ஞாயிறு, நவம்பர் 03, 2013

என்மகள் யாரைப்போல் இருக்கிறாள்???




       மேலுள்ள புகைப்படங்களில் இடது-பக்கம் இருப்பதை பாருங்கள்! நானும் என்மகளும் ஒன்றாய் இருக்கும் புகைப்படங்களுள் எனக்கு மிகவும் பிடித்தமானது. இதுபற்றி நானே சிலாகித்து பலரிடமும் கூறியதுண்டு, பின்வருமாறு! முதலில், நானும் என் மகளும் பார்க்கும் விதத்தை கவனியுங்கள்; இருவரும் ஒருபோலவே பார்ப்போம்! இருவரின் புருவங்களும் சுருக்கி இருக்கும் அளவை பாருங்கள் - இரண்டும் ஒரேமாதிரியே இருக்கும். இருவரின் முக-வடிவம், கூந்தல்-வடிவம், இருவரும் கைகோர்த்து இருக்கும் விதம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.  இந்த புகைப்படத்தை எடுத்தது, என் அண்ணன்; இது எடுக்கப்பட்டது என் மகள் 2 ஆண்டுகள் கடந்த 2-ஆம் நாள்! அந்த வயதில், அவளுக்கு என்ன சொல்லி என்னைப்போலவே செய்கைகளை கொண்டிருக்க செய்திருக்க முடியும்?! இது, இயல்பாய் வந்தது. சரி! எல்லா தந்தைக்கும் இதுபோன்ற உணர்வே இருக்கும்; இதில் என்ன இருக்கிறது? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நான் இங்கே விளக்க-முனைவது, வேறொரு பரிமாணம். 

     என்மகள் என்னைப்போலவே இருக்கிறாள் என்று நானும் நினைத்துக்கொண்டு, எல்லோரும் சொல்லக்கேட்டுக் கொண்டு இருக்கும்போது - என்தங்கை ஒருவள் (அவள் நான் அடிக்கடி குறிப்பிடும் என் நண்பனின் தங்கை!); "அண்ணா! விழி அப்படியே அப்பா போல் இருக்கிறாள்!" என்றாள். என்னப்பனே எனினும், அதை என்னால் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை; அவளிடமும் இல்லையில்லை, என்னைப்போல் தான் இருக்கிறாள் என்று வாதிடவும் இல்லை. ஆனால், இதற்கு முன் பலமுறை "நீங்க, அப்படியே அப்பா போல் இருக்கீங்கண்ணா!" என்று கூறியிருக்கிறாள்; அப்போதெல்லாம், அது கேட்டு அகமகிழ்ந்தேன். ஆனால், என்மகளை அவர்-போல் இருக்கிறாள் என்பதை, என்னால் ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை?! என்று யோசிக்க ஆரம்பித்தேன். அதற்கு எனக்கு - இந்த சமுதாயம் சார்ந்த பார்வையில் ஒரு விளக்கம் கிடைத்தது; அதுதான் காரணமா?! என்று எனக்கு தெரியவில்லை! ஆனால், அதுவும் ஓர் காரணமாய் - அடிமனதில் இருப்பதை மறுப்பதற்கில்லை என்றே படுகிறது.

         இந்த சமுதாயம் சார்ந்த பார்வையை பார்க்கும் முன் வேறு சில நிகழ்வுகளை விளக்குதல் அவசியம் என்று தோன்றுகிறது; என்னவள் அடிக்கடி, எம்மகளின் சில நடவடிக்கைகள் "அவளின் தந்தை (என் மருதந்தை) போல் இருக்கின்றன!" என்பாள். முதலில், அது எனக்கு கோபத்தை கொடுக்கும்; பின் நாளடைவில், அதில் என்ன தவறு இருக்கிறது?! அதுபோல தானே என்மகள் செய்கிறாள்/இருக்கிறாள் என்ற உண்மை விளங்கும். மெல்லமெல்ல என்னவள் சொல்வதில் எந்த தவறும் இல்லை என்று உணர்ந்துவிட்டேன். இதுமட்டுமல்ல! என்னவள் அதே-விதம் எம்மகளை என்னப்பனுடனும் ஒப்பிட்டு பேசுவாள்; குறிப்பாய், "விழி சாப்பிடற விஷயத்தில் அப்படியே உங்க-அப்பா மாதிரி" என்பாள். ஆம்! என்னப்பன் சாப்பிடும் விதத்தை எங்கள் உறவுகள் பலவும் இரசித்து கூறி இருக்கின்றன. ஒருவேளை, அவருக்கும் சமைக்க தெரியும் என்பதாலோ என்னவோ?! சாப்பாட்டில் எந்த குறை இருந்தாலும் - ஒருமுக பாவனையும் இல்லாது சுத்தமாய்/சுவைத்து சாப்பிடுவார்.

        என்னவளின், இவ்விருவிதமான செய்கைகளை நினைக்கும்போது - என்னுடைய சிந்தனை மேலும் விசாலமாகும்! ஏன், என்மகள் என்னப்பன் போல் இருப்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை?! என்பதற்கு இந்த சமுதாயம் ஓர் காரணமாய் இருக்கலாம் என்று பின்வருமாறு உள்ளது! இயற்கை/இறைவன் விந்தையால் - ஓர்பெண் ஒர்குழந்தையை தன்குழந்தை என்று நிரூபிக்க எந்த அவசியமும் இல்லை! அவளின் - வலியும்/வேதனையும் அனைவரும் அறிவர்; முன்புபோல், (திரைப்படத்தில் கூட)குழந்தை மாறிப்போவதாய் காண்பிக்கும் சாத்தியமும் இப்போது இல்லை! மருத்துவமனை செயல்முறை அத்தனை சீர்மை! அதனால், ஓர்பெண் தன்குழந்தையை எவரிடம் ஒப்பிடவும் தயங்குவதில்லை என்று தோன்றுகிறது! ஆனால், ஓர் ஆணின் நிலை அப்படியல்ல; வேறொருவர் மாதிரி இருக்கும் பட்சத்தில் அவன் சந்திக்கவேண்டிய சூழல் வேறுவிதமாய் இருக்கிறது! இதைத்தான் பல திரைப்படங்களும் "நகைச்சுவை" என்ற பெயரில் காண்பிக்கின்றன.

   ஒருவேளை, அதனால்தான் நான் (அல்லது வேறொரு ஆண்) அப்படி ஒப்புக்கொள்ள முடியவில்லையோ?! இம்மாதிரி சிந்தனைகளுடன் ஆலோசித்துக் கொண்டிருக்கும் போதுதான் என்மகளின் 4-ஆவது பிறந்தநாளன்று எடுத்த புகைப்படத்தை (வலது!) பார்த்தேன். நானும், என்னப்பனும் - மேற்கூறிய வண்ணமே - ஒரேமாதிரி தலையை சாய்த்து இருப்பதும், ஒரேமாதிரி முக-அமைப்பு கொண்டிருப்பதும், ஒரே-அளவில் சிரிப்பதும் - இப்படி பலவான ஒற்றுமைகளையும் காண நேர்ந்தது. அட! நான் அப்படியே என்னப்பன் போலவே இருக்கிறேனே?! என்று சிலாகித்து கொண்டிருக்கும் போதுதான்; "அடே இளங்கோ! நீ அப்படியே உன்னப்பன் போல் இருக்கிறாய் என்றால், உன்மகள் - அப்படியே உன்னப்பன் போலிருப்பதில்" என்ன தவறடா?! என்று உள்மனம் கேட்டது. அடடே! ஏன் இத்தனை நாளும், இதை யோசிக்கவில்லை?! என்ற சிந்தனை வந்தது; சமுதாயம் என்ன?! எவர் என் ஆழ்மனதில் அப்படியோர் தவறான சிந்தனையை விதித்திருந்தால் எனக்கென்ன...

ஆம்! என்மகள் என்னப்பன் போல் தான் இருக்கிறாள்!!!              


2 கருத்துகள்:

  1. இளங்கோ உன் மகள் உன் தந்தை போல் இருப்பதை விட பெரிய பாக்கியம் வேறென்ன வேண்டும். உன் காலம் வரை உனது தந்தை உன்னுடன் இருக்கும் உணர்வு ஏற்படும்.இதற்குமேல் வேறென்ன வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை பாரத்!

      அருமையாய் சொன்னாய். பெரும்பாக்கியம் தான் இது.

      நீக்கு