சமீபத்தில் நான் "விருத்தப்பா" எழுதத் துவங்கியதையும், அதற்கான காரணத்தையும் "விருத்தப்பா பகுதியின் முன்னுரையாய்" எழுதி இருந்தேன். விருத்தப்பா எழுத என்னப்பனிடம் இலக்கணம் கற்ற போது, அவர் முதலில் "அறு-சீர் விருத்தம்" பழகு; அது தான் "எண்-சீர் விருத்த"த்தை காட்டிலும் எளிது! இலக்கண-விதிகளும் சற்று எளிதாய் இருக்கும் என்றார்! தொடர்ந்து, பாவேந்தரின் "அழகிய சிரிப்பு" படி; அது முழுதையும் அவர் "அறு-சீர்" விருத்தமாய் எழுதி இருப்பார் என்றார்!! நான் உடனேயே படிக்காமல் - அவர் கூறிய இலக்கணத்தை புரிந்துகொண்டு எழுத துவங்கிவிட்டேன்; என்னப்பன் இலக்கணத்தை புரிய வைத்ததால், விதிகளும் தெரிந்திருந்ததால் - எளிதாய், எழுதவும் ஆரம்பித்துவிட்டேன். பின்னர் தான், "அழகிய சிரிப்பை" படிக்க ஆரம்பித்தேன். என்னப்பன் முன்பே "அறு-சீர்" பற்றி விளக்கியதாலோ என்னவோ, நான் விருத்தம் பற்றிய விதிகளை பற்றி ஏதும் கவனம் கொள்ளாமல் எடுத்தவுடனே - "அழகின் சிரிப்பை" வெகுவாய் இரசிக்க ஆரம்பித்து விட்டேன்.
அதனால், அழகின் சிரிப்பின் "அழகியலை" ஆரம்பம் முதலே அனுபவிக்க முடிந்தது! இன்னும் 30-ல் ஓர் பங்கு பக்கங்களைக் கூட கடக்கவில்லை! அதற்குள் 1000 பிரம்மிப்பு!! அதிகாலை துவங்குவதை இப்படி விவரிக்கிறார் "இளங்கதிர் எழுந்தான்; ஆங்கே இருளின்மேல் சினத்தை வைத்தான்" என்கிறார்! அதிகாலையில், இருள் விலகும் வேகத்தை உணர்ந்தோர்க்கு இந்த வரியின் அற்புதம் புரியும்; அந்நேரத்தில் இருள் மிக-வேகமாய் விலகும் (சினம் கொண்ட வலியோரை பார்த்து ஓடும் எளியோர் போல்!). இப்படியாய் நான் படித்த சொற்ப-பக்கங்களிலேயே அழகின் சிரிப்பில் மூழ்கி இருக்கும்போதே; கடலைப்பற்றி விளக்கும் ஓர் விருத்தத்தில் "பெருநீரை வான்மு கக்கும்; வான்நிறம் பெருநீர் வாங்கும்" என்று சொல்வதை கண்டேன்! அட, அட, அட... இதைவிட எளிதாய் "ஒளிச்சிதறல் விளைவை (Scattering Effect)" விளக்கமுடியுமா என்று தெரியவில்லை!! அதாவது, கடலின் நிறமாய் காண்பது வானின் பிரதிபலிப்பு என்கிறார் (வானின் நிறத்திற்கும் - அதே விளைவே காரணம் என்பது வேறு!).
(Sir CV)இராமன் "நோபெல்" பெற்றதை; (பாரதியின்)தாசன் "நாவலில்" உற்றதாய்!!!
பின்குறிப்பு: பாவேந்தர் பல-படைப்புகளில்/பல-இடங்களில் அறிவியலை புகுத்தி இருக்க வேண்டும் என்று திடமாய் நம்புகிறேன்! அதுகுறித்து ஓர் ஆய்வை மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளேன்; பார்ப்போம்...என்னால் எந்த அளவில் அதை நிறைவேற்றமுடியும் என்று!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக