அன்பு கட்டளை இட்டனர். அன்பை மீறமுடியாத நான், என்பார்வையில் விளக்கவுரை எழுதும் எண்ணம் வெகு நாட்களாய் இருக்கிறது என்று சொல்லி நேற்றே (அங்கும்/இங்கும்) ஆரம்பித்துவிட்டேன். "வாட்ஸ்ஆப்"பில் அந்த குழுவிற்கு "குறளும் கோவல்-நட்பும்" என்று தலைப்பும் இட்டேன். முதல் குறளை இங்கே என் வலைப்பதிவில் பதிந்துவிட்டு; என்னுடைய குரலில் அங்கு பேச்சாகவும் பதிந்தேன். முதல் முயற்சி என்பதால், என் விளக்கவுரையின் நோக்கத்தை சிறிது விவரித்தேன்.
"அகர முதல எழுத்தெல்லாம்..." என்ற குறளுக்கு "மொழியைப் புரிந்துகொள்ள எழுத்துகளை அறிதலும்; உலகைப் புரிந்துகொள்ள கடவுளை அறிதலும் - முதன்மையாம்" என்பதை விழியப்பனின் விளக்கவுரையாய் கொடுத்தேன். இந்த குறளுக்கு பொதுவான விளக்கம் "எழுத்துகளெல்லாம் அகரத்தில் துவங்குவது போல், உலகுக்கு கடவுள் ஆதியாய் இருக்கிறார்" என்பதன் சாராம்சமே! மறுக்கவேயில்லை... அர்த்தத்தில் தவறேதுமில்லை. அதுவா நம் பெருந்தகையின் பொதுமறை? இல்லையே! ஏனெனில் "தமிழ்" மொழி மற்றும் சில/பல மொழிகளில் எழுத்துகள் "அகரத்தில்" துவங்குகின்றன. மற்ற மொழியில்? வேறுபாடுகள் உண்டல்லவா? பின், பொதுவாய் அகரத்தில் துவங்குகின்றன என்பது எப்படி பொதுமை ஆகும்? பொதுமைதானே, நம் பெருந்தகையின் குறள்களிலன் தலையாய சிறப்பும்? எனவே தான் "மொழியைப் புரிந்து கொள்ள" என்றேன். ஆம்... துவக்கம் வேறு எழுத்தில் கூட இருக்கலாம்; ஆனால், மொழியைப் புரிந்து கொள்வதின் துவக்கம்...
எழுத்துகளை அறிவதில் இருக்கவேண்டும் என்றேன்! இப்போது மொழி என்பது பொதுமை; ஆதலால், எம்மொழியாயினும் சம்மதமே! இந்த விளக்கத்தை கேட்டுவிட்டு மேற்சொன்ன குழுவில் இருக்கும் ஒரு நண்பன் (கதிர்வேல்) தன் பெண்பிள்ளையின் குரலால் என் விளக்கத்தை படிக்க சொல்லி "ஒலிக்குறுஞ் செய்தி (Voice Message)" அனுப்பியிருந்தான். என் முயற்சிக்கு கிடைத்த முதலும்/சிறந்ததுமான பாராட்டாய் அதை அகமகிழ்ந்து ஏற்றுக்கொண்டேன். இது என் வெற்றி அல்ல; நம் பெருந்தகையின் வெற்றி! திருக்குறளை எப்படி வாழ்வியல்/பொதுவியலோடு சேர்த்து பார்ப்பதென்று என் பள்ளிப்பருவத்தில் பயிற்றுவித்த என்னப்பனின் வெற்றி. ஆம் "இளைதாக முள்மரம் கொல்க..." என்ற குறளுக்கு அவர் கொடுத்த விளக்கமும்; அதை பொதுமைப் படுத்திய அவர் தமிழறிவும் இன்னும் என் செவிகளில் "பசுமரத்தாணி போல்" இருக்கிறது. அதை அந்த குறளுக்கான விளக்கவுரை வெளியிடும்போது சொல்கிறேன்.
அதன் பின்னர், இன்னுமொரு நண்பன் (பாலாஜி) தன் பெண்பிள்ளைகளிடம் அந்த குறளுக்கு விளக்கம் கேட்டு; பின், என் விளக்கத்தையும் கூறியதாய் சொன்னான். வள்ளுவப் பெருந்தகையின் ஆசிர்வாதமாய் அதை ஏற்றேன்; அதற்கு பரந்த மனது வேண்டும். இறையருளால், எங்கள் குழுவில் இருப்போர் எல்லோரும் அப்படியே; எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் மற்றவரின் சிறப்புகளை பாராட்டும் அன்புள்ளம் கொண்டவர். இப்படி ஆக்கப்பூர்வமான செயல்கள் செய்து; சக நட்பை பாராட்டும் நட்பு-வட்டம் கிடைத்தது மிகப்பெரிய கொடை. இதற்கெல்லாம் மேலாய்... என்னுடைய பார்வையையே இன்னுமொரு தளத்திற்கு எடுத்து செல்லும் விதமாய் இன்னுமோர் நட்பு இப்படி கேட்டான்; "புதுமையான விளக்கம் நன்று. ஆயினும், மொழிகள் சில எழுத்துக்கள் இல்லாமலும் அறியப்படுகின்றன. பலரால் எழுத, படிக்க தெறியாமலே மொழியை புரிந்துகொள்ள முடிகிறதே!" என்றான். என்னுள் உடனே ஏற்பட்ட புரிதலை, என் பதிலாய் பின்வருமாறு கொடுத்தேன்.
"அருமையான கேள்வி ஜனா! நம் பெருந்தகை எழுத்தை குறிப்பிட்டிருப்பதால் மொழியை பொதுமைப் படுத்தினேன். அவர் எழுத்தைப் பற்றி சொல்லவில்லை எனில், மொழியைக் குறிப்பிட்டது தவறாகும். ஆயினும், எழுத்தில்லா மொழிகள் உண்டென்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. உன் கேள்வியைப் படித்தவுடன் இப்புரிதல் கிடைத்தது: கடவுளை அறியாமல் (அல்லது அறிய விரும்பாமல்) உலகைப் புரிந்து கொள்ள முயலும் குழுக்களும் உண்டு; ஆனால், அவை எண்ணிக்கையில் குறைந்தும்; அதிக நாகரீகம் இல்லாமலும், பொதுவெளியில் பயணிக்க முடியாமல் தனித்து நிற்கும். "ஒருவேளை, எழுத்தில் துவங்காத மொழியும்; கடவுளில் துவங்காத உலகப் புரிதலும், நிரந்தரமோ/நல்லதோ அன்று!" என்பதை மறைமுகமாய்க் கூட விளக்கி இருக்கலாம் என்றேன். என் புரிதலை செம்மையாக்கும் இப்படிப்பட்ட கேள்விகள் மற்றும் "நேர்த்தியான/நேர்மையான" விமர்சங்களைத்தான் நான் தொடர்ந்து ஏக்கத்துடன் எதிர்பார்கிறேன்.
வாருங்கள்... விமர்சனத்தால் என் விளக்கவுரையை செம்மையாக்குங்கள்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக