புதன், ஆகஸ்ட் 05, 2015

தொழாஅர் எனின் (குறள் எண்: 0002)

      குறள் எண் 2 - ற்கான விழியப்பன் விளக்கவுரையை நீங்கள் படித்திருக்கக் கூடும். அதை வெளியிட்டவுடன் "குறளும் கோவல்-நட்பும்" என்ற என் வாட்ஸ்ஆப்-குழுவில் குறளையும், விளக்கத்தையும் ஒலிக்-குறுஞ்செய்தியாய் பகிர்ந்தேன். அக்குறளில் வரும் "தொழாஅர்" என்ற சொல்லை சரியாய்-உச்சரித்து; "ழாஅ" என்பது "உயிரளபடை" என்ற இலக்கணம் என்று சொன்னேன். நெடில் உயிர் எழுத்துகளாகிய "ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒளெ" இவை உயிரளபடையின் கீழ் வரும் எழுத்துகள் என்று சொல்லி, அந்த இலக்கணத்தை விளக்கி இருந்தேன். அதில் "ஐ, ஒளெ" இரண்டையும் விட்டுவிட்டேன்; நான் அவை நெடில் அல்ல என்ற எண்ணத்தில் இருந்தேன். இதை மிகச்சரியாய் கவனித்த என் நண்பன் கதிர்வேலின் மகள் பவஸ்ரீ "அப்பா! அவர் ஐ, ஒளெ - இந்த இரண்டு நெடில்களை விட்டுவிட்டார் என்றாளாம். நண்பன் என்னிடம் சொல்லிவிட்டு; எனக்கும் சந்தேகமாய் இருக்கிறது - உன்னப்பனிடம் கேட்டு விளக்கம் கொடு என்றான்.

          நான் அப்போதும்; இல்லை... அவை குறில் எழுத்துகள் என்று வாதிட்டு பின் யோசிக்கும்போது "குறில் ஐந்தும்; நெடில் ஏழும்" என்று சிறுவயதில் படித்தது நினைவுக்கு வந்தது. அதை சரி பார்த்துவிட்டு - என் நண்பனுக்கு இன்னொமொரு ஒலிக்-குறுஞ்செய்தி அனுப்பி "மன்னிக்கவும்! தவறாக சொல்லிவிட்டேன்; மறக்காமல்/மறுக்காமல் உன் மகளிடம் மன்னிப்பு கேட்டேன் என்று சொல்" என்று கூறி இருந்தேன். பல நட்புகளும் அச்சிறு-பிள்ளையிடம் நான் மன்னிப்பு கோரியதை சுட்டிக்காட்டி பாராட்டினர். இதிலென்னப்பா இருக்கிறது?! தவறு என்றால் தவறு; அதை எவர் சுட்டிக்காட்டினாலும், மன்னிப்பு கோருவதே முறை என்றேன். என் முதல் விளக்கவுரையை அவள் திருவாயால் படித்ததை எத்தனை மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டு; இங்கே அதே மகிழ்வுடன் பகிர்ந்தேனோ - அதே உணர்வு மன்னிப்பு கேட்பதிலும் இருக்கவேண்டும் தானே? மன்னிப்பும்/நன்றியும் கூறாமல் "திமிராய்" இருந்த நிலையுண்டு - அது தவறென்பதையும் எழுதி இருக்கிறேன்.

        சரி... நான் விளக்கிய இலக்கணத்திற்கு வருவோம். உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள) ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பதற்கு உயிரளபடை எனறு பெயர். நெடில்-எழுத்துக்கு இரண்டு மாத்திரை; அளபெடுக்கும்போது அதற்கு இனமான குறில் எழுத்தையும் (அ, இ, உ, எ, ஒ என்பன) எழுதுவதால், குறிலுக்கு உரிய ஒரு மாத்திரையும் சேர்த்து உயிரளபெடை மூன்று மாத்திரை நேரம் ஒலிக்கும். இன எழுத்துகள் என்பது ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ ஆகும். "ஐ"காரத்திற்கும் "ஒள"காரத்திற்கும் இணையான குறில் இல்லை என்பதால், முறையே "இ"கரம், "உ"கரம் அடையாளமாக எழுதப்படும் (இவை நான் அங்கே சொல்லவில்லை). பின்னர், உயிரளபடையை "உயிர் + அளபு + படை" என்று பிரித்து;  படை என்றால் - ஒன்றுக்கும் மேற்பட்ட அல்லது விரிவது/அதிகமாகவது என்றேன். அதாவது அவ்வேழு உயிர் எழுத்துகளும் தம் மாத்திரையின் அளவை அதிகமாக்குவது (படையாக்குவது)...

     உயிரளபடை என்றேன்! அப்படி விளக்கியது முற்றிலும் சரியா?! என்று தெரியவில்லை. ஏனெனில், என் நட்புகளுக்கு விளக்கும் போது - அக்கணத்தில் எனக்கு ஏற்பட்ட புரிதலையே அவர்களுக்கு விளக்கினேன். எனவே, இது முற்றிலும் சரியா?! என்று தெரியவில்லை. ஆனால், அவர்கள் என் விளக்கம் மிகச்சரியாய்/மிக-எளிதாய் புரிந்தது என்றனர்; அதுதானே முக்கியம்? சொல்லிக்கொடுப்பது; கேட்போருக்கு புரியவேண்டும் என்பது தானே முதல் விதி? அப்படி பார்ப்பின், என் விளக்கம் சரியே! மேலும் "தொழாஅர்" என்று விளித்து சொல்லும்போது அங்கே தொழுகையின் முக்கியம் அதிகமாய் வலியுறுத்தி சொல்லப்படுகிறது என்றேன். இப்போது நாம் பெரிதுபடுத்தி அல்லது அடிக்கோடிட்டு சொல்வது போல என்றேன். அதாவாது "தொழாதவர் எவர் ஆயினும்" என்று அதிகாரத்துடன் சொல்வது! அப்படி சொல்லும்போது அது எதிர்மறையாய் "சென்றே ஆகவேண்டும்!" என்ற பொருளில்(கூட) வரும் என்றேன். 

       அதை மேலும் எளிதாய் விளக்க பின்வரும் உவமானம் கொண்டு விளக்கினேன்:  நாம் நம் பிள்ளைகளிடம் "இப்போது இங்கே நீ வரவில்லை என்றால்...!" என்று அதிகாரத்துடன் சொல்வோம் அல்லவா?! அதன் உட்பொருள் "இப்போது நீ இங்கு வந்தே ஆகவேண்டும்!" என்பது தானே? அது போல் பெருந்தகையும் "தொழுதே ஆகவேண்டும்" என்பதாயும் உணர்த்தவே அப்படியொரு அளபடையை உபயோகித்திருப்பார் என்றேன். அக்குறள் விளக்கத்தில் "வாலறிவன்" என்பதற்கு பகுத்தறிபவன் என்ற பொருள் கொண்டு; பகுத்தறிவின் மூலமானவன் (கடவுள்) என்று சொல்லி இருக்கிறேன். நான் பார்த்த வகையில் அச்சொல்லுக்கு... "தூய/தூய்மையான அறிவானவன்" என்றே பொருள் சொல்லப்பட்டு இருக்கிறது. அதுவும் பிற்கால விளக்கவுரைகளில் தான். எனக்கென்னவோ "தூய"அறிவு என்பதை விட "பகுத்தறிவு" என்பது தான் சிறந்ததாய் படுகிறது. முன்பே சொன்னது போல், இதுதான் எல்லாம் நம் பெருந்தகையின் பொதுமறையின் மகிமை. உங்கள் அனைவரின் ...


             அன்பு-ஆசிகளுடன் இப்பணி; மென்மேலும் செம்மையாகும் என்று நம்புகிறேன்!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக