ஞாயிறு, செப்டம்பர் 08, 2013

நா. முத்துக்குமார் அவர்களுக்கு...




          நா. முத்துக்குமார் அவர்களே! உமக்கு தெரியாத பல்லாயிரக் கணக்கான இரசிகர்களுள் ஒருவனாய் - சமீபத்தில் நானும்!! வெகு-சத்தியமாய், இதற்கு முன் நீங்கள் எழுதிய பாடலை/பாடல்களை கேட்டு இரசித்திருப்பேன்! ஆனால், எழுதியது நீர்தான் என்று தெரிந்திருக்க வாய்ப்பற்று போயிருக்கும். ஏனெனில், (ஆயிரக்கணக்கான பாடல் தொகுப்பு என்னிடம் இருந்தும்)நான் இரசித்த பாடல்களின் ஆசிரியரை "பெரும்பாலும்" இதுவரை தெரிந்துகொள்ள முனைந்ததில்லை! ஆனால், தங்களின் "ஆனந்த யாழை மீட்டுகிறாய்..." என்ற தமிழ்த்திரைப்பாடலை கேட்டவுடன் - எழுதிய உம்-பெயரை "உடனே" கண்டுகொண்டேன். இந்த 1 வாரத்தில் அந்த பாடலை 300 முறைகளாவது இணையத்தில் பார்த்தும், கேட்டும் இருப்பேன். அந்த பாடல் - என்னை மனமுருக வைத்துவிட்டது; அந்த பாடல் தவிர அப்படத்தின் மற்ற பாடல்களைக்-கூட இதுவரை கேட்டதில்லை! அது என்னுள் எழுப்பிய தாக்கத்தால் - என்னுள் புதைந்து இருந்தவற்றை ஓர் தலையங்கமாய் கடந்த வாரம் எழுதியிருந்தேன்.

        சரி! அந்தப்பாடலை பாராட்டிட பல்லாயிரம் பேர் இருக்கக்கூடும். அதிலுள்ள (எனக்கு தவறென பட்ட)பின்வரும் குறைகளை/திருத்தங்களை எவரும் கூறி-இருத்தல் சாத்தியமன்று. 1. "அன்பெனும் குடையை..." என்ற வரி; அதில் தொடர்வது "அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்" என்பது! குடையை-கொடுக்கும் மகளே ஏன் (அதற்குள்)"மழைத்துளிகளையும்" கூட்டவேண்டும்? என்மகள் அப்படி செய்யமாட்டாள் என்ற "திமிரால்" வந்தது இந்த கேள்வி. 2. "தூரத்து மரங்கள்..." எனத்துவங்கும் 4 வரிகள் "தென்றலில் வாசம் தூக்குதடி" என்றிருப்பின் "த்"-ன் 4 உயிர்மெய் எழுத்துக்கள் "துவக்கங்களாய்"  இருந்திருக்கும். 3. இதுதான் முக்கியம் என்று நான் கருதுகிறேன்! "அதை கையில் பிடித்து..." என்ற வரி "...அனுப்படி" நல்லபடி என்று முடிந்திருக்கவேண்டும்! "நல்ல படி" என்ற சீரை "அடி" என்ற வார்த்தைக்கு "ஒப்பாய்" புகுத்தி இருப்பது தெளிவாய் புரிகிறது! "அனுப்படி" நல்லபடி என்று இருந்திருந்தால் மற்ற "அடி"களுடன் கணக்கச்சிதமாய் பொருந்தி இருக்கும்! 

அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
வீட்டுக்கு "அனுப்படி" நல்லபடி!!!

பின்குறிப்பு: தன்மகளை "அடி" என்று அழைப்பதில் இருக்கும் "திமிரை/கர்வத்தை" உணர்ந்த அப்பன் நான் என்பதில் பெருமை கொள்கிறேன். நல்ல படி, என்பது இராகத்துடன் ஒத்து-போகலாம்; ஆனால், மேற்கூறிய தகப்பனின் கர்வம் "அடி"பட்டுப்போகிறது! தயைகூர்ந்து, இப்பதிவு உங்களை சேர்ந்திடும் பட்சத்தில் உங்களின் தொடர்பு-விவரத்தை எனக்கு தெரிவிக்கவும்!! நாம் இதை இன்னமும் விரிவாய் விவாதிக்க முடியும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக