சில நாட்களுக்கு முன், ஒரு அரசியல்வாதியின் சொத்துக்குவிப்பு வழக்கில் ஒரு நீதிபதி அளித்த தீர்ப்பை எல்லோரும் அறிவோம். அந்த நேரத்தில் முகநூலில் பல பதிவுகள் "பொதுவாழ்வில் உள்ளோர், அன்பளிப்பு பெறுவதே தவறு!" என்ற அடிப்படையில் இருந்ததைக் காண நேர்ந்தது. என்னுள் பெருத்த ஆச்சர்யம்! பெரிய குழப்பமும் கூட. ஒரு தனிமனிதன் "அன்பளிப்பு" எனும் பெயரில் "வரதட்சணை/மொய் போன்று" வாங்கினால் தவறில்லை! என்று இந்த சமூகம் பார்க்கிறது. சட்டமும் கூட, வரதட்சனை என்ற பெயரில் கொடுமைகள் நடந்து - சம்பந்தப்பட்டோர் நீதிமன்றத்தை அணுகினால் மட்டுமே அதில் தலையிடுகிறது. ஒரு பிரச்சனை எழும் வரையில், வரதட்சணை (போன்ற பலவும்) கொடுப்பவரும்/பெறுபவரும் - அதைத் தவறென்றே உணர்வதில்லை! அதுபற்றி வாதிடுவதும் இல்லை. அதைவிட இழிவாய், கொடுப்பவரும்/பெறுபவரும் அதை "சமூக கெளரவமாய்" தான் பார்க்கிறார்கள். இப்படி, அன்பளிப்பு என்ற பெயரில்...
ஒரு தனிமனித அளவில் - நடக்கும்போது, தவறுகள் அல்லது குற்றங்கள் என்ற அளவில் அனுகப்படுவதே இல்லை! ஆனால், பொதுவாழ்வில் உள்ளவர் "சொத்து போன்று" ஒன்றை அன்பளிப்பு என்ற பெயரில் வாங்கினால் அது "பெரிய குற்றமாய்" பார்க்கப்படுகிறது. இதில் விந்தை என்னவென்றால், இந்த குற்றச்சாட்டில் "வரதட்சனைப் போன்று" அன்பளிப்பு பெற்ற தனிமனிதனும் கலந்து கொள்வதுதான். "பொதுவாழ்வில் உள்ளோர் நேர்மையாய் இருக்கவேண்டும்!!!" என்ற வாதத்தில் எனக்கு(ம்) எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், அன்பளிப்பு என்பது "சுயவாழ்வு/பொதுவாழ்வு" என்ற அளவில் மாறுபடும் - என்பதை மறுக்காமல் இருக்கமுடியவில்லை! அன்பின் வெளிப்பாட்டிற்கு இந்த பாகுபாடு இருத்தல் முறையோ? "அவ்வகை அன்பளிப்புகள் ஏற்கப்படாமல், மறுக்கப்பட்டால்" எனக்கும் சந்தோசமே! ஆனால், அது தனிமனிதன் விருப்பம்/செயல்பாடு - நாம் செய்வதைப் போல். பொதுவாழ்வில் உள்ளதாலேயே "ஒரு தனிமனிதன்" எனும்...
அடையாளத்தை அவர்கள் இழந்துவிட வேண்டுமா? பின்னர் ஏன், நமக்கு தேவை எனில்; அவர்கள் ஒரு "தனிமனிதன் போல்" முன்வந்து நின்று, உதவவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்? அவர் தனிமனிதனாய் வந்தால் என்ன? அல்லது அவரது நிர்வாகம் வந்தால் என்ன? செயல்பாடு தானே முக்கியம். இது இரட்டை-நிலைப்பாடு அல்லவா? சரி, இதை விட்டுவிட்டு அன்பளிப்பு விசயத்திற்குத் திரும்புவோம். இங்கே, அன்பளிப்பு கொடுத்தவர் மேல்கூட எனக்கு கேள்வி இருக்கிறது! அந்த அடிப்படையில் கூட ஒரு தொலைக்காட்சி விவாதம் நடந்தது. கொடுத்தவர் கூட - அவர் வருமானத்திற்கு அதிகமான ஒரு மதிப்பீட்டில் தான் பொருள்/பணம் கொடுத்ததாய் தெரிகிறது. அதையும் நான் மறுக்கவில்லை! வெறும் "100 ரூபாய்" மதிப்பீட்டில் பொருளாய்/பணமாய் ஒரு அன்பளிப்பு கொடுக்க முடியாமல் - அவமானப்படும் மனிதர்களை நாம் சந்தித்து இல்லையா? அப்படிப்பட்ட அன்பளிப்பை - "தாலி" போன்ற பொருளைக் கூட...
அடமானம் வைத்தோ/விற்றோ - கொடுப்போரை அறியாதவரா நாம்? ஆனால், அதையும் சிறிதும் மனசாட்சி இன்றி "முகமெல்லாம் சிரிப்பாய்" நாம் வாங்கிக்கொண்டு தானே இருக்கிறோம்? ஏன், நம் மனதில் "வேண்டாம்! இத்தனைச் சிரமப்பட்டு, ஓர் அன்பளிப்பு கொடுக்காதீர்!" என்ற எண்ணம் எழுவதில்லை?
மாறாய், அப்படி அடமானம் வைத்தோ/விற்றோ கொடுத்திருக்க வேண்டியதுதானே?! என்று சண்டையிடும் உறவு/நட்பு வட்டத்தில் தானே நாமும் உழன்று கொண்டிருக்கிறோம்? பின் எப்படி, இங்கே மட்டும் "வாயும்/மனமும் கூசாமல்" இப்படி வாதிடுகிறோம்?! சில நாட்கள் முன்பு, நான் சந்தித்த ஓர் அனுபவத்தின் அடிப்படையில்
"நினைவுப்பரிசின் குறிக்கோள்" எனும் தலைப்பில் "என்னுள் உதித்தது" என்ற பிரிவில் ஒரு கருத்துப்படத்தை வெளியிட்டேன். அதே அடிப்படையில், இந்த நிகழ்வையும் என்னால் பார்க்க இயலும். ஆனால், அதற்கு முன் - "அன்பளிப்பு என்றால் என்ன?" மற்றும்
"அன்பளி ப்பு - சரியா? தவறா?" என்பதில், "தனிமனிதனாய்" ஒரு முடிவுக்கு வரவேண்டும்! அன்பளிப்பு என்பது, ஒருவரின் அன்பை மற்றவருக்கு வெளிப்படுத்தும் எண்ணம்/செயல் என்றால் - அது எல்லோருக்கும் பொதுவாய் இருக்கவேண்டும். இல்லை... அன்பளிப்பு எனபதே தவறு! அது ஒருவிதமான கையூட்டு; அதுவொரு குற்றம் என்றால் - அதுவாவது, பொதுவாய் இருக்கவேண்டும். பொதுவாழ்வில் உள்ளவர்கள் - நம் பிரதிநிதிகள், அவ்வளவே! அவர்க"ளும்" நம்மில் ஒருவர்! நம்மில் இருந்து - நம்மைப்போல் ஒரு தனிமனிதனாய் இருந்து - பொதுவாழ்வில் நுழைந்தவர்! அவர்கள் "பல தனிமனிதர்களின் பிரதிநிதிகள்!" ஆயினும், அவர்களும் "ஒவ்வொரு தனிமனிதர்களே!" - நமக்கு இந்த உண்மை விளங்குவதே இல்லை! நல்லது நடந்தால் - நம் போராட்டத்தின் வெற்றி! என்று கூக்குரல் இடுகிறோம். கெட்டது என்றால் - அவர்களின் தவறு! என்று கூக்குரல் இடுகிறோம்.அவர்களும் ஒரு தனிமனிதன் என்பதை எளிதில் மறந்துவிடுகிறோம்.
அரசியல்வாதி மட்டுமல்ல! திரைப்பட நடிகர்/நடிகையர்களைக் கூட - ஒரு தனிமனிதனாய்/ஒரு சாமான்யனாய் நாம் பார்க்க விரும்புவதே இல்லை! நமக்கு பிடிக்கும் எனில் - கொண்டாடுகிறோம்! "கோவில் கூட" கட்டுகிறோம். பிடிக்கவில்லை என்றால் "கூத்தாடிகள்!" என்று இழிவு படுத்துகிறோம். அவர்களை "ஒரு மாபெரும் சக்தியாய்" பார்ப்போரே இங்கதிகம். பெரும்பான்மையான மக்களுக்கு "அது நிஜம் அல்ல! அது வெறும் நிழல்!!" என்பது புரிவதே இல்லை! அதில் "எல்லை தாண்டிய, அதிகப்படுத்தி காட்டுதல்" நிகழ்ந்தாலும் - அதை நாம் கவனித்து, ஒதுக்குவதில்லை! அதனால் தான் இன்று "ஒரு நடிகன் எந்த சிரமமும் இன்றி - 100 பேரை அடிக்கிறான்! காலால் எட்டி உதைத்ததும், உதைபட்டவர் 20/30 அடி தாண்டி சென்று விழுகிறார்!". இதையெல்லாம் நாம் கவனிப்பதே இல்லை - அவர்களும் நம்மைப் போன்றவனே! எனும் உண்மை விளங்குவதே இல்லை. அந்த அளவிற்கு அதீதமாய் "முகச்சாயம் பூசி...
அழகு சாதனங்களை" உபயோகிக்கப் படுத்தினால் - நாம் நிஜத்தில் சந்திக்கும் ஒவ்வொரு பெண்ணும் அழகானவளே! எனும் உண்மை விளங்குவதே இல்லை. இந்த அதிசயத்தில் - அதிலுள்ள யதார்த்த மீறல்கள் நம் கண்ணுக்குத் தெரிவதே இல்லை! அதனால் தான், நான் விமர்சிக்கும் திரைப்படத்தைக் கூட - மிகக் கவனமாய் தேர்ந்தெடுக்கிறேன். என் நேரத்தை செலவிட்டு, விமர்சிக்கத் தகுதி இல்லாதப் படங்களை - விமர்சிக்கும் எண்ணம்கூட எழுவதில்லை. இதே, அதிசயத்தைத் தான் நாம் - அரசியல்வாதிகள் மேலும் கொள்கிறோம். அதனால் தான், திரைப்பட உலகைச் சார்ந்தவர்கள் நம்மை எளிதில் ஈர்க்கிறார்கள். அதை முழுவதுமாய் தவறெனவில்லை! ஆனால், அந்த அதிசயத்தில் "மட்டும்" மயங்காமல் - யதார்த்த உலகுக்கு வரவேண்டும் என்கிறேன். நடிகர்/நடிகைக்காக - வெட்கமே இன்றி, சண்டையிட்டுக் கொள்வது போல் - "உன் கட்சி/என் கட்சி" என்று சண்டையிட்டுக் கொள்கிறோம். அவர்கள் நமக்காக - நம் பிரதிநிதிகளாய்...
சென்ற தனிமனிதர்கள்! என்ற உணர்வே எழுவதில்லை! அதனால் தான், அவர்களைத் தனிமனிதர்கள் என்ற அடிப்படையில் இருந்தே பிரித்து "வெகுதூரம்" வைத்துப் பார்க்கிறோம். அதுதான் வசதியென, அவர்களும் "தூரமாகவே" விலகி நின்று கொள்கிறார்கள். அதனால் தான், அவர்கள் அன்பளிப்பு வாங்கலாமா?! கூக்குரல் இடுகிறோம். அன்பளிப்பு தவறெனில் - அன்பளிப்பின் மதிப்பு "100 ரூபாய் என்றாலும் தவறு! 100 கோடி என்றாலும் தவறு!!". தவறில்லை எனில், இரண்டுமே தவறில்லை! இப்படி அவர்களை விலக்கிவைத்தே பழக்கப்பட்டதால் தான்
"நாமும் ஒரு அரசியல்வாதியாய் ஆகலாம்! அப்படி உருவெடுத்து - மக்களுக்கு நல்லது செய்யலாம் என்ற எண்ணம் வருவதே இல்லை!" நாம் அதிலிருந்து விலகி இருப்பதால் தான் - ஒரு கட்சி "குடும்ப கட்சி"ஆய் (அல்லது) "உடன்பிறவாதோர் கட்சி"ஆய் உருவெடுக்கிறது! அவர்களையும், நம்மையும் போல் - ஒரு தனிமனிதனாய் உணரும் வரை,
அன்பளிப்பு பற்றியே...
பேசிக்கொண்டு இருப்போம்! மாற்றத்தை உருவாக்க முயலமாட்டோம்!!