ஞாயிறு, நவம்பர் 03, 2013

என்மகளும், என்தாயின் "மகனும்"



"செல்போனில்" தீபாவளி வாழ்த்து
சொல்கையில் "ஏதாவது செஞ்சு
சாப்பிடுடா!" என்று அழுகையுடன்;
சொல்லும் என்தாயிடம்; எப்படி

சொல்வேன்? எப்படி சொல்வேன்??

முறுக்கு முதல் அனைத்தாலும்
"கிறுக்காய்; பலரையும்" சுவையால்
கட்டிப்போடச் செய்யும் வித்தையை
கிட்டியவன் - என்தாயிடம்; எப்படி

சொல்வேன்? எப்படி சொல்வேன்??

"என்மகள் அருகில் இல்லாததால்;
எனக்கேதும் செய்யவே பிடிக்கவில்லை!"
என்ற உண்மையை, எப்படி
என்தாயே?! உன்னிடம் திடமனதாய்,

சொல்வேன்? எப்படி சொல்வேன்??

உன்மகன் ஆனபின் தானே;
"நான்ஆனேன்?! என்னுயிர் ஆகிட்ட
என்மகளின் அப்பனாய்??!!"- தனித்திருப்பது
"உன்மகனும்" தானென்பதை அறிந்தும்...

எப்படி சொல்வேன்? சொல்-தாயே!

கடைப்பிள்ளை என்மீது மட்டுமல்ல;
கடவுள்மீதும் பித்து கொண்டவள்-என்ற
காரணத்தால்; "விரதம்"என பொய்
கூறிவிட்டேன் - மன்னித்துவிடு! என்பதைக்கூட?!;

எப்படி சொல்வேன்??? சொல்-தாயே!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக