ஞாயிறு, செப்டம்பர் 15, 2013

விழியமுதினியும், கும்கியும்...



    என் மகள் விழியமுதினி முதன்முதல் திரையரங்கில் பார்த்த படம் "கும்கி"; அதையும் (நான் எதிர்பார்த்தவாறே) முழுதும் பார்க்கவில்லை. என்னவள் மற்றும் என் தமக்கை-தமையன் மக்களுடன் சென்றிருந்தோம்! நான் முன்பே சொல்லியிருந்தேன்; விழி எப்போது சொல்கிறாளோ அப்போது நானும்-அவளும் சென்றுவிடுவோம் என்று! படம் ஆரம்பிக்கும் முன் அரங்கினுள் அங்கும், இங்கும் ஓடிக்கொண்டு இருந்தாள்; எந்த பிரச்சனையும் இல்லை! அதன் பின், படம் ஆரம்பித்து விளக்கை அனைத்ததும் அவள் முகம் உடனே மாறிற்று! சரி, கிளம்பவேண்டியது தான் என்று நினைத்தேன்; கொஞ்ச நேரம் ஒட்டிக்கொண்டு இருந்தாள். பின், அப்பா! கிளம்பலாம் என்றாள்; நான் அவளைத் தூக்கிக்கொண்டு "ப்ரொஜெக்டர்" அறையில் இருந்து ஒளிக்கற்றை வருவதை காண்பித்து, இதன் மூலம் தான் படம் சென்று திரையில் தெரிகிறது என்று சொல்லி திரை அருகில் சென்று அதையும் காண்பித்தேன்! ஒருவேளை, அதற்குள் யானை வந்துவிட்டது; அவள் கொஞ்சம் சுவராசியமாய் அமர்ந்தாள்.

         இப்படியாய் இடைவேளை வரை தாக்குபிடித்து விட்(டாள்/டேன்)! அதன் பின் கிளம்பியே ஆகணும் என்றாள்; சரி என்று கிளம்பியதும் அவளின் பெரிய-அண்ணனையும் (தமையன் மகன்) கூடவே அழைத்துக்கொண்டு வந்துவிட்டாள். இதுதான் அவளின் (இன்னமும் கூட)முதல் திரையரங்க அனுபவம். ஆனால், அவளுக்கு அந்த படத்தின் பாடல்கள் (குறிப்பாய் "அய்யய்யோ ஆனந்தமே"! - அவள் அம்மாவுக்கு பிடித்தது என்பதால்). எனக்கு பிடிக்கும் என்பதால் "எப்போ புள்ள சொல்லப்போற" பாடலும்  கொஞ்சம் பிடிக்கும். அவளின் விருப்பம் - "சொய்ன், சொய்ன்" பாடல். எல்லாப் பாடல்களையும்  பாடுவாள்; அதிலும் "அய்யய்யோ ஆனந்தமே" பாடலை அவள் பாடும் விதம் மிகவும் அருமை! அவளின் மழலை-இராகம் என்னை கிறங்கடிக்கும்! அவள் ஒரு தினுசாய் "அய்யய்....யோ! ஆனந்.....தமே!!" என்று (சீர்??!!)பிரித்து பாடுவாள்; அவளால், மூச்சு பிடிக்கவும் முடியாது. எனினும், எப்படியோ மூச்சை இழுத்து பாடிவிடுவாள். உண்மையில், அது ஓர் தெய்வீக-இராகம்!! இப்படியாய்...

நம் பிள்ளைகள் - எதில் ஆச்சர்யப்படுத்துகிறார்கள் என்பதற்கு இலக்கணம் ஏதுமில்லை!!!

பின்குறிப்பு: சில நாட்கள் கழித்து (படத்தின் நாயகன் செய்வது போலவே)அவளும் ஓர் குச்சியை தோளில் வைத்துக்கொண்டு ஆடிக்கொண்டே பாட ஆரம்பித்தாள்! அட...அட...அட... இதுதான் சுகம்!! எனக்கென்னவோ, அவள் முதல் மதிப்பெண் எடுப்பது போன்ற எதுவும் - எனக்கு பெருத்த சந்தோசம் அளிப்பதாய் தெரியவில்லை. இந்த வயதில், அவளிடம் இது போன்ற சந்தோசத்தை மட்டுமே எதிர்பார்க்கிறேன் - இன்னமும் பாடு, மகளே!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக